பகைநன்று – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பகைநன்று
ஆசிரியர் : மால்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 88
விலை : ரூ . 80
நூலைப் பெற : thamizhbooks.com
சிறகுகள் முளைக்குமிடம் பள்ளிக்கூடம். நம்பிக்கையூட்டிப் பறக்கச் சொல்லித்தருவது ஆசிரியர்கள். எல்லோர் கைகளுக்கும் சென்று சேருகிற கல்வி சமூக மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான ஆயுதம். ஆனால் ஒரு பிஞ்சு உள்ளத்தில் நல்லதை விதைக்க வேண்டிய, உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாய் இருக்க வேண்டிய குருவே நஞ்சான பார்வையுடன் பேதம் போதிப்பத்தால், துவண்டு நிர்க்கதியாய் நிற்கிற அப்பிஞ்சை அரவணைத்து தன்னை தாழ்மையாகப் பார்க்கிறவருக்கு சொல்லால் அல்லாமல் தன் வாழ்வால் பதிலடி கொடுக்கப் பழக்கும் ஒரு மனிதனின், அவன் உருவாக்கும் சிறுவனின் கதைதான் ‘பகைநன்று’.
மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படுகிற, பத்திரிக்கையாளரும் களப்பணியாளருமான அஹமத் ஜலால், தான் நட்பாயிருக்கிற சலூன்கடைக்காரரின் மகன் மால்கமை அருகிலுள்ள தனியார்ப் பள்ளியில் கட்டாய கல்வி உருமைச் சட்டத்தின் அடிப்படையில் சேர்த்துவிடுகிறார். பள்ளியின் முதல் நாளே பிழையான சமூகப் பார்வையுடன் அங்கிருக்கிற அவனது வகுப்பு ஆசிரியை குட்டி பத்மினி டீச்சர் செய்த ஒரு செய்கையின் பின்னால் உள்ள அரசியலை, மாஸ்டர் விளக்கிய பிறகே, எத்தனை கொடிதென உணர்ந்து கொள்கிறான் மால்கம்.
சாதியை முன்னிட்டு தான் சிறுமைப்படுத்தப்பட்டதற்குப் பதிலடி தருவதற்கு மால்கமின் கரங்களில் கல்வியை ஆயுதமாக திணிக்கிறார் மாஸ்டர். சிறு பொறியை அவனுள் கிளர்த்தி அதனை ஊதி ஊதிப் பெருக்கி இலட்சிய வெறியாக்குகிறார். பின்னாளில் நீட் தேர்வில் தேசிய அளவில் முதன்மை மாணவனாக ஜொலிக்கிறான் மால்கம். அவனது வெற்றியை நிலைநாட்டிய அன்றைய தினத்தில், இழிவுபடுத்திய ஆசிரியை குட்டி பத்மினி தற்கொலை செய்து கொண்ட செய்தியை தனது தங்கையின் வழி மறுநாளில் அவன் அறிந்து கொள்வதோடு கதை முடிகிறது.
கதை சமத்துவம் பேசுகிற நல்நோக்கில் இருப்பினும், அதன் நாடக பாணியும், பிராசார தொணியும் படைப்பின் மிகப்பெரிய பின்னடைவாக இருந்துவிடுகிறது. இன்னும் தெளிவுறச் சொல்வதானால் இலட்சிய நாயக கதைகளை முன்வைக்கிற ஒரு வணிக சினிமாவின் சூத்திரத்தையே தனது புனைவின் வடிவாக சுவீகரித்துக் கொள்கிறது கதை. நாவலுக்குரிய கதை விரிவோ அடுக்குகளோ இல்லை என்பதனால் தான் படைப்பாளியே இந்நீள்கதைக்கு பொருத்தமாக நெடுங்கதையெனப் வகைபடுத்தியுள்ளார்
படைப்பாளியின் பெயரும், கதையின் முதன்மைப் பாத்திரத்தின் பெயரும், மாஸ்டர் பாத்திரத்தின் கதையில் பெயராக மட்டுமே ஓரிரு இடங்களில் வந்து போகிற பெயர் என அனைத்துமே ஆஃப்ரோ-அமெரிக்க போராளியான மால்கம் எக்ஸின் பெயரைக் குறியீட்டு ரீதியில் சுட்டுகிற ‘மால்கம்’ என்று இருப்பது எதனால் என்பதும் குழப்பமாய் இல்லை எனினும், அப்பெயர் எழுப்புகிற வீரியத்தை அது மட்டுப்படுத்துகிறது.
மேலும் நீட் தேர்வு கதையின் அம்சங்களுள் ஒன்றாக இருப்பினும், அத்தேர்வு குறித்த எந்தவொரு அரசியல் விமர்சனப் பார்வையும் இல்லாதிருப்பது இன்னுமொரு நெருடலாக இருக்கிறது. நீட்தேர்வை கதையின் முதன்மைப் பாத்திரம் அடைய வேண்டிய இலக்காக மட்டுமே கதை முன்வைக்கிறதேயொழிய அதற்கு வேறெதுவும் காரண காரியம் இருப்பதாகத் தெரியவில்லை. அது வெறுமனே கதைநாயகனுக்கான இலக்கு மட்டும் தான் என்கிற பட்சத்தில் அது ஏன் வேறு ஏதேனும் தேர்வாக இருந்திருக்கக்கூடாது எனும் கேள்வி எழவே செய்கிறது.
நூல் அறிமுகம் எழுதியவர் :
வருணன் ஜோ
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.