நூல் அறிமுகம்: ஜிஜுபாய் பதேக்காவின் *’பகல் கனவு’* – வி.கணேசன்நூல்: பகல் கனவு
ஆசிரியர்: ஜிஜுபாய் பதேக்கா (தமிழில் டாக்டர். சங்கரராஜுலு)
விலை: ₹35.00 INR*·
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்

ஜிஜுபாய் பதேக்கா (1855 – 1939) உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பயணப்பட்டவர். அதன்காரணமாக கிடைத்த அனுபவத்தோடு காந்தியின் ‘பாலமந்திர்’, தாகூரின் ‘சாந்திநிகேதன்’, இத்தாலிய கல்வியாளரான மாண்டிச்சோரியின் முறைகள் இவற்றையெல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்து தன்னை மெல்ல மெல்ல கல்விமுறைகள் நோக்கி நகர்த்தியவர். கல்வியாளர். 1916யில் குஜராத்தின் பவநகரில் இருந்த தக்ஷிணாமூர்த்தி பாலமந்திர் பள்ளியில் ஆசிரியராகக் கிடைத்த வகுப்பறை கள அனுபவத்தை கொஞ்சம் புனைவும் கலந்து 1932யில் ‘திவசப்னா’ எனும் பெயரில் நூல வெளியிட்டார். தமிழில் டாக்டர். சங்கரராஜுலு ‘பகல்கனவு’ எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

நூலில் “பரிசோதனை தொடங்குகிறது, பரிசோதனையில் முன்னேற்றம், பருவத்தின் முடிவில், கடைசிக் கூட்டம்” என நான்கு தலைப்புகள்.

அந்த சுதேச மாகாண உயர்கல்வி அலுவரை தொடர்ந்து சந்திக்கிறார் திரு. லெட்சுமிராம். இவரை நன்கு புரிந்துகொண்ட கல்வி அலுவலர் ஒருகட்டத்தில் தக்ஷிணாமூர்த்தி பாலமந்திரில் நான்காம் வகுப்பு ஆசிரியராக ஒரு வருட காலத்திற்கு பரிசோதனை முன்னெடுப்புகளை மேற்கொள்ள இசைவளிக்கிறார். “நீங்கள் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். ஆனால் வருட முடிவில் மாணவர்களுக்கு தேர்வு உண்டு. அதைக்கொண்டு உங்கள் பணி மதிப்பிடப்படும்” என்று சொல்லி நான்காம் வகுப்பு பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கல்வித்துறை விதிகள், விடுமுறைப் பட்டியல் யாவற்றையும் தருகிறார். பெற்றுக்கொண்ட லெட்சுமிராம், “ஆகட்டும். ஆனால் நீங்கள்தான் மதிப்பீடு செய்யவேண்டும்” என்று சொல்லி கிளம்புகிறார்.

அடுத்தநாள் உற்சாகமாக ஆர்வத்தோடு பள்ளிக்குச் செல்பவரை தலைமையாசிரியர் நான்காம் வகுப்பிற்கு அழைத்துச்சென்று, “இவர்தான் இந்த வருடத்திற்கு உங்கள் வகுப்பாசிரியர். சேட்டைகள் எதுவும் செய்யாமல் கவனமாக படித்து நல்லபெயர் வாங்கவேண்டும்” எனக்கூறி கிளம்ப, “மாணவர்களே… நாம் முதலில் மெளன விளையாட்டு விளையாடுவோம். ஆதாவது கதவு, ஜன்னல்களை அடைத்துவிடுவேன். வகுப்பறை இருட்டாகிவிடும். பிறகு நான் ஓம்சாந்தி எனக் கண்களை மூடிக் கூறுவேன். நீங்களும் என்போல் செய்யவேண்டும். நாம் அமைதியாக கண்களை மூடி, நம்மைச் சுற்றி எழும் சப்தங்களை கவனிப்போம். சரியா?” எனச்சொல்லி மெளன விளையாட்டை ஆரம்பிக்கிறார். மாணவர்களும் தங்கள் பல வித சேட்டைகளை ஆரம்பிக்கின்றனர். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்து “மாணவர்களே… நீங்கள் இன்று நீங்கள் கற்கும் மனநிலையில் இல்லை. ஆகையால் இன்று உங்களுக்கு ஓய்வு” என்றவும் மாணவர்கள் யாவரும் ‘ஓய்வு’ என்பதை ‘விடுமுறையென’ நினைத்து வகுப்பறையைவிட்டு வீட்டிற்கு சந்தோஷமாக ஓடிச் செல்கின்றனர். தலைமையாசிரியர் காரணம்கேட்டு கடிந்துகொள்கிறார். நினைத்ததை எண்ணி தன்மீதே வெட்கப்பட்டுகிறார்.

அடுத்தநாள் வகுப்பறையை கதையோடு ஆரம்பிக்கிறார். அது ஓர் அற்புதத்தை நிகழ்த்துகிறது. மெல்ல மெல்ல கதைகளோடு பிள்ளைகளுடன் உரையாடுகிறார். இருதரப்பும் அன்பால் நெருங்குகிறது. “நான் மட்டும் கதைசொல்வது ஆகாது. நீங்களும் கதை சொல்ல வேண்டும். கதைப் புத்தகங்கள் வாங்கித் தருகிறேன். படித்து நீங்கள் சொல்ல வேண்டும்” என்று சொன்ன லெட்சுமிராம் லனகல்வி அலுவலர் ஒப்புதலோடு மொழிப்பாட புத்தகம், கையோடுகளுக்கு பதிலாக மாணவர்களிடம் பணம் பெற்று நல்ல கதைப்புத்தகங்களை தந்து மெளன வாசிப்பை வளர்க்கிறார். வாசித்ததை மற்றவர்கள் முன்னிலையில் உடல்மொழியோடு சொல்லச் செய்கிறார்.

“இன்று கதை வேண்டாம். விளையாடுவோம்” எனச்சொல்லி மைதானத்திற்கு அழைத்துச்சென்று கோகோ விளையாடச் சொல்கிறார். பள்ளி என்றால் மனப்பாடம் என்று மட்டுமே அறிந்திருந்த மாணவர்களுக்கு முதன்முறையாக ஒரு ஆசிரியர் விளையாடுச் சொல்லியது வினோதமாக இருந்தாலும் சந்தோசப்படுகிறார்கள் மாணவர்கள். ஆனாலும் அவர்களது கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மையை அங்கே உணர்கிறார். ஒருவாறு சமாளித்து மாணவர்களை விளையாடச் செய்கிறார். கோகோ விளையாட்டின் முடிவில் வெற்றியடைந்த குழுவிலுள்ள ஒருவன் தோல்யிடைந்த குழுவிலுள்ள ஒருவனை கேலி செய்ய, கோபமடைந்த அவன் கல்லால் கேலி செய்தவனை மண்டையை உடைத்துவிடுகிறான். தலைமையாசிரியர் பிற ஆசிரியர்கள் மண்டை உடைபட்டவனது பெற்றோர் என சகலரின் கேலிப்பேச்சுக்கும் கண்டிப்புக்கும் ஆளானாலும் “விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும். அதுவே உண்மையான கல்வி” எனத் தன் நிலையில் ஆசிரியர் பிடிவாதமாக இருந்து மாணவர்களை நாளடைவில் கட்டுப்பாடோடும் ஒழுங்கோடும் விளையாடப் பயிற்றுவிக்கிறார்.

இதனிடையே தூய்மையின் அவசியம் பற்றி மாணவர்களிடம் உணர்த்துகிறார். பெற்றோரின் ஒத்துழைப்பைப் பெற இவர் கூட்டிய பெற்றோர் கூட்டம் நினைத்த இலக்கைப் பெறாமல் சப்பென முடிகிறது. இதற்குள் இரு மாதங்கள் கழிகிறது.

சொல்வது எழுதுதல் பயிற்சியை இதுவரை படித்த கதைப் புத்தகங்களில் இருந்து மாணவர்களுக்குத் தருகிறார் ஆசிரியர். நாளடைவில் நல்ல பலன் கிடைக்கிறது. தன் செலவில் கண்ணாடி, சீப்பு, எண்ணெய், துண்டு இவற்றையெல்லாம் வாங்கி ‘தனது புறத்தோற்றம் எப்படியிருக்கிறது? அதை சரிசெய்வது அவசியம்’ என்பதை மாணவர்களைத் தானே உணரச் செய்கிறார். சந்தப் பாடல்களை பாடுகிறார். பாடச் செய்கிறார்.

முதன்முறையாக வரலாற்றுப் பாடத்தை கதையாக சுவைபட மெருகேற்றிக் கூறுவதோடு முக்கிய பாடக்கருத்துகளை கைப்பட எழுதி வாசிக்கச் செய்கிறார். இப்படியாக அடுத்த இரு மாதங்கள் கழிகிறது.

குருகுலம் தமிழ் செய்திகள்!: The Great ...

வருடந்தோறும் வழக்கப்போல் நடக்கும் கமிஷனரின் ஆண்டாய்வுக்கு மாணவர்களை தயார்செய்ய தலைமையாசிரியர் கூற, லெட்சுமிராம் “இயந்திரத்தனமான இந்த நடைமுறைக்கு என்னையோ, என் மாணவர்களையோ கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று கூறிவிடுகிறார். கல்வித்துறை உயர் அலுவலரின் தலையீட்டுக்குப் பிறகு “என் வகுப்பு மாணவர்கள் பிரத்தியேகமாக ஒரு நிகழ்வை நிகழ்த்துகிறோம்” என்றுசொல்லி கமிஷனரின் ஆய்வின் போது லெட்சுமிராமும் அவரது மாணவர்களும் இதுவரை அவர்கள் படித்த கதைகளில் மூன்றை இயல்பாக நடித்துக்காட்டுகின்றனர். கமிஷனர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகின்றனர்.

தான் வகுப்பறையில் புதுவிதமாக மொழிப்பாடத்தில் இலக்கணம் கற்பித்த முறைகள் பற்றி கல்வித்துறை உயர் அலுவலரிடம் சொல்வதும் விவாதிப்பதும் இப்புத்தகத்தில் பதினைந்து பக்கங்களில் இடம்பெறுகிறது.

பருவத்தின் இடையில் நடக்கும் மதிப்பீட்டுத் தேர்வை லெட்சுமிராம் வகுப்பை உயர்கல்வி அலுவலர் பார்வையிடுகிறார். உடல்மொழியோடு சுவைபட கதை கூறுதல், அந்தாதி விளையாட்டு, விடுகதை, பள்ளித்தூய்மை, விளையாட்டு, கையெழுத்து, புத்தக வாசிப்பு, படைப்புத்திறனை காட்சிப்படுத்துதல் என மாணவர்கள் தங்கள் திறன்களை காட்டுகின்றனர். பாராட்டப்படுகிறார்கள்.

ஓவியம் வரைவதற்கு அடிப்படைப் பயிற்சி தரும் லெட்சுமிராம் பிறகு உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் மூலம் நல்ல பயிற்சி பெற வைக்கிறார். கூடுதலாக சர்வேயர் ஒருவர் மூலமும் பயிற்சி தருகிறார். தொலைநோக்கி மூலம் இரவில் வானத்தை மாணவர்களை பார்க்கச் செய்து ஆர்வமூட்டுகிறார். களப் பயணம், தேசப்படம், புவிக் கோள மாதிரிகள் மூலமாக பாடத்திட்டத்திலுள்ள புவியியல் கருத்துக்களை கற்பிக்கிறார்.

கணிதத்தில் மாற்றம் செய்ய ஆரம்பநிலை வகுப்பே சரியானது என்பதை உணரும் அவர், அவரது வகுப்பு மாணவர்கள் நல்ல கணிதத் திறன் பெறவைக்கிறார்.

வருட இறுதியில் தேர்வு வைக்க வரும் உயர் அலுவலர் லெட்சுமிராம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து, ஒருசிலர் படிப்பதை நிறுத்திவிட்டு ஆர்வமுள்ள தொழில்களில் திறன்பெறட்டும் என்கிறார். நாம் லெட்சுமிராம் இந்த கருத்தோடு முரண்படுகிறோம்.

ஜிஜுபாய் பதேக்கா லெட்சுமிராம் எனும் பெயரில் இந்த புத்தகத்தில் உலாவருகிறார். 1916 யில் வகுப்பறையில் சரிசெய்ய வேண்டியவையாக இருந்த பிரச்சனைகள் யாவும் இப்போதும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே.

ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய இப்புத்தகம் 106 பக்கங்கள் கொண்ட 35 ரூ விலை கொண்டது.

வி.கணேசன்
பரமக்குடி