நூல் அறிமுகம்: பகல் கனவு – டாக்டர் இடங்கர் பாவலன்நூல்: பகல் கனவு 
ஆசிரியர்: ஜிஜுபாய் பதேக்கா
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
விலை: ₹35

பகல் கனவு புத்தகத்தை வாசிக்கத் துவங்குகையில் ஒரு மருத்துவராக நான் ஏன் கல்வி தொடர்பான இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வோடு தான் ஆரம்பித்தேன் என்பதை சொல்லுவதிலிருந்து இப்புத்தக விமர்சனத்தை எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்புத்தகம் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட ஆண்டு 1932. ஆனாலும் இப்புத்தகத்தை வாசிக்கிற எவருக்குமே இப்படியெல்லாம் எங்களுக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லையே என்று இருபத்தியொராம் நூற்றாண்டிலும் ஒரு வாசகனை ஏங்க வைப்பதிலேதான் இப்புத்தகத்தின் வெற்றியும் இன்றைய கல்விமுறையினுடைய தோல்வியும் இருப்பதாக நினைக்கிறேன்.

காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிற எதுவொன்றையும் உடைத்து புதியதொன்றாக பரிணமிக்கச் செய்வது அசாத்தியமான செயல்தான். ஆனால் எதார்த்தம் என்னவோ இங்கே பழமைவாதத்தையே நம்பியிருக்கிற சூழலில் புதியதாக பரீட்சார்த்தம் செய்ய வருகிற புத்துயிர்ப்பான ஆசிரியர்களையும் பழமைக்குள் இழுத்து குட்டை போல தேங்கிவிடச் செய்கிற கட்டமைப்புதான் இன்று வரையிலும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறதென்றால் நாம் இன்னும் செல்லக்கூடிய தூரம் வெகு தொலைவிலே இருக்கிறது.

பேருக்கு புதிய கல்விக் கொள்கை என்று வைத்துக் கொண்டாலும்கூட அது முழுக்க முழுக்க இன்றும் பழமைவாதத்தையே முன்வைக்கிறதென்றால் நாமெல்லாம் எவ்வளவு தூரம் காத்திரமாக விவாதிக்க வேண்டிய சூழலாக இது தீவிரமடைந்திருக்கிறது என்பதை எண்ணி அதிர்ச்சியாகவே இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கையை யாரும் வாங்கிப் படித்துவிடக்கூடாது என்று பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல, மதங்களை உள்ளடக்கிய பள்ளி வளாகத்தில் புனித நூலைக் கொடுத்தபடி இவ்வுலகையும் மனிதனையும் கடவுளே படைத்தான் என்று கற்பிக்க ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் அதை ஊக்குவிக்கிற பெற்றோர்களும் இன்றும் இருக்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட பொறுத்தம்.

தொண்ணூறுகளில் மகத்தான கல்விப் புரட்சியாக அறிவியல் இயக்கம் தலைதூக்கிய போது அதிலே படிப்பறிவற்ற மக்களிடையே கல்வியை எப்படி கதைகளின் வழியே, நாட்டுப்புற பாடல்கள் வழியே, விடுகதைகள் மற்றும் பட்டிமன்ற வடிவிலே கற்பிக்கலாம் என்பது மாதிரியான பலவித முயற்சிகள் நடைபெற்றது. அதன் விளைவாக பள்ளிக் கல்வியிலும் பலவிதமான முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன தான். ஆனால் எந்தெந்த ஆசிரியர்கள் தனிப்பட்ட விதத்தில் மாற்றம் வேண்டி முயற்சி எடுத்தார்களோ அவர்களின் மாணவர்கள் மட்டுமே அந்த புதிய கல்வித் தளத்தைக் கண்டார்கள். மற்ற மாணவர்கள் பழைய ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தினால் மனனம் செய்தே பிழைப்பை ஓட்ட வேண்டியிருந்தது.

நான் பள்ளிக்கூடம் படித்தது என்னவோ 1996 லிருந்து 2007 வரைதான். அதுவரையிலும் பள்ளி நூலகம் எனகிற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. கணினி பாடத்திட்டம் இருந்த போதும்கூட அது பூட்டப்பட்ட அறையின் கண்ணாடித் தடுப்புகள் வழியேதான் கண்காட்சி என்கன்ற அளவிலே கற்பிக்கப்பட்டது. எங்களின் மொழிப்பாடம் கதைகளை முன்னிறுத்தவில்லை. ஆங்கில வழிக் கல்வி எந்தவிதமான தொடர்புகளையோ அல்லது அம்மொழி வழியே கூடுதலான அறிதல் தொடர்பான ஈர்ப்பையோ உண்டாக்கவில்லை.

கணிதம் வெறுமனே கரும்பலகையைப் பார்த்தல், பார்த்து எழுதுதல், வீட்டுக்கணக்கு செய்தல் என்பதாகவே கழிந்தது. அறிவியலில் படித்த பாடங்களெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்களுக்கும் படிப்பதற்குமான தொடர்பை விளக்குவதில் தோல்வியுற்றன. சமூகஅறிவியல் எல்லாமே இப்போது யோசித்துப் பார்த்தாலும் ஆண்டுகளை மனப்பாடம் செய்கிற ஒரு கணித வகுப்பைப் போலாகவேதான் இருந்திருக்கின்றன. இருபத்தியொராம் புலிகேசியின் படம்தான் புவியிய் பாடத்தைப் பற்றி கேள்வியும் போது கூடுதலாக ஞாபகம் வருகிறது.

இதை வெறுமனே எனது தனிப்பட்ட அனுபவமாக மட்டும் நினைக்கவில்லை. என்னை சார்ந்த பெரும்பாலானோரின் வெளிப்பாடுமே இதுதான். பகல் கனவு புத்தகத்தில் ஆசிரியர் புவியியலை புரிய வைப்பதற்காக இப்படியான கேள்வி வழியே பாடத்தைக் கொண்டு போவார்..

பவநகர் வரைபடத்தில் எங்கே இருக்கிறது?

பையன்களும் அரக்கப் பறக்க தேடி அதை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார்கள். மறுபடியும்..

கத்தியவாரில் எந்தத் திசையில் பவநகர் உள்ளது? என்று கேட்டவுடன்..

மாணவர்கள் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு வடக்கு என்கிறார்கள். மேலே என்றால் வடக்கு, கீழே என்றால் தெற்கு என்று அதற்கு மாறி மாறி அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். அதைக் கேட்டதும் ஆசிரியர் குறும்புத்தனமாக,

மேலே ஆகாயம் தான் இருக்கிறது, வடக்கு எப்படி இருக்க முடியும்? என்கிறார். அதற்கு இன்னொரு மாணவன்,

நீள்வாக்கில் வடக்கு-தெற்கு, அகலவாக்கில் கிழக்கு-மேற்கு என்கிறான்.

மற்றொரு பையனோ, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்கிறான். ஆசிரியர் உடனே இந்த வரைபடத்தில் தான் சூரியன் இல்லையே! என்றவுடன் மாணவர்கள் யோசிக்கிறார்கள்.

அப்புறமாக ஒரு நதியைக் காட்டி செத்குஞ்சி நதி எதனுடன் கலக்கிறது? என்கிறார். அதற்கு மாணவர்கள் கம்பட் வளைகுடா என்று பதிலளிக்கிறார்கள்.
உடனே ஆசிரியர், அது ஏன் அரபிக்கடலில் கலப்பதில்லை, அது ஏன் கீழே இறங்கி வருகிறது? என்று கேள்விகளைக் கேட்க கேட்க புவியைப் பற்றிய அறிதல் அங்கே விரிகிறது.

மற்றுமோர் விசயத்தை இங்கே சொல்லியாக வேண்டும். 1932ல் எழுதிய இந்த பகல் கனவு புத்தகத்தில் வானத்தைக் காண்பதற்கு வான்நோக்கியை கொண்டு வருவதாக எழுதியிருக்கிறார். ஆனால் இந்த 2012ல்கூட மரமண்டையாக வாழ்ந்து கொண்டிருக்கிற நானே இன்னும் பார்க்கவில்லையே என்று எனக்குள் அதிர்ச்சிகர பெல்லொன்று சத்தமாக அடிக்கிறது.

இப்புத்தகத்தில் ஒரிடத்திலே குழந்தைகள் பயணக்கதைகளை விரும்பிப் படிப்பார்கள் என்று ஆசிரியர் சொன்ன இடம் பொறி தட்டியதைப் போல இருந்தது. பெரியவர்களுக்கென எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய பயணக்கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கென பயணக்கதைகளும், கட்டுரைகளும் ஏதாவது எழுதப்பட்டிருக்கின்றனவா என்று யோசித்துப் பார்க்கிறேன். சட்டென்று உடனே டோரா புஜ்ஜி தான் ஞாபகம் வருகிறது. காடு மலை ஏரி என்று பயணத்தை நடத்துகிற டோராவும் புஜ்ஜியும் ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்கிற உண்மை இப்போது விளங்குகிறது. குழந்தைகளுக்கான பயணம் தொடர்பான புத்தகங்களின் தேவையும் இப்போது அதிகரித்திருக்கிறது.இன்னொன்று முக்கியமான விசயம் மருத்துவத்தைப் பற்றி சொல்ல வேண்டியது. அதைத்தான் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன். கல்வி என்றதும் நமக்கு பள்ளிக்கல்வி மட்டுமே ஏன் ஞாபகம் வருகிறது, அது ஏன் கல்லூரிக் கல்வியின் மேல் நம் கவனம் விழவே மாட்டேன் என்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது. கல்வி சார்ந்த பரிட்சார்த்த முயற்சிகள் பள்ளி அளவிலேயே நடக்கையில் அது கல்லூரி அளவிலே எந்த அளவிற்கு பரிணாமம் அடைந்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வி அல்லவா. மருத்துவக்கல்வி கற்பித்தல் முறையில் நாம் எப்படியெல்லாம் படித்தோம், நம் கல்வி, கற்பித்தல் முறை, தேர்வு முறையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய சிந்தனையை இப்புத்தகம் கிளப்பிவிட்டதுதான் உண்மை.

மருத்துவர்களை உருவாக்குகிற துறை யார் கையிலே இருக்கிறது, அது என்ன மாதிரியான தேர்வுகளை முன்வைக்கிறது, அது கடநத் பத்தாண்டுகளில் எந்த மாதிரியான புதிய முயற்சிகளை எடுத்திருக்கிறது, மருத்துவக்கல்விக்கான ஆலோசகர்கள் யார், அந்த ஆலோசகர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள், உண்மையாகவே இந்த கல்வியும், நடைமுறையும் சரியான மருத்துவர்களை உருவாக்கியிருக்கிறதா, இன்னும் என்னவெல்லாம் மாற்றங்களை கொண்டு வர வேண்டியிருக்கிறது போன்ற கேள்விகளை இப்புத்தகம் என்னுள்ளே கிளப்பியிருக்கிறது.

இதுவரையிலும் நான் படித்தேன், பாஸானேன். மருத்துவரானேன் என்று நேர்கோட்டிலிருந்த சிந்தனையை நான் படித்த மருத்துவக் கல்வி முறை பற்றிய அடிப்படை விவாதத்தை நோக்கி நகர்த்தியது தான் இப்புத்தகம் எனக்குள் செய்த மாற்றம் என்று சொல்லலாம். இப்புத்தகத்தை நான் நினைத்தது போல மருத்துவக்கல்வியை கட்டமைப்பவர்களும் யோசித்திருப்பார்களா, அவர்களெல்லாம் இந்த பகல் கனவு புத்தகத்தை வாசித்திருப்பார்களா என்று இப்போது மனம் கேள்வி எழுப்புகிறது.
ஏற்கனவே மலுங்கடிப்பட்ட பழமைவாத மூளைகளுடைய பெரியவர்களை ஒன்றுமே செய்ய முடியாதுதான். தான் நினைத்தவொன்றை சாதிக்க வேண்டுமானால் அது இளைய தலைமுறையினர் வழியே அதற்கு வடிகாலான பள்ளிக்கல்வி வழியேதான் தகவமைக்க முடியும் என்கிற நோக்கத்தோடு எத்தனையோ விசயங்கள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. நாம் பல விசயங்களில் விளிம்பு நிலையில் தான் இருக்கிறோம். கல்வியைக் காப்பாற்றுவதென்று நம் பிள்ளைகளைக் காப்பதுதான் என்று பலரும் புரிந்து கொள்ளவில்லை. அந்த புரிதலின்மைதான் நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது.

கல்வி என்பது பள்ளிக்கல்வி மட்டுமல்ல கல்லூரிகளிலும்தான் என்கிற உள்ளுணர்வை தட்டியெழுப்பிய இப்புத்தகத்தைப் படித்த கல்லூரி ஆசிரியர்கள் எத்தனை பேர், அதில் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் எத்தனை பேர் என்று யோசித்துக் கொண்டே இப்புத்தகத்திற்கான அறிமுகத்தை முடித்து வைக்கிறேன்.