நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

‘பகட்டு’ என்ற அழகிய தமிழ்ச்சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும்u அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான் என சொல்லாராய்ச்சியுடன் இந்நூலைத் துவங்குகிறார். 32 பக்கங்களையே கொண்ட இந்நூல் கருத்துச்செறிவு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூலின் எந்த ஒரு பக்கத்தையும் நாம் எளிதில்  கடந்துவிட முடியாது. ஒரு சில நூல்களை நாம் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டிய நூலாக அமையும். அப்படிப்பட்ட மிகச் சிறந்த நூலாகும். இந்நூலில் இறையன்பு அவர்கள் ஊதாரித்தனமும் பகட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை பதிவுசெய்கிறார்.  சூழலுக்கு மீறி நடந்து கொள்வதும் பகட்டு தான். இறப்பு வீட்டில் பட்டுப்புடவை கட்டுவது கூட பகட்டுதான். அனைவரும் அழுதும் துக்கத்தோடும் இருக்கும் வீட்டில் அலங்காரம் செய்துகொண்டு ஒயிலாக நடந்துவருவது பகட்டுதான். மனிதர்களுக்கு மட்டுமல்ல பொருள்களுக்கும் தகுதி இருக்கின்றது. அந்தடப் பொருளுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதும் பகட்டுதான். பித்தளை நகைக்கு தங்க பேழையை உபயோகிப்பது, பழைய சாதத்திற்கு தங்கத் தட்டைப் பயன்படுத்துவதும் ஆடம்பரம்தான்.

கழிவறைக்குள் தொலைக்காட்சிப் பெட்டி வைத்தால் அது மிகை. சிலர் பதவிஉயர்வு கிடைத்ததும் கழுத்தில் தங்கச்சங்கிலியும், கைச்சங்கிலியும், விரல்களில் கல்வைத்த மோதிரமும் அணிந்து கொண்டு அடிக்கடி கையை ஆட்டிய வண்ணம் பேசுவார்கள். ஆனால் பழைய தோற்றம் மாறாமல் இருந்தால் அவர்கள் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடும் என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. சிலவற்றை ஏற்றுக்கொள்வதை விட மறுக்கும் போதுதான் மரியாதை அதிகம்.நோபல் பரிசை மறுத்துவர்கள்தாம் வினாடிவினா நிகழ்ச்சியில் கேட்கப்படுகின்றனர்.

இருவர் வாழ்வதற்கு பல பேர் இருக்கும் அளவு பெரிய வீடு கட்டுவதும் பகட்டே.  தேவைக்கு மீறி இருப்பதும் ஆடம்பரமே. உள்ளம் சுருங்கச் சுருங்க வீடு பெரிதாகும் என்ற உண்மை புரிந்தவர்களுக்கு இந்த விஸ்வரூபம் கொசுவாய்த் தோன்றும். இருவர் சாப்பிடுகிற விருந்துக்கு இருபது பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு வகைகளை சமைப்பது ஆடம்பரமே. விருந்து முடிந்ததும் வீணாகின்ற உணவு வருத்தத்தை வரவைக்கும். கச்சிதமாய்ப் பரிமாறப்படும் விருந்து வயிற்றை நிரப்பும்; உள்ளங்களையும் நிரப்பும்.

வயதுக்கு மீறி வாழ்வது கூட பகட்டு தான் 60 வயதில் 20 வயது மாதிரி உடையுடுத்தி ஆடைகளின் அளவைக் குறைத்து, மூன்று அங்குலத்திற்கு முகப்பூச்சு பூசி, உயரச் செருப்பு அணிந்து ஒய்யாரமாக நடப்பதும் பகட்டுதான். இன்று சிறுவர்கள் முழுக்கால் சட்டையும்,பெரியவர்கள் அரைக்கால் சட்டையுடன் அலைந்து கொண்டிருப்பதை இறையன்பு அவர்கள் எள்ளி நகையாடுகின்றார்.

உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் உடையிலும்,பழக்கத்திலும் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும்.கண்களை உறுத்தாத உடையும் கருத்தை உறுத்தாத மொழியையும் அவர்கள் கையாள வேண்டும் என இறையன்பு அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார். கனவுக் காட்சியில் கதாநாயகன் அணிந்து கொள்கின்ற உடையை மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் அணிந்தால் அது கவனிக்கப்படும்; ஆனால் ரசிக்கப்படாது என்கிறார்.

அதிகக் கடன் வாங்கி வீடு கட்டுவார்கள். பிறகு அதை வாடகைக்கு விட்டு கடனை அடைப்பார்கள் என இன்றைய நிலையை படம் பிடித்துக்காட்டுகிறார்.இனிப்பில் கூடுதலாக நெய்யும் சர்க்கரையும் சேர்த்தால் கூட அது பகட்டுதான். பாயாசத்தைக் குடிக்கும்போது தொண்டையில் சிக்குமளவு திராட்சையும், முந்திரியும் தட்டுப்பட்டால் அதுவும் பகட்டுதான்.சிலர் தங்கள் பகட்டை ஆபாசமாக வெளிக்காட்ட எத்தனிப்பர். காலுக்கு தங்கக்கொலுசு அணிபவர்கள், கைக்கடிகாரத்தில் வைரக்கற்கள் அணிபவர்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களே! இவர்கள் தப்பித்தவறி கூட ஒரு நல்ல காரியத்திற்கு பணம் செலவழிக்க மாட்டார்கள்.

ஆடம்பரம் பொறாமையை விளைவிக்கிறது. ஏனென்றால் நம்மில் பலர் தாங்களும் அப்படி வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள்.சக்திக்கு மீறி படிக்க வைக்கிற பகட்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய ஒன்றாகும் என இக்காலச் சூழலை இறையன்பு அவர்கள் படம் பிடித்துக் காட்டுகிறார் அரசுப்பள்ளியில் படிக்க வைக்கும் அளவு வசதியுள்ள ஒருவர் சொத்தை அடமானம் வைத்து அதிக பணம் வசூல் செய்யும் பள்ளிகளில் சேர்ப்பதும் பகட்டுதான்.

“நாம்தான் சின்ன வயதில் சிரமப்பட்டு விட்டோம் நம்முடைய குழந்தைகளாவது சிரமப்படாமல் இருக்கட்டும்” என்ற மனப்பான்மை அவர்களைச் சாகும்வரையில் சிரமப்படுத்தும். என் குழந்தைக்கு என் கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறேன் என்று பெருமை பேசுவது முட்டாள்தனம். குழந்தைகளுக்கு சிரமம் தெரியாமல் வளர்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்கின்ற உபகாரமல்ல; கேடு என்கிறார். ஆடம்பரங்களைத் துய்க்கும் அவாவில் தான் பெரும்பான்மையான ஊழல்கள் நடக்கின்றன. படிக்காமல் வைத்திருக்கும் புத்தகமும், உபயோகிக்காத உடற்பயிற்சி சாதனங்களும் ஆடம்பரமே.

மகிழ்ச்சிக்கும் பகட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தினமும் ஆகாய விமானத்தில் பயணம் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முடிவு கட்டினால் அது முட்டாள்தனம் என்கிறார். மகிழ்ச்சியாக இருக்க தகுதிக்கேற்ப, தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப, வயதுக்கேற்ப ,பதவிக்கேற்ப வருமானத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வழி என வழி காட்டுகிறது இந்நூல்.  ஆடம்பர வாழ்வை பாவம் என்பார் காந்தியடிகள். எளிமையே அறம் எனச் சுட்டுவார். காந்தியடிகளின் வாக்கை நாம் வாழ்வில் கடைபிடிக்க வழிகாட்டியாக  இந்நூல் விளங்குகிறது. எனவே பகட்டும் எளிமையும் என்ற இந்நூலை நாம் அனைவரும் வாசித்து நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நூல்: பகட்டும் எளிமையும்

நூலாசிரியர்: முனைவர்.வெ.இறையன்பு
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்

பக்கங்கள்: 32
விலை: ரூ.20

ஆ.முத்துக்குமார்,
முதுகலை ஆசிரியர்,
அரசு மேனிலைப்பள்ளி,
உத்தம்பாளையம்,
தேனி மாவட்டம்.
அலைபேசி:9943161077.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *