நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

      வாழ்வின் அர்த்தம் ‌என்பது வாழ்ந்துப் பார்ப்பது தான்.. என கவியரசர் கண்ணதாசனின் வரிகளை அடிக்கோடிட்டு தமது அனுபவங்களை நேர்காணல் வழியாகப் பகிர்ந்த தோழர் காமுத்துரை அவர்கள் இன்றுவரை வறுமையின் சாளரங்கள் சிலமுறை காற்றடித்துத் திறந்துக் கொண்டாலும் எப்போதும்…
நூல் அறிமுகம்: உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது – து.பா.பரமேஸ்வரி




நூல் : உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது 
நேர்காணல் : தேனி சீருடையான்
சந்திப்பு : பா. பேகன் 

விலை : ரூ.₹65
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தமிழ்ச் செம்மல்
எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களின் சரிதை.
உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது –
குறுநூல்

தமுஎகச அறம் கிளை தோழர் பா.பேகன் அவர்களின் நேர்காணல் சந்திப்பிலிருந்து தொகுக்கப்பட்டது….
வாழ்க்கையின் அனுபவங்களே இலக்கியத்தை வடிவமைக்கும். அதைவிட வாழ்வின் சில ஆக்கபூர்வ ஆதாரங்கள் பல அர்த்தங்களைக் கற்றுத் தரும். ஆளுமைகள் ஆர்வலர்கள் பிரபலங்கள் என உச்சம் பெற்ற உயர்ந்தோரின் வாழ்க்கைப் பயணங்கள் வாழ்வின் பல நிஜங்களை சாட்சிப்படுத்தும். ஆனால் இலக்கியவாதிகள், படைப்பாளிகள் போராளிகள் என வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்றுக் கரைபுரண்ட களவான்கள், உடன் வாழ்க்கையின் போக்கைப் போதனைக்காட்படுத்தாது வாழ்பாடுகள் வீழ்த்தி எழுப்பிய பாடங்களைப் படைப்புகளின் வழியே செதுக்கும் முன்னோடிகளின் நடைமுறை வாழ்க்கை, நமக்கு இதுகாறும் வாரி இரைத்த சமூகத்திற்கான வாழ் கடனை கட்டி முடிக்கும் அனைத்து வழிகளையும் திறந்து விடும் நடைபாதை சுரங்கம்.

கூடுதலாக உழைப்பாளிகளின் பாட்டாளி பெருமக்களின் சரிதைகளும் சரித்திரங்களும் காலத்தைக் கடந்த நிஜங்கள். மனித நெரிசல்களில் இறுகித் தவிக்கும் நமக்கான ஆறுதல்கள். இது வெறும் மேடை சிறக்கும் வாக்குறுதிகள் போல தோன்றுவதையெல்லாம் பேசி முடிப்பது அல்ல வாழ்ந்துக் காட்டிய விளிம்பு நிலை சாதனையாளர்களின் அப்பட்டங்கள். பகட்டுதாரிகளைக் கண்டும் கனவான்களை நினைத்தும் உக்கிப் போவதை விட சமூகத்திற்காகவும் சக உயிர்களுக்காகவும் தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் வழியே எடுத்துக்காட்டாய் உயர்ந்தும் சிறந்தும் பணம் பதவி வசதி போன்ற அநித்திய போதைகளுக்கு வளைந்துக் கொடுக்காமல் சத்தியத்தின் சிறு வட்டத்திற்குள் நட்டமாய் நின்று தன்னடக்கமே தலைவணக்கமாய் பிறர் வளரவும் உயரவும் வழிகாட்டியாய் வழி விட்டு பின்புலத்தில் ஒருசாய நிற்கும் தூணாக துலங்கலை உண்டாக்கும் தூண்டலாக மெருகேற ஒரு தூரிகையாக இன்றும் சமூக மறைப்பின் பின்னால் வாழ்த்துக் கொண்டிருக்கும் மனித மாண்புகளின் வாழ்க்கைச் சரித்திரங்களும் சறுக்கல்களும் நமக்கான ஒன்றன் பின் ஒன்றான படித்தளங்கள், மெல்ல மெல்ல நுனி பற்றி சிரம் தொட உதவும் ஊனுகம்பு…

பொருளாதாரம் என்பது அவரவர் பாடு வாழ்வின் அமைவே ஒழிய பணமோ பகட்டோ ஒரு மனிதனை தராசின் அளவுகோலைக் கொண்டு அளந்திட முடியாது. பண்பான கொள்கையில் பகுத்தறிவுடன் பாங்காக நிற்கும் எழுத்தாளர் தேனி சீருடையான் போன்ற உழைப்பிலும் உள்ளத்திலும் உண்மையிலும் உறுதியிலும் அடாத நின்று மனித வாழ்க்கைக்கும் மணிதமிழுக்கும் மகிமைச் சேர்த்த ஆளுமைகளின் சரிதையை அனுபவ ரகசியங்களைச் சமூகவெளிக்கு விரியப்படுத்தும் நோக்கில் நேர்காணல் செய்துத் தொகுத்துக் குறுநூலாக வடிவம் தந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை தோழர்களின் மெனக்கிடல் அளப்பரியது..
பல வழுக்கங்களை சறுக்கல்களைக் கொண்ட ஏற்ற இறங்கங்களோடான அன்றாடங்கள் வாய்க்கப் பெற்ற நமது தோழர் சீருடையான் வெயிலையும் மழையையும் பனியையும் புயலையும் மாறி மாறி ஏற்று வேரூன்றி விரவி நின்ற பெருவிருட்சம். அடுத்தடுத்தக் கட்டங்களுக்குத் தமது பொருளாதார படிமங்களை இலக்கிய வரப்பின் கொள்முதலில் அறுவடை செய்து நித்தம் மகிழ்கூடிய கணங்களைக் கொண்டாடித் தழைக்கும் இலக்கியக்கனிதாரி.

அசலில் ஒவ்வொரு எழுத்தாளுமைகளின் இலக்கிய முகங்கள் தாங்கிய லட்சணங்களைக் கண்டு மெய்சிலிர்க்கும் நமக்கு பல எழுத்துதாரிகளின் மறைக்கப்பட்ட இருண்ட அந்தப்புரங்கள் என்பவை ஏழ்மையும் சமூக எகத்தாளமும், வறுமையும் மாறாத வலிகளும் கண்ட முகமூடிகள் என்பதற்கான நிகழ்கண சான்றாகச் சீருடையான் அவர்களின் வாழ்வனுப்பவங்களே போதுமானது. இவ்வாறான இலக்கியகர்தாக்களின் வறண்ட காலங்களின் அறிமுகமில்லாத நிலப்பரப்புகளை அறியவும் கற்கவும் இம்மாதிரியான விரிந்த பக்கங்களே வாசகர்களுக்கான பரந்த தடங்கள்..

உழைப்புதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்கிற தாரக மந்திரத்தைத் தடையின்றிக் கடைப்பிடித்து இளமைக் காலம் துவங்கி தற்போதைய முதிர்ந்த பருவத்திலும் ஓய்வு ஒழிவுயின்றி உழைத்து மனிதகுலத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தோழர் தேனி சீருடையான் அவர்களின் இயற்பெயர்
எஸ்.கருப்பையா. பெற்றோர் சுப்பையா மற்றும் குருவம்மாள். வறுமையிலும் வளமையிலும் உடன் பயணிக்கும் இணையராக ஜெயலக்ஷ்மி. இருமகன்கள், பேரக்குழந்தைகள் என பல்கனிக் கலவையின் ரசம் நிரம்பப் பெற்ற குடும்பக்குவளைக்குள் பழக்குவியல்களின் மத்தியிலேயே வாழ்க்கையை கனித்துய்க்க லயிக்கும் பழுத்த அனுபவசாலி..

ஏழ்மையின் கோரப் பிடியில் சிக்கி உழன்ற பிராயகால பருவ நினைவுகளே இன்றைய முதிர்காலங்களின் பல கணங்களைக் கனத்து அமிழ்த்துகிறது என்பது அவரது படைப்புகளின் சில ஓரங்கள் நமக்குச் சன்னமாக உரசிச் செல்லும்.

இன்றளவும் தனது பொருளாதாரத் தொலைநோக்குக் கோட்டில் மேலும் கீழும், இழுத்தும் பறித்தும், அழித்தும் திருத்தியும், அல்லாடியும் தள்ளாடியும் சீரான நேர்கோட்டை சீர்மையாக நகர்த்தி வரும் கடும் உழைப்பாளி.
தோழரின் சுய வாழ்க்கையையும் சுந்தர இலக்கிய சிந்தனையையும் சமூக சீர்திருத்தவாதியத்தையும் ஒருமித்தச் சரிதமாக்கிச் சாட்சிப்படுத்திய தமுஎகச அறம் கிளை தோழர் பேகன் அவர்களின் நேர்காணல் கேள்விகளும் கலந்துரையாடலும் பல விடை தெரியாத வினைமுற்றுகளை இலக்கிய வெளியில் படரச்செய்தது. இருண்டுக் கிடந்தப் பக்கங்களை மீள் வாசிப்பிற்குப் புரட்டச் செய்தது.

வறுமையும் புலமையும் ஒட்டிப் பிணைந்தது;
ஏழ்மையும் ஏட்டிலக்கியமும் இணைப்பிரியாதது…
என்கின்ற வாய்ச்சொல் வழக்குக்கு அதி பொருத்தமான மனிதமாக இலக்கிய வள புலவராகப் பூத்து நிற்கிறார் தோழர் சீருடையான். விவசாயக் கூலி குடும்பத்தின் பின்புலத்தைக் கொண்ட சீருடையான் அவர்களின் தாத்தா அதாவது அம்மாவின் அப்பா அன்றைய காலத்தில் களவு செய்வதில் வல்லவர் எனவும் பாட்டையா அதாவது அப்பாவின் அப்பா ஜல்லிக்கட்டுக்குப் பேர் போன அய்யம்பட்டியில் பிறந்தவர் எனவும் ஏட்டுக் கல்வியறிவு முற்றிலும் இல்லாத போதும் வாக்கணக்கில் வித்தகராகத் திகழ்ந்த பெருமைமிகுப் பூர்வீகப் பின்புலன்கள் கொண்டவராகத் தோழர் சீருடையான்.
அப்பா வறுகடலை வறுக்கும் கூலித் தொழிலாளி என்றும் அம்மா ஆரம்பக் காலத்தில் காட்டு வேலையில் உழைத்துப் பிழைத்தும் பிற்பாடு புளிதட்டுதல் பஞ்சு பிரித்தல் போன்ற தேனி மாவட்ட பெண்களுக்கான பிரத்யேக சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர். பெற்றோர் இருவரும் கடும் உழைப்பில் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்தும் குடும்பம் எப்போதும் உணவுக்கும் உவகைக்கும் அன்றாடத்திற்கும் ஆசாபாசங்களுக்கும் தட்டுப்பாடுடனேயே கட்டிப்போட்டு இருந்ததைத் தோழர் சீருடையான் துக்கம் தொண்டை நனைக்க நினைப்படுத்தியுள்ளார் தமது வாழ்கைப் பகிர்மையில்.

இத்தனை ஆண்டுகால இலக்கிய உச்சத்தின் உயிர்ப்பான எழுத்தாலும் தித்திக்கும் மொழிப் புலமையாலும் எழுத்துலகின் பிரசித்திப் பெற்ற நாயகர். அவரின் படைப்புகளில் கவரப் பெற்றவர் நூறாயிரம், கற்றுத் தேர்ந்தவர் பல்லாயிரம், அவர் நடை கண்டு கலை பழகிய படைப்புகள் ஓராயிரம். இவை அத்தனையும் தமது வாழ்வாதாரத்திற்கான உழைப்புடன் இலக்கிய ஆதாரத்திற்கான திளைப்புடன் ஒய்ந்துக் களைத்தவர் நமது தோழர் அவர்கள். அசலில் தேனி சீருடை யான் என்பதற்கு முழு தகுதிப் பெற்ற ஒரே ஆளுமை என்றே வியந்தோதலாம்…..
தேனீக்கள் போன்ற அயராத உழைப்பும், தீந்தமிழை தேனினிய தெள்ளமுதாக்கப் பருக வழங்குவதில் தேன் கூடாகவும் ஒருமித்தமாய் கொண்ட சீர்மை உடையான் நம் தேனீ சீருடைான்.

நேர்காணல் போல வெறுமனே கலந்துரையாடிக் கடத்திராமல் சுய சோதனையாய் தமிழுக்கும் தமிழனுக்கும் இடையே உறவாடி ஊடாடியுள்ளார் தோழர். தமது சத்தியத்தின் சித்த சுத்தியில் சிவ வடிவான அமைதி ஸ்வரூபத்தில் சுந்தரமொழிப் புலனில் தமிழிலக்கியத்தைச் செழிக்கச்செய்துள்ளார் நமது தமிழ் செம்மல் அவர்கள்.

கொடிது கொடியது இளமையில் வறுமை என்கின்ற அவ்வை மொழிக்குக் கரு உருவாக உதித்தவர் தோழர். அதனினும் கொடிது பிள்ளைமையின் ஏழ்மை என்கின்ற வாசகத்துக்கும் மிகப் பொருத்தமாய் அவரது பிராயகால ஏக்கங்களைக் கண்ணீர் மாலையில் கோர்த்துப் பகிர்ந்துள்ளார்….

பால்ய காலங்கள் என்பவை மகிழ்ந்திருக்க வேண்டிய கனாக் காலங்கள்…. பசித்த வயிறு பொரும ருசிக்க பக்குவமின்றி பரிதவித்தவர். அந்த குழந்தைமை ஈர விசும்பலை அவரது பாத்துமா அத்தை பணியாரம் உண்ண வழங்கிக் கொஞ்சமாக ஆற்றுப்படுத்திய நினைவுகள் ஏராளம்… ஆயினும் கூலி வேலைக்குப் போகும் அம்மாவும் இதுபோல பணியாரம் சுட்டால் வயிறு புடைக்க உண்டு மகிழ்ந்திருக்கலாம் என்கின்ற பிள்ளைக்கே உரித்தான பேரவாவைப் பகிர்ந்த தோழரின் நனவு மொழிகள் குண்டு குழியான விழிகளை குளமாக்கி நிரப்பின. பசியின் பேரேக்கத்தைச் சுற்றத்துப் பிராயகால பிள்ளைகளுடனான விளையாட்டுக்களிப்பில் மறந்திருந்தார் மறைத்தும் இருந்தார் தோழர். குடும்பச் சூழல் காரணமாக ஒட்டிக் கொள்ள உடுப்பின்றி அம்மணைக்கட்டையாகத் திரிந்தக் காட்சிகளைப் பருவ ஞாபகங்களாகப் பகிர்ந்ததுத் திரைப்பிம்பங்களாகக் கண்முன் ஊசலாடின..
தோழரின் ஒவ்வொரு பால்ய கால நினைவுகளிலும் உடன் வாழ்ந்த பாரத்தை மனதிற்கு வழங்கின தோழரின் பகிர்மை…

வாசிப்புத் தளத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆசிரியர் பணியில் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளே இளமைக்கால வாசிப்பை அசூயையின்றி அனுபவித்து ருசிப்பர். சூழலும் சுற்றமும் அதற்குத் தக்கன உண்டாக்கித் தரும். ஒரு தந்தையை விட தாய் ஆசிரியராக இருக்கும் பட்சம் நிச்சயமாகப் பிள்ளைகள் நூல் வாசிப்பில் பரவலாக ஆர்வம் செலுத்தியிருப்பதை அறிய முடியும்.

இளம் வயது குழந்தைகள் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை பார்த்தால் குடும்பம் சார்ந்த எதிர்கால புத்தக வாசிப்பின் முன்னெடுப்பிற்கான அடித்தளத்தை உணர முடியும். ஏழை குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு இப்படியான வாய்ப்புக் கிடைப்பதில்லை என்று கீழ்த்தட்டு மக்களின் பிள்ளைகள் சிறுவயதில் கல்விசூழலின் வாய்ப்புப் போதாமையால் புத்தகம் வாசிக்க ஆர்வமிருந்தும் குடும்பத்தின் வசதி தோதற்று இருப்பதைத் தமது சொந்த அனுபவத்தின் வலியுடன் பேசியுள்ளார் தோழர்.

ஏழு வயதில் தமது பார்வையை இழந்த தோழர் சீருடையான் அவர்கள் பார்வையற்ற பள்ளிப்பருவக் காலங்களில் அவரது வாசிப்பின் முதல் விருத்தம் செவிவழியின் வழியாகத் துவங்கியது.

விடுதி மேற்பார்வையாளரான கிருஷ்ணன் சார் பல செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் பத்திரிகைகளின் துணுக்குகள் என ஒரு ஆசிரியாக பார்வையற்ற மாணவர்களுக்கு உலக நடவடிக்கைகளை வாசித்துக் காட்டிய பண்பை தோழர் சீரூடையான் குறிப்பிட்டுச் சொல்கிறார். தோழரின் வாழ்வில் வாசிப்பிற்கான அகவிழியை கிருஷ்ணன் சார் திறந்து வைத்தது போல அவரின் எழுத்திற்கான புறவழியை நிறுவியது அவரது ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆசிரியை… அதுபோக டாக்டர் மு வரதராசனார் எழுதிய “கல்லோ காவியமோ” நூலே அவரது முதல் புத்தக வாசிப்பாக அமைந்ததையும் அதன் தாக்கம் பின்னாளில் சமூக மீறல் நிகழ்த்தும் அவரது படைப்புகளின் பெண்பாத்திரங்கள் ஜீவித்தது இந்த சுவட்டிலிருந்து தான் துவங்கி இருக்கலாம் என்றும் கருதுகிறார்.

பத்திரிகைத் தலைப்புச் செய்திகளின் செவிவழிக் கடத்தல்களே வாசிப்பின் திறவுகோலாக மிளிர்ந்ததைச் சுட்டிக்காட்டும் சீருடையான் அவர்களின் எழுத்துக்களத்தின் முதல் அக்ஷரத்தைத் தோழரின் ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் கோவிந்தன் ஐயா சுழியிட்டார். இலக்கியத்தைப் பல தளங்களில் செகிழ்ச்சி அடையச் செய்தாலும் தோழரின் மைக்கோலுக்கு மகிமைச் சமைத்த முதல் தளமாகக் கவிதைக்களமே பள்ளிக்காலம் தொட்டுப் பயணித்து வந்ததற்கான வகுப்பறையின் மாணவகால படைப்பு தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. அதுவும் தமிழிலக்கணத்தைக் கற்பித்து வழிநடத்திய தமிழய்யாவின் வகுப்பில் அவரின் கற்றல் நிமித்தத்தின் தூண்டலாக எழுந்த மாணவ பருவத்தின் முதல் கவிதை தோழரின் சிந்தையிலிருந்து சிந்தியதைக் காணலாம்..

மாசின்றிப் பிறக்கிறாய்
மாசேற்று வாழ்கிறாய், தேன்கூட்டைச் சிதைத்து விட்டுத் தேனை நீ திருடுகிறாய்..

இந்தக் கவிதையில் கருத்துப் பிழையாக மனித இனத்தைக் குற்றக்கண் கொண்டுப் பார்ப்பதைப் போன்றதாக உள்ளது என தமது தமிழய்யா சுட்டிக்காட்டியதை உந்துதலாகக் கொண்டு தமிழய்யாவை மகிழ்விக்கும் வண்ணம் அவர் ஏற்கும் படியான கவிதையொன்றைப் படைப்பதையே வைராக்கியமாகக் கொண்டிருந்தததைக் கூறும் தருவாயில் பிள்ளை மனத்தைக் கொண்ட தோழரின் விட்டலேத்தியான மனம் வெளிப்படுகிறது.

தோழரின் கவிதை எழுதும் முனைப்பைக் கண்டு ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆசிரியை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொற்கிழி கவிதைப் போட்டியில் கலந்துக் கொள்ளவும் பார்வையற்ற தோழரின் பிரெயில் எழுத்து வடிவத்தைப் பேனாவில் எழுதித் தமது சொந்த அஞ்சல் செலவில் கவிதையை அனுப்பி வைத்து ஊக்கப்படுத்திய தமது ஆசிரியரின் மாண்பைச் சுட்டிக்காட்டவும் மறக்கவில்லை போட்டிக்கான கவிதை உரைநடை வடிவைத்தைத் தழுவியும் கவித்துவ வழக்கில் ஏற்ற இறக்கமாக இருந்ததையும் கூட குறிப்பிடத் தவறவில்லை தோழர்.
அடுத்தடுத்தக் கவிதை முயற்சிகளை ஒழுங்குப்படுத்த இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளை வாசித்து அதன் வழியாக உருவம் உத்தி போன்றக் கவித்துவ நுணுக்கங்களைக் கற்று அதன் பின்பாக, கற்பனைக் காதலியின் பிரிவு நிமித்தத்தில் புலம்பும் காதலனாக “விரக்தி” கவிதை, ஹவானாவில் தற்கொலை செய்துக் கொண்ட 936 பாதிரிமார்களைப் பற்றிய “ஆயிரம் பேர் பாய் விரிப்பு” என துவங்கும் கவிதை, காந்தியத்தைக் கிண்டல் செய்வதைப் போன்றக் கவிதை என வரிசையாக எழுதிக் கவியுலகில் தமது செந்நிற ரேகைகளை அழுந்தப் பதித்து வந்த தோழரின் இலக்கியவுலகின் கவிதைவிரிப்பில் பெரிதும் பேசப்பட்டப் படைப்பாக செம்மலரில் வெளிவந்த “வெயில்” கவிதை.

இதன் இறுதி வரிகள் இலக்கிய மேடைகளில் பலமுறை கவியாடின என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையோரத்து சிறு கடை முதலாளி
வீட்டில் அடுப்பறிய
வெயிலடுப்பு விறகானேன்‌.
என்கிற நிறைவு வரிகள் மனதை கனத்தன‌. தோழரின் வாழ்க்கை அப்பட்டத்தை உச்சரித்து உறவாடிய கவிமொழி..
தமது இருபதாவது வயதில் கண் அறுவை சிகிச்சை வழியாகப் பார்வை மீண்டபின் கவியரசு கண்ணதாசன்,கவிஞர் தணிகைச் செல்வன் கவிஞர் மீரா ஆகியோரின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டும், கவிஞர் நாகா கவிஞர் வெண்மணி ஆகியோரின் கவிதைகள் உணர்ச்சிவசப்படச் செய்ததையும், முற்போக்கு கனலைத் தூண்டச் செய்யும் விதமாக அமைந்ததை அடிகோலிய தோழர், அதன் பிறகு கவிஞர் இளவேனில் அவர்களின், கவிதைகள் என்ற பெயரில் புரியாமல் எழுதி ஏமாற்றும் வித்தவர்களை அம்பலப்படுத்தும் துணிவுமிக்க வீச்சான கவிதைகளை வரித்து வியக்கச் செய்த கவியுலக வாசிப்பனுபவங்களைப் புடைத்தெடுத்து பகிர்கிறார். இவ்வனைத்து கவியாளுமைகளின் கைவண்ணங்கள் தனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

1970 முதல் 80 வரையிலான காலங்களை கவிதைக்கான பொற்காலம் என்று சிலாகிக்கிறார் தோழர். கவியோடத்தில் ரசவாதத்துடனும் யதார்த்தவாதத்துடனும் கவிந்துக் கிடந்த தோழரை பத்திரிக்கையாளர் பொன் விஜயன் சிறுகதைகளின் புறம் திருப்பி விட்டதாகப் பதிவிட்டுள்ளார்.

சிறுகதைத் தளத்தில் முத்திரைப் பதித்த எழுத்தாளர்கள் கந்தர்வன், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளின் படைப்புகளில் ஈர்க்கப்பட்டு சிறுகதை எழுதும் ஆர்வத்தை ஆழ்மன புதைக் குழியிலிருந்து வெளிக்கொணர கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த தோழருக்கு எழுத்தாளர்கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன், செம்பருத்தி,
விழி பா.இதயவேந்தன், புன்னை வனராசன் ஆகிய சிறுகதைதாரிகளின் படைப்புகள் கூடுதலாய் தோழரின் கதைகளுக்கு மெருகேற்றி சிறுகதை தளத்தில் பதிந்தத் தமது பாதம் பதமாக அடிவைத்த பின்புலத்தைச் சிலாகித்தும், சமகால எழுத்தாளர்களான காமத்துரை, அல்லி உதயன் போன்ற படைப்பாளிகளுடன் போட்டிப் போட்டு எழுதியதையும் துள்ளிக் குதித்துப் பகிர்கிறார்.

தமிழிலக்கியக்களம் அத்துடன் நழுவ விட்டுவிடுமா…..
தமது குலத்தின் குளத்தில் மூழ்கடித்து முத்து குளிக்க விடாமல் ஓரங்கட்ட நினைத்திடுமா என்ன..
அதற்கான உயிர்ப்பான சாட்சியாகத் தோழரின் கவிதை, சிறுகதைகள் என இலக்கிய தளங்கள் பரந்துபட்ட வெளியில் திக்குகள் ஒன்றாக சுழன்றிய வண்ணம் நகர்ந்து வர நாவல் புறமும் இழுத்துச் சென்றது தோழரின் விரல்கோல்களை… தேர்ந்த நாவலாசிரியர் பலரின் படைப்புகள் வாசித்து உண்டான ஆர்வத்தின் பிரதிபலனாக 1991ல் தமுஎகச நாவல் போட்டியில் தமது நாவல் ஒன்றிற்கான மூன்றாம் பரிசு பெற்றதையும் பூரித்துப் பகிர்கிறார். இன்றும் பல நாவல்கள் இலக்கியவனப்பை மிளிரச் செய்ய எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின்
“வீரயுக நாயகன் வேள்பாரி,” எழுத்தாளர் முத்துநாகு எழுதிய “சுளுந்தீ,” எழுத்தாளர் பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள்” ஆகிய நாவல்களை தமக்கு உவப்பானவைகளாக அடிக்கோலிடுகிறார் தோழர் சீருடையான்.

21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகள் நாவல்களின் காலம் என்று விதந்துக் கூறும் தோழரின் இளமைக்கால எழுத்தாளுமைகளைத் தொடர்ந்து முந்தைய பிந்தைய என நீளும் மனதைக் கவர்ந்த எழுத்துதாரிகளின் பட்டியல் சமகாலத்தில் அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களையும் தொட்டுச் செல்கிறது. ஒரு முதிர்ந்தப் படைப்பாளி சக படைப்பாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து அவ்வப்போது மதிப்புறும் வகையில் பாராட்டும் மாண்பைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் புலப்படுத்திய உதாரணபுருஷராக தோழர் சீருடையான் அவர்கள் இயல்பிலேயே பாராட்டும் தன்னகத்துடன் திகழ்வது சிறப்பு. காலங்களைக் கடந்த படைப்புகள் சமகாலப் படைப்புகள் என பேதம் பாராட்டாது பாரபட்சமின்றி பெருவாரியான எழுத்துக் குவியலுக்குள் ஊடாடித் தீர்த்துள்ளதை நேர்காணல் கலந்துரையாடலின் பக்கங்களில் கொஞ்சமும் சலிக்காது அடைப்புக்குறிக்குள் எழுத்தாளர்களின் பெயர் கொண்டு நூல்களை அணிவகுத்து போற்றியதில் தெளிவாகிறது.

கல்வி சமத்துவம், அறிவு சமத்துவம், காதல் சமுத்துவம் இருந்த போதிலும் பாலியல் சமத்துவமற்ற சமூகமாக வர்ணாசிரமப் புழக்கங்கள் சமூகப் பேதங்கள் போன்றவற்றை நம் தமிழ்க்குடி அறமாகப் போற்றியதைச் சங்க இலக்கியங்கள் பிரகடனப்படுத்தியதைப் புறநானூறு குறுந்தொகை பாடல்கள் கொண்டு அறிவுறுத்தியுள்ளார் தோழர்.
கற்பு நெறியில் குடும்ப மாதர்களின் ஸ்திரத்தன்மை, பெண்கள் கணவன்மார்களில் தவறான ஒழுக்க புழக்கங்களைக் கூட பெரிது படுத்தாது இவ்வாறான சீலமற்ற ஒழுங்கீன நடத்தையைக் கூட மனைவிமார்கள் கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்து வந்ததையும் கணவனை எல்லாவிதத்திலும் உயர்த்திப் பேசியும் மனங்கோணாது வாழ்ந்த அடிமை நியாயத்தை சங்க இலக்கியங்கள் கொண்டாடியதைப் பற்றிய செய்யுட்பாடல்கள் சிலவற்றை மேற்கோலிட்டும், பாட்டாளி மக்களின் ஆட்சியை நாடெங்கிலும் நிறுவ வேண்டும் என்று அன்றே புலவர்கள் தங்களின் பாக்கள் வழியாக சமத்துவ அரசியலை அறிவுறுத்தி

வந்தது அனைத்துகாலத்திற்கான தேவையாக இருந்ததைத் தீர்க்கதரிசிகளாக வலியுறுத்தியதைப் பதியமிட்ட தோழரின் சங்க இலக்கிய வாசிப்பார்வமும் இலக்கியம் சார்ந்த பல்வேறு அவதானிப்புகளும் நமக்கான கருவூலம். தேடிப்பிடித்தாலும் தேர்வு செயவிலாத பொக்கிஷங்களாகத் தமது சுயவிமர்சனத்தில் பதிவிட்டுள்ளது சங்க கால இலக்கியத்தையும் சமகால இலக்கியத்தையும் கலந்தாலோசிக்கும் சுற்றறிக்கையாக வாசருக்கு காலம்கடந்த களநிலவரங்களைப் பறைசாற்றுகிறது.

தோழர் சீருடையான் அவர்களின் “கடை” நாவலையும் முதல் சிறுகதை படைப்பான “மௌனத்தின் விழிப்பு” கதையையும் பல வகைமைகளுக்குள் நிரம்பிய தமது படைப்புகளில் மாறுபட்டவைகளாக அடையாளப்படுத்தியும் மிகவும் பிடித்தமான படைப்பாகச் விரல்நீட்டியும் எடுத்தியம்பியுள்ளார் தோழர்.

பாலின சமத்துவத்தை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கொள்ளாமல் தமது வாழ்வின் அன்றாடமாகவும் கடைப்பிடிக்கும் தோழர் தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர் அல்லி உதயன் போன்றோர்கள் தமது இணையர்களுடன் வீட்டு பணிகளைப் பகிர்ந்துப் பணிபுரியும் பாங்கைப் பெரிதும் சிலாகித்துக் கூறுகிறார். தம்மால் இவ்வாறான இல்லத் தரப்பின் பணிநிமித்தப் பகிர்வுகளில் ஈடுபடவியலாத மனோநிலையை நினைத்து வருத்தம் கொள்வதாகவும் சொல்லி முடிக்கிறார்..

தாம்பத்திய உறவு பொருளாதாரத்தைக் கையாளுதல் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றிலும் கூட பாலியல் சமத்துவம் நிலவுவதில்லை. இன்றைய கார்ப்பரேட் சமூகம் மாறும்போது தான் வாழ்க்கை சமத்துவத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்பதையும் ஊன்றி உரைக்கிறார் தோழர்.
சமூக உயர்வுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை போராடிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது மனித சமூகம். ஆகவே போர்க் குணம் கொண்டு அனைவரும் குறிப்பாக பெண் போராளிகள் களமிறங்க வேண்டும் என்று முழங்குகிறார்.

தாய்மார்களின் வாசிப்பு சாசனத்தின் வழியே தான் எதிர்கால தலைமுறைகளைக் கல்வி ஞானமிக்கவர்களாக வார்த்தெடுக்க முடியும் என்பதையும் வலுவாக வலியுறுத்துகிறார். சாதிய மதவாத ஆண் பெண் ஏற்றத்தாழ்வு மற்றும் உளவியல் வேறுபாடுகள் நிச்சயம் ஒருநாள் இல்லாமல் போகும் வலுவான போராட்டக் களத்தை உருவாக்க வேண்டும் என்றும் உரத்து உரைக்கிறார் தோழர்.
சாதிகளின் வீச்சு அல்லாது அதிகாரம் குறைந்திருக்கிறதா என்கின்ற கேள்வியையும் இங்கு முன்வைக்கிறார்.
சாதியில் ஆதிக்க வீச்சு மேலும் மேலும் அதிகரித்து வருவதை நகர்ப்புற தேனி பகுதியில் சுடுகாட்டுக்கு வழி கேட்டுப் போராடும் தலித் மக்களின் போராட்டம் உறுதிபாடற்ற அரசியலைக் கொண்ட அரசின் மெத்தன போக்கால் பிரச்சனைக்கான தீர்வு இன்றளவும் வழங்கப்படாததை எடுத்துரைக்கும் பல களநிலவரங்களை சாட்சிப் படுத்துகிறார் சீருடையான் அவர்கள்.

ஒற்றை தெய்வ வழிபாடு ஆட்சியாளர்களுக்கு உகந்ததாய் இருப்பதில்லை. ஆகவே ஒரே மதத்திற்குள் இரு கடவுள்களைப் பிரதிஷ்டை செய்து உள்மதப் புரட்சியை உண்டாக்குகின்றனர் என்றும் மதம் என்னும் தத்துவம் செயலிழந்துப் போகும்போது கடவுள் என்பவர் தானாகவே காணாமல் போவார். அன்பும் சமத்துவமும் தான் கடவுள் .அந்த கடவுள் நிலை பெறும் போது மனித விரோத கடவுள்கள் இல்லாமல் போய்விடுவர் என்கின்ற கடவுள் பற்றிய தோழரின் சமயோகிதப் பார்வை பல மூடமதவாத சக்திகளின் நீட்சியாக உருப் பெற்ற கடவுள்களின் வெவ்வேறு தோற்றம் பற்றிய பல புரிதல்களைப் புலப்படுத்தும் பக்கங்களாக விரிகிறது தோழரின் கடவுள் பற்றிய சமயோசித்தப்பார்வை.

கூடுதலாக மதம் பற்றிய தோழரின் இரு பக்க அளவிலான விளக்கங்கள் ஆழ்ந்த புரிதல்கள். மதம் ஆட்சியாளர்களின் ஆதிக்க வாத கருவிகளில் ஒன்று என்பது பக்க உரையில் அடிக்கோடிய வரிகள்.
உழைப்பை மேம்படுத்தும் இயற்கைச் சார்ந்த நம்பிக்கை, பிற மனிதருக்குத் தீங்கு செய்யாத ஆன்மீக நம்பிக்கை, மூலதனத்தை வளர்த்துப் பிரபஞ்ச வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் அதீத நம்பிக்கை என மனித நம்பிக்கைகளை மூன்று வகையாகப் பகுத்துப் பிரித்துள்ளார் தோழர். நம்பிக்கை மீதான அவரின் மாறுபட்ட பார்வை இன்றைய தலைமுறையினருக்குப் பல நித்தியங்களை உணர்த்தி அசாத்தியங்களை சாத்தியமாக்கும் ஒளியில் பயணப்படுத்துகின்றன.

இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு சுருங்கியுள்ளதால் எதிர்கால வாசிப்புக் கேள்விக்குறியாகி வருவதையும் நூலகங்களும் பதிப்பகங்களும் பேய் வீடு போல பாழடைந்துப் போக உள்ளதையும் பெருத்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் தோழர்.
இன்றைய நவீன காலம் மதவாதமும் வாழ்க்கையை தேடும் விரக்தி மனோபாவமும் ததும்பும் படைப்புகள் குறிப்பாக கவிதைகள் ஏராளமாகப புரள்கின்றன என்பதையும் சில பல கவிதை வரிகளைக் கொண்டு எடுத்துக்காட்டியுள்ளார்.

அரசியலற்ற படைப்பு சாத்தியமா என்கின்ற கேள்வியொன்றிக்கான விளக்கமாகச் சமுதாய இயக்கத்தையும் வளர்ச்சியையும் தனி மனித ஒழுக்கத்தையும் நெறிப்படுத்தும் அறக்கோட்பாடே அரசியல். மனித வாழ்விற்கு உத்தரவாதம் தரவேண்டியது அரசின் பொறுப்பு. ஆதிக்க வாதமும் அடிமை சிந்தனையும் இருக்கும் வரை எதிர் அரசியல் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கும். ஆக, அரசியலற்ற படைப்பிற்குச் சாத்தியமில்லை என்றும் அதுபோக இயந்திரங்களே உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. அவை மனிதனின் இயற்கை உணர்வை நுகர்வு உணர்வாக மாற்றியமைக்கின்றன. நுகர்பவன் தேய்கிறான் உற்பத்தியாளன் வளர்கிறான். இவ்விரு புறங்களில் ஏதாவதொரு புறம் இருக்க வேண்டிய அவசியத்தில் உருவானதே அமைப்பு. ஆக, இந்த சமத்துவமற்றப் பின்னடைவைச் சமன்படுத்த அமைப்பு ஒன்றில் இணைந்திருப்பது அவசியம். அமைப்பு தான் இலக்கு நோக்கிய பயணத்தை எளிமையாக்குகிறது. எழுத்தாளனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அமைப்பு அத்தியாவசியமான ஒன்று என்று ஆணித்தனமாக அழுந்த கூறுகிறார் சீருடைான் அவர்கள்.

தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்ததை வரலாற்றுச் சம்பவமாக நினைவு கூரும் தோழர்,நண்பர் தேனி பாலன்அவர்களின் வழியாக தோழர் அல்லி உதயனின் நட்பு கிடைத்ததையும் அவர் மூலமாக அல்லி நகரத்தில் அப்போதே தொடங்கிய தமுஎகசவின் அல்லிநகரக் கிளையில் உறுப்பினராக இணையும் வாய்ப்புக் கிடைத்ததையும் தொடர்ந்து இயக்கத்துடன் ஒன்றிணைந்துச் செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டுப் பேசிய தோழர் தமுஎகச வின் கிளை மற்றும் மாநில அளவுகளில் நடைப்பெற்ற நிகழ்வுகளில் ஏற்பட்ட பல்வேறு மறக்கவியலா சம்பவங்களை நினைவுஅடுக்குகளிலிருந்து மீட்டெடுத்து வழங்கினார்.. ஒவ்வொரு அனுபவங்களையும் வரிசைப்படுத்தித் துல்லியமாகத் தேதி முதல் கொண்டுப் பகிர்ந்துள்ளது தோழரின் இயக்கத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

போக, வயோதிகம் என்பது உடலுக்கு மட்டுமே மனம் எப்போதும் இளமையின் காலங்களை மீட்டெடுக்கும் நினைவாற்றலின் விசேஷ பெட்டகம் என்பது தோழரின் ஞாபகத் திறன் புலப்படுத்துகிறது .
சாதாரண மனிதர்களுக்கு இலக்கியத்தின் அவசியத்தை சில பக்கங்களில் எடுத்துரைக்கும் தோழர் மனித இனத்தை அணி திரட்டுவதற்கான முதல் முயற்சி கலையும் இலக்கியமும்.மனிதன் மரணம் அடைவான். இலக்கியம் அதன் தேவை நிறைவேறும் வரை ஜீவித்துக் கொண்டே இருக்கும். புரட்சியை உருவாக்குவதில் முதல் நிலைக் காரணங்களில் ஒன்று இலக்கியமும் மேடைப்பேச்சுமே. புரட்சி வெற்றியடையும் போது சாமானிய மனிதன் தனக்கான உரிமையை பெறுகிறான். சமத்துவ வாழ்க்கையைத் தனதாக்கிக் கொள்கிறான். இதுதான் இலக்கியம் சாமானிய மனிதனுக்குச் செய்யும் வேலை என்ற வரிகள் கொண்ட பக்கங்கள் வெறும் வெற்றுப் பேச்சிற்காக மொழிந்தவை அல்ல சொந்த வாழ்க்கையில் இலக்கியத்துடனான இணக்கம் தந்த அனுபவங்களின் ரசம்.
இவ்வாறான அனுபவச் செறிவுகள் பல உள்ளொடுக்கிய பொக்கிஷசாலையாக தோழர் தேனி சீருடையான் திகழ்வதே தமிழ் செம்மலாக இன்று தமிழிலக்கியவுலகில் வெளிச்சப்படுத்தியுள்ளது.

தனிமை துயரத்தைப் போக்கும் அற்புத மருந்து வாசிப்பு. ஆகவே நிறைய புத்தகங்கள் வாசியுங்கள் வாசிக்க வாசிக்க மனம் விசாலப்படும்.நேர்த்தியாக எழுதுவதற்கான பாதையை விரிவுபடுத்தும். வாசிப்பவர்களால் மட்டுமே நேர்த்தியாகவும் நிறைவாகவும் எழுத முடியும் என்கிற வாசிப்பின் அவசியத்தை மேன்மையை மகத்துவத்தை வளரும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இன்றைய வாசிப்பில் ஆர்வம் கொண்ட தலைமுறையினருக்கும் எடுத்துரைக்கிறார்.

போக,இலக்கியப் பிரவாகத்தில் அலை மோதிக் கிடக்கும் பல ஆகச் சிறந்த படைப்பாளிகளின் ஒப்பற்ற படைப்புகளை தமது கலந்துரையாடலில் அடிக்கோலிட்டு வரிசைப்படுத்தியுள்ளார். தொய்வின்றிய ஆர்வத்தில் வாசிப்பு அக்கறைக் கொண்ட முனைப்புடன் ஏராளமான நூல்களை வாசகப் பரப்பிற்கு வாசிப்பின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல அரிய பெரிய நூல்களை நூலாசிரியர் பெயர் சுட்டி அறிமுகப்படுத்தியுள்ளது தோழரின் இலக்கியத் தன்னார்வத்திற்கான சார்பு கருவூலம்.

அயல்மொழி இலக்கியங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைப் பற்றிப் பகிர்ந்துள்ள பகுதிகளில் ரஷ்ய இலக்கியங்கள் சென்ற நூற்றாண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலக்கியம் செழுமை அடைந்ததை இங்கு பாராட்டும் தோழர், மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்க்கும் மொழியிலும் பெயர்ர்க்கப்படும் மொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும் என்று மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களின் மொழிப்புலமையை விதந்தோத்துகிறார். கூடுதலாக, நகைச்சுவை இலக்கியம் படைப்பதும் அசாத்தியமானது என்று அறிவுறுத்தும் சீருடையான் அவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன், எழில்வரதன், சுரேந்திரநாத், ஜான் சுந்தர் போன்ற ஆளுமைகள் நகைச்சுவைத் ததும்ப எழுதி வருவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

சமகாலப் படைப்பாக எழுத்தாளர் அ.உமர்பாரூக் அவர்கள் எழுதிய “சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்” நாவல் நகைச்சுவை உணர்வை ஆங்காங்கே மேலோங்கச் செய்யும் புதினமாகப் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உழைப்பது,உழைப்பின் வழியே அன்பு செய்வது. சுதந்திர உணர்வுகளை உள்வாங்கி மனிதகுலம் வகுத்துத் தந்த அறக்கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து நிற்பது என்பதே உழைப்பு சார்ந்த தனது வாழ்க்கை கற்றுத்தந்த அனுபவப் பாடமாக இங்கு நேர்காணலில் பகிர்ந்துள்ள தோழர் தேனி சீருடையான் அவர்கள் உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்பதை வாழ்வியல் அனுபவச்செய்தியாகச் சமூகத்திற்குப் பிரகடனப்படுத்துகிறார்.

ஏழு சிறுகதை தொகுப்புகள் ஐந்து நாவல்கள் ஒரு கட்டுரை நூல் என் இலக்கியவுலகிற்கு தமது விரல் நுனியில் பெயர்ந்த பளிங்குக்கற்களைத் தொய்வின்றி வழங்கிக் கொண்டிருக்கும் தோழரின் ஆகச்சிறந்த எழுத்து வரப்பின் முத்தாய்ப்பான படையல்களாக “கடை” நாவலும், பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட “நிறங்களின் உலகம்” நாவலும் வாசக மனதை வசப்படுத்திய புதினங்கள்.

வாழ்க்கையில் இருந்து பிறந்து வாழ்க்கையைக் கண்டுணர்ந்து வாழ்க்கையை ஒரு படி முன்னேற்ற உதவும் யதார்த்தவாத கோட்பாடே தமது இலக்கியக் கொள்கையாகக் கடைப்பிடித்து வரும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் விருதுகள் பலவற்றிற்குச் சொந்தக்காரர்.

சக மனிதர்களின் வலிகளையும் உணர்வுகளைக் கண்டாய்ந்துப் படைக்கும் படைப்பாளிகளின் எழுத்துக்கள் வெறும் உணர்வுப் பகிர்வு. ஆனால் தோழரின் படைப்புகள் ஒவ்வொன்றும் சொந்த அனுபவங்களின் சாரல்‌. வாழ்க்கை படுத்திய வலிகளின் ஆற்றாமையை அதிகமாகப் பேசும் தத்ரூபங்கள்.. அநேக புனைவுகள் தன்னிலிருந்தே ஜீவித்தெழுந்தவை. சமபாலினர் நுண்ணுணர்வுகளைச் சரமாரியாகப் பேசியவை… அவற்றில் தமிழையும் தன்னையும் தனித்த பாணியையும் கலந்து உருவான உயர்கலசங்கள்…. தோழரின் சரிதையை அறியும் காலக்கண்ணாடியாகத் திகழ்ந்த அறம் கிளைத் தோழர் பேகன் அவர்களின் பட்டவர்த்தனமான கேள்விகள் சீருடையான் அவர்களின் பொருள் ஆதாரப் புலனை மட்டுமல்ல இலக்கிய ஆதார புலமையையும் அறிய உதவுகிறது.

எழுத்தாளருக்கே உரித்தான சொத்தாக ஏழ்மையும் வறுமையும்…. இனியேனும் விலகி விடியட்டும்.. எழுத்து விலைமதிப்பற்றவை என்பது எத்தனை நித்தியமோ..
அதே போல எழுத்தாளனும் விலைமதிப்பற்றவன்…. என்பதும் நிதர்சனம்.

இலக்கிய விண்வெளியின் விடிவெள்ளிகளான எண்ணற்ற எழுத்தாளுமைகளின் இருண்ட பாலைவனப் பள்ளங்கள் பசுமை நிறைந்த சோலைகளாகத் துலங்கப்படும் இனி….
என்கிற பேரெதிர்பார்பார்ப்பும் பெரு அவாவும் உருத்தெழ ஒரு வாசகியாக எனது ஆதர்ச ஆளுமைகளில் ஒருவரான தோழர் தேனி சீருடை யான் அவர்களின் சரித்திர சித்திரத்தில் சிலவற்றையாவது வாசித்துத் தொகுக்க வார்த்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமுஎகச அறம் கிளைக்கு நன்றியுரைத்து பெருமிதத்துடன் பங்கிடுகிறேன்..
நன்றி..

நூல் அறிமுகம்: அ.இலட்சுமிகாந்தன்,அ.உமர் பாரூகின் ”முற்போக்கு எழுத்தின் தடங்கள்” – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: அ.இலட்சுமிகாந்தன்,அ.உமர் பாரூகின் ”முற்போக்கு எழுத்தின் தடங்கள்” – து.பா.பரமேஸ்வரி




நூல் : முற்போக்கு எழுத்தின் தடங்கள்
ஆசிரியர் : அ.இலட்சுமிகாந்தன்,அ.உமர் பாரூக்
விலை : ரூ.₹250/-
பக்கங்கள் : 254
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

வணக்கம்.
இலக்கியங்கள் பல்வேறு ஆளுமைகளின் கைபக்குவத்தில் விதவிதமாக வடிவு பெறும். பலதரப்பட்ட எழுத்தாளுமைகளும் இலக்கியவாதிகளும் உலகளாவிய மொழிகளில் இன்றளவும் இலக்கியங்களைச் சிறப்பித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழிலக்கியம் எப்போதும் பிற மொழி இலக்கியத்தளத்திலிருந்து தனித்தே நிற்கும். தமிழிலக்கியவாதிகளும் பிறமொழி ஆளுமைகளிலிருந்து தனித்திருப்பர்.

ஆக, இலக்கியம் என்பது அழகியல் அரசியல் சிந்தனைவியல் ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பு. படைப்புக்கள் என்பது அவரவர் இயல்பிலிருந்து வெளிப்படும் உன்னதம். இதில் எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே அவரவருக்கான அடையாளம். நமது ஒவ்வொரு செயல்பாடும் எழுத்தும் எப்போதும் அர்த்தம் கொள்ளத்தக்கதாகவே இருக்க வேண்டும். முற்போக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் ஒருங்கே கொண்ட ஆளுமைகள் எழுத்துலகில் மிகக் குறைவே. அதிலும் இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறு சமூக மாற்றங்களை எப்போதும் சமகாலத் தேவையைச் சார்ந்தே இருக்கும். ஒரு தேசமோ மாநிலமோ இருள் சூழ்ந்து அள்ளாடும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அங்கு தேவையான வெளிச்சத்தை முற்போக்கு எழுத்துக்களால் மட்டுமே பாய்ச்சிட முடியும்,‌

முற்போக்கு எழுத்தாளனால் மட்டுமே துரித மாற்றத்தைக் கொண்டு வரவும் முடியும். நாம் எதற்கு எழுதுகிறோம் என்கின்ற கேள்வி ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் ஊடுருவும் கணம் முதல் முற்போக்கு சிந்தனைகளின் வீரியம் கூடிக் கொண்டே வரும். அதிலும் ஒவ்வொரு முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளனின் படைப்புகளை ஆராய்ந்தால் கண்முன் விரிந்த அவலங்கள் சமூகத்தை பாதித்தத் தீவிரவாதங்கள் என ஆற்றவியலா கொதிப்புகள் அவனுக்குள் கொப்பளித்துக் கிடக்கும். அதன் நீட்சியாக அவனை வெகுவாக பாதித்தவற்றைச் சீர்செய்யும் தளங்களைத் தமக்குள் தேடி அலைவான். அப்படியான தேடலில் அவனுக்குளிருந்து முளைத்த எழுச்சியே முற்போக்கு படைப்புகளின் தடங்கள்.

சமுகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் எழுத்தாளர்கள் அநேகர் இருக்க ஆகப்பெரும் மாற்றங்களை ஒரு சிலரால் மட்டுமே கண்டிட முடியுமா என்றால் நிச்சயம் குறைந்த அளவில் மட்டுமே திருத்தங்கள் காண இயலும். இப்படியான சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க பல புரட்சி மிக்க ஆளுமைகளின் ஒன்று கூடலும் அமைப்பு இயக்கம் போன்றவற்றின் அரவணைப்பும் நிச்சயம் தேவை. அந்த இயக்கம் சமூகத்தின் விரோதங்களைத் தீவிரவாதங்களைக் களைய வல்ல மாபெரும் பேராயுதமாக இருக்க வேண்டும். அதற்கான பெரும் மெனக்கிடல்களும் முன்னெடுப்புகளும் அவசியம். இவ்வாறு முற்போக்கு சிந்தனைகள் ஒருங்கே கொண்ட ஆளுமைகளைச் சமூகத்தின் சாதி, மதம், மொழி, இனம், அரசியல், பெண் விடுதலை என பலதரப்பட்ட அவலங்களை அநீதிகளைக் களைய எதிர்த்து குரல் கொடுக்க இயங்கும் அமைப்பாகவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். 32 எழுத்தாளர்களைத் தன்னகத்தே கொண்டு 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றுடன் தமது வெற்றியை நோக்கிய 47 ஆண்டுகளைக் கடந்து வானளாவிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட எழுச்சிமிக்க ஆளுமைகளான சமூகப் போராளிகளைக் கொண்டு தமிழகத்தின் பல கிளைகளை நிறுவியுள்ளது. இந்த மாபெரும் விருட்சத்தின் ஒரு கிளையாக தமுஎகச அறம் கிளை 500க்கும் மேற்பட்ட அக்குஹீலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், படைப்புகள் போராட்டங்கள், பயிற்சிகள், பயிலரங்குகள் என அமைப்புடன் ஒன்றுகூடி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான முன்னெடுப்புகளை அந்தந்தச் சூழலுக்கேற்ப சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமுஎகச அறம் கிளை கொரோனா பேரிடர் காலங்களிலும் தமது பணியை கைவிடாது செயல்படுத்தி வந்தது.இலக்கிய ஆளுமைகளுகளின் இணைய வழி சந்திப்புகள், வாசிப்பை மேம்படுத்தும் அகவிழி சந்திப்பு, சிறுகதை பயிலரங்குகள், சிறுகதை பெட்டக விமர்சனங்கள், தொல்லியல் சார்ந்த இணையவழி உரையாடல்கள், இணைய வழி தொல் தமிழ் பயிற்சி, மத ஆய்வு பேராசிரியர்களுடன் இணைய வழி கலந்துரையாடல், புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் அறம் கிளைத் தோழர்களின் நூல் வெளியீடு என தமது இலக்கியம் சார்ந்த இயக்கப் பணிகளை உறுப்பினர்களின் அறிவு சோர்வுறா வண்ணம் காலவிரயத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றி வந்துள்ளது பாராட்டத்தக்கது.

குறிப்பாக, தமுஎகச தோழர்களைப் பற்றியும் அவர்களின் முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்தின் தடங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும் பணியாக tamilwriters.in என்கிற இணையதளத்தை உருவாக்கி இணைய வழிப்பக்கங்களைப் பதிவேற்றி வாசகர் வாசிக்க எளிமைப்படுத்தியது.aஎழுத்தாளர்களின் முழு விவரங்களை நேர்காணலாக பதிவிட விரும்பி அதற்கான முயற்சியின் முதற்கட்டமாக 11 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்துக் குறுநூலாக வெளியிட்டது. அடுத்தகட்ட பயணத்திற்காகவும் தம்மை ஆயுத்தப்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து சற்றும் தளர்ந்திடாது செயலாற்றி வரும் தமுஎகச அறம் கிளை இணையத்தைப் பயன்படுத்தாத மக்களும் வாசித்துப் பயனுறும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை அச்சாகக் கொண்டு வரும் நோக்கில் இணைய பக்கத்திலிருந்து குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து நூலாக அச்சிட்டு முதல் பாகமாக 54 எழுத்தாளர்களின் தொகுப்பை “முற்போக்கு எழுத்தின் தடங்கள்” என்கிற தலைப்பில் தோழர் அ. இலட்சுமி காந்தன் மற்றும் தோழர் அ. உமர் பாருக் இருவரும் இணைந்து தொகுத்து தமுஎகச வின் 15 ஆவது மாநாட்டில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகச் சிறந்த எழுத்தாளனாக அறியப்படும் ஒவ்வொருவரும் அசலில் தீவிர வாசிப்பாளர்களே என்பதை இத்தொகுப்பிலிருந்து அறிய முடிகிறது. போதிய தகவல்களுடன் பதிவிட்டிருக்கும் ஒவ்வோர் பகுதியும் வாசிப்பில்லையேல் எழுத்தும் படைப்பும் வளர்ச்சிக் காணாது என்பதை ஆளுமைகளின் வெற்றிப்பாதைகள் நமக்கு உணர்த்துகிறது .

“கடவுளின் கதை” என்கிற நூலின் வழியே கடவுளைப் பற்றிய அனைவரது மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்த தமுஎகச வின் மாநில பொதுச் செயலாளர் கௌரவத் தலைவர் என பல பொறுப்புகளில் செயலாற்றி வரும் எழுத்தாளர் அருணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தொகுப்பின் முதற் பகுதி துவங்குகிறது. தொடர்ந்து, வாசிப்பிற்கான ஆதார சுருதியாகத் தமது தந்தையை சுட்டிக்காட்டும் எழுத்தாளர் தோழர் அல்லி உதயன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைக்கிறது. சிறுகதைகள் நாவல்கள் என பரந்த இலக்கிய வளத்தை கொண்ட தோழர் அல்லி உதயன் தமுஎகச வில் பல பொறுப்புகள் வகித்து தற்போது மாநில குழு உறுப்பினராகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

1979 லிருந்தே தமுஎகச வுடன் இணைந்து இன்றுவரை தொய்வின்றிய தமது செயல்பட்டும் பல பொறுப்புகள் வகித்தும் பாலின சமுத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் தோழர் அ.குமரேசன் அவர்களின் நேர்காணலைத் தொடர்ந்து ,

பல புகழ்பெற்ற ஆளுமைகளைத் தமது பள்ளி கல்லூரி ஆசான்களாகப் பெற்று தமிழ் மொழியை கல்லூரிக் கல்வியாகப் பயின்ற இலக்கிய ஆளுமையாக தோழர் கவிஞர் அ.இலட்சுமி காந்தன் அவர்களின சரிதையும்,
இலக்கியம் மருத்துவம், ஆய்வுகள், தொல்லியல் என் பன்முக திறன் கொண்டு நலிந்தோருக்காகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த மாணாக்கர்களுக்கு உதவும் பொருட்டும் பல நற்பணிகளை அறம் என்கிற அமைப்பின் வழியே செயலாற்றி வரும் தமுஎகசவின் மாநில உறுப்பினர் மற்றும் அறம் கிளைத் தலைவருமான
தோழர் அ. உமர் பாரூக் அவர்களின் ஓய்வின்றிய செயல்பாடுகள் என நூலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இலக்கியத்துடன் களப்பணியையும் இணைந்தே செயலாற்றும் தோழர்களின் குறிப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன.

சமூக விழுமியங்களைத் தமது படைப்புகளின் வழியே மக்கள் வெளிக்குக் கொண்டு வந்தும், எழுத்துடன் சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று போராடும் தன்னியல்பும், தமுஎகச வில் இருபது ஆண்டுகளாகச் செயலாற்றியும் வரும் தோழர் அ. கரீம் அவர்களின் குறிப்புகளைத் தொடர்ந்து,
“விழி” எனும் நாளேடு ஒன்றை தமது நண்பன் அ. உமர் பாரூக் அவர்களுடன் இணைந்து துவங்கி அதன் வெளியீட்டில் பல சட்டசிக்கல்களையும் அரசாங்கத்தின் பகிரங்க நடவடிக்கைகளையும் எதிர் கொண்ட களப் போராளியாக தமுஎகச வின் மாநில உறுப்பினராக செயலாற்றி வரும் தோழர் அய். தமிழ்மணி அவர்களின் களப்பணிகளை வாசித்து முடிக்க, மத்திய அரசின் தொலைத் தொடர் துறையில் பணியாற்றியும் தொழிற்சங்க போராட்டங்களில் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாகவும் சமகால அவலங்களை அவ்வப்போது தமது படைப்புகளின் வழியே எதிர்த்தும் அரசு முதல் ஆண்டி வரை தவறு என்று தெரிந்தால் காத்திரமாகக் குரலை உயர்த்தியே எதிர்த்து நிற்கும் தமுஎகச வின் பொதுச் செயலாளராக சமூகத்தின் அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் போராளியாகத் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் போராட்டங்கள் என் நீண்ட தொகுப்பு,

அடுத்து, வாசிப்பைத் தமது எழுத்தற்கான கைத்தாங்கலாக எப்போதும் பற்றி நிற்கும் தோழர் கவிஞர் ஆரிசன் அவர்கள் தந்தையின் மீதான ஆத்மார்த்த அன்பின் பொருட்டு அவரின் பெயரை இணைத்து புனைப்பெயராகக் கொண்டு தமிழ்நாடு அரசின் மின்சார துறையில் செயலாற்றியும் தமுஎகச வில் இன்று வரை களப்பணியாற்றி வரும் மூத்த எழுத்தாளர் ஆரிசன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசித்து முடிக்க தொடர்ந்தது பெண் ஆளுமைகளை கண் கொண்ட அடுத்தப் பயணம்..

சமூகத்தில் பெண் ஆளுமைகளுகளாக இலக்கியதாரிகளாகக் கடந்து வந்த கடின பாதைகளையும் வரலாற்று பக்கங்களையும் கொண்ட தொகுப்பு, தமுஎகச வின் துணைத் தலைவரான தோழர் ஆர். நீலா அவர்களின் வாழ்க்கையை விரியப்படுத்துகிறது. ஆவுடையார் கோவில் பொட்டல் பிரசவப் பிரச்சனையை சமூகவெளிக்குத் தமது கூரிய எழுத்தின் வழியே எடுத்துக்காட்டியும் போராடியும் தீர்வுக் கண்ட பெண்போராளியாக உயர்ந்து நிற்கிறார் தோழர்.தமது படைப்புகளின் வழியாக பெண்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் பெண்எழுத்தாளராகவே இன்றும் வாழ்ந்து வருகின்றார்.

அடுத்த மற்றுமொரு பெண் புரட்சியாளராகத் தொகுப்பு நமக்கு அடையாளங்காட்டுவது எழுத்தாளர் கவிஞர் மறைந்தும் பெண்களின் மனதில் வாழ்ந்து வரும் ஆளுமையாகக் தோழர் கலை இலக்கியா அவர்கள். பெண்களின் இன்னல்களை நுட்பமாக எழுதியும் ஆண்களின் அடக்குமுறைக்கெதிராகத் தமது தீக்கமிகு எழுத்துக்களால் குரல் எழுப்பியும் அமங்கலமாகக் கருதப்படும் ஒப்பாரிப் பாடல்களைத் தாலாட்டாக வகைப்படுத்தி இலக்கியமாகக் கொண்டாடிய ஒப்பற்ற கவிஞர். தமுஎகசவில் தமது இறுதிக்காலம் வரை பல பொறுப்புகளேற்று செயலாற்றி இன்று நிரந்தர ஓய்வைத் தேடிப் பயணித்துள்ளார்.

புரட்சியாளர்கள் மரிப்பதில்லை தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாக வாழ்ந்த, ரஷ்ய பரட்சிநாளில் தமது இன்னுயிரை ஈந்த எழுத்தாளர் புரட்சியாளர் தோழர் இதயகீதன் அவர்களின் திரைத் துறை பயணங்களையும் எழுத்துலகலிருந்த படிக்கே தமுஎகச வில் இணைந்து முப்பது ஆண்டுகளாக அயராது செயலாற்றி வந்த திரையனுபங்களைக் காட்சிப்படுத்துகிறது நூல்.

அடுக்கடுக்கான பக்கங்கள் ‌‌கவனிக்கத்தவறிய பல ஆளுமைகளின் சரித்திரங்களைப் புடம் போட்டுக் காட்டுகிறது. சிறார் இலக்கிய வல்லுநராக எப்போதும் பிள்ளைகளின் பிரியுமுள்ள எழுத்தாளராக வாசிப்புப் பயணத்தில் பிள்ளைகளின் கரங்களைக் பற்றி அழைத்துச் செல்ல பல முன்னெடுப்புகளைச் செயலூக்கமாக்கி வெற்றி கண்ட தோழர் உதய சங்கர் அவர்கள், மத்திய இரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர். தமுஎகசவில் நாற்பது ஆண்டுளைக் கடந்தும் இன்றும் அதிவேக செயல்பாட்டாளராக இயங்கி மாநில குழு உறுப்பினராக செயலாற்றுபவர். தோழர் உதயசங்கர் அவர்களைப் பற்றிய பிள்ளைத்தமிழ் மாலை வாசிக்கக் கிடைத்தப் பெரும் பேறு.,

120 படங்களை இயக்கித் திரைத்துறையில் தமது தனிப்பெரும் முத்திரையைப் பதித்து இயக்கம் கதை என் வெண்திரையில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் தமுஎகசவின் உறுப்பினராகவும் லயோலா மற்றும் போட்டா கல்லூரியில் வருகைத்தரு பேராசிரியாகப் பணியாற்றி கலை இலக்கியம் என இருவேறு துருவங்களிலும் தம்மை அடையாளப்படுத்தி வரும் இயக்குனர் தோழர் எம். சிவகுமார் அவர்களின் கலைத்துறைப் பயணங்களை வாசித்து முடிக்கையில் அடுத்தொரு வரலாற்று ஆளுமையை அடையாளங் காட்டுகிறது நூல்.

“மனித குல வரலாறு” எனும் நூலை உருவாக்கி மனிதகுலத்தின் தோற்றதையும் தோன்றுதலையும் ஆய்வு செய்து வரலாற்று ஆவணமாகப் பதிவுசெய்து வெளியிட்டும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசர காலங்களில் தலைமறைவாக இருந்தும் இலக்கிய பணியைப் பத்திரிக்கை வழியாக விடாது செய்து வந்த தோழர், மக்கள் நலனுக்காக இன்று வரை தொடர்ந்துப் போராடி வருகிறார். எழுத்தாளர் எஸ். ஏ. பெருமாள் அவர்கள் எதிர்கொண்ட இரத்தச்சரித்திரம் பல சிறைச்சாலைகளைக் கண்டுள்ளது. தமுஎகவில் இணைந்து பல பொறுப்புகளேற்றுச் செயல்பட்டு வந்த தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் குறிப்புகளைப் பதிவிட்டும் ஒவ்வோர் பன்முகப் பார்வையும் திறனும் கொண்ட ஆளுமைகளின் விழிவழிப்பாதைகளில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் செயல் பாராட்டிற்குரியது..
தொடரும் தொகுப்புகள்,

தொடரும் தொகுப்புகள்,

ஆகச் சிறந்த கவிஞராகத்  தம்மை இலக்கிய உலகிற்குள் அறிமுகப்படுத்தி அடுத்தடுத்து பல தளங்களில் தம்மை உயர்த்திக் கொண்டும், புத்தக வாசிப்பில் எப்போதுமே தனியார்வம் இருந்த போதிலும் தமுஎகசவில் இணைந்த பின்பே வாசிப்பின் முற்போக்கு இடதுசாரி சிந்தனையை நோக்கி நகர்ந்ததாக சிலாகிக்கும் தோழர் இதய நிலவன் தம்மைச் சிறந்த செயல்பாட்டாளராக உருவாக்கிய அமைப்பில் உற்சாகமாகச் செயலாற்றி வந்தும் ஆதி திராவிட பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததும் வரும் கவிஞர் தோழர் இதய நிலவன் அவர்களின் கலையுலகப் பயணம் சுவாரஸ்யம்.தேனி மாவட்டத்தின் முதல் குறும்பட இயக்குனராகவும் 15 கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் இயக்கியும் இன்று முழு திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள தோழரின் வாழ்க்கைக்குறிப்பிற்குப் பின் முற்போக்குச் சிந்தனைக் கொண்டு போராடிய போராளியை அடையாளங்காட்டுகிறது தொகுப்பு.

40 ஆண்டுகளாகத் தமுஎகசவில் இணைந்து அனைத்து கலை இயக்க இலக்கிய செயல்பாடுகளிலும் தம்மை ஒன்றிணைத்து செயல்பட்டுக் இலங்கை தமிழ்ப் போராளிகளுக்கெதிராக இலங்கை அரசு நிகழ்த்திய குரூரங்களை எதிர்த்துப் ஆரல்வாய் மொழியில் நடந்த மாபெரும் போராட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய கர்மவீரர் கலைஞர் எழுத்தாளர் பட்டிமன்ற புகழ் இரா.தெ. முத்து அவர்களின் நேர்காணல் தொகுப்பின் சிறப்பு.

“ஏழுமலை ஜமா” எனும் குறும்படத்தின் வழியே தமுஎகச வில் தனித்த இடத்தை தமது விசேஷ கலை இரவுகளின் ஆர்பாட்டத்தில் வாழ்நாளின் இறுதி காலம் தொட்டு இயக்கமாகவே இயங்கி வந்தும் பறையிசையை தமது முழங்கொலியாகக் கொண்டாடிய, “பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்” எனும் நூல் வழியாக திரைப்பட கதைகளைத் சுவாரஸ்யம் கூட்ட சொல்லி முடித்தக் கதைச் சொல்லியாக, கல்லூரி நண்பர்களால்”கருப்பு சூரியன்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, மண்ணை விட்டு மரித்தும்  நம் மனதில் நீங்காது வாழ்ந்து வரும் தோழர் கருப்பு கருணா அவர்களின் கலையுலகப் பயணத்தின் நினைவஞ்சலியாக வாசிக்க உதவிய தொகுப்பு  களமிறங்க அடுத்தொரு மூத்தப் படைப்பாளியாக எப்போதும் தாம் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்காக எதிர்த்துப் போராடி  பணியில் ஏற்பட்ட அரசாங்க எதிர்விளைவுகளைச் சந்தித்தும் அஞ்சாது தொடர்ந்து அடுத்தடுத்தக் கட்டப் போராட்டங்களில் இறுதி காலம் வரை தம்மை ஈடுபடுத்தி வந்த தமுஎகச வின் மூத்த உறுப்பினர், சமூகத்திற்காகக் குரல் கொடுத்தும் தமது காத்திரமிக்க கவிதைகளால் சமூக விரோதங்களுக்கு சவால் விடும் கவிஞர் தோழர் கந்தர்வனின் இலக்கிய சமுகத்தின் இடதுசாரி பயணம் வாசிக்கக் கிடைத்த வரங்கள்.

சிறார் இலக்கியத்திலிருந்தே தமது எழுத்துக்கள் பிறவியெடுத்ததாகப் பெருமையாகக் கூறும் தோழர் கமலாலயன் ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியும் ஆங்காங்கே தமது களப்போராட்டங்களை தொழிலாளர்களுடன் இணைந்து செயலாற்றியும்  குழந்தை பணியாளர் ஒழிப்புத் திட்டத்தில் போராடியும் இசை, வீதிநாடகம் என கலைத்துறையிலும் பிரகாசித்த தமுஎகச வின் மாநில குழு உறுப்பினரான தோழர் கமலாலயன் அவர்களின் மேத்தகு வாழ்க்கையை அறியும் கருவூலமாகவும், வாசிப்பு எழுத்து என தொடரும் இலக்கிய பணி தொழிலாளிகளுக்காக, பாட்டாளிகளின் கொள்கைகளுக்காக, சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை என தொடரும் எதிர்ப்புகளும், போராட்டங்களும், களப்பணிகளும் முதலில் தம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்று ஓயாது உழைத்து வரும் தோழர் களப்பிரன் அவர்கள் சமூக நல்லிணக்கத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுச்சிமிக்க போராளி. தமுஎகச வின் திரைப்பட ஒருங்கிணைப்பாளராக கலை, போராட்டக் களம், இலக்கியத் தளம்  என தொய்வின்றி இயங்கி வரும் தோழரின் முற்போக்குத் தடங்களைக் காட்சிப்படுத்தும் தொகுப்பைக் கொண்டு நகர்ந்து.

ஏட்டுக்கல்வியை விட அனுபவ ஞானமே ஒரு ஆளுமையை உருவாக்கும் மிகப் பெரும் சாதனம் என்பதற்கு முன்மாதிரியாக தோழர் கோவை சதாசிவம் அவர்கள் பள்ளிக்கல்வியின்றியே தமது  தமிழறிவை மேம்படுத்தி அரசு பாடதிட்டத்தில்  படைப்புகள்  இடம்பெறும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இலக்கிய ஆளுமை. தோழரின் புரட்சிமிக்கப் போராட்டத்திற்குச் சான்றாக  நொய்யலாறறு சாயக்கழிவுகளால் மாசடைந்ததை எழுத்தின் வழியே எதிர்த்தும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய களப்போராளி. தமுஎகசவில் இணைந்து செயலாற்றி  வரும் தோழர் அவர்களின் இலக்கியப் பயணத்துடன் கரம் பற்றி அழைத்துச் செல்கிறது நூல்.

தமது வாழ்நாளின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பொருட்டும் தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தும் பொருட்டும் சமூக நலனிற்காக  மட்டுமே எழுத்தையும் மொழியையும் கையாண்ட இடதுசாரி போராளியாக தமுஎகச வின் அனைத்து உறுப்பினர் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கும் மூத்த எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் களப் பணியைக் களமாடும் பகுதியாகத் தொடரும் பக்கங்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகி சுதந்திர இந்தியாவில் பல்வேறு சமூக அநீதிகளுக்கெதிராக இயக்கத்துடன் இணைந்து முழங்கிய களப் போராளி. வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டக் களங்களிலேயே கழித்தும் ஆங்கிலேயரால்  தமது வாழ்நாளின் இளமைக்காலங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின் கழித்தும் இறுதிவரை புரட்சிமிகு போராளியாக தமுஎகசவின் முதல் பொதுச்செயலாளராகத் தேர்வு பெற்ற பெருமைக்குரியவர் தோழர் கே. முத்தையா அவர்கள். தொடர்ச்சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயலாற்றி வந்த தோழர் தீக்கதிர் மற்றும் செம்மலர் ஆசிரியராகவும் பொறுப்பேற்று பல இளம் எழுத்தாளர்களை உருவாக்கிய இலக்கிய முன்னோடி. எழுத்தாளர்
கே. முத்தையா அவர்கள் கடந்துச் சென்ற பாதையை பேசும் அடுத்த பகுதி, 250 முறை மேடையேறிய புகழுக்கும், திரைப்படமாக வெண்திரையை அலங்கரித்தும் ஆங்கிலத்தில்  மொழிப்பெயர்க்கப்பட்டும் சாதனை கண்ட “தண்ணீர் தண்ணீர்” என்னும் நாடகத்தைத் தயாரித்த நாடகவியலாளர் இடதுசாரிகளின் குரல்களாகத் தமது குரல்வளையை அநீதிக்கெதிராக இடிபோல் ஒலிக்கச் செய்த தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகத் தோழர் கோமல் சுவாமி நாதன் அவர்களின் வாழ்வதிர்வுகளை வாசிக்க வழங்கும் பகுதிக்குப் பின்பாகத் தொடரும் பகுதிகள்,

மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டு நகர்கிறது. சர்வாதிகாரத்திற்கெதிராகக் குரல் கொடுக்க இலக்கியம் மட்டும் போதாது பொதுத்துறையின் பங்கும் அவசியம் என்பதை உணர்ந்து சட்டத்தை அநீதிக்கெதிராகச் சவாலாகக் களங் கண்ட வழக்கறிஞர் தோழர்
சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகப் போற்றப்பட்டும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் “மாதொரு பாகன்” நூல் வெளிவந்ததில் ஏற்பட்ட சட்ட சிக்கலுக்கெதிராகப் போராடி வெற்றிப் பெற்ற வரலாறு இன்றும் இலக்கியவுலகின் மறக்கவியலா சம்பவம். போராட்டம் இலக்கியம் என தமக்கான சமூகப் பணியைச் சீராகச் செயலாற்றி வந்த தமுஎகசவின் மூத்த அமைப்பாளர்களில் தோழர் சிகரம் ச. செந்தில் நாதன் அவர்களின் குறிப்புகள், தொகுப்பு முழுதும் சமூக விரோதங்களைக் களையெடுத்தப் போராளிகளை அறிய உதவிய கல்வெட்டாகவே  திகழ்கிறது.

இலக்கியம் அநேகருக்கு பால்யபருவத்தில் பரிசாகக் கிடைக்கும். மேலும் பலருக்கு இடையில்  வந்தடையும். ஒருசிலருக்கு மட்டுமே அது இரத்தத்திலேயே ஊறிக்கிடக்கும். அப்படியான சிலரில் மூத்த எழுத்தாளரும் தமுஎகசவின் அனைத்து பொறுப்புகளிலும்  செயலாற்றிய மாநில குழு உறுப்பினர்,எழுத்தோடும் இயக்கத்தோடும் எப்போதுமே பின்னிப்பிணைந்துக் கிடக்கும் எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகச்சிறந்த சிறுகதையாளர். தாத்தா, தந்தை, சிறிய தந்தை, சகோதரர்கள் என இலக்கிய உறவுகளுடனே எப்போதும் உறவாடிய வண்ணம் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்த தோழர் தற்போது மாணாக்கர் நலன் கருதி பள்ளிக்கல்வி ஆய்வொன்றை நிகழ்த்தி வருவதை வாசகப்பரப்பிற்கு வெளிச்சப்படுத்தும் தொகுப்பு அவரது வாழ்க்கைக் குறிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது‌.

அடுத்த பக்கங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றிப் பெற்று இன்று நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியும் இலக்கியப் பணியையும் ஒருசேர தொய்வின்றிச் செய்து வரும் தோழர் சு. வெங்கடேசன் M.P. அவர்கள் தமுஎகச வில் பல பொறுப்புகளற்று தொய்வின்றி செயல்பட்டு இன்று இயக்கத்தின் மதிப்புறு தலைவராகக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தீவிர  வாசிப்புடன் படைப்பில் பல சாதனைகள் கண்ட தோழர் 1000 பக்கங்கள் கொண்ட “காவல் கோட்டம்” என்கிற நூலை வரலாற்று ஆவணமாகப் பதிவிட்டுள்ளார். பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட இந்நூல் தோழரின் இலக்கியச் செறிவை செவ்வனே எடுத்தியம்புகிறது. மக்களின் பிரச்சனைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காணும் தோழரின் செயற்கரிய  மக்கள் பணியை அறியும் வாய்ப்பாக அமைகிறது இந்நூல்.

தொகுப்பு பல  மறைந்த மூத்த எழுத்தாளர்களின் வாழ்வியல் கூறுகளை அவர்களின் போற்றத்தகு அர்பணிப்பைப் பேசும் அநேக குறிப்புகளைத் தமக்குள் சுமந்துள்ளது.ஒவ்வோர் மூத்த எழுத்தாளர்களும் தத்தம் தடங்களை இலக்கியப் பரப்பிலும் இயக்கச் சார்பிலும் பதியமிட்டுச் சென்றுள்ளனர் என்பதற்கான அடுத்த உதாரண புருஷனாகத் தோழர் சோலைசுந்தரப்பெருமாள் அவர்களின் நிரந்தர ஓய்வைத்தேடி அமைதி கண்ட காவியக் கரங்கள் வாழும் காலங்களில் பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தமது முஷ்டியை உயர்த்திய வண்ணமிருந்தது. குறிப்பாக வெண்மணிப் படுகொலைச் சம்பவத்தின் வரலாற்று வேர்களைத் தமது படைப்பினூடே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த தோழரின் எழுத்து அடுத்தகட்டமாக ‘வண்டல் இலக்கியம்’ என்கிற புழங்குமொழிப் படைப்பை அறிமுகப்படுத்தியது‌ இலக்கியத்தின் மாறுபட்ட திருப்புமுனை.

இயல்பிலேயே சமூக ஆர்வலராக மக்கள் நலனுக்காக  சிறுவயது முதலே செயலாற்றி வந்தும், இலக்கியம் கலை என இரு தளங்களிலும் தம்மை உயர்த்தி நிற்கும் தோழர் சோழ நாகராஜன் அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த காலத்திலேயே கடும் வறட்சியின் காரணமாகப் பஞ்சத்தில் தவிக்கும் மக்களுக்கு ஷுபாலிஷ் போட்டு வந்த வருமானத்தை முதலமைச்சர் உதவி நிதிக்காக வழங்கிய தோழரின் சமூகம் மீதான அக்கறை தொடர்ந்து பிளாஸ்டிக்கெதிரான மக்கள் இயக்கத்தில் ஈடுபட்டும், பார்வையிழந்தோரைக் கொண்ட கலைக்குழு ஒன்றை நடத்தியும், தமது ஆதர்ச திரைக்கலைஞரான கலைவாணர் புகழைப் பரப்பியும், தமுஎகச வில் இணைந்து செயலாற்றியும், கலை இலக்கியம்  என இரு துறையிலும் தமது  தனித்துவத்தை வெளிப்படுத்தியும் தமக்கான சமூகம் இயக்கம்  இலக்கியம் என அனைத்திலும் தமது கடமைகளில் சிறப்பான முத்திரைப் பதித்துள்ளார். தோழர் சோழ நாகராஜன் அவர்களின் வரலாற்று ஏட்டை துல்லியமாக அடுத்தப்பகுதியில் பதிவிடுகிறது நூல்.

அடுக்கடுக்கான சரித்திர புருஷர்களை அடையாளங் காட்டும் தொகுப்பு அடுத்ததாக ஆகச் சிறந்த மூத்த எழுத்தாளர் ஒருவரை விரியப்படுத்துகிறது.

தமது 81 வயதிலும் “அடுக்கு”என்கிற நாவலை எழுதி முதுமையை கூட இலக்கியத்துள் கொண்டாடி வாழ்வின் இறுதிவரை தமது எழுத்துப் பணியை தொடர்ந்து செயலாற்ற விழையும் எழுத்தாளர் தோழர் டி.செல்வராஜ் அவர்கள் தமுஎகச உருவாகக் காரணமான 32மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். சமகால பிரச்சனைகளைச் சமூகவெளிக்குக் கொண்டு வருவதே தமது படைப்பின் சாதனையாகக் கருதியே இதுகாறும் படைத்து வரும் தோழரின் முக்கிய படைப்புகளாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலத்தைப் பேசும்  “ஊமை ஜனங்கள்” என்கிற படைப்பும் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்டங்களைச் சுட்டிக்காட்டும் “தோல் ” என்கிற நூலும் குறிப்பிடத்தக்கது.

வரிசையாக வசியப்படுத்தும் சொற்கோர்வைகளால் படைப்பைக் கனகச்சிதமாக மெருகேற்றிய தமுஎகச அறம் கிளைத் தோழர்கள், அடுக்கடுக்காக வெளிச்சத்திற்குப் பல ஆளுமைகளை அறிமுகத்தில் வண்ணம் உள்ளனர். அடுத்த ஆளுமையாக,”சித்தர்களின் தத்துவ மரபு” எனும் நூல் வழியே சித்தர் மரபுகளை ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலுள்ள இலக்கியங்களை ஆய்வு செய்தும், பெண்கள் சார்ந்த படைப்பாக”பெண் உடலும் ஆளுமையும்” என்கிற நூலொன்றை  இயற்றி பெண்மையைப் போற்றியும், தொழிலாளர் நலனுக்காகக் களப் போராட்டங்கள் பல மேற்கொண்டு   இடதுசாரி கொள்கையைக் கைக்கொள்ள தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றி வரும் மூத்த எழுத்தாளர் தோழர் ஈரோடு தி. தங்கவேல் அவர்களின் வாழ்க்கை வரலாறு தமுஎகச வின் காலத்தின் கண்ணாடி. சிறுபிராயம் முதலே தமது வாழ்க்கையை வறுமையுடனேயே கழித்து வாழ்ந்து வந்த தோழர் தேனிசீருடையான் அவர்கள் பாடு வாழ்விலும் வாசிப்பின் கரத்தை இடைவிடாது பற்றி வந்ததற்கான விருதாக இன்று தமிழிலக்கியமும் தமுஎகச இயக்கமும் போற்றி நிற்கும் ஆகச்சிறந்த ஆளுமையாக வாழ்வில் யதார்த்தத்தைப் காணும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் தொடர்ந்து எழுதியும், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

பட்டவர்தமான சொல்லாடல்களுக்கும் வட்டார மொழியின் நடையாலுக்கும் சொந்தக்காரரான சிறுகதைதாரி தேனிசீருடையான் அவர்கள் தமக்கேயுரிய தனித்துவப் பாணியில் வாசகர்க்கு எப்போதும் படைப்பின் வழியே அறுசுவை வழங்குபவர்‌. எளிமையில் இனிமை காணும் தோழரின் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுகளுக்குட்பட்டு தமிழிலக்கியத்தை அலங்கரித்தவை. தோழரின் இலக்கியச் சிறப்பைப் போற்றும் வகையில்
தோழர் அய்.தமிழ்மணி அவர்கள் “தனித்தப் பறவை” என்கிற குறும்படத்தைத் தோழருக்கான அர்பணிப்பாக இயக்கியுள்ளது பாராட்டிற்குரியது.

தோழர் தேனி சீருடையான் அவர்கள் தமுஎகச வில் பல காலங்களாகப் பல்வேறு பொறுப்புகள் வகித்து இன்று மாநில உறுப்பினராகத் தமது செயற்கரிய இயக்கப் பணியை இலக்கியத்துடன் இணைந்துச் செய்து வருகிறார். தோழரின் வாழ்க்கைப் பயணம் தொய்வின்றித் தொடரவும் அவரின் இலக்கியப்பாதை அனைவருக்குமான வாழ்வின் வழிக்காட்டியாகத் திகழ்கிறது.

பள்ளிக்காலங்களில் தமது ஆழ்ந்த வாசிப்பின் ஊடாகச் சக மாணவருக்குத் தாம் வாசித்ததை விளக்கியும் விவரித்தும், தமிழ் பாடநூலில் செய்யுள் முதல் பாடம் வரை மனனமாக ஒப்புவிக்கும் கூரிய நினைவாற்றல் கொண்ட,
பள்ளி மாணவர் மன்ற  செயலாளராகத் துவங்கி பிற்காலத்தில் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாட்டாளராக நீண்டு அதன்பின்பாகத் தமுஎகச வரை தமது நெடிய பொறுப்புகளின் செயலூக்கங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் செம்மையாக செய்து முடித்து சுண்டியிழுக்கும் சொற்பொழிவுகளால் அனைவரின் பாராட்டுதலைப் பெற்று”மேடை கலைவாணர்” என்று அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர்  தோழர் எஸ். நன்மாறன் அவர்கள் தமக்கு வழங்கப்படும் ஒவ்வோர் பொறுப்பின் நிமித்தத்திலும் தொழிலாளர்களின் உரிமையை மீண்டெடுக்கக் களப்போராளியாக இறங்கிச் செயல்பட்டு வந்தும், குறிப்பாக வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரசு உதவிக் கேட்டு போராடிச் சிறைக்குச் சென்ற அனுபவங்களை நூலில் பதிவிட்டு மக்கள் வெளிக்கு அடையாளங்காட்டி ஒவ்வோர் ஆளுமையின் ஆகச்சிறந்த வாழ்க்கைப் பாடங்களை வாசகர்களுக்கான பயணப்பாடங்களாக விரியப்படுத்திய தமுஎகச அறம் கிளை தோழர் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

கவிதைத் தளத்தைத் தமது முக்கிய  இலக்கியக் களமாகக் கொண்டு தமுஎகசவுடன் தம்மை இணைத்துக் கொண்டும் தமுஎகச வின் சென்னைக் கிளையில் பல பொறுப்புகளேற்று கலை இரவுகளில் புதிய கவிஞர்களை மேடையேற்றி உற்சாகப்படுத்தியும்  ஓவியர்களுக்கான முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தியும் புக் டே இணைய தளத்தில் புதிய கவிஞர்களை ஊக்குவித்தும் புக் டே இணையத்தின் கவிதை ஆசிரியராகத் களப் பணியை தொடர்ந்து செயலாற்றி வரும் சென்னையை சேர்ந்த தோழர் நா.வெ. அருள் அவர்கள் சாகித்ய அகாடமியின் உலகக் கவிதை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய கவிஞர்களின் பிரதிநிதியாக மூன்று கவிதைகளை வாசித்துத் தமிழகத்திற்குப் பெருமைச் சேர்த்த ஒப்பற்ற தமிழ் கவிஞர். அனைத்திந்திய  வானொலி நிலையத்திலும் பல தொலைக்காட்சி சேனல்களிலும் கவிதை வாசித்துச் சிறந்த கவிஞராக இலக்கியவுலகில் போற்றப்படும் தோழர் நா.வெ. அருள் அவர்களின் நேர்காணலைத் தொடர்ந்து,

‘நடமாடும் பத்திரிக்கை’ என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் நாறும்பூ நாதன் அவர்களின் குறிப்புகள் அடுத்தப் பக்கங்களைச் சிறப்பிக்கிறது. கொரோனா பேரிடர் காலங்களில் “நாறும்பூ” என்கிற வலைப்பூ ஒன்றைத் துவங்கி அதன் வழியாக நித்தம் ஒரு எழுத்தாளரின் கதையை வட்டார வழக்கோடு சொல்லி முடித்து சுமார் 50க்கும் மேற்பட்ட கதைகளை முகநூலில் பதிவிட்டும், மாஞ்சோலை தேயிலை தோட்டத்து அசம்பாவிதங்களைத் தமது படைப்புகளின் வழியே மக்கள் வெளிக்குக் கொண்டு வர பெரும் மெனக்கிடல் மேற்கொண்டுவரும் தோழர் நாறும்பூ நாதன் அவர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் வித்வான் இராமகிருஷ்ணன் அவர்களின் தவத்திரு புதல்வர். தாத்தாவின் வரலாற்றுக் கதைகளைக் கேட்டும் எழுத்தாளர் கி.ஜா அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தும் வந்த காரணத்தினால் சிறந்த கதைச் சொல்லியாகத் திகழ்ந்தவர். தமுஎகச வின் மாநில குழுவில் உயர் பொறுப்பில் இயங்கி வரும் தோழர் நாறும்பூ நாதன் அவர்களின் மேத்தகு செயல்பாடுகளைத் தொடரும் பக்கங்கள் காட்சிப்படுத்துகின்றன.

பரந்துபட்ட இலக்கிய வரப்பில் ஒவ்வோர் விதையாக இது வரை  36  விருட்சகங்கள் ஓங்கி உயர்ந்து  நிற்க அடுத்த மற்றுமொரு ஆளுமையாக ஆண்களின் உதாரண புருஷனாகத் திகழும் கவிஞர் தோழர் நிறைமதி அவர்களின் காவியப் பயணத்தை வாசிப்போம். மனைவியின் பெயரான நிறைமதி என்கிற‌ புனைப்பெயரில் தமது படைப்புகளை எழுதி வரும் தோழர் நிறைமதி தமுஎகச தோழர்களின் ஊக்கத்தில் இயக்கத்துடன் இணைந்துப் பல களப்பணிகளைச் செயலாற்றி வந்தார். தமிழ்ச்செல்வன் தோழரின் சமையல் பயிற்சியில் கலந்துக் கொண்டு சமையல் கலையில் அசத்தி வருகிறார்.  பணியாற்றி வரும் வங்கிப் பணியால் இலக்கியப்பணியில் ஏற்படும் தொய்வை உணர்ந்து  விருப்ப ஓய்வுப் பெற்று இன்று முழுநேர இயக்க இலக்கியவாதியாகத் தம்மை அர்பணித்துக் கொண்ட பெருமைக்குரியவர் தோழர் நிறைமதி.

அடுத்ததாக ஜனரஞ்சகச் செயல்பாட்டளராகக் களமிறங்கும் தோழர் சோ.முத்துமாணிக்கம் அவர்கள் மரபுக்கவிதையில் கோலோச்சம் பெற்று புதுக்கவிதையில் தமது தனித்துவத்தை நிலைநாட்டியவர். கல்லூரிப் பருவம் முதலே தமிழின் பால் கொண்ட ஆர்வம் பாவலர் மன்ற அமைப்பைத் துவங்கச் செய்து நண்பர்களுடன்  வெண்பா கலந்துரையாடலில் ஈடுபட்டுத் தமிழக அரசின் இதழ் முதற்கொண்டு பல்வேறு பத்திரிகைகளில் எழுதியும் அன்றைய முதல்வர் மறைந்த மூத்த எழுத்தாளர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான முதுகுளத்தூர் வட்ட அணியில் தம்மை இணைத்தும் பல களப் பணிகளைச் செய்து வந்த தோழரின் சமூக செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அவரை தமுஎகச வுடன்   இணைத்துக் கொண்டது.  கிளை மாவட்டம் என துவங்கி இன்று மாநில உறுப்பினராக உயர்ந்து நிற்கும் தோழர் முத்துமாணிக்கம் அவர்களின் வரலாற்றைத் தொடர்ந்து அடுத்த பாகமாக,

எப்போதும் எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகியும் செயலாற்றியும் வரும் நாடகவியலாளர்
தோழர் பிரளயன் அவர்களின் நேர்காணலின் வழியே பயணப்படுகிறது. தொடக்கக் காலம் முதலே தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றி வந்த ஆகச்சிறந்த ஜனரஞ்சக பன்முகத் தன்மைக் கொண்ட வித்தகராகப் போற்றப்படும்
தோழர் பிரளயன் அவர்கள் முதன்முதலில் “பறிமுதல்”எனும் வசனமில்லா  பாவனைக் கொண்ட நாடகத்தை நடத்தியும் மேற்கத்திய அரசியல் முற்போக்கு நாடிவியலாளர்களின் படைப்புகளை மேடையேற்றியும் தமிழின் தொன்மையான இலக்கிய இதிகாசங்களின் வரலாற்றுச் சிறப்புகளை மீள்வாசிப்பில் சமகால அரசியலோடு இணைத்து கலைவடிவமாக்கிச் சிறப்பித்தப் பெருமைக்குரியவர் தோழர் பிரளயன் அவர்கள்.

வீதிநாடகம் எனும் புதிய நாடக வடிவமைப்பை தோழர் சப்தாஹாஸ்மியின் மறைவிற்குப் பின் நடத்தி வந்த தோழர் பிரளயன் மக்களுக்கு அரசியல் மற்றும் அனைத்து சமூக செயல்பாடுகளின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய சாதனங்களில்  நாடகமும் ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு சென்னை கலைக் குழு ஒன்றைத் துவக்கி மக்கள் கூடும் இடம் தேடி நடத்திவந்தார்.  தமது தமுஎகச தோழர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல், சம்பவங்கள்,மார்க்சிஸ்ட் தோழர்களுடன் தங்கியிருந்த உறைவிட வரலாறு, நாடக அனுபவங்கள்,அறிவொளி மற்றும் அறிவியல்  இயக்கங்கள் மற்றும் இதர செயல்பாடுகள் என ஒரு முழு ஒருங்கிணைப்பான நேர்காணல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது‌. இலக்கியம் கலைத்துறை என இரண்டையும் இருகண்களாகக் கொண்டு இன்றும் தமது களப்பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தோழரின் வாழ்க்கைச் சரிதம் நமக்கான வழித்தடங்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் தமுஎகச வின் மாநிலத் தலைவராகவும் ஓய்வின்றி  இயங்கி வரும் எழுத்தாளர் பட்டிமன்ற புகழ் பேச்சாளர்
தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் கல்லூரிக் காலம் முதலே கவிதை எழுதுவதில் தீவிர முனைப்புக் கொண்டவர். தோழரின் ஆர்வத்தைக் கண்டு கல்லூரி  நிர்வாகமே இவரது இரு படைப்புத் தொகுப்புகளை வெளியிட்டு கௌரவித்தது‌. சிறுவயது முதலே இசையில்  ஆர்வம் செலுத்தி வந்த தோழர் முறைப்படி இசை பயிலாமலேயே மேடையில் பாடி பரிசுகள் பல பெற்ற பெருமைக்குரியவர். மேடையும் படைப்பும் தோழருக்குப் புதிதல்ல இயல்பிலேயே கைவந்த கலை என்பதற்குச் சான்றுகளாகப் பட்டிமன்ற புகழ் லியோனி அவர்களுடன் இணைந்து பல பட்டிமன்றங்களில் உரையாற்றியும், நடுவராகாகப் பல பட்டிமன்றங்களைச் சிறப்பித்தும் தொலைக்காட்சிகளில் வலம் வந்துள்ளார். மறைந்த மூத்த எழுத்தாளர்
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்பு நான்கு முறை மேடையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுச் சிறப்பாக உரையாற்றியதற்காகக்  கலைஞர் அவர்களின் பாராட்டுகளைப் பெற்றதையும் நூலில் குறிப்பிட்டுள்ளது தமுஎகச வின் உறுப்பினரான எங்களைப் போன்றோருக்கு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்த ஆளுமையாகத் தமது அழகிய மொழிவளத்திலும் செறிவான நூல் விமர்சனத்திலும் எனை வெகுவாகக் கவர்ந்த மனதிற்கு நெருக்கமான  எழுத்தாளராகத் தோழர் மணிமாறன் அவர்கள் கணித ஆசிரியராகக் கல்விக்கானத் தமது தொண்டை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். கற்றலுடன் இலக்கிய களத்திலும் தனக்கேயுரிய தனித்துவ முத்திரையைப் பதிக்கும் தோழர் பிற எழுத்தாளர்களை விட மாறுபட்ட இலக்கிய ஆளுமை. கதை சொல்வதிலும் நூல்களுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை ஆழ்ந்த வாசிப்பில் பாரபட்சமின்றி  எடுத்துரைப்பதிலும், எழுத்தாளர்களின் வேண்டுகோலுக்கிணங்க அவர்களின் நூல்களுக்கு மதிப்புமிக்க அணிந்துரை வழங்குவதிலும் அவருக்கு நிகர் அவரே. பள்ளிபருவம் முதலே கவிதை எழுதி வரும் தோழர் மணிமாறன் அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியும் புதிய வாசகர்களுக்கு நூல்களை அறிமுகப்படுத்தியும் தொடர் வாசிப்பாளர்களுக்கு சமகால நூல் வெளியீடுகளைப் பரிந்துரைத்தும் தமது செயற்கரிய இலக்கியப் பணியை வாசிப்பின் தொண்டாக நிகழ்த்தி வரும்
தோழர் மணிமாறன் அவர்கள் தமுஎகச வின் சுவாரஸ்ய மிக்க உறுப்பினர். பல பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றியும் வருபவர்.களப் போராளி என்பதை செயலில் காட்டும் கர்மவீரராகத் துளியும் அச்சம் கொள்ளாது அறிவால் இலட்சியத்தில் வெற்றிக் காணும் புரட்சியாளர் தோழர் மயிலைபாலு அவர்கள்  மாணவப் பருவத்திலேயே தேர்வில் நடத்தாத பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்காக எதிர்த்து நின்றுப் போராடி வெற்றிக்கண்ட தோழரின் எதிர்ப்பாற்றல் தொடர்ந்து சமூகத்தின் சமகால அநீதிகளையும் அவலங்களையும் எதிர்க்கும் வித்தாக அன்றே முளைக்கத் துவங்கியது. அவரது குரல் ஆங்காங்கே ஓங்கி ஒலித்த வண்ணம் சமூகத்தை சீர்திருத்தும் செயலில் இருந்து வருகிறது. குறிப்பிடும்படியாக திருநங்கையர் மேம்பாட்டு முகாம், ஆவின் பால் நிறுவன தற்காலிகப் பணியாளர்களுக்கான பணிநிரந்தரம் கோரி எழுந்த கரம் அடுத்தடுத்து பல போராட்டத் தளங்களைக் கண்ட வண்ணம் தமுஎகசவுடன் அவரை இணைத்தது. இன்றுவரை இயக்கத்தினூடே தமது மக்கட்சேவையைப் போராட்டக் கனவுகளைத் தொடர்ந்து செயல்படுத்த மற்றுமொரு பக்கபலமாக இயக்கம் இருந்து வருகிறது. இலக்கியதளத்தில்  வெண்மணி படுகொலை வழக்குகள் – தீர்ப்புகள் என்கிற நூலும் கோளரங்கம் திறக்கப்படாத நிலையில் தோழரின் ஊடகத்துறையில் அவர் எழுப்பிய கேள்விகளின் பக்கங்கள் அதன் விளைவாக உடன் தீர்வு கண்டதும் என தோழரின் புரட்சிகள் வாசிக்க வேண்டிய சரித்திரங்கள் யுத்த கருவூலங்கள்.
அடுத்தாக,
மக்களிடமே உலகத்தைக் புரட்டிப் போடும் நெம்புகோல் உள்ளதாக எப்போதும் பறைசாற்றி வரும் மற்றுமொரு ஆளுமையின் வாழ்வியல் ஆவணத்தைக் காட்சிப்படுத்துகிறது நூல்.  வாசகரைக் கிறங்க வைக்கும் இசைப்போன்ற எழுத்துநடையுடன் கூடிய படைப்புகளுக்குச் சொந்தக்காரரான
தோழர் மாதவ்ராஜ் அவர்கள் சிறந்த ஓவியர். வங்கியொன்றின் இதழுக்கு அழகான அட்டைப்பட ஓவியத்தை நறுக்குத் தெறிக்கும் தமது கவிதையுடன் அச்சிட்டு நித்தம்  வழங்கி வருவது பாராட்டிற்குரியது.ஓவியம் இலக்கியம் மட்டுமல்லாது தமது திறமையைத் திரைத்துறையிலும் விரியப்படுத்த வேண்டி சமகால சமூகப்பிரச்சனைகளை மையமாகக் கொண்ட மூன்று ஆவணப்படங்கள் இயக்கியும் “மண்குடம் ” என்கிற   சாத்தூர் குடிநீர் பிரச்சனையை மையமாகக் கொண்ட சிறுகதை அடிகுழாய்களை ஒப்பிட்டு படைக்கப்பட்டது. அன்றே பல ஆளுமைகளின் பாராட்டைப் பெற்ற படைப்பு. தோழர் மாதவ்ராஜ் அவர்கள் தமுஎகசவில் இணைந்துப் பல பொறுப்புகளையேற்று மேலும் தம்மை மெறுகேற்றி வருகிறார்.இலக்கியத்தை ஒரு கரத்திலும் சட்டப்புத்தகத்தை மறுகரத்திலும் சுமந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் எழுத்தாளர் தோழர் மு. ஆனந்தன் அவர்களின் நேர்காணல் அடுத்தடுத்த பக்கங்களை நிரப்பியுள்ளது. ஈஷா யோகா மையத்தின் சட்டவிரோத செயல்களில் தோழரின்  எதிர்ப்புகளும் சட்டரீதியான வழக்குகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தமுஎகச வில் இணைந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைச் செயல்படுத்தி வந்த பெருமைக்குரியவர் தோழர் மு. ஆனந்தன்.
அடுத்தப் பகுதியாக மதிப்பெண் அடக்குமுறையை எதிர்க்கும் படைப்புகளில் ஒன்றான “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்கிற நூல் எனை வெகுவாகச் சிந்திக்க வைத்தப் படைப்பு. மக்கள் மத்தியிலும் கல்வித் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் ஆசிரியர் எழுத்தாளர் தோழர் முத்து நிலவன் அவர்கள் இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தமது ஒப்பற்ற செயல்திறனை உருவகப்படுத்தியும் எழுத்துக்கள் எப்போதும் அடுத்தத் தலைமுறையினர் விரும்பி வாசிக்கும் வகையில் இருந்திட வேண்டும் என்கிற முனைப்புடன் சிறார்களின் வாசிப்பு உளவியலை அறிந்து அதற்கேற்பப் படைப்புகளைப் படைத்து வரும் ஓய்வுப் பெற்ற அரசுப் பள்ளி தமிழாசிரியர்  எனது ஆதர்சன எழுத்தாளர்களில் மனதிற்கு நெருக்கமான ஒருவர். பிள்ளைகளின் மனதை அழுத்தும் மதிப்பெண் மார்ஃபியாவை ஒழிக்க மைக்கோல் ஏந்திய கர்மவீரர். தீவிர தமிழார்வம் கொண்ட தோழர் முத்துநிலவன் அவர்கள் மக்கள் மத்தியிலும் மாணாக்கர் மதியிலும் தமிழ் வளர்க்கப் பல அருஞ்செயல்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தோழர்  தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகப் பல பொறுப்புகளில் இயங்கி வருகிறார். கிராமப்புறப் பெண்களை ஊக்கப்படுத்தும் படைப்பாக ” சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” என்கிற பாடல் வரிகள் மக்களின் பெரும் பாராட்டுதலையும் பத்திரிக்கைத் துறையின் சிறந்த வரவேற்பையும் பெற்று தந்தது. கர்நாடக அரசு ஆங்கில பள்ளிப் பாடத்திட்டத்திலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக சுயநலப் போக்கில் கைக் கொள்ளும் இலக்கியவாதிகள் மத்தியில் ஒருபுறம் எழுத்துலகில் தம்மை உயர்த்திக் கொண்டும் மறுபுறம் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட இளம் எழுத்தாளர்களை எழுத ஊக்கவித்தும் அவர்களின் படைப்புகளுக்கு முன்னுரை  அணிந்துரை எழுதித் தந்தும் சிறுகதைப் படைக்கும் வரைமுறையைத் தமது கட்டுரை நூலின் வழியே எடுத்துக்காட்டி தமுஎகச வை உருவாக்கிய 32 மூத்த எழுத்தாளுமைகளில் உடலை விட்டு மறைந்த பின்பும்  இலக்கிய உயிராக இன்றும் வாழ்ந்து வரும் தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களும் ஒருவர். தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் புரட்சி மிக்க எழுச்சிப் படைப்புகளுக்கு உரியவரான தோழர்,ஆண்பெண் பாலின சமத்துவத்தைத் தமது படைப்புகளின் வழியே பறைசாற்றியவர்.  முற்போக்கு ஆளுமைகள் பலர் நம்மை விட்டு நீங்கிய போதிலும் ஒவ்வொருவரின் தடங்கள் நமக்குள் இலக்கியமாக உயிர்ப்புடன் இருந்து வருதற்கான சாட்சியாக இந்நூல் திகழ்கிறது.

அடுத்தொரு எழுச்சிமிகு படைப்பாளியின் சரிதத்தை வாசிக்கும் அறிய வாய்ப்பாக மகாகவியின் மீதான ஈடுபாட்டால்”பாவெல் பாரதி” எனும் புனைப்பெயரில் தமது களப்பணியை இலக்கியத் தளப்பணியுடன் தொய்வின்றி செய்து வரும் எழுத்தாளர் தோழர் மோகன் குமாரமங்கலம் தேனி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர். ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களுக்கு எதிராகத் தமது சகோதரருடன் இணைந்துப் போராடி வரும் தோழர் பாவெல் பாரதி அவர்கள் பள்ளிக்காலத்தில் அனைத்திந்திய பாலர் பெருமன்றத்தின் செயலாளராகவும் தமுஎகச வில் பல பொறுப்புகள் வகித்து தீவிரமாகக் களப் பணிகளைச் செய்து வந்தும் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனராகவும் பணியாற்றி வருகிறார்.தேனி மாவட்ட தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு முதன் முதலாகத் தமக்குக் கிடைத்த வரலாற்று ஆய்வுத் தொல்பொருட்களை வழங்கிய தோழரின் தொல்லியல் துறை மீதான ஆர்வம் குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தொன்மையான கலையான  ஏறுதழுவுதல் மற்றும் சல்லிக்கட்டு தொடர்பாகப் படைப்பொன்றைப் எழுதி  மறைந்து வரும் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து வருவது பாராட்டிற்குரியது.

அடுத்ததாகக் கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் என பன்முகங் கொண்ட எழுத்தாளுமை ஒருவரைப் பற்றிப் பேசுகிறது தொடரும் பகுதி.

தமுஎகவின் செயற்குழு உறுப்பினராகவும் அமைப்பின் தட்டிப்போட்டுகளில் தமது ஓவியத்தை வரையும் வாய்ப்பைப் பெற்று  27 ஆண்டுகளாக இயக்கத்தோடு இணைந்து செயலாற்றிய கவிஞர் அழகிய ஓவியங்களுக்குச் சொந்தகாரர் தோழர் வெண்புறா அவர்களின் வாழ்க்கைப் பயணம் தொகுப்பின் உற்சவப் பக்கங்கள்.சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் எழுத்துக்கள் ஆபத்தானவை என்பதை எப்போதும் வலியுறுத்தி வரும் தோழர் வெண்புறா அவர்கள் தமுஎகசவில் உறுப்பினராகக் களப்பணிகளில் செயலாற்றி வந்த தோழர் காமாட்சியை மணம் புரிந்தது மறக்கவியலாத நிகழ்வு. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தோழரின் பள்ளிக்கால நண்பராக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் இருந்து வந்ததும் தமுஎகச வில் இணைந்தப் பின்பு  இடையில் விட்டுப் போன நட்பு  மீண்டும் மலர்ந்ததைப் பெரிதாகத் தமது நேர்காணலில் சிலாகித்துக் கூறும் தோழர் தமது முத்தாய்ப்பான நீண்ட கவிதை வரிகளால் எப்போதும் தமுஎகச கலை இரவு மேடையை அலங்கரித்தும் மேலும் பல மேடைகளைச் சிறப்பித்தும் வந்துள்ளார்.சுனாமியில் பாதிக்கப்பட்டவர் நிலையை பேசிய கவிதையும்  கைம்பெண்ணின் மறுமணத்தால் ஏற்படும் சமூகசிக்கல்களால் பாதிக்கப்படும் குடும்ப உறவுகளின்  ஆதங்கத்தை வெளிப்படுத்திய கவிதையும் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக, மக்களை நேசிப்பதையே உயர் மாண்பாகக் கொண்டு தந்தையின்  பெயரில் எழுத ஆரம்பித்து  பின் ஜனநேசன் என்கிற புனைப் பெயரில் படைப்புலகில் வலம் வரும் தோழர் ஜனநேசன் அவர்கள் வாசிப்பை பொழுபோக்காகக் கொள்ளாமல்  தமது வாழ்வின் அங்கமாகவே கொண்டு கல்லூரிகளில் நூலகராகப் பணியாற்றி மாணவர்களுக்கு வாசிப்பிற்கான பாதையை வகுத்துத் தந்தவர். ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளரான
தோழர் ஜனநேசன் அவர்கள் தமுஎகசவில் பல பொறுப்புகளிலும்  செயலாற்றி வருகிறார்.தொடரும் இறுதிப் பகுதிகள் முற்போக்குக் தடங்களின் பலரது முகவரிகளை நமக்கு அடையாளங்காட்டுகிறது. வாசிப்பையே உயிர் மூச்சாகக் கொண்டு சிறுவயது முதல் இன்று வரை தொடர்ந்து வாசிப்பைக் கைவிடாது இறுகப் பற்றி தமது குடும்பத்தினரையும் வாசிக்க  உற்சாகப்படுத்தியும் இல்லத்தையே புத்தகாலயமாக மாற்றிய தோழர் ஜீவசிந்தன் ஒரு ஆகச்சிறந்த கதைசொல்லி.  யூடியூபில் “நான் ஒரு கதை சொல்கிறேன்” என்கிற தலைப்பில் நித்தம் ஒரு கதை சொல்லி வரும் சுவாரஸ்வரமிக்கக் கதைக்காரர். தமுஎகசவில் இணைந்துத் தமது இலக்கியத் தளத்தை மேலும் செறிவூட்டி வரும் தோழர் மாநில உறுப்பினராகச் செயலாற்றியும் வருகிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றியும் தொழிலாளர்களுக்காகப் போராடியும் தமது களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். தோழர் ஜீவசிந்தன் அவர்கள் வாசிப்பின் செயலூக்க ஆசிரியர் என்று அழைப்பது சாலப் பொருந்தும்.வாசிப்பை உற்சாகமாகக் கொண்டாடி வரும் தோழர் கவிஞர் ஜீவி அவர்களின் இலக்கியப் பயணம் பள்ளியில் திருக்குறள் முதல் கம்பன் பாடல் ஒப்புத்தல் வரை பள்ளிப் பருவம் தொட்டே துவங்க தொடர்ந்து பல இதழ்கள் பத்திரிக்கைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் கல்லூரி காலங்களில் வெளிவந்ததும் ஆக்கம் பெற்று வந்தன. இதன் நீட்சியாக இன்றும் இலக்கியத்திற்கு அயராது பாடுபடும் தோழர் ஜீவி தமது இல்லத்தையே நூலகமாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறார்.தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றுவதை ‘தாத்தாவின் கைபிடித்துச் செல்வதுப் போல’ என்று பெருமிதத்துடன் நேர்காணலில் தெரிவித்த தோழர் தாம் இயற்றிய கவிதைகளைப் பலமுறை மேடைகளில் இலக்கிய கூட்டஙகளில் வாசித்து மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு ஊழியர்களுக்காக இன்றும் போராடி வரும் தோழர் ஜீவி  அதைப்பற்றிய நாவல் ஒன்றை எழுதியும்,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் அவர்களின் படைப்பு வரலாற்றைப் புதுக்கவிதை நடையில் படைப்பாக்கமாக செயல்படுத்தியும் இலக்கியத்திற்கான சிறப்பான தொண்டாற்றி வருகிறார்.
அடுத்த ஒரு முக்கிய கலைத்திரு பிரமுகர் என்கிற அடையாளத்தைக் கொண்ட ஓவியர் கலைஞர் ஸ்ரீ ரசா அவர்களது ஓவிக்கலை வடிவமே  தமுஎகச வின் சின்னமாக ஒளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது. கலையுடன் கவிதையிலும் சிறந்து விளங்கும் தோழர் ஒரு சுடுமண் கலைஞர். நாட்டுப்புற ஆய்வாளராகக் குதிரையெடுப்பு பற்றிய ஆய்வேடு ஒன்றை துவக்கி ஆய்வு செய்து வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்விப் பாடத் தயாரிப்பாளராகவும் பல்லூடக ஆய்வு மையப் பொறுப்பிலும் இயங்கி வரும் தோழர் தமுஎகச வுடன் செயலாற்றியும் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட பலரையும் எழுதத் தூண்டியும் உற்சாகப்படுத்தியும் தமது இலக்கியப் பணியைச் சோர்வின்றிச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நூலின் மதிப்பை மேலும் கூட்டும் விதத்தில் இறுதிப்பகுதியாக மதிப்புமிக்க எழுத்தாளர் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் நூல் விமர்சனம் முற்றுப் பெறுகிறது.

கல்லூரி காலங்களிலேயே கவிதைகள் எழுதிப் பழகி இன்று இலக்கியத்தில் அவருக்கான தனித்த அடையாளத்தை ஏற்படுத்திய தளமாகக் கவியுலகைக் குறிப்பிட்டும், தமது வாழ்நாளைஇலக்கியத்துடனேயே இணைத்து வாழ்ந்து  மறைந்தப் பின்பும் கவிதையாய் கலையாய் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும் மூத்த எழுத்தாளர் தோழர் இலட்சுமணன் அவர்கள் போடி மாலன் என்கிற புனைப் பெயரில் படைப்புகள் பல படைத்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார். 80களில் வெகுவாக இருந்து வந்த  வேலையில்லா திண்டாட்டத்தை அழுத்தமாகப் பேசும்  நாவலாக “அலையும் காலம்” என்கிற அவரது படைப்பு 1980 களில் எழுதப்பட்டு நூலாக வெளிவராமல் 2008 இல் தோழர் தமிழ்ச் செல்வன் அவர்களால் பிரசுரிக்கப்பட்டு “பாலைவனச் சோலை” என்கிற  திரைப்படமாகவம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோழரின் இந்த நாவல் எழுதிய காலங்களிலேயே  வெளிவந்திருந்தால் இன்று இலக்கியவெளியில் அவருக்கான தனித்த அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்று எப்போதும் வருத்தப்படும் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் முன்னிலையிலேயே தோழர் போடிமாலன் தமது இறுதி மூச்சையும் பேச்சையும் இழந்தது  இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத சம்பவம் என்று குறிப்பிடுகிறார் தோழர் தமிழ்ச்செல்வன்.தமுஎகச வில் தமது இறுதிப் பயணம் வரை   தொடர்ந்து இயங்கி வந்த தோழர் ஒரு வீதி நாடகக் கலைஞர் என்பதும் “பாரதி கலைக் குழு” என்கிற நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்ததும் அவரின் கலைத்துறைப் பயணத்தையும் ஒருசேர அறியும் காலக்கருவியாக இந்நூல் திகழ்கிறது.

விளிம்பு நிலை மக்களுக்காகவே எப்போதும் தமது இலக்கியப் பரப்பை அகண்டு விரியபடுத்தி வரும் எழுத்தாளர் தோழர் ம. காமுத்துரை அவர்கள் தமது பட்டவர்த்தனமான எழுத்தாலும் வட்டார மொழிக் குடுவையின் அழகிலும் வாசகர் வரவேற்க்குரிய சிறுகதையாளர். பெருவாரியான வாழ்க்கைப் பக்கங்களை இலக்கியத்திற்காகவே அர்பணித்த தோழர் ம.காமுத்துரை அவர்களின் வெகுவான படைப்புகள் இலக்கிய ஆளுமைகளால் கௌரவிக்கப்பட்டும் திரைக்காணல்களாக வெண்திரையை அலங்கரித்தும் வந்துள்ளன. குறிப்பாக ” சௌமா” விருது பெற்ற “குதிப்பி”நாவல் அவரின் மேன்பமைப் பொருந்திய படைப்பு. தமுஎகவுடன் இணைந்து பல பொறுப்புகளைச் செயல்படுத்தி வரும் தோழர் தமுஎகச அறம் கிளை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளுமைகள் இலக்கியப் பரப்பில் பறந்து விரிந்து சிறந்தாலும் ஒரு எழுத்தாளன் பள்ளி கல்லூரி ஆசிரியராகத் திகழ்வதும் எதிர்கால தலைமுறையினரைப் படைப்பாளர்களாக உருவாக்குவதும் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதும் என்பது செயற்கரிய பணி. இதில் தமுஎகச தோழர்கள் தமது இலக்கியப் பணியுடன் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் மாணாக்கர்களுக்காகவும் அநீதிகளுக்கெதிராகவும் தமது படைப்பைத் தமிழைப் புகட்டுவதில் எள்ளளவும் குறைந்தவர் அல்லர் என்பதே இந்நூலில் வலம் வரும் எழுத்தாளுமைகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு திறம்பட வெளிப்படுத்துகின்றன. தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் தேடலின் பொக்கிஷங்களான வரப்பிரசாதங்கள்.ஒவ்வொரு வாசகரும் இந்நூலை வெறும் வாசித்து மட்டுமே கடத்தி விடாமல் ஒவ்வொரு ஆளுமைகளின் வாழ்வியல் கூறுகளைத் தனதாக்கிக் கொண்டு தமது ஒவ்வொரு தனித்துவ திறமைகளையும் செயல்பாடுகளையும் சமூக அறத்திற்கான அநீதிக்கெதிரானக் களப்பணிகளாகக் கொண்டுச் செயலாற்றி வர வேண்டும் என்பதே இந்நூல் படைத்ததற்கான முக்கிய காரணி. தொகுப்பை ஒருங்கிணைத்த தோழர்கள் இருவரும் அப்படியான பயணத்தை முன்னமே  தொடங்கி விட்டனர் இலக்கியத்தையும் இயக்கத்தைமும் கைக்கொண்ட நாமும் நூல் வாசிப்போடு மட்டுமே நின்றுவிடாமல் அடுத்தடுத்த இலக்கிய பணிகளை நம்மை வளர்த்தெடுத்த இந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக செய்து நமக்கான அடையாளத்தையும் இங்கு விட்டுச் செல்வோம் என்பதே நூலின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது.  ஒவ்வொரு ஆளுமையின் தொய்வற்ற இயக்கத்தை அறிய உதவிய தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் மெனக்கிடல்களும் இணையவழிப் பக்கங்களை பதிவிறக்கி ஒருங்கிணைத்த தொகுப்பாளர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடர்ந்து அடுத்தடுத்த நமது அமைப்புச் சார்ந்த தோழர்களின் மேத்தகு பணிகளைப் பற்றி அறியும் ஆவலில் பாகம் இரண்டை நோக்கி எதிர்பார்ப்பில்..
நன்றி.
– து.பா.பரமேஸ்வரி
Arambai Book By Mohammad Yusuf bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: முஹம்மது யூசுப்பின் அரம்பை – கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: முஹம்மது யூசுப்பின் அரம்பை – கருப்பு அன்பரசன்

அவள் கருநீல யானை ஒன்றில் வளையல்கள் குலுங்கிடும் கரமதில் வேல் கம்போடும்.. புல்லாங்குழலோடும் மூத்த குடிகளின் மூதாய். தேவதை.

அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன்… படுக்கைக்கு அருகில் இருந்த சன்னலுக்கு வெளியே வளர்பிறை காணாமல் போயிருந்தது இக்கணம். மூடியும் மூடாமலும் இருந்த விழிகளுக்கு திறந்திருந்த சன்னலுக்குள் இருட்டு கைதாகி இருப்பதாக மூளை உணர்த்தியது… செம்பருத்திப்பூவாய் சிரித்திட்ட என் ராசாத்தியின் மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கும் என்னைப் போலவே இருட்டும் இப்போது சன்னலுக்குள்! படுக்கும் போது இருந்த வளர்பிறைக்கு பதில்.

அமைதியை நிரப்பிக் கொண்டிருக்கும் சிலுசிலு காற்றின் ஓசையை கிழித்து மேலெழும்பி காதுக்குள் வந்து சேர்ந்த ஒற்றை காகத்தின் கரைதலில் விடியத் தொடங்கியிருக்கும் காலைப் பொழுதின் தொடக்கத்தில் சிறு புள்ளியாய் ஒருநட்சத்திரம் மட்டும் கண்ணடித்துக் கொண்டு… ஒன்று காணாமல் போக இன்னொன்று எப்பொழுதும் நிரப்பிக் கொண்டே இருக்கும் இயக்கவியலின் ஆதாரமாக இப்பொழுது கண்ணடிக்கும் அந்த ஒற்றை நட்சத்திரம்.

போர்த்தியிருந்த போர்வையை நீக்கி புலர் காலைக் காற்று முகத்தில்.. நேசம் மிகுந்த கண்மணியின் பாதத்தில் நான் பதித்த முதல் ஈர முத்தத்தை போன்று சிலிர்ப்பைஉண்டாக்கியது உடலுக்குள்ளும் மனசுக்குள்ளும். அமைதி இல்லாமல் எப்பொழுதுமே அலையடித்துக் கொண்டிருக்கும் மனித மனங்களின் நினைவுக் குளத்தில் சின்னதொரு தவக்கட்டான் ஓட்டினை ஓசையில்லாமல் வீசியது பறவை ஒன்றின் கீச் கீச் ஒலி..

அது வீசும் காற்றின் அழகை வடிவாக்கி பேரழகாக்கியது.. குளிர் காலைப் பொழுதின் ஈரக்காற்றும் வானமெங்கும் பூசியிருக்கும் கருப்பும்தான் எத்தனை வனப்பு மிகுந்தது. மனித மனங்களை வசியப்படுத்த கூடியது. வரவேண்டிய இணை வந்து சேரவில்லை என்கிற ஏக்கமதில் குயிலின் குக்கூ காற்று வெளியெங்கும் ராகம் இசைக்க, பக்கத்தில் நேற்று வாசித்து முடித்த அரம்பை..

மதிப்புரையை எங்கிருந்து எப்படி தொடங்குவது? மனசுக்குள் இதே நினைவாக கண்மூடி அயர்ந்தவனை விடியற்காலையின் அழகெல்லாம் அருவி நீராய் உச்சந்தலையில் கொட்டி எழுப்பியது. கருநீல நிற யானை ஒன்றில் சமூகத்தின் மூத்தக்குடி; திடகாத்திர தோளினை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையில் ஒருகையில் வேல் கம்போடும் இன்னொரு கையில் வண்ண வண்ண வளையல் குலுங்கிட புல்லாங்குழல் ஏந்தியும் தேவதையாக எதிரில்.

முதலில் அன்பு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வோம் அரம்பை ஆசிரியர் முஹம்மது யூசுப் அவர்களுக்கு. தலைமை ஏற்று பெரும் சமூகத்தையே வழிநடத்திச் சென்ற, பாதுகாத்துச் சென்ற பெண் அடுக்களைக்குள் கிடந்து தனது செயல்கள் அனைத்திற்கும் ஆணின் கண் அசைவை எதிர்பார்த்து அடங்கி ஒடுங்கிக் கிடப்பதற்கு எதிராக மாயா. வண்ணங்களைக் குழைத்து தூரிகையால் உரையாடும் ஓவியக் கலைஞராக.. கல்லிலே செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வரலாற்று புனைவுகள் அனைத்தையும் கேள்வியின் உளிகளால் செதுக்கிச் செதுக்கி மறு வாசிப்புக்கு உட்படுத்தி நிஜத்தின் வனப்புகளை வடிவாகி வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும், கலகம் செய்யும் சிற்பியாக..

இயற்கையின் உன்னதங்கள் அனைத்திலும் நுழைந்து அதன் வேர் அழகினை தன் கற்பனை வளமையின் உச்சத்தால் பார்ப்பவர்களின் சிந்தனைகளும் மனதும் இறக்கை கட்டி பறக்கும் குதிரையாகிட, தூரிகையால் வார்த்தெடுக்கும் படைப்பாளுமையாக.. தைரியம் மிகுந்தவராக.. நேர்கொண்டு தனது கருத்துக்களை பேசுபவராக நாவலுக்குள்.. தனது தனித்துவம் மிகுந்த சாம்ராஜ்ஜியத்தில் தலைமையேற்று நடத்திச் செல்லும் இளவரசியாக மாயா படைக்கப்பட்டு இருக்கிறார்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும் பழையன கழிதலின் வரலாறும் புதியன புகுதலின் காரணமும், சூழலையும் அறிந்திடத் தேடியலையும்.. வரலாற்றில், சமூகச் சூழலால் வலுத்தது வாழும் வலுவற்றது அழிந்துபோகும், அப்படி என்றால் வலுவற்றதன் காரணம் என்ன வலுவானதாக வளர்ந்து எழுவதற்கான புறச்சூழல் எதுவென்று ஆராயும், வரலாறு எங்கிலும் நடந்து வந்த மாற்றத்திற்கான பாதைகளை மூடி மறைத்த சூட்சமங்களை, பேசமறந்ததின் காரணங்களை அறிந்து கொள்ள நினைக்கும் ஒரு ஆர்வலனாக, அழிந்த ஒன்றின் வேர்களை தேடுபவனாக, அதன் மிச்சங்களை கண்டடையத் துடிக்கும், இயங்கிக் கொண்டே இருக்கும் சாலமன் கதாபாத்திரம் நாவலுக்குள் காடு மலை என எங்கிலும் சுற்றிக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கும்.. வாசிக்கும் நம்மையும் ஜோடி போட்டுக் கொண்டே…

வரலாற்றின் நிஜங்கள் பலவற்றை மாயாவும் சாலமனும் தங்கள் முகநூல் பக்கப் பதிவுகளிலும் இருவருக்குமான பின்னூட்டங்களிலின், விவாதத்தின் வழியாக பேசியிருக்கிறார் நாவலாசிரியர். மாயாவோடு அவரின் அப்பா உதயணன் உரையாடல்கள், வாசகனை தாமிரபரணி ஆற்றுக்குள் அழைத்துச்சென்று நீச்சல் பழக வைக்கும். முஹம்மது யூசுப் நம்மை கரிசல்காட்டு மண்ணெங்கும் நடக்க வைத்து ஓட வைத்து சிவந்து கிடக்கும் பாதங்களிலிருந்து மேலெழும்பி வரும் மண் வாசனையை நுகரச் செய்கிறார் நாவலெங்கும். சாலமன் மாயாவும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப் பறவையாக இருந்து கூவிக் கொண்டும், அகவி கொண்டும், கத்திக் கொண்டும் நாமும் அவர்களோடு பறந்து கொண்டே இருப்போம். மாயா பயிற்சியின் பொழுது மயங்கிட, அவளைத் தாங்கிக்கொள்ளும் கரங்கள் நம்முடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் மனதின் அடியாழத்தில் இருக்கக்கூடிய காதல் உணர்வுகளை மெல்ல வருடி விடும் நமக்குள் இருக்கும் ராசாத்தியின் நினைவுகளைத் தூண்டி.

நாவலுக்குள் மாயாவும் சாலமனும் தனித்தனி உலகில் பயணம் மேற்கொள்பவர்கள். வரலாற்று நிகழ்வுகளோடு நில வரைவியலில் கண்டிடும் அடையாளங்களோடு.. வாழ்ந்து மறைந்த மனிதர்களோடு உரையாடிக்கொண்டே இருக்கும் இவர்களை, தனித்தனியாக இருக்கக்கூடிய கருப்பும் சிவப்புமான குன்னிமுத்துகளை அனுபவம் வாய்ந்த பொன் நகை செய்யும் ஆச்சாரி எப்படி லாவகமாக துளையிட்டு அழகிய மாலையாக கோர்க்கிறாரோ அப்படி ஒரு இணைப்பை மாயாவுக்கும் சாலமனுக்கும் நாவலுக்குள் மிக வடிவாக செய்து முடித்திருக்கிறார் அமைதியான அவர்களின் புன்னகைக்குள் நாவலாசிரியர்.

அதிகாரத்தில் எவர் வந்தமர்ந்தாலும் ஏழைகளுக்கான உரிமைகளும் உடமைகளும் மட்டுமே இங்கு தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவும் தொடர்கிறது அக்கொடுமைகள், பெரும் நகரங்கள் எங்கிலும் குடிசைகளை அகற்றி மாடிவீடு குடியிருப்புகள் தருவதாக சொல்லிக்கொண்டு. இங்கே காசிமும் அவரது மனைவி அஸ்மாவும். மன்னர்கள் காலத்தில் தங்கள் மூதாதையருக்கு ஒதுக்கப்பட்ட செம்மண் பூமி வக்பு வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதையறிந்து அதை மீட்பதற்காக அரசியல் வாதிகளை நம்பி ஏமாறும், நில உரிமை வேண்டி நிற்கும், எண்ணற்ற நில மற்றவர்களின் அடையாளமாக இங்கு காசிம். அரசியலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகள், இவரைப் போன்ற எளியவர்களின் வாழ்வினை சூறையாடி தன்னை முன்னேற்றிக் கொள்கிறார்கள் என்பதை நிகழ்கால அரசியலை அதன் ஏமாற்றுத்தனத்தை, அதன் கள்ளத்தை சங்கிலித் தொடர் போன்று இணைந்து இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறார்.

எளியவர்களின் வாழ்வு சூறையாடப்படும் பொழுது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் துணையாக இருப்பது எளிய மக்களே என்பதை “பாய் கடை” ரவூப் பாய் அவர்கள் காசிம் மீது கொண்ட அன்பிலும் அக்கறையான அரவணைப்பிலும் தாய்க்கோழியின் பேரன்பாக பேசியிருக்கிறார். நில உரிமைக்கான போராட்டமா..? வாழ்க்கையா? என்று வரும்பொழுது, “வாழ்க்கையே” என்கிற நிஜத்தை எளிய மக்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை எதார்த்தத்தில் இருந்து நாவலாசிரியர் சொல்லியிருக்கிறார். இவர்களைப் போன்றவர்களையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளை என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியையும் நம்முன் நாவலுக்குள் வைத்திருக்கிறார்.

பள்ளிநாட்களில் சாலமனுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதையாக.. அவனுடைய மனதில், அன்பு உணர்வுகளில் ரசவாத மாற்றங்களை நிகழ்த்தி இருக்கக்கூடிய முதல் பெண்ணாக ரகேல் ஆசிரியை இருக்கிறார். பதின் பருவத்தில் நம் அனைவருக்குள்ளும் நிச்சயம் ஒரு அழகு ரகேல் குடியேறி இருப்பார். அவர் இன்றளவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார் இன்னும் நினைவுகளுக்குள். நாவலை நீங்கள் வாசிக்கும் பொழுது உங்களின் மனதின் அடி ஆழத்தில் இருக்கும், அக்கறையோடு அன்பு வார்த்தை பேசிய உங்களின் ரகேல் மெல்ல மேலெழுந்து வருவார்.

வேணியம்மாள் பரமசிவம் பண்ணையாரின் பேரனாக, தாய் தந்தையர் இல்லாதவனாக நாவலுக்குள் அசோக். எவர் ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத பெண் பித்தனாவே நமக்கு அறிமுகமாகிறார் நாவலுக்குள். இப்படியான சூழலில் தனக்கான அம்மா இருக்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் அறிய முடிகிறது அவரால். அம்மாவோ, கணவனை இழந்த விதவைப் பெண்ணாக வெள்ளாடை உடுத்தி கொண்டிருக்கிறார். அம்மாவைத் தேடியடைய முற்படும் பொழுது, அப்பாவும் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தியை கேள்விப்பட்டு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். அப்பாவுக்கு என்னவாயிற்று எங்கு இருக்கிறார் என்பதை தேட..

மூன்று தலைமுறைக்கு முன்னால் இருக்கக்கூடிய தகவல்களை சேகரிதது அறிந்திட வேண்டி வருகிறது.. இப்படி ஒரு நெடிய தேடலில்தான், இந்தியாவில், இடத்தின் அடையாளமாக இருந்த இந்து என்கிற வார்த்தை ஒரு பெரும் பகுதி மக்களின் அடையாளமாக எப்படி பிரிட்டிஷாரால் மாற்றப்படுகிறது? அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? சாதிப் படிநிலை குறித்து.. தன்னை மேல் சாதியாக மேநிலைப்படுத்திக் கொண்டு தன் சொந்த மண்ணிலிருந்து ஏதோ ஒரு தூரத்து நிலத்திற்குள் பழைய அடையாளங்களை மறைத்துக் கொண்டு… வாழ்ந்து வரும் மனிதர்கள் குறித்துப் பேசி விவாதத்தை நடத்துவதற்கு சரியானதொரு இடத்தை நாவலுக்குள் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

எந்தப் பள்ளியில் தன்னுடைய அம்மா ஆசிரியராக பணிபுரிந்த பொழுது தன்னுடைய அப்பாவால் காதலிக்கப்பட்டு பொய்யான தகவலின் அடிப்படையில் வெள்ளாடை உடுத்தி வீட்டில் இருக்கிறாரோ அவரை வண்ணப் பட்டுச்சேலை உடுத்தி அதே பள்ளியின் முதல்வராக அழைத்து வந்து நிருத்துவார் அசோக் நாவலுக்குள். எந்தச் சாதியச் சமூகம் வன்மம் கொண்டு அவரை ஒதுக்கி வைத்ததோ அதே சமூகத்தில் அவரை கரு நீல நிற யானையில் கையில் வேல்கம்போடும் புல்லாங்குழலோடும் நேர்கொண்ட பார்வையில் சமூகத்தின் அத்தனை பக்கமும் பார்க்கக்கூடிய தேவதையாக நாம் பார்க்க முடியும் சந்தியா ஆசிரியை நாவலின் இறுதியில்.

முஹம்மது யூசுப் வடித்திருக்கும் சிற்பங்களுக்குள் பத்மா, விஜிலா, கலிவரதன், பக்கீள் ராஜா, மலைச்சாமி, தலைமை ஆசிரியர் கனகராஜ், கபடி பயிற்சியாளர் சுடலை என்கிற கரீம், மணிகண்டன், ஹரிதாஸ், மஜீத் பாய் இப்படி நிறைய.. அனைத்திற்கும் இந்த நாவலுக்குள் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது.

நாகப்பட்டினத்தில் புத்த விகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருகித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்து கொன்றதாகவும் அந்த கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் போன்று நிறைய ஆதாரங்களை தகவல்களை நம்மில் பலரும் கேட்டிராத செய்திகளை நிஜங்களை நாவல் முழுவதிலும் பதிந்திருக்கிறார்..

வரலாற்று உண்மைகள் பலவும் நாவலுக்குள் வார்த்தைகளாக உருப்பெற்று நிறைந்து காணப்படுகிறது. தனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள்; கேட்டு அறியப்பட்டு நிஜங்கள் அவைகளின் மீது நாவலாசிரியர் தன்னுடைய கற்பனையை பறக்கவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிலத்தில் மலைகளில் காடுகளில் நடக்க விட்டிருக்கிறார் தனது பாதங்களை.. வழக்கமாக நாம் வாசிக்கும் நாவல் வடிவமைப்பில் இருந்து அரம்பை புதியதொரு வடிவமாக எனக்குள் ஒரு உணர்வை வாசிக்கும் பொழுது ஏற்படுத்தியது. நாவலின் கதையோட்டத்தில் இத்தனை தரவுகளையும் வரலாற்று உண்மைகளையும் கொடுப்பதற்கு ஆசிரியர் அவர்கள் நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்.. அதனை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் பல கிளைக் கதைகளை நகர்த்திக் கொண்டே முஹம்மது யூசுப்.

ஆனால் ஒரு சாதாரண வாசகனால்; நாவல் வாசிப்பதில் ஆர்வம் உடையவனால் இத்தனை தரவுகளையும் உள்வாங்கிக்கொண்டு வாசிக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கிடைத்திருக்கக் கூடிய தரவுகள் அனைத்தையும் ஒரே நாவலுக்குள் கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஆசிரியருக்கு அவசியமில்லை அப்படி கொடுக்கக்கூடிய தரவுகளும் மற்ற செய்திகளும் நாவலின் மையக் கருவிற்கு வலு சேர்ப்பதாக அமைந்திட வேண்டும்.. அமைந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாக நினைக்கிறேன்.. சேகரித்த, அறிந்த, அறிவார்ந்த ஆயிரமாயிரம் தகவல்கள் தரவுகள், ஆசிரியரை ஆங்காங்கே
இழுத்துக்கொண்டு சென்று விட்டதோ என்கிற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.. எது எப்படி இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் சொல்லாடல்களும் பெருகி வரும் இந்த சூழலில் பெண் கதாபாத்திரத்தை வலுவாக நிறுத்தியிருக்கிறார் ஆவுடையம்மாவாகவும் சந்தியாவாகவும், மாயாவாகவும், வேணியம்மாளாகவும், சவால் மிகுந்த வாழ்வினை எதிர்கொள்ளும் தனிப்பெண்ணாக அஸ்மாவையும்..

நிகழ்கால அரசியலையும் பல இடங்களில் பகடியாகவும் காத்திரமாகவும் தொட்டுச் சென்றிருக்கிறார். நம்மில் இருந்து மூன்று தலைமுறைக்குள் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள், வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வியாபார நுணுக்கங்கள், சந்தையாக்கம் அதில் இருக்கக்கூடிய நுட்பமான லாப அரசியல், நிலவரைவியலில் நிகழ்ந்தbமாற்றங்கள் இப்படி நிறைய தரவுகளை உள்ளடக்கியதாக வனப்பு மிகுந்த தேவதையாக நம் கண்முன்னே “அரம்பை” ஆசிரியர் முஹம்மது எழுத்துக்களில் அழகாக. சிறப்பான முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் யாவரும் பதிப்பகத்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாவலை தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருக்கிற ஆசிரியர் முஹம்மது யூசுப் மிகவும் மெச்ச தகுந்தவர், பாராட்டப்பட கூடியவர். அன்பும் வாழ்த்துக்களும்.

கருப்பு அன்பரசன்

நூல்: அரம்பை
அசிரியர்: முஹம்மது யூசுப்
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ₹.500/-
பக்கங்கள்: 415.

Kadal Vanam Book By Theni Seerudaiyan Bookreview By Thanges நூல் விமர்சனம்: ஆசிரியர் தேனி சீருடையானின் கடல் வனம் (சிறுகதை தொகுப்பு)  - தங்கேஸ்

நூல் விமர்சனம்: ஆசிரியர் தேனி சீருடையானின் கடல் வனம் (சிறுகதை தொகுப்பு) – தங்கேஸ்



ஒரு எளிய வாசகனின் பார்வை இது 

நாற்பது  ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வரும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் மிகச் சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் மற்றும் வைகை இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர். 

“கடை” “ நிறங்களின் உலகம்”  “ சிறகுகள் முறியவில்லை”  “ நாகராணியின் முற்றம்” என்று அற்புதமான நாவல்களோடும் “ஆகவே” “ஒரே வாசல்” “  விழுது”
“பயணம்”  “மான் மேயும் காடு”  “கந்துக்காரன் கூண்டு” “பாதகத்தி” என்று  அற்புதமான சிறுகதை தொகுப்புகளோடும்  தான்  இந்த மண்ணின் எழுத்தாளன்  மக்களின் எழுத்தாளன் என்பதை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். 

இந்த வரிசையில் மேலும் அழகு சேர்க்க தற்போது வந்துள்ளது “கடல் வனம் “ என்ற சிறுகதை தொகுப்பு. அகரம் வெளியீடாக இம்முறை  பனிரெண்டு புதிய கதைகளுடனும்  தோழர் உமர் பாருக்கின் அற்புதமான அணிந்துரையுடனும்  உங்கள் உள்ளத்திற்குள்  சிறிய பெரிய வலிய உரையாடல்களை நிகழ்த்திப்பார்க்க வந்திருக்கிறார் தோழர் தேனி சீருடையான் அவர்கள்.

எனக்கு அவரிடம் எப்போதும் பிடித்தது அவருடைய எளிமையான மொழியும்  நமது தோளில் பிரியமாக கை வைத்தபடி கதை சொல்லும்  சிநேகிதமான பாங்கும் ஆகும். ஆடம்பரமில்லாத அவசியமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து  கடைத்தேற்றமில்லாத மனிதர்களை அவர் கதையாகப் புனையும் பாங்கு எந்த ஒரு வாசகனையும் சட்டென்று இழுத்து கதைக்குள் கொண்டு சென்று விடும் என்பது உண்மை.

அவருடைய கதை மாந்தர்கள் யாவரும் எளிதினும் எளியவர்கள் என்பதும் சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள் க​டைத்​தேற வழியற்றவர்கள்  என்பதும்  வலிக்கும் உண்மை..

சோரம் போன தாயால் கைவிடப்பட்டவர்கள்  மதுவுக்கு அடிமையான தந்தையால் குழந்தை தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள்  உண்ண உணவும்  உடுத்த உடையும் உறங்க போக்கிடமும் அற்றவர்கள் . விளிம்பு நிலையிலும் கீழான  மனிதர்கள் கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள் என இப்படிப்பட்ட மாந்தர்கள்  தான் திரும்ப திரும்ப இவருடைய கதைக்குள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் அக உலகம் மற்றொரு துயரமான கோணத்தில் இவரது எழுத்துக்களின் வழியே  விரிந்து செல்கிறது.

கடைத்தேற வழியற்ற மனிதர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது அந்த வாழ்க்கையை அவர்கள் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.  தங்கள் வாழ்க்கையின் அவலத்தை எள்ளி நகையாடிக் கொண்டும் அதற்கு காரணமான சமூகத்தை ஆட்சியாளர்களை தங்களுக்குரிய  அளவில் விமர்சித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது தான் தோழர் இந்தக் கதைகளின் வழியாக நமக்கு காட்டும் உலகம் .

“ நாகம் “ என்ற முதல் சிறுகதையின் களம் புதிது ,கதை மாந்தர்களும் புதிது. கீழடியில் நாம் நமது பண்பாட்டைத்  தோண்டி கண்டடைவதைப்போல நமக்கான வழிபாட்டையும் நாம் தேடிக்கண்டடைய வேண்டும் என்பதை இந்த கதையில் அற்புதமாக சொல்லியிருக்கிறார்.  அதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் 

‘’ தமிழ் வழிபாடுங்குறது இயற்கையோட சேர்ந்தது . மழை மின்னல்ங்குற இயற்கை நிகழ்வுகளையும் காட்டு ஜீவிகளையும் தான் நாம சேவிச்சிட்டிருந்தோம். மனித உருவமா வணங்கப்பட்ட முதல் கடவுள் முருகன். வள்ளிக் கொறத்தியோட காதலும் காமமும் கொண்டான் முருகன். முருக வழிபாடு காதலுக்கு காதலுக்கு மரியாதை ‘’

என்ன அற்புதமான  மரபு நம்முடையது ,! 

‘’ஆகம விதிப்படி புரோகிதம் பண்ணத் தெரிஞசா யார் வேண்ணாலும் அர்ச்சகராகலாம்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன பெறகும் நடை மொறையில ஒண்ணும் நடக்கல ‘’

அதனால் ஒரு சாமியார் ஒரு புதிய கோயிலை நிர்மாணிக்க விரும்புகிறார் . அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும் என்று அவரே விளக்குகிறார்.

‘’ மண்ணால நாகம் மாதிரி செஞ்சு பக்கத்துல நாகம்மா கோயிலை உண்டாக்கப் போறேன். மொதல்ல குலசாமிங்கற நிலையில அதக்கும்பிடனும் .என் வம்சத்தோட குலசாமி.பெறகு பையப் பைய வளர்த்து தமிழ் சமூகத்துக்கான வழிபாடா மாத்தனும் ‘’

தோழர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா ? சாமி கும்பிடாதே என்று சொல்வதற்கு நாளாகும். ஆனால் உன்னுடைய மரபை மீட்டெடுத்து அதை வணங்கு என்று இப்போது சொல்ல இயலும்.

‘ பிறை நிலா ‘’ கதையிலும் சென்ற கதையைப் போலவே ஆசிரியரும் ஒரு பாத்திரமாக வருகிறார். தன் தங்கை இறந்து விட அதை முன்னிட்டு குடும்பதிதிற்குள் உறவுகளுக்குள் எப்படி ஒரு வெற்றிடம் உருவாகிறது  என்பதையும்  மனிதர்கள் இறந்தாருக்கான சடங்ககுகளை செய்யும் போது என்ன நம்பிக்கையில் செய்கிறார்கள்  என்பதையும்                              மூட நம்பிக்கைகளுக்கு எப்படியெல்லாம் வெற்றுச் சமாதானம் சொல்கிறார்கள் என்பதையும்  அருமையாக அவருக்கே உரிய எள்ளல் தொனியில் எழுதியிருக்கிறார்.

‘’ பவுனாச்சி ‘’ கதை மரண வீடுகளில் நிகழ்த்தப்படும் சடங்குகளைபற்றிய கூர்மையான அவதானிப்பு. ஒரு பள்ளிச் சிறுமியின் பார்வையில் நகரும் கதை கடைசியில் சொந்தக் குடும்பம் இல்லாத பவுனாச்சி தன் உயிலில் தன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று எழுதியிருப்பதைப்பார்த்து விட்டு  ,  உறவுகள்  எப்படி தங்களுக்குள்  சண்டையிட்டு கலைந்து செல்கிறது என்பதை  துல்லியமாக படம் பிடிக்கிறது. 

இந்தக் கதையை வாசித்து முடித்ததும்  மனிதர்கள் எதனால் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில்  உறவு கொண்டிருக்கிறார்கள் .பணத்திற்காக மட்டும் தானா என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

‘’ மஞ்சுளா ‘’ விழிகளற்ற பெண் எப்படி தன் அகவிழிகளை திறந்து வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்கிறார் என்பதை அருமையாக விவரித்திருக்கிறது.

‘’ நின்றான் ‘’ தீ நுண் கிருமியின் வருகைக்குப் பிறது ( கொரானா )  பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களாக மாறிப் போகிறார்கள் என்பதை ஒரு சிறு வியாபாரியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக சொல்லிச் செல்கிறார். இது கசப்பான எதார்த்தமான உண்மை .பெண் குழந்தைகளென்றால் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

“ தாதுப் பருவம் “  கடைத்தேற்றமற்ற பிச்சை ஏற்றுப்  பிழைக்கும் அஞ்சலை  ஒரு பெண்ணின் கதை. கொரானா தொற்றிற்குப் பிறகு தங்களுக்கே உணவளிக்க இயலாத மனிதர்கள் எப்படி யாசகம் கேட்கும் பெண்ணுக்கு வழங்க முடியும்? வாழ்க்கை எத்தனை கொடியது என்பதை இந்த தேனி நகர வீதிகளில் அலையும் அஞ்சலை  போன்ற எத்தனை ஆதரவற்ற சீவன்களை கண்டால் தான் புரிந்து கொள்ள முடியுமா  ?           இந்த மாதிரியான அபலைகள் தோழர் கண்களில் மட்டும் எப்படித் தென்படுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.? ஏன் இவர் இவர்களைப் பற்றி இவ்வளவு அக்கறையாக எழுத வேண்டும் ? இவரை வாசித்தால் இவரை விட்டால் வேறு யார் இப்படிப்பட்ட மனிதர்களை எழுத முடியும் என்றே தோன்றுகிறது. . வரலாற்றை ஒரு எழுத்தாளன் பதிவு செய்வது போல வரலாற்றாசிரியன் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திட இயலாது  என்பது எத்தனை அரிய உண்மை !

“ தங்கை ” கதையைப் பற்றி சொல்வதென்றால் வாழ்க்கையின் நெடும்பயணம் என்று ஒரே வரியில் முடித்து விடலாம்.

“ இறைப்பாலங்களும் ”  ஏறத்தாழ நாகம் என்ற முதல் சிறுகதையின் களம் தான். மனசாட்சி உள்ள மனிதர்கள் அர்ச்சகராயிருந்தாலும் பக்தர்களாயிருந்தாலும் அநியாயத்திற்கு உடன் போவதில்லை என்ற எளிய விதியை சொல்லும் கதை இது.

‘ ஒரு போதும் அவர் தன்னை சிவசங்கர ஐயர் என்று சொல்லிக் கொண்டதில்லை சிவசங்ககரன் என்றோ சங்கரன் என்றோ தான் கூப்பிடச் சொல்வார் ’ இப்படித்தான் இந்தக் கதை ஆரம்பமாகிறது.

‘ கடல் வனம் ’ கதை  பல  வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச்சம்பவத்தை வைத்து பின்னப்பட்டிருப்பதாக எழுத்தாளரே கூறியிருக்கிறார்.

‘ஒருக்களித்திருந்த கதவு’ வட்டித் தொழில் செய்யும் பூபதியைப்பற்றிய கதை. இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா ? இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று உங்களை எண்ண வைக்கும் கதை இது –  இன்னும் எத்தனை எத்தனை பூபதிகளைத்தான் இந்த தமழ் சமூகம் வளர்த்தெடுக்குமோ தெரியவில்லை. இப்படி ஒரு ஆதங்கம் இந்தக் கதையைப் படித்த பின் உண்டாகிறது. 

‘அங்கியின் மகன் ’ தொழிலாளிகளின் தீராச்சாபத்தை  வலிக்க வலிக்க உணர்த்தும் கதை. தொழிலாளியாகப் பிறந்து தொழிலாளியாகவே காலம் கழிப்பது தான் இந்தச் சமூகத்தின் சாபக்கேடு என்பதை கண்களில் நீர் கசிய அற்புதமாக விவரித்த கதை இது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பாசம் பந்தம் உறவு என்பதெல்லாம் பணத்திற்குப் பிறகு தான் என்பது எவ்வளவு எதார்த்தமான உண்மை !

‘ குடும்பம் ’ கதை தான் இந்த தொகுப்பின் கடைசிக் கதை . இந்த தொகுப்பின் ஹைலைட்டான கதையும் கூட. ஜம்பங்கி நாரயணன் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஜம்பு எப்படி வாழ்க்கையால் கை விடப்பட்டு இறுதியில் தனக்கான எளிய வாழ்க்கையை தேடி அடைகிறான் என்பதை இந்தக் கதையினூடாக அற்புதாக  பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

ஒரு பறவையின் பார்வையில் மட்டுமே இந்தக் கதைகளை நான் இங்கே அடுக்கியிருக்கிறேன் தவிர ஆசிரியரின் மொழி நுட்பமும் கூரிய விமர்சனமும் அங்கதமும் காட்சிகளின் விவரிப்பும் கதைகளை ரசித்துப்படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை இங்கே சொல்லி விட விரும்புகிறேன்.

அவரின் சிறுகதைகளை அதற்கும் மேலாக விமர்சிப்பதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக தெரியவில்லை .அவரிடம் கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளமாக இருக்கின்றது- தவிரவும் நான் அவருடைய தீவிர ரசிகனும் கூட. அவரிடமே இதை நேரடியாகப் பகிர்ந்திருக்கிறேன். 

இந்தக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கு இருக்கிறது. தோழரும் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியிருக்கிறார். இன்னும் மொழிபெயர்ப்புக்கான மொழி மட்டும் எனக்கு வசப்படாமலே இருக்கிறது. அது மட்டும கிடைத்து விட்டால்  நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் முதல் சிறுகதை தோழர் தேனி சீருடையானுடையதாகவே இருக்கும்.

கடல் வனம் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறு கதை தொகுப்பாகும்

வாழ்த்துக்கள் தோழர்.

புத்தகம் பற்றிய குறிப்பு:
கடல் வனம் சிறுகதை தொகுப்பு ( 12 க​தைகள்     அடங்கியது)
அகரம் வெளியீடு
விலை ரூ 200/-
முதற் பதிப்பு   டிசம்பர்  2021

Vasuthenthira's Red Parrot Novel in tamil translated by Yumavasuki book review by Dhurai. Arivazhakan சிவப்புக் கிளி நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: வசுதேந்திராவின் சிவப்புக் கிளி நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



மண்மணம் பேசும் கிளி

இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்பைப் படைக்க முடியும். இயற்கை, மண்மீதான நேசம், கவித்துவ மொழி என பல நிறங்கள் கரைந்து உருக்கொள்ளும் படைப்பு மனம் கொண்டவரான கன்னட மேதமை “வசுதேந்திரா”வின் அத்தகைய உன்னதப் படைப்புதான் “சிவப்புக் கிளி” எனும் நாவல்.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்திலுள்ள “சாத்தூரில்” பிறந்தவர் “வசுதேந்திரா” அவர்கள். பால் புதுமையினருக்கான உள்ளூர் அமைப்புகளோடு இணைந்து களப்பணி ஆற்றுபவர் இவர். இவரது நூல்கள் அனைத்தும் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை கண்டு சாதனை படைத்தவைகள். “கன்னட சாகித்திய அகாதெமி” விருது உள்பட பல்வேறு விருதுகளை தனது மகுடங்களாகக் கொண்ட சிறப்புப் பெற்றவர் “சிவப்புக் கிளி” மூல நூலின் ஆசிரியர் “வசுதேந்திரா” அவர்கள்.

பல்லுயிர்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் இடையிலான உறவு குறித்த உணர்வு ரீதியிலான புரிதலுடன் ஒரு படைப்பு உருக்கொள்ளும் போது அப்படைப்பு காவியத்தன்மை பெறுகிறது. அக்காவியத்தன்மை என்பது அழகியல் வடிவம் சார்ந்ததாக மட்டுமில்லாமல் வாசக மனதைத் தைத்து ஒரு மகத்தான மாற்றம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறு கலை மேன்மையும், சமூக அக்கறையும் கொண்ட படைப்புகளே காலத்தின் தேவையாக உள்ளது; காலத்தின் உன்னத ஆன்மா இப்படைப்புகளின் வழியாகவே மலர்ந்து பேசுபொருளாக நிலைத்து நின்றுவிடுகின்றன. நேசமும், பிணைப்பும் என்பது மனிதர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; புல், பூண்டு, வெட்டுக்கிளி, இலை, தழை, பறவை, மரம் என பிரபஞ்சத்தின் சகல பல்லுயிர்களையும் ஒன்றிணைத்து மலரும் இம்மண்ணின் மகத்தான உறவாகும். இவ்வாறான பேரன்பு கொண்ட ஆத்மாவில் பிறக்கும் எழுத்துக்கள்தான் காலத்தின் முகத்தில் அறையும் சாட்சியங்களாக நிலைக்கின்றன.

பிரச்சாரம், அறிவுறுத்தல் எனும் காரணிகள் ஏதும் துருத்தி நிற்காமல் அழகியலுக்குள் கரைந்து உருவாகும் “சிவப்புக் கிளி” போன்ற படைப்புகளே காலத்தில் அழியாத கலைமேன்மை கொள்கின்றன. ஒரு இலையின் நுனியிலுள்ள பனித்துளிக்கும் இப்பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான மகத்தான தொடர்புக் கண்ணிகள் குறித்த விழிப்புற்ற ஆன்மாவை “வசுதேந்திரா”வின், சிவப்புக் கிளி வழியாகப் பார்க்க முடிகிறது. கலையின் வெற்றியும் கலைஞனின் வெற்றியும் இத்தகைய விழிப்புற்ற ஆன்மாவில்தான் அடங்கியுள்ளது.

வசுதேந்திராவின் களங்கமற்ற மற்றும் அறிவகங்காரமற்ற மொழி, இயற்கையோடு கரையும் போது அழகிய படிமங்கள் பூத்து வாசிப்பு மனங்களை பரவசப்படுத்திவிடுகிறது. சூரிய கதிர்களின் தீண்டலில் காற்றோடு பனி கலக்கும் கணத்தில் மண்ணிலிருந்து வெளிப்படும் மணம், வசந்த காலத்தில் துளிர்க்கும் தளிர் இலைகள், ஈர நிலத்தில் விழுகையில் ‘சொத்’தென்ற சப்தம் எழுப்பும் பனம் பழம், பனங்குருத்தை மென்றபடி பம்மிக் கிடக்கும் காடைகள் என மனிதன் அவதானித்து நேசம் கொள்ள இயற்கை எல்லையற்று விரிந்து இருக்கிறது. சிறுதுளி நீர்ச்சொட்டுக்குள் மறைந்து நிற்கும் குளம், குட்டை, ஓடை, ஏரி, கடல் என விரியும் நிலவியலைப் பேசத் தெரிந்தவனே அசலான கலைஞனாகப் பரிமளிக்க முடியும். அவ்வாறு தன் சிறகுகளை விரித்து நிற்கும் கலைஞராக வசுதேந்திராவை ‘சிவப்புக் கிளி’ நூல் வழியாகப் பார்க்க முடிகிறது.

மண்ணை ஆளும் விகார மனம் மனிதனுக்குள் விழித்தெழும் போதெல்லாம் இயற்கை தன் வசீகர முகத்தை மாற்றிக் கொண்டுவிடுகிறது. பலவேறு படைப்புகளில் தன் மனம் தொட்ட பாத்திரங்கள் குறித்து ஒரு பதிவில் சொல்லும் போது “சிவப்புக் கிளி” நாவலில் வரும் ‘ ஈரப்பா’வின் கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார் ‘யூமா வாசுகி’ அவர்கள்.
மரபு வழியிலான அறிவை நவீன எந்திரங்களின் கண்டுபிடிப்புகள் வழியாக மனிதன் ஆள நினைக்கும் போது இயற்கை எதிர்வினை புரியத் தொடங்குகிறது. தாவரங்கள் குறித்த அறிவுச் செழிப்பை வைத்திய அறிவாக மறுவரைவு செய்த “இருளர்” மொழியை நவீனம் உள்ளுணர வேண்டும். ‘காடர்’ மற்றும் ‘இருளர்’ பழங்குடி இன மக்களின் தொன்ம அறிவை நோக்கி நவீனம் திரும்பும் போது புதிதான சிலவற்றை மனித இனம் பெறமுடியும் என்பது திண்ணம். அத்தகைய சிந்தனைப் புள்ளி நோக்கிய திறவாக அமைந்துள்ளது “வசுதேந்திரா”வின் ‘சிவப்புக் கிளி’ நாவல்.

நிகழ் புள்ளியில் நின்று மூதாதையர் வாழ்வை நோக்கியும், இனி வரும் தலைமுறை சந்ததிக்கான வாழ்வை நோக்கியும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது “சிவப்புக் கிளி” நூல். நவீன முன்னகர்வு எனும் பொய்யுரைக்கு நாம் தொலைத்து வரும் மண்ணையும், வாழ்வையும் பேசுகிறது இந்நாவல்.
நவீனம் என்ற பூச்சோடு எந்திரங்களின் துணை கொண்டு மனிதன் இந்தப் பூமியை ஆளத்தொடங்குகையில் அவன் எதையெல்லாம் இழக்கிறான், எப்படி அழுக்கடைகிறான் என்பதை பச்சை நிறம் மறைந்து சிவப்புப் பூச்சுப் பெறும் கிளிவழி குறியீடாகப் பேசுவதே நாவலின் சிறப்பாக அமைகிறது. கிளிகளின் இறக்கைகள் நிறம்மாறும் போது மனித குல வாழ்வை அச்ச ரேகைக்கள் சூழ்ந்து பதைபதைக்க வைத்துவிடுகிறது.

“விவசாயத் தோட்டம்” குறித்த ஒரு பால்ய வயதுச் சிறுவன் எழுதும் கட்டுரை வழியாக மலரும் நாவல் மூதாதையர் மண்ணின் உடங்கருவல் வாடையோடு முற்றுப்பெறுகிறது. தொன்ம மண்ணின் பாரம்பரிய விதை வித்தாக வாழும் “ஈரப்பா”வின் வாழ்வு சிதைவதை அடிக்கோடாகக் கொண்டு தலைமுறை மாற்றம் காட்சி பெறுகிறது.
பால்ய நிலத்தின் நிறம் மாறும் ஒரு சமூக அவலம் வாசிப்பு மனதைத் தைத்து ரணமாக்கிவிடுகிறது. மண்ணுடனும், இயற்கையுடனும் பிணைந்திருந்த நம் தொன்ம வாழ்விலிருந்து விலகும் போது நம் சுவாசப்பாதையில் படியும் அழுக்கைச் சுட்டி அகவிழிப்பை ஏற்படுத்தும் வகையில் நாழி ஓட்டு அடுக்குகளாக காட்சிபெறுகிறது நாவலின் களம். மூதாதையர் வாழ்வின் பொருள்பொதிந்த வாசம் சுமந்து, பதைபதைக்கச் செய்கிறது “வசுதேந்திரா”வின் “சிவப்புக் கிளி” எனும் அழகியல் சாரம் கொண்ட குறியீட்டு நாவல்.

நூல் : “சிவப்புக் கிளி”
கன்னட மூலம் : ‘வசுதேந்திரா’
மலையாளம் வழி தமிழில்: ‘யூமா வாசுகி’
விலை: ரூ.40 /- பக்கங்கள் : 48
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
Web : Tamizhbooks.com

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பெரியார் : ஓர் அறிதல் முறை – சு. பூபாலன்



’பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ”தந்தை பெரியார்” என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல்தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்கமுடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமி-யின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக்கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பாா்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப்போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின் மேற்புரிதலில், வெறும் பரப்புரையாக அரசியல் தளத்தில் மட்டுமே, இன்று விவாதிக்கப்படும் பெரியாரை, அவரது சொற்களை; சிந்தனை தளத்திற்குள் உள்வாங்கி, இன்றைய தலைமுறைகள் எப்படி உரையாடத்துவங்குவது.

தன்மையில்; பெரியாரின் எழுத்துக்கள், சொற்கள் எதுவும் நுண் வாசிப்புத் தேடல் கொண்ட மனிதர்களுக்கானதல்ல. அது ஒரு பெருந்திரளை வாசிக்கச்சொல்லி, அதன் வழியாக சிந்தனைத்தளம் தாண்டிய சமூகச்செயல்பாடாக மாற வேண்டி பயன்விளைவு நோக்கியது. அந்தளவில், பெரியாரின் எழுத்துக்களும் சொற்களும் அவற்றின் மொழிபும், உணர்ச்சித்தளத்தில் செயல்படுவை. ஆங்கில அரசுடனான அத்தனை பொறுமையான உரையாடல்களிலும் இந்திய சமூகம் ஏமாற்றப்படுவதாய் உணர்ந்த காந்தி பேசிய ”வெள்ளையனே வெளியேறு; செய் அல்லது செத்துமடி” என்பதன்ன உணர்ச்சித்தளமது. அங்கு சிந்தனைத்தேடல் கொண்ட எவர்க்கும் தேடியடைய ஒன்றுமில்லை. எனில், எது பெரியாரை நோக்கி நம்மை செலுத்துகிறது.

மானுட வரலாற்றில் முதல்முறையாக, ஒரு மனிதன் தன்னளவில், தன் சமூகவெளிக்குள் தன் சுயத்தை உணர்ந்து கொள்ளாமல் இழிந்து கிடக்கும் நிலைமீட்சிக்கு ”சுயமரியாதை இயக்கம்” (Self Respect Movement) என ஒரு சமூக இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையே, இந்திய நிலப்பரப்பிற்குள் அதுவரை, தத்துவார்த்த தளத்தில் மட்டும் பேசப்பட்டு வந்த தனிமனித ”சுயம்” (Self) என்ற ஓர் உணர்நிலையை; பெருந்திரள் மக்கள் வெளிக்குள் உரையாடும் நிலைக்கு கொண்டுவந்தது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.இங்கு மனிதன் மட்டுமல்ல, எந்தவொரு உயிரும் அதனளவில் தன் சுயத்தை உணராமல் இருக்கையிலேயே சுரண்டப்படுகிறது. தம் சுயம் வெட்டப்படுகையில் ஒவ்வொரு தனிமனிதனும், விலங்கு நிலைகொண்டு, அடிமை ஊழியத்திற்கு தள்ளப்பட்டு சுரண்டப்படுவான். குட்டியாய் கிடக்கையில் காலில் அழுத்திய சங்கிலியில் தன் சிந்தனை வெட்டப்பட்ட யானை ஆயுள் முழுக்க தன் பலமெனும் சுயத்தை மறந்து அடிமையாய்க் கிடக்கும் நிலை.

இப்படியாக சகமனிதனை தன்பிறப்பின் அடிப்படையிலேயே சுயமிழக்கச்செய்வது சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பு. இந்திய நிலப்பரப்பில் ஆன்மீகமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் ’வர்ணாசிரமம்’; உண்மையில், ஓர் அரசியலதிகார கட்டமைப்புக் கோட்பாடு (Authoritarian Political Ideology). எந்தவொரு அதிகாரக்கட்டமைப்பு கோட்பாடும் தன்னளவில், ஒரு தத்துவார்த்த பின்புலத்தை உருவாக்கிக்கொள்ளாமல் நிற்கமுடியாது. ஹிட்லரின் நாசிசம் நின்ற ஆரிய மேட்டிமை பெருமிதம் போன்று, அனைத்து அதிகாரக்கட்டமைப்புக் கோட்பாடும் ஒரு தத்துவார்தத்தைத் தன் இருப்பிற்குக் கட்டமைத்துக்கொள்ளும்.
இந்தப்புரிதலில், வர்ணப்படிநிலை கட்டமைப்பில் தாழ்நிலையில், ஒரு மனிதனை தன்னிலையற்று சுயத்தை அழிக்கச்செய்யும் ஒரு தத்துவார்த்த புள்ளியிலும், அதே புள்ளியில் இந்த அதிகாரக்கட்டமைப்பின் உச்சத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் ஒரு மானுட உயிரின் இயல்சுயம் (Normal Self) மீறிய ஒரு பெருமிதச்சுயத்தை (Superior Self) கட்டமைத்துக் கொண்டிருப்பதிலுமான, இந்த இரு முரண் சுயங்களின் (Contradictive Selves) விளைவிலேயே, இங்கு வர்ணாசிரம் என்ற சமூகச் சுரண்டல் கட்டமைப்பு தாக்குப்பிடிக்கிறது என்பதை உணர்ந்ததில் பெரியார் இந்திய நிலப்பரப்பின் தனித்த சிந்தனையாளராகிறார்.

“ஒரு தீண்டத்தகாதவனாக இருந்து கொண்டு இந்த நாட்டின் அடையமுடியா அனைத்து உயரங்களையும் அடைந்தபின்னும் இந்திய நிலப்பரப்பின் சாதியக்கட்டமைப்பு, என்னை நடுக்கம் கொள்ளச்செய்கிறது. ஏனெனில் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சுரண்டல் சமூக அமைப்புக்களும் ஒரு பௌதீகத்தன்மை கொண்டவை. இந்தியாவின் வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பு எந்த பௌதீக நிலையுமற்ற அரூப மனநிலையாக இருப்பது, அதை நெருங்கி உடைக்கமுடியா பயங்கரத்தன்மை கொண்டதாக இருக்கிறது” என்று தன் இறுதி நாட்களில் அம்பேத்கர் எழுதுகிறார்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.ஆம், வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பின் அந்த அரூப வேர் மனநிலைகளில் ஒன்று, தன் சுயத்தை உணரவே முடியாமல் அமிழ்ந்து கிடக்கும் தாழ்வுணர்ச்சி மனநிலை (Inferior Self) மற்றது தன்னை அதியுன்னதமாக உணர்ந்து நிற்கும் மீயுணர்ச்சி மனநிலை (Imperious Self). இந்த மனநிலைகளை புரிந்துகொள்ளமுடியா அரூபங்கள் என அம்பேத்கர் அஞ்சுகிறார். இல்லை; அவை நெருங்கி உணர்ந்து அடித்து உடைக்கப்படக்கூடிய பௌதீகம் கொண்டவை என கண்டுகொண்டுள்ளார் பெரியார். வர்ணாசிரம சுரண்டலின் வேர்; இந்த இருவேறு துருவத் தன்னிலைகளின் (Contradictive Selves) மனக்கட்டமைப்பு என்பதை பெரியார் சிந்தித்ததாலே அந்த இரண்டையும் உடைக்க வேண்டிய செயற்பாட்டில் இறங்குகிறார். அதற்காக பொதுச்சமூகத்தை திரட்டுகிறார்.

ஒரு பார்ப்பனிய மனம், எதன் வழியாக இந்த மீயுணர்வு சுயத்தை அடைகிறது என்பதை பெரியார் ஆராய்கிறார். அது அவர்களின் வர்ணம் (நிறம்), பொதுவில் அறிந்துகொள்ள முடியாமல் அவர்களுக்குள்ளாகவே புழங்க வைக்கப்பட்டு, பொதுச் சமூக பயன்பாட்டிற்கு சென்று விடமால் பொத்தி வைக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி, வேத உச்சாடங்கள், ஸ்மிருதிகள், புராணகற்பனைகள், அவர்களது பொதுச்சமூகத்திலிருந்து தீண்டாமல் உள்ளடைவு செய்து கொள்ளும் தனித்த வாழ்வியல் செயற்பாடுகள் இதன் வழியாகவே ஒரு பார்ப்பனிய மனம், தன்மீயுணர்வு சுயத்தை அடைந்து தக்கவைத்துக் கொள்கிறது.
மாறாக, பார்ப்பனரல்லா பண்பாட்டு மனங்கள் மேற்சொன்ன அதே கூறுகளை கொண்டு, தங்கள் இயல்வாழ்நிலையின் அன்றாடங்களை, கலைகளை, படைப்புகளை, ஆன்மீக நம்பிக்கைகளை தாழ்ந்தவையாக்கிக்கொள்ளும் உணர்நிலை எய்தி, வீழ்ந்துபட்டு தங்கள் சுயத்தைப் பறிகொடுக்கின்றன.

இந்த மீயூணர்வு (Imperious), தாழ்நிலை (Inferior) என்ற முரண் சுயங்களை (Contradictive Selves), அவற்றை உணர்ந்து கொண்டுள்ள அந்தந்தத் தரப்பின் திரள் மனங்கள்(Collective Conscious) உணராதவரை, இந்திய நிலப்பரப்பின் இந்த வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பை தொடக்கூட முடியாது என பெரியார் கண்டறிந்தாலேயே, அந்த இரு முரண்சுயங்களையும் உடைத்தெரியும் சொற்களை பேசினார், எழுதினார்.

மானுடச் சமூகப் பரிணாமத்தில், ’அடிமைச்சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ’உழைப்புச்சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமரவைத்திலிலே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகரமுடிந்தது. ஆனால், உலக நிலப்பரப்பெங்கும் இந்த அடிமைசமூக முறையில்; உழைப்பை சுரண்டி பயன்படுத்தும், அனுபவிக்கும் சமூகப்படிநிலைகளில் மாற்றங்கள், மேல் கீழ்த்திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தவகையில், ஒரு எளிய புரிதலிலே; இந்திய நிலப்பரப்பின் வர்ணாசிரம அதர்ம வகைப்பாடு என்பது நிரந்தரமாக உழைக்கும், அடிமைத் தொழிலாளர்களை போதுமான அளவில் எப்பொழுதும் குறைவின்றி வைத்திருக்கும் ஒரு சமூக ஏற்பாடு என்பது புரியும். இந்த ஏற்பாட்டின் பயனாளிகள், சந்தேகமே இல்லாமல் இந்த அடுக்கின் மேல் அமர்ந்திருப்பவர்கள்தான். இந்தச்சுரண்டல் அடுக்கடுக்காக பகிரப்பட்டு உச்சத்தில் முழுமையாக உட்கொள்ளப்படுகிறது. அடிமைச் சமூக வகைப்பாட்டு முறையில் இது ஓர் இயல்நிலைதான். ஆனால் இங்கு எது, இந்திய வர்ணாசிரம் சமூக அமைப்பை மிகக் கொடூரமான தாக்குகிறதென்றால்; இந்த சுரண்டலடுக்கின் மேலிருந்து கீழான படிநிலைகள்; சில நூற்றாண்டுகளல்ல, சில ஆயிரமாண்டுகள் எந்தவொரு சிறு அசைவுமின்றி இன்று வரையில் அப்படியே அசைக்கப்படமுடியாமல் தொடர்வதுதான்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.இல்லை, இந்த வர்ணாசிரம அடுக்கின் மேலிருப்பவர்கள் மிகுந்த அறிவு கொண்டவர்கள், ஒரு மரபுத்தொடர்ச்சியான கல்வி கொண்டவர்கள் என்றால்; ஏன், எப்படி… அந்தக் கல்வியும் அறிவும் அவர்களுக்கு மட்டுமானதாக ஆயிரமாண்டுகளாக உள்ளது, என்பதை சிந்திக்கும் எவரும் கேள்வி கேட்க வேண்டும். இல்லை அவர்கள் அதற்கான சூழலை உருவாக்கி தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்றால்; அது எவ்வாறு? அவர்களால் மட்டும் சாத்தியமாகிறது, என்பது கேட்கப்படவேண்டும். இல்லை; ஏன், அவர்கள் அந்த பிழைத்திருத்தலுக்கான அறிவை சமூகம் முழுமைக்கும் பகிர மறுக்கிறார்கள் எனபது உரையாடப்படவேண்டும்.

இங்கு பார்ப்பனியம் என்பது; தமிழக அரசியல் சிந்தனைத் தளத்தில் வெற்று பிராமண எதிர்ப்பு என்பதாக தட்டையாக புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லை; அது ஜெர்மனியின் நாசிசம், இத்தாலியின் பாசிசம் போன்று இந்திய நிலப்பரப்பு தன் மானுட படிமலர்சியில் கண்டறிந்த ஒரு அரசியல் சித்தாந்தம் (Political ideology). ஆம், பார்ப்பனியம் ஒரு மனவியல் கட்டமைப்பு (Psychological Phenomenon), இதன் மனவியல் கூறுகள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என நம் அனைவருக்குள்ளும், இந்திய நிலப்பரப்பின் எல்லா மனங்களுக்குள்ளும் பரவி இருப்பதையும்; அது காலங்காலமாக தன்னைத்தானே படி எடுத்துக் கொள்வதையும் மிகத்தீவிரமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.

ஆம், பார்ப்பனியம் ஒரு அரசியல் கோட்பாடு; அது வெறுமனே பிராமணர்களையோ அல்லது வேறெந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ சார்ந்ததன்று. அது இந்திய முழுமைக்குமான ஒரு சமூக மனநிலை அமைப்பொழுங்காகி கெட்டிப்பட்டுள்ளது, அதை இந்திய நிலப்பரப்பிற்குள் எந்தவொரு தனிமனித நினைப்பாலும் விட்டுவிலகமுடியா தன்மையுடைத்ததாகிவிட்டது. இந்தச் சுரண்டலரசியல் கோட்பாட்டமைப்பை கேள்விக்குள்ளாக்க, விவாதிக்க ஒரு பெருந்திரள் சமூககட்டமைப்பு மனநிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பெருந்திரளை சிந்தனைத்தளத்தில் துளியேனும் சாத்தியப்படுத்தியதே பெரியாரின் வரலாற்றுப்பாத்திரம்.

வர்ணாசிரமம், கேள்விக்குள்ளாக்கப்படுவதில் அதிகம் அஞ்சுபவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சமூகப்படிநிலையின் உச்சப்பங்கு இந்திய வர்ணப்பிரமிடின் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் அவர்களுக்கே சென்று சேருகிறது. அதற்காக இயல்பிலேயே இந்தக் கோட்பாட்டமைப்பை பாதுகாத்து நீட்டித்து தக்கவைக்க, அதிகம் மெனெக்கெட வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்காக அரசியல், சமூகம், ஆன்ம நம்பிக்கைகள், தொழில் துறை பொருளுற்பத்தி என அனைத்து தளத்திலும் கடுமையாக செயல்பட்டு ’பார்பனியம்’ என்ற அரசியல் கோட்பாட்டை காலந்தோறும் மீட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அப்படியே தன்னியல்பில் வர்ண பாகுபாட்டின் அடுத்தடுத்த படிநிலைகளைகளால் கடத்தப்பட்டு சமூகம் முழுமைக்குமாக தக்கவைக்கப்படுகிறது. ”இந்தியாவில் சாதிகள்” என்ற கட்டுரையில், இதை சாதிகளின் போலச்செய்தல் பண்பு (Imitating phenomenon) என்பதாக அம்பேத்கர் விரிவாக ஆராய்கிறார்.
இந்த நூற்றாண்டின் தவிர்க்கமுடியா இந்திய சிந்தனையாளரான காந்தி; வர்ணசிரமம் என்ற ’சுரண்டல் அரசியல்’ எதிர்ப்பை, ஒரு கோட்பாடாக, ’தீண்டாமை ஒழிப்பு’ என வெகுமக்கள் தளத்திற்கு நகர்த்த முயற்சிக்கையிலேயே; காந்தியத்தின் வீரியத்தை உணர்ந்த ஒரு பார்ப்பனிய மனம் காந்தியை பௌதீகமாக அகற்றியது.இந்தப் பார்பனிய கோட்பாட்டமைப்பு எவ்வளவு கொடுமையானதென்றால், அதை மறுத்து வெளியேறும் எந்த தனிமனத்திற்கும் தனித்து இயங்கும் சமூக பாதுகாப்பற்ற நிலையை ஒரு சமூக உளவியலாக ஆக்கிவைத்துள்ளது. இந்த அச்சத்தின் உச்ச விளைவுகளே இன்றும் நிகழும் ஆணவக்கொலைகள். ஆம், இந்திய நிலப்பரப்பில் பார்பனியம் இன்று மிக மிக இறுக்கமான சமூக அரசியல் நிறுவனம் (Socio-political entity). அது தனக்குள் எந்த ஜனநாயக விழுமியத்தையும் (Democratic Belief) அனுமதிப்பதில்லை. இந்த ஜனநாயக மறுப்பே அதை ஒரு அழிவுக்கோட்பாடாக்குகிறது.

ஒரு தனிமனித மனத்தை சுயமிழக்கச்செய்து; தன்னியல்பில் அவனை, விளிம்பு நிலைக்கு தள்ளும் பார்ப்பனிய கோட்பாட்டின் உள்ளார்ந்த பண்பைக் கண்டறிந்த புள்ளியில் பெரியார் மிக முக்கியமான சிந்தனையாளர் ஆகிறார். இந்திய சாதியமைப்பில் வர்ண அடிப்படை, பார்ப்பனர் மேலிருந்து சத்திரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர் என கீழ்நோக்கி விரியும் சமூகப் பிரமீடாக வேத காலம் முதல் விளங்கிக்கொள்ளப்பட்டிருந்த, இந்திய நிலப்பரப்பின் அடிமைச்சமூக வர்ணாசிரம முறைமையை, அதன் இயங்கு நிலையை; அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமே, பார்ப்பனரை வேராக இருத்தி கீழிருந்து அடுக்கடுக்காக பிற வர்ணங்களை மேல்நோக்கி விரித்து சமூக விளிம்பிற்கு தள்ளும் தலைகீழ் பிரமீடாக விளக்கினார்கள். அதனாலேயே; இருவரும் தொடர்ந்து பார்பனியத்தின் மூலவேரான பிராமணர்களை நோக்கி பேசினார்கள், செயல்பட்டார்கள். இதுவே பெரியாரை வெறும் பார்ப்பன வெறுப்பாளர் என்ற தட்டைப்புரிதலுக்கு வழிவகுக்கிறது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

“முட்டாளே, நீ சூத்திரனாம் பாப்பானுக்கு பணிவிடை செய்யனுமாம் உனக்கு அறிவில்லையா, சிந்திச்சு பார்க்கமாட்டியா” என ஒரு பொது மாந்தனை நோக்கி உணர்நிலையில், அவன் சுயம் சார்ந்த கேள்விச் சொற்களில் தாழ்சுயத்தை (Inferior Self) உடைக்க முற்படுகையில்; பார்ப்பனர்களை வந்தொட்டிகள், நீங்கள் நிலமற்றவர்கள் புராணப் பொய்யையும் புரட்டையும் சொல்லி சுரண்டித்தின்பவர்கள், பாவிகள் என்ற சொற்களில் பிராமண மனங்களின் மீயுணர் சுயத்தை (Imperious Self) சிதைக்க முற்படுகிறார் பெரியார். ஏனெனில் இந்த முன் சொன்ன சூத்திர தாழ்சுயமனமூம், பின் சொன்ன பிராமண மீயுணர்மனமுமே சனாதன வர்ணாசிரம் என்ற கோட்பாட்டின் தாங்குநிலைப்புள்ளிகள். இந்த தாங்குநிலைபுள்ளிகள் அசைக்கப்படுகையில் வர்ணாசிரமம் சிதைவுறத்துவங்கும். நவீன இந்திய மனம் தேடும் அனைவருக்குமான அதிகாரப்பரவலாக்க சமூக ஜனநாயகம் (Social Democracy) இந்திய நிலப்பரப்பில் செயல்படத்துவங்கும்.
மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (Pontifex Class) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத்துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம்.

இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல அனைத்து உயிர்களுக்குமான அச்சம். இதன் ஆழ்நிலை என்பது தன் பௌதீக இருப்பு குறித்த இயற்கை மீதான அச்சம். இந்த அச்சத்தை அதிகாரக்கைப்பற்றலுக்கு பயன்படுத்தும் தன்மையை எல்லா உயிரின சமூகங்களுக்குள்ளும் காணமுடியும். ஆனால் அதை ஒரு முறைப்படுத்திய தன்மையில் தீவிர நடைமுறையாக்கி அதிகாரக்கைப்பற்றலுக்குப் பயன்படுத்தியது, மனிதசமூகம் மட்டுமே. வேட்டைச்சமூகத்தில், அச்சம் மறுத்து இருள்குகைக்குள் சென்று திரும்பிய ஒரு மனிதனின் பௌதீக இருப்பு, அவனை; அந்தச் சமூகத்தின் மேம்பட்ட உயிரியாக்கி வணங்கத்துவங்கியதில் தோன்றியது புரோகித வர்க்கம் (Pontifex Class). இந்த வர்க்கம் வரலாறு நெடுகிலும், இந்த அச்சத்தை தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து தன் சமூக அதிகாரத்தை தக்க வைக்கிறது. இது மானுடகுலம் முழுமைக்குமான பொதுமைத்தன்மையானாலும். உலகம் முழுதும் காலம் நெடுகிலும், இந்த புரோகித வர்க்க அதிகார கைப்பற்றல் மாறிக்கொண்டே வந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஒரு பெரிய பரந்துபட்ட புரோகித வர்க்க சமூக அதிகாரக்க கைப்பற்றல் என்பது என்றும் மாறாத்தன்மை கொண்டதான ஒரு சிறப்பு (Peculiar) பண்பைக் கொண்டதாக உள்ளது. இதுவே மானுடவியல் நோக்கில் ஆய்வுக்குள்ளாக்க வேண்டிய மிக தீவிரமான பகுதி.

இந்திய நிலப்பரப்பின் இந்தப்புரோகித சமூக அதிகாரத்தின் மாறாத்தன்மையை சிந்தித்ததில் பெரியார் கவனிக்கப்பட வேண்டியவர். இந்த மாறாத்தன்மையை ஒரு குழப்பமாக அஞ்சாமல் அதன் உடைவு நோக்கி பேசியதில் அவர் ஒரு தெளிந்த சிந்திப்புக்கொண்ட செயற்பாட்டாளராகிறார்.

இங்கு, பார்ப்பனியம் என்பது தன்னை (Self) விட பிற (other) அனைத்தையும் மறுத்து தாழ்வாக்கி பிறனின் பௌதீக இருத்தலையே தீமை என்பதாக்கி சுரண்டி அழிக்கப்பட வேண்டியது என தானும் உணர்ந்து கொண்டு, சுற்றி இருக்கும் அனைத்து மனங்களையும் அதை நோக்கி இழுத்து சமூகம் முழுமைக்கும் எப்பொழுதும் ஒரு வெறுப்பை, ஏற்றதாழ்வை தக்கவைத்துக்கொள்ளும் பேரழிவு சிந்தாந்தம் (Destructive Ideology). இது அதிகம், இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களுக்குள் திணிக்கப்படுவது புரோகிதம் வழியான பக்தி உணர்ச்சி வழியாகவே.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.ஒரு நாடு, அந்த நாட்டை ஆளும் அதிகாரவர்க்கம், தனக்கான தேசிய குடிமக்களை உருவாக்க சில உணர்ச்சிகர தளங்களை உருவாக்கி அதை ஒரு இயல்வாழ்வியல் நடைமுறையாக்கி, அறியாமலே தனித்த மனங்களை கட்டுப்படுத்தி; தன் தேவைக்கேற்ப பயன்படுத்தத் துவங்கும். உதாரணம் எல்லா நாடுகளிலும் பள்ளிக்குழந்தை மனங்களில் தேசியகீதம் பாடுவதை ஒரு நடைமுறையாக்கி; தேசியம் (Nationality) மீதான நம்பிக்கை விதைத்து அந்த இளம்மனத்தை அது உணரலாமே உணர்ச்சியால் கட்டமைத்து நன்மையாகவோ தீமையாகவோ பயன்படுத்திக் கொள்வது (இந்திய தேசிய உணர்ச்சியின் நன்மை, நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் நிகழ்ந்த போராட்டங்கள், அதே உணர்ச்சி யின் தீமைப்பயன்பாடு அதே தேசிய உணர்ச்சிவழி ஹிந்து ராஜ்யா என முழங்கியபடி தனி மனிதர்களை தீயிட்டு கொளுத்துவது).

“இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களை கட்டமைக்கும் இயல்பை; எந்தச்சலனமுமற்று சமூக அமைப்பின் அடிப்படை அலகான குடும்பத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களாலே கட்டமைக்கும் வழியை உருவாக்கிக் கொணடதிலேயே பார்ப்பனியம் இந்த மண்ணில் இன்றும் நீடிக்கிறது. ஆம், உயர்குடி என்று தங்களை நம்பிக்கொண்டிருக்கும் பிராமணர்கள் உருவாக்கும் வழிபாட்டு நடைமுறைகள் இந்திய நிலப்பரப்பின் பெருவாரி குடும்பங்களுக்குள்; உயர்வானதாக நம்பவைக்கப்படுவதில் ஒரு குழந்தையின் மனதிற்குள் பார்ப்பனியம் என்ற மனவியல் கட்டமைப்பு அதன் அரூபத்தன்மையில் விதைக்கப்படுகிறது. பிராமண வழிபாட்டு நடைமுறையில் இருக்கும் ஆடம்பர அழகியலை (Luxurious Aesthetics) உள்ளேற்றிக்கொள்ளும் ஒரு குழந்தை இயல்பிலே ஆடம்பரமற்ற எளிய இயற்கையின்பாற்பட்ட பண்பாட்டு வழிபாடுகளை ஏற்கும் உற்சாகமற்று, அதை தாழ்வுற்றதாய் நம்பிக்கொள்கிறது. இதிலிருந்து ஒரு இந்தியக் குழந்தையின் மனத்தில் மேல், கீழ் உருவாக்கப்பட்டு தன்னிலிருந்து பிறனை (Other) விலக்கும் தீண்டாமையை இயல்பாக்கிக்கொள்கிறது. இந்தக் குழந்தை மனம் முதிர முதிர இன்னும் சரிசெய்ய முடியாததாகி ஆதிக்கப்பெருமிதம் கொண்டு குற்ற உணர்வற்று பிறனை சுரண்டுதல் என்பதாக; அப்படியே அடுத்த தளத்தில் விரிந்து, ஒரு சமூக கட்டமைப்பாகி ஒரு மனிதன் தன் சக மனிதனிடம், ஓர் ஆண் ஒரு பெண்ணிடம், ஒரு சாதி இன்னொரு சாதியிடம் என எங்கும் அதிகாரம் பரவலாகும் சம உரிமை என்னும் சாத்தியப்பாட்டை இல்லாமல் ஆக்கி படிநிலை சமமின்மை (Graded inequality) மனநிலையாக விரிகிறது. இதை வர்ணாசிரமம், ஒரு தனிமனித குழந்தை மனம் உருவாக்க அடித்தளத்திலிருந்து செயல்படும் சிந்தனை அமைப்பாக (School of Thought) போலியான குடும்ப ஆன்மிக வழிபாட்டு நம்பிக்கை வழி உருவாக்கி வைத்துள்ளது. இதுவே இன்றும், சாதியத்தை இந்திய நிலப்பரப்பிற்குள் தக்கவைத்துக் கொண்டிருகிறது. இந்த சிந்தனை முறைமையை (School of Thought) உடைக்கவே; பெரியார், கடவுள் வழிபாட்டு மறுப்பை கையிலெடுக்கிறார்.

இங்கு மனிதமனங்கள் பாகுபடுத்தப்படுவது பெரிய சுரண்டல் அடிமை வணிகம் (Slavery trade). இதற்காகவே, இங்கு இத்தனை சாதிப்பிரிவுகள், மேல் கீழ் மனநிலை உருவாக்கம் என கண்டறிந்ததோடு; மானுடத்தின் சரிபாதி தொகையில் இருந்துகொண்டு, மேற்சொன்ன எந்த படிநிலைகளுக்குள்ளும் வராமால் உலகின் அனைத்து படிநிலைகளுக்கும் கீழாய் தாழ்வுற்று நிறுத்தப்பட்டிருக்கும் பெண்களின் மனநிலையை தட்டி எழச்சொல்லி, இன்னும் உரக்கப்பேசி எழுதியதாலே பெரியார், ஒரு சமூகவியலறிஞராகிறார்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

தீவாய்ப்பாக, வெறும் அரசியல் பரப்புரை கருத்துருவமாக மட்டுமே ஏற்பவர் மறுப்பவர் என இருதரப்பாலும், பெரியார்; இங்கு உள்வாங்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியச் சிந்தனை மரபில் இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்க முடியா கண்ணி பெரியார். கருப்புச்சட்டையோடும் புரளும் வெண்தாடியோடும் பெரியார் என இன்று அமர்ந்திருக்கும் அந்த உருவம் நிகர்மைச்சமூகம் (Socialistic Society) என்ற அரசியல் கருத்துருவின் இந்திய வடிவம். மானுடசமத்துவத்தையும், சமூகம் முழுமைக்குமான அதிகாரப்பரவலாக்கத்தையும் ஏற்கொள்ளும் பக்குவமற்று தான் மட்டும், தான்சார்ந்தமட்டுமென வேட்டைச் சமூக நிலையிலேயே நின்றுவிட்ட மனங்களை உள்ளூர தொந்தரவுசெய்து உரையாட அழைக்கும் பெருங்கருத்துருவம் பெரியார்.

சக மனிதனை தனக்கு இணையாக இருத்தமுடியாத, சமூகக் கீழ்மையை புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்த பொது மன வெளிக்குள்; அந்தக்கீழ்மை நோக்கிய சிந்தனை துளியேனும் தோன்றியதற்கு காரணமான பெரியாரின் சமரசமற்ற சமூகச்செயற்பாடுகள் இந்தியச்சமூக வரலாற்றில் மிகப்பெரும் சாதனை. இந்தப்புள்ளியில் பெரியார், சகமனிதனை தனக்கு இணையாக எண்ணும் அனைத்து மனங்களுக்கும், ஓர் ஆற்றலூட்டும் சிந்தனை.

இங்கு, புனிதப்படுத்தப்படும் எதுவும் ஒரு நிலையில் தேங்கிப்போய் அதிகாரகுவிப்பாகி வன்முறை சுரண்டலாக மாறிப்போகும். இது அனைத்து சிந்தனைகளுக்கும் காலப்போக்கில் நிகழும் சிக்கல். ஆனால், எந்த நிலையிலும் ஏற்பவரோ மறுப்பவரோ பெரியாரை, அவரது கருத்துக்களை தத்துவப்படுத்த முடியாது. ஏனெனில் பெரியாரும் அவரது கருத்துக்குகளும் தன்னியல்பில் உள்ளூர புனிதப்படுத்துதலுக்கு எதிரானவர்கள். இந்தப்பண்பே ஒரு பாய்ம நிலையில் பெரியாரை எங்கும் தேக்கமுறா தன்மையில் நீட்டித்து உரையாடவைக்கிறது.

ஏறக்குறைய காந்தியும், பெரியாரும் ஒரே காலத்தில் சமூக அரசியலுக்குள் நுழைந்தவர்கள். சற்று ஆழ்ந்து யோசிக்கையில் காந்தியும் பெரியாரும் ஒற்றைச் சமூக இலக்கை நோக்கி இரு எதிரீட்டு வழிமுறைகளில் பயணித்த ஆளுமைகள். ஆம், காந்தி ஆழமான தனிமனித ஆன்மீக தேடல் வழியான சமூகம் பண்படும் ஒரு விடுதலை என்பதாக தனிமனித தன்னகவிழிப்பு நோக்கில் சிந்திக்கிறார். பெரியாரும் அதே தனிமனித சுயம் என்ற அகவிழிப்பின் வழியான சமூக மாற்றத்தை பேசுகிறார். காந்தி ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாகும் சமூகத்தை கனவு செய்கிறார். இது ஏறக்குறைய நீட்ஷேவின் அதி மனிதன் என்ற கனவிற்கு ஒப்பானது. பெரியார் அதே போன்றதொரு உன்னத சமூகத்தை ஒரு மனிதன் எளிமையாக தன் சுயத்தை உணரும் இயல்மனித நிலையிலே எட்டிவிடும் சாத்தியங்களை பேசுகிறார். இன்னும் அடுத்த நிலையில் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றில் மார்க்ஸிய இயக்கங்களும், காந்திய இயக்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமுமே பெருந்திரளாய் எளிய மனிதர்களை, குறிப்பாக பெண்களை தங்கள் குடும்ப வேலிதாண்டிய பொதுவெளிக்குள் கொணர்ந்து அரசியல்மயப்படுத்திய சமூக இயக்கங்கள். மேற்சொன்ன, அந்த அதிமனிதர்களின் தொகை குறையும்போது காந்திய அரசியல் அமைப்புக்கள் தளர்ந்து சிதைவுறத்துவங்குகிறது. இயல்மனிதர்களை கொண்டியங்கும் தன்மை கொண்டதாலே மார்க்ஸிய, பெரியாரிய அரசியல் அமைப்புக்கள் எப்போதும் எளிய மனிதர்களை கொண்டு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டுதாயுள்ளது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இன்னும் ஆழ்ந்து நோக்குகையில் காந்தியம் விழையும் அதிமனித சமூகத்தை அடையும் எளிய பாதையாக பெரியாரியம் வாய்ப்புக்கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் உற்பத்தியில்,கல்வியில் அதிகாரப்பகிர்வில் அனைவருக்கு சமவாய்ப்பு எட்டப்படும் போது, அதன் உறுப்புகளான தனிமனிதர்கள் சுயத்தை உணர்ந்து கேள்விகேட்டு ஒரு உளநிறைவை எட்டி அதிமனித ஆன்ம நிலைநோக்கி இயல்பில் நகர்வார்கள். கடந்த நூற்றாண்டில் இந்த அதிகாரப்பரவலாக்கத்தின் கணிசமான பகுதியை பெரியாரிய சிந்தனைப்பின்னணிகொண்ட திராவிட இயக்க அரசுகள் தமிழகத்தில் சாத்தியப்படுத்தியுள்ளன. இதன் வழி சமூகம் முழுமைக்குமான கல்வி பரவலாகியதன் அடுத்த நகர்வாக தமிழகத்தின் ஒவ்வொரு சாதிய குழுக்களும் தமக்கான உரிமைகளை தாம் வாழும் இந்த நிலப்பரப்பின் உற்பத்தி, கல்வி, அரசதிகாரம் என அனைத்திற்குள்ளும் கோரத்துவங்கியிருப்பது பெரும் சாதனை. தற்காலநிலையின், சில துவக்ககால குழப்பங்களை கடந்து அனைத்திலும் அதிகாரம் பகிரப்பட்ட உளநிறைவு கொண்ட ஒரு ஆன்மமான காந்திய சிந்தனை சமூகத்தை, ஒரு வளர்நிலையில் இந்தப்போக்கு சாத்தியப்படுத்தும். ஏனெனில், படிநிலை சமூக அமைப்புநிலையே குற்றமனநிலை உருவாக்கத்தின் மூலம். இந்த படிநிலை சமூக அமைப்பு வீழ்கையில் குற்ற மனநிலைகள் தோன்றும் வாய்ப்புத்தேவைகள் குறைந்து காந்தியம் காண விழையும் அதிமனிதர்கள் சாத்தியமாவார்கள். இதை பெரியாரியம் நடைமுறையில் தமிழ்நிலப்பரப்பில் சாத்தியப்படுத்தும் பாதைகளை நிரூபித்துள்ளது.

என்றும் நமக்கு, காந்தியிடம் உரையாட ஒரு சாத்வீகமான ஒழுங்குடைய மனம் வேண்டும். அம்பேத்கருடன் உரையாட ஒரு தெளிந்த கற்றல் வேண்டும். மார்ஸுடனும் புத்தருடனும் உரையாட ஒரு தத்துவார்த்த சிந்திப்பு என்ற தகுதி வேண்டும். மேற்சொன்ன எந்த தகுதிப்பாடுமின்றி எளிய வெள்ளந்தியோடு, எவரும் பெரியாருடன் உரையாடி அவருடன் முரண்பட்டு, உடன்பட்டு தெளிவு கொள்ளமுடியும் என்பதாலே பெரியார்; இந்திய நிலப்பரப்பின் தனித்துவ சிந்தனையாளர் ஆகிறார்.

ஆம், பெரியார்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற பேரறத்தை தன் சித்தாந்த ஆன்மமாக போதிக்கிறார். அதை வாழ்வியலாக்கும் சிந்தனைக் கட்டமைப்பை (School of Thought) உருவாக்கச்சொல்லி நம்மை தூண்டுகிறார். பெரியாரின் வழியில் நம் கனவு, இந்த நிலப்பரப்பின் மனிதர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளித்து பேரன்பு கொண்டியங்கும் ஒரு நிகர்மைச் சமூகம்.

——————————–
சு.பூபாலன்
மணல்மகுடி நாடக நிலம்
boobalantgs@gmail.com

Prof. Ka. Ganesan's Ellorukumanavare Book Review by Theni Sundar. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam.

இல்லந்தோறும்.. உள்ளந்தோறும்.. நாள்தோறும் அம்பேத்கர்..! – தேனி சுந்தர்

தேசமே கார்பரேட் மயமாகும் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் அவரவர் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க போராடியாக வேண்டியிருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் நிறுவன ஊழியர்கள் தங்கள் தீராத பிரச்சனைகளுக்காக வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தகைய வேலை நிறுத்தங்களை…
Sanganatham Speech by Comrade N. Sankaraiah at government employees seminar Collected By Sa. Veeramani

அரசு ஊழியர்கள் கருத்தரங்கத்தில் தோழர் என்.சங்கரய்யா ஆற்றிய சங்கநாதம்

(தேச ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவுகுறித்து தோழர் என். சங்கரய்யா, 1991 ஏப்ரல் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலக் கருத்தரங்கில் ஆற்றிய சங்கநாதம்.) தொகுப்பு: ச.வீரமணி தோழர்களே, இன்றைய தினம் அகில…