வற்றிய சுனைகளின்
நீர்த் தடம் தேடியே
நோட்டமிடும் கால்கள்..
ஓடும் கால்களை
ஒடுக்கி அணைத்து
முத்தமிடும் சுடுமணற்பாங்கு..
முத்தத்தால் வெம்பி
பொத்தலான பாதங்களை
வலிய வந்து இழுத்து தைத்திடும்
சப்பாத்திக் கள்ளி முற்கள்..
முன்னங்கால் முற்கீறலின்
குருதியோட்டத்தை
எச்சில் கலந்த மணலால்
மருத்துவம் செய்ய
எந்த இயேசு கிறிஸ்துவும்
இவனுகில்லை…
நொண்டி நொடிந்து
கிடந்தவனுக்கு நிழல்
தந்ததன் தனிமை
போக்கிக் கொண்டதோர்
இலுப்பை மரம்…
பாழுடலை படுக்கைக் கிடத்தி
விட்டத்தை நோக்கியதில்
கண்ணை இறுக்கப் பொசுக்கிக்
கூசினான் செங்கதிரோன்..
முட்டமூடிய விழிகளில்,
வலுவிழ செந்நாய் போல்
ஊடலாடும் இவனுக்காய்,
கொற்றவை நோன்புறும்
தலைவியின் நினைப்பு..
நீரற்ற வறள் நாவுகளில்
அவள் நினைப்பு இழைத்தது
இளந்தென்னை நீரின் சுவை..
அவளோ
காக்கையுடன் போட்டியிடும்
கரிய தேகம்..
நீர்ப் பாய்ச்சல் அறியாமல்
வெடிப்புற்று தகடு தகடான
உதடுகள்..
அள்ளி முடியாத அலங்கோல
தேங்காய் நார்க் கூந்தல்
இவன் மட்டும் அதற்கெல்லாம்
சலைத்தவனில்லை..
கோரைப் புற்களை
ஒத்த செம்பட்டைக்
குறுமயிர்கள்…
கோணலாய் வார்த்தெடுத்த
அவரிசைப்பற்கள்..
சதையொன்றறியா கட்டுடல்…
இவர்களின் களவுக் கூடல்களில்
கன்னத்தில் பூத்திருந்தது
பாலைவன பூக்கள்…
கூடலில் பூத்த பூ
ஊடலில் சிவந்து உயிர்த்து
ஊராரை விழிக்கிறது..
நீர்த் தேடி போனவனெங்கே..
நீர் போன பின் இவள்
கண்ணடைவதெங்கே…
ஈரம் காய்ந்த
இதழ்களோடு
காத்திருக்கிறாள்..
பாலையில் பூத்த பூ
வாடாது போகுமோ…
மாலை வரும்முன் அவன்
வருகையும் அறியுமோ..??
— ஸ்ரீதர் காமாட்சி