பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 16: சென்னை சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான்  | 1960s Chennai Public Transport And Its Evolution Article | T.N.Seshan Vision | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 16: சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான் – ராமச்சந்திர வைத்தியநாத்

சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான் 

பழைய பஞ்சாங்கம் – 16

– ராமச்சந்திர வைத்தியநாத்

1960களில் சென்னையின் மக்கள் தொகை 23 லட்சத்துக்கும் சற்று குறைவானதுதான். பத்து சட்ட மன்றத் தொகுதிகளையும், கிட்டத்தட்ட நூறு முனிசிபாலிடி வார்டுகளையும் கொண்டதாக இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையின் முக்கிய வீதிகளில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டிராம்வே 1953ல் முடிவுக்கு வந்தது. மேலும் ஓரளவு நகரப் பேருந்துகள் 1948ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னணியில் டிராம்வே முடிவுக்கு வந்ததினால் பொதுப் போக்குவரத்து விரிவடைந்தது.

இதைத்தவிர சென்னை – திருவள்ளூர், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – தாம்பரம் புறநகர் ரயில் போக்குவரத்தும் விரிவாகவே இருந்து வந்திருக்கிறது. இக்கட்டமைப்பு அடிப்படையிலேயே இருந்து வந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவைக்கேற்ப பெருத்த மாறுதல்களை கொள்ளத் தவறியிருக்கிறது.

சென்னை நகர பஸ்களின் வழித்தட எண்கள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டமையாக இருந்தமையால் வெகு ஜனங்களுக்கு மார்க்கத்தைக் காட்டிலும் எண்கள் பரிச்சயமானதாகவே இருந்தன. பாரிமுனையிலிருந்து மயிலையை இணைக்கும் (1), திருவல்லிக்கேணியை இணைக்கும் (11) தி.நகரை இணைக்கும் (10) வில்லிவாக்கத்தை வெவ்வேறு மார்க்கங்களில் இணைக்கும் ( 7 B மற்றும் 20) மந்தவெளியை இணைக்கும் (21) பெரம்பூரிலிருந்து மயிலையை இணைக்கும் (29 சி) வழித்தடங்களில் எப்போதுமே திருவிழாக் கூட்டமாக இருப்பதை அறுபதுகளில் கண்டதுண்டு.

ஏற்கனவே சென்னை நகரின் குறுக்கே நுங்கம்பாக்கம் ஏரி, மயிலாப்பூர் ஏரி எனும் இரண்டு ஏரிகள் விஸ்தீரணம் கொண்ட பரப்பில் இருந்து வந்தது. பல்வேறு ஐரோப்பிய நகரங்களின் குறுக்கே ஓடும் நதிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. தவிர இவை நகரின் எழிலைப் போற்றி பாதுகாக்கவும் செய்கின்றன.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 16: சென்னை சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான்  | 1960s Chennai Public Transport And Its Evolution Article | T.N.Seshan Vision | www.bookday.in

இது பற்றிய முன்யோசனையோ அல்லது அனுபவ அறிவோ இல்லாத அதிகார வர்க்கம் இவ்விரு ஏரிகளை மேடடித்து விட்டு இன்றைய தினம் கண்டிகை, கோவளம் என்று புதிய பகுதிகளில் நீர் நிலைகளை உருவாக்கிட பெருஞ்செலவில் திட்டம் தீட்டுவதில் குறியாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலகமயம் உச்சநிலை பெற்றதும் பொதுச்சேவைகள் மட்டுமின்றி அதன் கட்டமைப்பும் தலைகீழாய் மாறிவிட்டன. நகரப் பேருந்து சேவை மட்டுமின்றி தொலை தூர சேவைகளும் மின் உற்பத்தி வினியோகமும் “பாடையும் பொணமுமாய்” இருக்கும் நிலைக்கு கொள்கைகளை வகுப்போரால் தள்ளப்பட்டு விட்டன.

இப்பின்னணியில் 1964ல் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய டி.என்.சேஷன் அவர்களின் உரையை கவனிக்க வேண்டியுள்ளது. நாள்தோறும் அரசுப் பேருந்துகள் ஏழாயிரம் பேரை ஏற்றிச் செல்வதாகவும் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை மூவாயிரமாக இருந்தது என்றும் கூறியதோடு நிற்காமல் நாளாவட்டத்தில் இப்பிரச்சனை சிக்கலாகும் எனவே சுரங்க ரயில் பற்றி யோசிக்க வேண்டும் என்று கருத்துரைத்தது வியப்பளிக்கிறது.

மேலை நாடுகளின் வளர்ச்சிப் பாதையை கூர்ந்து கவனிப்பவராக மட்டுமின்றி சுயேச்சையான செயல்பாடுகளையும் திட்டமிடக்கூடியவராக இருந்திருப்பதை அவரது பிந்திய தேர்தல் ஆணையகச் செயல்பாடுகள் வெளிப்படுத்தியது. தவிர கூட்ட நடவடிக்கைகள் பற்றி சளைக்காமல் அலசி ஆராய்ந்து முழுமையான தயாரிப்புடன் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு எல்லாக் கோணங்களிலும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் அபார ஆற்றல் கொண்டு விஞ்ஞானிகளின் மனங்களை கிளறிவிடக்கூடியவர் என்று அப்துல் கலாம் அவர்களும் தனது சுய சரிதையில் சேஷன் குறித்து கருத்துரைத்துள்ளார்.

தவிர தலைநகர் டில்லியிலேயே மெட்ரோ போக்குவரத்து பற்றிய கருத்து அறுபதுகளின் பிற்பகுதியில் உருவாகி அதன் அடிப்படையில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் துவங்கியது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாது தொலை நோக்குப் பார்வையுடன் அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும்விதத்தில் செயல்படக்கூடிய அதிகார இயந்திரத்தின் தேவை உணரப்படுகையில் சேஷனைப் போன்றோரை நினைவு கொள்வது தவிர்க்க முடியாது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *