எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
பழைய பஞ்சாங்கம் – 17
– ராமச்சந்திர வைத்தியநாத்
1894லேயே சென்னை நகரில் பஞ்சமருக்கான பிரத்யேகப் பள்ளிகளை பிரம்ம ஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் துவக்கியிருக்கிறார். உணவுப் பற்றாக்குறையின் காரணமாக ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவ மாணவியர் பலவீனமாயிருப்பதாலும், அவர்களைப் பள்ளிகளுக்கு வர அனுமதிப்பதில் பெற்றோர்கள் பெருந்தியாகம் செய்கிறார்கள் என்பதாலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறிதளவு அரிசியையும் வழங்கி வந்திருக்கிறார். இந்தியாவில் கற்போருக்கு சமைத்த உணவு அளிக்கப்படுவதற்கான முதலும் முன்னோடியுமான திட்டம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.
இதன் பின்னரே 1906ல் மதராஸ் மாநகராட்சியின் முதலாவது பஞ்சமர் பள்ளி துவக்கப்பட்டது. படிப்படியாக இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி பயில்வோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கவிதத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. இது மட்டுமின்றி இலவச கட்டாயக் கல்வியையும் 1924ல் சோதனை முயற்சியாக ஒரு சில டிவிஷன்களில் அறிமுகம் செய்து பின்னர் அனைத்து டிவிஷன்களிலும் விரிவு படத்தியிருக்கிறது.
இதே போன்றுதான் மதிய உணவுத் திட்டமும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 1930-31 கல்வியாண்டில் அமல்படுத்தும் வகையில் ரூ 2500 பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வி என்பது ஒரு பிரிவினருக்கே உரியது என்ற நிலையில் மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த தருணத்தில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடன்றி ஏற்கனவே எவ்வித வேறுபாடின்றி அனைவரும் கல்வி பயில வாய்ப்புகள் இருந்து வந்தன என்ற கட்டுக்கதைகளையும் இவை தகர்ப்பதாக அமைந்தன.
நாடு விடுதலை பெறுவதற்கு முந்திய 1946-47ல் மதராஸ் மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 173 ஆகவும் அங்கே பயில்வோர் எண்ணிக்கை 30,206 சிறுவர்கள் 21,486 சிறுமிகள் என்ற அளவிலும் இருந்திருக்கிறது. அன்றைய தினம் நகரின் மக்கள் தொகை என்பது ஏறக்குறைய பத்து லட்சம் என்ற அளவில்தான் இருந்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் 1941ல் வந்த செய்தி ஆச்சரியமான தகவலை அளிக்கிறது. கார்ப்பரேஷன் பள்ளிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட பிரிவு குழந்தைகளுக்கு இலவச சிலேட் வழங்கும் பொருட்டு அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. முதலில் சிலேட்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்தாலும் சிலேட்டில் எழுதக்கூடிய பலப்பம் எனும் சிலேட்டுக் குச்சியை கணக்கில் கொள்ளவில்லை. பின்னரே அதற்கும் சேர்த்து ரூ 400 ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் லாப் டாப்பே இலவசமாக தரும்போது அன்னாளில் சிலேட்டும் பலப்பமும் இலவசமாக அளித்து வந்திருப்பதை பெரிய விஷயமாக நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் உள்ள அன்றைய சமூக அரசியல் பின்னணியை உள் வாங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
