பழைய பஞ்சாங்கம் – 18: ரிப்பன் மாளிகையில் ஷைலக்குகள் – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 18: ரிப்பன் மாளிகையில் ஷைலக்குகள் – ராமச்சந்திர வைத்தியநாத்

ரிப்பன் மாளிகையில் ஷைலக்குகள்

பழைய பஞ்சாங்கம் – 18

– ராமச்சந்திர வைத்தியநாத்

மதராஸ் பட்டணத்தை நிர்வகிக்கும் விதமாக 1688ல் உருவாக்கப்பட்ட மதராஸ் முனிசிபாலிட்டி துவக்க காலங்களில் பிராட்வே பகுதியிலுள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் செயல்பட்டு வந்திருக்கிறது. 1900ன் துவக்கத்தில்தான் ரிப்பன் பில்டிங்கிற்கு இடம் பெயர்ந்திருக்கிறது. 1867ல் எட்டு வார்டுகளையும், 1919ல் 30 வார்டுகளையும், 1936ல் நாற்பது வார்டுகளையும், 1947ல் ஐம்பது வார்டுகளையும், 1959ல் நூறு வார்டுகளையும், இன்றைய தினம் 200 வார்டுகளையும் கொண்டிருப்பதோடு பெருநகர சென்னை மாநகராட்சி என்ற நாமதேயத்தையும் பூண்டிருக்கிறது.

நாளை இந்த வார்டுகளின் எண்ணிக்கை நானூறாகக்கூட அதிகரிக்கலாம். அதே நேரத்தில் நகர்க்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்கள் என்பது வளர்ச்சிப் போக்கில் மக்கள் தொகையில் அடிப்படையில் அதிகரிப்பது என்பது தவிர்க்க முடியாததாகிறது. ஆயின் இதர நிர்வாகச் செலவினைங்களை சீரமைப்பது குறித்து எவ்வித அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை கடந்த காலத்தில் இது மேற்கொண்டதாகவோ இல்லை அமல்படுத்தியதாகவோ தெரியவில்லை. மேலும் வெளிப்படையான நிர்வாகச் சூழலும் இருப்பதில்லை. இதனால் ஊழலும் அதிகாரச் சீர்கேடும் ரிப்பன் மாளிகையோடு ஒட்டிப் பிறந்ததாகவே இருந்து வருகிறது. சென்ற நூற்றாண்டின் மஸ்டர் ரோல் ஊழல் என்பது இதன் ஒரு பகுதிதான்.

இதைச்சரிக்கட்டவோ என்னவோ நகர மக்கள் மீதான வரிச்சுமையை அவ்வப்போது உயர்த்தி வருவதை மாநகராட்சி நிர்வாகம் வாடிக்கையாகவே கொண்டு வருகிறது. 1896லேயே வீட்டுவரிவந்து வாசக்கால்தூக்குது / வியாபாரவரிவந்து சாமானைவளைக்குது/ குப்பைவரிவந்து குடிசையைப் பிடுங்குது / கொளுத்தும் விளக்குவரி கழுத்தைப்பிடிக்குது என்று குஜிலி கவிஞர் சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

கெட்டும் பட்டணம் சேர்வது என்பதே பிழைப்புக்காகத்தான். ஆயின் இங்கே அதற்கும் தண்டத் தீர்வை விதிக்கப்படுகிறது. 1940களில் சிட்டி முனிசிபல் ஆக்ட் திருத்தப்பட்டு தொழில் வழி அமலாக்கம் துவங்கியிருக்கிறது. அன்றைய தினம் எட்டு விதமாக அது வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. (

1) மாத வருவாய் ரூ 100க்கு மேல் 200 வரை அரையாண்டு வரி ரூ 1.

(2) மாத வருவாய் ரூ 200க்கு மேல் 300 வரை அரையாண்டு வரி ரூ 2.

(3) ரூ 300க்கு மேல் 500 வரை அரையாண்டு வரி ரூ 3.

(4) மாத வருவாய் ரூ 500க்கு மேல் 700 வரை அரையாண்டு வரி ரூ 6.

(5) மாத வருவாய் ரூ 700க்கு மேல் 1000 வரை அரையாண்டு வரி ரூ 9.

(6) மாத வருவாய் ரூ 1000க்கு மேல் 1300 வரை அரையாண்டு வரி ரூ 13.

(7) மாத வருவாய் 1300க்கு மேல் ரூ 1600 வரை அரையாண்டு வரி ரூ 18.

(8) ரூ 1600க்கு மேற்பட்டோருக்கு அரையாண்டு வரி ரூ 25.

பின்னாளில் இது படிப்படியாக உயர்ந்து வந்திருக்கிறது. இன்றைய தினம் இது ஐந்தாக வகைப்படுத்தப்பட்டு மாதம் ரூ 3,500 என்ற அளவில் கூலியைப் பெறும் ஒருவரிடம் மாநகராட்சி அரையாண்டிற்கு ரூ 180ஐ வரியாக பறித்துக் கொள்கிறது. அடிமட்டத்தில் உள்ள மிகமிகக் குறைவான வருவாய் உள்ளவர்களைக்கூட எப்படி மாநகராட்சி பிழிந்து வருகிறது என்பதற்கு இந்த தொழில் வரியே எடுத்துக் காட்டாகும். இவ்வாறுதான் சொத்து வரி விதிப்பு முறையும் இருந்து வருகிறது.

நம்மைப்போன்றவர்களிடம்தான் பெருநகர சென்னை மாநகராட்சியின் “ஜகடு மாத்து” வேலைகள் எடுபடும்போல் இருக்கிறது. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், மாகாணத்தில் இரு முறை முதலமைச்சராகவும் இருந்த சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகையில் அவரிடம் தொழில் வழி செலுத்தும்படி மாநகராட்சி கோரியிருக்கிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி அவர் நீதிமன்றத்தை அணுகிய செய்தியில் தொழில் வரி என்பது தொழில் செய்வோருக்கு மட்டுமல்ல ஓய்வூதியம் பெறுவோருக்கும் பொருந்தும் என்ற மாநகராட்சியின் வாதத்தை அறிய முடிகிறது. கவர்னர் ஜெனரல் ஓய்வூதியத்தை காட்டி தொழில் வழி கோரிக்கை விடுப்பது நாளை சாதாரண ஓய்வூதியக்காரர்களுக்கும் பொருந்துவதாகிவிடும். அரசு இயந்திரத்தில் சமூகம் பற்றிய பார்வைக்கு எள்ளவும் இடமில்லை என்பதைத்தான் இச்செய்தி வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

இதே கவர்னர் ஜெனரல்தான் 1939ல் மாகாண பிரதமராக இருந்தபோது மதுவிலக்கு இழப்பினை ஈடுகட்டல் என்ற பெயரில் ரூபாய்க்கு அரை தம்படி பலமுனை விற்பனை வரியை உப்பு முதல் அரிசி வரை கிட்டத்தட்ட மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் மீதும் விதித்தவர் என்பது வரலாற்று வினோதங்களில் ஒன்றாகும்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *