பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 19: பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் | கடலூர் அஞ்சலை அம்மாள் கைது | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 19: பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் – ராமச்சந்திர வைத்தியநாத்

பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர்

பழைய பஞ்சாங்கம் – 19

– ராமச்சந்திர வைத்தியநாத்

சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் விக்ரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாட்டில் தமிழ்ச் சமூகம் இன்றும் நினைவுகூர்ந்து போற்றி வரக்கூடிய மாமனிதர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் உருவப்படங்கள் இடம் பெற்றன. அதில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர்தான் அஞ்சலை அம்மாள். இப்படங்கள் குறித்து விவாதங்களும் எழுப்பப்பட்டன.

விடுதலைப் போராட்ட வீராங்கனையாக பேதமற்ற சமூகம் அமைந்திட வேண்டும் என்ற கருத்தின்பால் ஈர்ப்பு கொண்டவராக செயல்பட்ட அஞ்சலை அம்மாளை சாதி வளையத்திற்குள் திணிக்கும் முயற்சியோ இது என்றுகூட சிலர் கேள்விகளை எழுப்பினர். இருப்பினும் அஞ்சலை அம்மாள் அவர்களை சற்றே கண்துஞ்சிய தமிழ்ச் சமூகம் மீண்டும் நிமிர்ந்து பார்க்கச் செய்தமைக்கு தவெகவை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

விடுதலைப் போரில் மகத்தான பங்களிப்பினை கொண்டிருந்த சென்னப்பட்டணம் வித்தியாசமான போராட்டங்களின் களமாக இருந்திருப்பதை காந்தியடிகளே வியந்து பாராட்டியிருக்கிறார். அத்தகைய போராட்டங்களில் ஒன்றுதான் 1927ல் மவுண்ட் ரோட் கன்னிமாரா – க்ளப் ஹவுஸ் சாலை சந்திப்பில் இருந்த ஜெனரல் ஜேம்ஸ் ஜார்ஜ் நீய்ல் எனும் நீலன் சிலை அகற்றும் போராட்டம். முதல் சுதந்திரப் போரில் மதராஸ் பட்டாலியனின் ஜெனரலாக இருந்த நீலன் படை நடத்திச் சென்ற வழியெல்லாம் பெண்களையும் குழந்தைகளையும் வித்தியாசமின்றி தாக்கி கிராமங்களை நிர்மூலமாக்கியவன்.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 19: பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் | கடலூர் அஞ்சலை அம்மாள் கைது | www.bookday.in

இவனது சிலையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தை காங்கிரசின் பெருந்தலைவர்கள் திட்டமிடவில்லை என்பதோடு பங்கேற்கவும் இல்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போராட்டத்தில் 49பேர் பங்கேற்று சிறை சென்றனர். இதில் கடலூர் அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகேசப் படையாச்சி மட்டுமின்றி இவர்களின் ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவும் பின்னாளில் அம்மாக்கண்ணுவை திருமணம் செய்து கொண்ட ஜமதக்னியும் அடங்குவர்.

விடுதலைப் போரில் எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி செயல்பட்டதாலோ என்னவோ அஞ்சலை அம்மாளுக்கு பெரும் பொறுப்பு கட்சி அமைப்பிலோ ஆட்சி நிர்வாகத்திலோ வழங்கப்படவில்லை. இரண்டாவது உலகப் போர் நடைபெறும் காலத்தில் பட்டணத்தில் அரசியல் செயல்பாடுகளுக்கு இருந்த தடையை விலக்கக்கோரி நடைபெற்ற இயக்கத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த அவர் கடற்கரை திலகர் கட்டத்தில் கூட்டமொன்றை நடத்தி சிறைசென்றது செய்தியாகியுள்ளது.

மக்களின் பிரச்னைகள் எந்த அளவில் இருப்பினும் அதில் தலையிடக்கூடிய துணிச்சலும் அர்ப்பணிப்பும் அஞ்சலை அம்மாளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இருந்திருக்கிறது என்பது அறியப்படவேண்டிய ஒன்றாகும். மருமகன் ஜமதக்னி சிறையில் சிங்காரவேலரின் அறிமுகத்தால் பொதுவுடைமை கருத்துக்களை ஏற்று பின்னாளில் மார்க்சின் மூலதனத்தை முதன் முறையாக தமிழில் மொழி பெயர்த்த பெருமையைப் பெற்றார்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *