பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 20: நாம் அறியத் தவறினோம் | இந்துத்துவ அமைப்புகளின் (RSS) செயல்பாடுகள் | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 20: நாம் அறியத் தவறினோம் – ராமச்சந்திர வைத்தியநாத்

நாம் அறியத் தவறினோம்

பழைய பஞ்சாங்கம் – 20

– ராமச்சந்திர வைத்தியநாத்

அரசின் வரிவிதிப்பிலிருந்தும் சட்டநிர்ணயப்பிலிருந்தும் தப்பிக்கும் பொருட்டு பெரும் நிறுவனங்கள் மேற்கிந்திய தீவுகளிலும் இன்னும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் தங்களின் முகமூடி நிறுவனங்களை நிறுவி மோசடி செய்து வருவதை அறிவோம். அவ்வாறே ஆர்.எஸ்.எஸ், ஹிந்து மஹா ஸபா, பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஹனுமன் ஸேனா, ராம் ஸேனா இன்னும் நூற்றுக் கணக்கான பெயர்களில் செயல்பட்டு வரக்கூடிய இந்துத்துவ அமைப்புகள் இந்துமத அமைப்பாக செயல்பட்டு வருவதாகவும் தாங்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்றும் பொது வெளியில் வெற்றுச் சவடால் விடுப்பதுண்டு.

ஆயின் உண்மையில் இவ்வமைப்புகள் மதப் பூசல்களையும் மதக் கலவரங்களையும் தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துவதை மட்டுமின்றி மதநல்லிணக்கத்தை பேசுவோரை அச்சுறுத்துவதையும் அவதூறு செய்வதையும் தங்களது முழுநேர திருப்பணியாக காலங்காலமாகவே செய்து வருகிறது. தேச விடுதலைக்குப்பின் குறிப்பாக மகாத்மா காந்திஜி கொலையுண்ட பின்னரும் இத்தகைய பாசிச இந்துத்துவ சக்திகள் குறித்து ஊசலாட்டமின்றி உறுதியான நிலைப்பாட்டை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் மேற்கொள்ளத் தவறியதன் விளைவினை தேசம் இன்றைய தினம் எதிர்கொண்டு வருகிறது.

மக்களின் விரிவான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனையேதுமின்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மாநிலக்கட்சிகளும் அவ்வப்போது இச்சக்திகளுடன் சமரசம் கொண்டிருந்ததையும் அவ்வளவு சுலபமாக நாம் மறந்துவிடலாகாது. இவற்றை இச்சக்திகள் கிரியாஊக்கியாக கொண்டு தேசத்தின் நாற்திசையிலும் தங்கள் செயல்பாடுகளை வலுவாக பதித்திட வழி வகுத்தது.

இத்தகைய பிளவுவாத இந்துத்துவ சக்திகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவுடன் அரசியல் மட்டுமின்றி சமூகம் சார்ந்த பண்பாட்டியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலங்காலமாய் நிலவி வரும் சுமுக நிலையும், ஜனநாயகமும் உடைபட்டு மக்கள் பிளவுண்டு அனைத்துப் பிரிவினரும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர்.

யூதர்களுக்கு எதிரான தாக்குதல் நடத்திய நாஜிகளையே விஞ்சும் அளவில் இன்றைய தினம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டுமின்றி, மதநல்லிணக்கத்தை பேசும் பெரும்பான்மை சமூகத்தவருக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படுவதன் ஒரு பகுதிதான் அவர்களின் வாழ்விடத்தினை புல்டோசர் கொண்டு தகர்ப்பதும், அவர்களை தேச விரோதிகளாக சித்தரித்து சிறைக்குள் தள்ளுவதும். அதே தருணத்தில் நீதிமன்றங்களும் இவற்றுக்கு எதிராக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளத்தவறுகின்றன.

விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தலைவர்களும் தேச விடுதலைக்கு இறைவழிபாட்டு உருவங்களை குறியீடாக கொண்டிருந்ததை இச்சக்திகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அதற்கான பலனையும் அறுவடை செய்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் நோக்கமான அகண்ட பாரதத்தை நோக்கிய பயணம் முற்றுப் பெறவில்லை. எனவேதான் அவர்கள் அயோத்தியுடன் திருப்தி அடையாது நாற்திசைகளிலும் தங்கள் தளங்களை விரிவுபடுத்தும் செயல்பாடுகளை கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதிதான் சென்றவாரம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

தர்காவில் இறைச்சி உணவு சர்ச்சை உருவான தருணத்தில் சற்றே கண் துஞ்சிய தமிழக அரசு இம்முறை எச்சரிக்கையாக இருந்தமையால்தான் சிக்கந்தர் தர்கா தப்பியது என்றே கூறமுடியும்.

தீபம் ஏற்றுவது என்பது இறைநம்பிக்கை கொண்டுள்ளோரைப் பொறுத்த மட்டில் சாதாரணமான செயல்பாடு மட்டுமே. இத்தனைக்கும் தமிழகத்திற்கு அப்பால் குன்றில் கார்த்திகையில் தீபம் ஏற்றுவதென்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றுதான். ஆயின் அதன்பின்னால் மிகப்பெரும் திட்டமொன்று இருப்பதை அவர்கள் அறிந்திடார். இந்த அறியாமையின் விளைவுதான் மண்டைக்காடு மட்டுமின்றி தென் குமரியில் விவேகாநந்தருக்கு நினைவகம் அமைத்ததும். இன்றைய தினம் அது இந்துத்துவ சக்திகளின் மிகப் பெரும் தளமாகவும் மூளைச் சலவையகமாகவும் இருந்து வருகிறது.

துவக்கத்திலேயே இடதுசாரிகள் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இப்பிளவுவாத சக்திகளை இனங்காணத் தவறியமைக்கு பெரும்விலை கொடுக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இடிக்கப்பட வேண்டிய இந்து அல்லாத இதர மதங்களின் வழிபாட்டுத் தலங்களை பட்டியலிட்டு பொது வெளியில் அறிவிக்கும் அளவிற்கு அவர்களுக்கு துணிச்சல் உருவாகியிருக்கிறது.

இந்துத்துவ சக்திகளினால் திட்டமிட்டு காந்தியடிகள் கொலைசெய்யப்பட்ட பின்னர் பிரிட்டனிலிருந்து வரக்கூடிய டைம்ஸ் நாளிதழ் இச்சக்திகள் குறித்து கடுமையான விமரிசனத்தை முன்வைத்ததோடன்றி அரசு எச்சரிக்கையாய் தக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. சமூக நிகழ்வுகளை கூர்மையாக பார்த்து வந்ததன் பேரில் இக்கட்டுரை மத விவகாரங்களில் நடுநிலைமையை அரசு கையாள வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசு மட்டும் இதை கண்டு கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. இந்தியாவின் மிகப் பெரும் குழுமங்கள் வெளியிடும் ஆங்கில தமிழ் உட்பட பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் பத்திரிகைகள் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து எதிர்த்த அதேதருணத்தில் இந்துத்துவ சக்திகளை உயர்த்திப் பிடித்து செய்திகளை வெளியிட்டதை மேம்போக்காகவே காண்கையில் அறிந்திட முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் ஐம்பதுகளில் துவங்கி அறுபதுகளின் மத்தி வரை இது நீடித்து வந்திருக்கிறது. காங்கிரசிலிருந்து வெளியேறி மதவாதத்தை தமிழகத்தில் விளைப்பதில் முக்கிய பங்கினைக் கொண்டிருந்த வரதராஜூலு நாயுடு பற்றியும் இந்து மஹா ஸபா குறித்தும் சிலாகித்து செய்தி வெளியிடாத நாளே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்பின்னணியில் டைம்ஸ் வெளியிட்ட எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *