பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 21: முப்புரியிருப்பின் மூதறிஞர் | காமராஜர்-ராஜாஜி | நாடார் - சி.ஆர். உடன்பாடு | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 21: முப்புரியிருப்பின் மூதறிஞர் – ராமச்சந்திர வைத்தியநாத்

முப்புரியிருப்பின் மூதறிஞர்

பழைய பஞ்சாங்கம் – 21

– ராமச்சந்திர வைத்தியநாத்

இருபதுகளிலும் முப்பதுகளிலும் தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக நாயக்கர், முதலியார், நாயுடு என்று அழைக்கப்பட்டு வந்த மூவர் மக்களின் மதிப்பைப் பெற்ற மகத்தான தலைவர்களாக விளங்கினர். அவர்கள் முறையே ஈவேராமசாமி (பின்னாளில் பெரியார்), திரு.வி.கல்யாணசுந்தரம், வரதராஜுலு ஆகியோரே. சாதிப்பெயருடன் அவர்கள் அழைக்கப்பட்டாலும் சாதி அடையாளங்களைத் துறந்து அனைத்துப் பகுதி மக்களின் தலைவர்களாக அவர்கள் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

அடுத்த கட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேர்பிடித்ததும் பிந்திய தலைமுறையை சார்ந்தவர்கள் பெயருடன் சாதி அடையாளத்தை பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மறுபக்கத்தில் பார்ப்பனர்களும், இதர சாதி ரீதியிலான அமைப்பின் நிர்வாகிகளும் தங்களை வறட்டுத்தனமாக அந்த அடையாளத்திற்குள் குறுக்கிக் கொள்ளுவது இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இச்சூழலில் காமராஜரை நாடார் என்று குறிப்பிட்டும், ராஜாஜி அவர்களை ஐயங்கார் என்றோ ஆச்சாரியார் என்றோ குறிப்பிடாது, சி.ஆர் என்று மிக மிக மரியாதையுடன் குறிப்பிட்டு செய்தி ஒன்று 1945லேயே பிரசுரமாகியிருக்கிறது. தனக்கு பதவி அளிக்கும் பொழுதெல்லாம் காங்கிரசில் இருப்பதும் இல்லையேல் விலகுவதையும் வழக்கமாக கொண்ட ராஜகோபாலாச்சாரியார்தான் இந்தியாவின் முதல் ஆயா ராம் கயா ராம் ஆவார். அதற்காகவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட்டிருக்கலாம்.

1937 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் காமராஜரின் குருநாதர் சத்யமூர்த்திதான் மாகாண பிரதமராயிருக்க வேண்டும். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் பிரமுகர்களின் ஆசியுடன் மாகாண பிரதமர் பதவியை ஆச்சாரியார் பெற்றார். அதன் பின்னர் அதே போன்றதொரு சூழல் 1945ல் வந்த போது ராஜாஜிக்கு பழம் எட்டவில்லை. சீச்சீ இப்பழம் புளிக்கும் என்றபடி காங்கிரசின் அடிப்படை பொறுப்பு வரை அனைத்திலிருந்தும் விலகினார். அத்தறுவாயில் அகில இந்திய தலைமை காமாராஜரை அவருடன் சமரசம் செய்து கொள்ளும்படி கோரியதற்கிணங்க காமராஜர் ஆச்சாரியாரை சந்தித்த செய்தியைத்தான் நாடார் சி ஆர் உடன்பாடு என்று பத்திரிகைகள் எழுதியதோடன்றி தாங்கள் எந்தப்பக்கம் என்பதையும் பட்டவர்த்தனமாக அறிவித்துக் கொண்டன.

ஏதோ ஆகா சாஹியும் தினேஷ் சிங்கும் சந்தித்ததைப் போன்று இந்நிகழ்வுக்கு அன்றைய தினம் பத்திரிகைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ராஜகோபாலாச்சாரியை உயர்த்திப் பிடிப்பதே அவர்களின் உன்னத நோக்கமாகும். அடுத்த கட்டத்தில் 1948ல் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அரசினை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் தலைமை அவருக்கு மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை வழங்கியது.

கணக்கு வாத்யாராக இருந்து, ஹெட் மாஸ்டராகி, பின்னர் கரஸ்பாண்டண்டாகவும் செயல்பட்ட ஒருவர், ஸ்கூல் பீப்பிள் லீடராக வந்ததைப் போன்றதுதான் இது. இத்தனைக்கும் மக்களைச் சந்தித்து ஒரு பொதுத் தேர்தலில் கூட அவர் பங்கேற்றதில்லை. ஆட்சிப்பொறுப்பில் இருக்கையில் மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக இருமுறையும் இண்டர்வெல்லுக்கு முன்னாடியே நடையைக் கட்டியவர் அவர். இருப்பினும் பார்ப்பனர்களால் அவர் மூதறிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *