இவரே பெரியார்…!
பழைய பஞ்சாங்கம் – 22
– ராமச்சந்திர வைத்தியநாத்
இந்து மதத்தில் இருந்து வரக்கூடிய சாதிப்பாகுபாட்டிற்கும், மூட நம்பிக்கைகளுக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக பெரியார் தமிழகத்தில் நடத்திய இயக்கங்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. என்னதான் ஆலயங்கள், புதுப்புது பண்டிகைகள், வழிபடுவோரின் எண்ணிக்கை போன்றவை அதிகரித்து வந்தாலும் மதத்திலும், சாதிகள் மத்தியிலும் பெரியாரின் கருத்துக்களின் தாக்கத்தை காண்பதோடு உணரவும் முடியும்.
அதே தருணத்தில் இவை குறித்து பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பூசனைக்கான உரிமை என்பது இன்றும் பெரும்பாலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிரத்யேக உரிமையாக, வாரிசுரிமையாக, அரசியல் சட்ட நிர்ணயத்திற்கு எதிராகவே இருந்து வருகிறது. சமத்துவமற்ற சமூகம் என்ற சீற்றம்தான் பெரியாரை தேசவிடுதலை இயக்கத்திலிருந்து நகர்த்தி, வேற்றுமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்கச் செய்திருக்கிறது.
காங்கிரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கடுமையாக அவர் தனது பிரத்யேக பாணியில் விமர்சித்த அதே தருணத்தில், சக மனித மாண்பினை போற்றி வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய அரசியல் சூழலில் அதுவும் மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையும் போற்றிப் பாதுகாத்து வருவோர் இந்துத்துவ சக்திகளால் எங்கெல்லாம் எப்படியெல்லாம் தாக்குதலுக்கும் அவதூறுக்கும் உள்ளாகி வருகிறார்கள் என்பதை திருப்பரங்குன்றம் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது. சிறு பொறியை காட்டுத் தீயாக்குவதில் காட்சி ஊடகங்களும் இதில் மகத்தான பங்கினைக் கொண்டுள்ளதையும் மறுக்கவியலாது.
இந்த அம்சத்தில் மகாத்மா காந்தியடிகள் இந்துத்துவ சக்திகளால் கொலை செய்யப்பட்ட பின்னர் பெரியாரின் எதிர்வினையாற்றல் அனைவரும் அறியத்தக்கது. இஸ்லாமியரால் கொலை செய்யப்பட்டதாக பரப்பப்பட்டு வந்த வதந்தியை முறியடிக்கும் விதமாக அகில இந்திய வானொலியே மத்திய உள்துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க மராட்டிய மாநில சித்பாவன பிராமணர் ஒருவரால் கொலைசெய்யப்பட்டுவந்தார் என்று அரைமணிக்கொரு முறை அறிவிப்பினை வானொலியில் வெளியிட்டு வந்த தருணத்தில், திருச்சியில் இருந்த பெரியாரை திருச்சி வானொலி நிலையம் இரங்கற் செய்தி விடுக்கும்படி கோரிக்கை விடுக்கிறது.

அத்தருணத்தில் அவர் காலங்காலமாய் எந்த ஒரு சாதிப்பிரிவை எதிர்த்து வந்தாரோ அதைச் சுட்டிக்காட்டி, அச்சமூகத்தவரே இக்கொலையை செய்தனர் என்றுரைத்து தமிழகத்தில் கொந்தளிப்பையும் சாதிப்பகைமையையும் பரட்டையாய் பற்ற வைத்திருக்க முடியும். ஆயின் அவர் இதற்கு நேர்மாறாக மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் உரை நிகழ்த்துகிறார்.
“பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம் ஏற்றவும் மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரீக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் முடியாத காரியமாகும். திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது விண்ணப்பம்.”இவ்வுரையில் மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்கிறார்.
“காந்தியாரைக் கொலை செய்தவன் ஆரியன். அவனைத் தூண்டி விட்டது இந்து(மத)மகா சபை. அதற்குப் பட்டாளம் ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)… அதை ஆதரித்து வந்தவை (தேசிய) காங்கிரஸ் ஏடுகள்” என்று நேரடியாக குற்றஞ்சாட்டும் அவர் காந்தியார் மறைவுக்கு தனது இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் ஒரே நாளில் அனுதாபக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததும் வித்தியாசமானதுதான்.
இந்தியாவுக்கு காந்தி தேசமென்று பெயரிட வேண்டுமென்றும், அவர் நினைவாக வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்படலாகாது என்றும், கிறிஸ்து ஆண்டு என்பதற்கு பதிலாக காந்தி ஆண்டு என்று துவக்கலாம் என்றும் பல்வேறு யோசனைகளை தேசிய தலைவர்களுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.
ஒரு கொந்தளிப்பான தருணத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது செயல்படுவது என்பதற்கு திட்டவட்டமான வரையறையினை வகுத்துள்ள பெரியாரை முழுமையாக அறியாது பிதற்றி வருவோர் மட்டுமின்றி, பொம்மையாக போட்டு பின்பற்றி வருவதாக கூறுவோரும் இவ்வரலாற்றை அறிந்திட முயற்சிக்க வேண்டும், இல்லையேல் குறைந்தபட்சமாக ப்ராம்ப்டர்களையாவது மாற்ற வேண்டும்.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
