ஸ்டான்லி கோப்பையை யாருக்கு அளிக்கலாம்?
பழைய பஞ்சாங்கம் – 23
– ராமச்சந்திர வைத்தியநாத்
சென்ற நூற்றாண்டின் இறுதி வரை அரசும் பொதுத் துறை நிறுவனங்களும்தான் கிரிக்கெட் அல்லாத இதர விளையாட்டுகளை மட்டுமின்றி தடகள விளையாட்டுகளையும் ஊக்குவித்து வந்திருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இளம் வீரர்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பளித்து அவர்களுக்கு அவை ஊக்கமளித்து வந்திருக்கின்றன. சென்னை நகரில் நடைபெறக்கூடிய கால்பந்து, ஹாக்கி மட்டுமின்றி வாலிபால், பேஸ்கெட்பால் போன்றவற்றுக்கான லீக் போட்டிகளில் தென் ரயில்வே, ஐசிஎப், வருமானவரித்துறை, ரிசர்வ் பாங்க், துறைமுகம், அக்கவுண்ட்ஸ் ஜெனரல் போன்ற அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வந்தன. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய விளையாட்டுகளுக்கான கட்டமைப்பு நாடு விடுதலையடைவதற்கு முன்னரே உருவாகிவிட்டது என்றும் கூறலாம்.
அதே நேரத்தில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் செஸ் போன்ற விளையாட்டுகளில் அமைப்புகளைத் தாண்டி தனிநபர்களின் வாழ்வியலின் அடிப்படையில் செயல்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சமீப காலங்களில் அதுவும் ஐபிஎல் போட்டிகளுக்குப்பின்னர் கிரிக்கெட்டுக்கான பயிற்சி அமைப்புகள் ஏராளமாக உருவாகி விட்டன. சாதாரண நிலையில் உள்ளோர்கூட ஐபிஎல்லின் மாய வளையத்திற்குள் தங்கள் குழந்தைகளை தள்ளிவிட முயற்சிகளை மேற்கொள்வதற்கு பேரும் புகழும் என்பதோடன்றி பிரதான காரணியாக பணநடமாட்டமே இருந்து வருகிறது.
இது உலகமயத்திற்குப் பிந்தியதொரு போக்காகும். உலகமயம் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்றுதான் பலரும் கருதிவருகிறோம், ஆயின் அது வாழ்வின் சகல பகுதிகளிலும் குறிப்பாக பண்பாட்டியல் கூறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனும் தொ.பரமசிவம் அவர்களின் கருத்து இத்தோடு பொருத்தப்பாடு மிக்கது.
சென்னை நகரில் விளையாட்டுப் போட்டிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் எந்நாளும் பஞ்சமே இருந்ததில்லை. வாழ்நிலைக்கும் பொருளாதாரநிலைக்கும் ஏற்றவாறு விளையாட்டுகள் அமைகிறதேயொழிய அதற்காக எவரும் எதிலும் பங்கேற்காது இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்த வியாசர்பாடி பகுதியில் கால்பந்தும் குத்துச்சண்டையும் நெருக்கமான இஸ்லாமியர்களைக் கொண்ட ராயப்பேட்டையில் ஹாக்கியும் மத்தியதர வர்க்கம் நிறைந்த மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் கிரிக்கெட்டும் டென்னிஸும் பிரபலமாகவே இருந்து வருகிறது. நகரில் அனைத்துப் பிரிவினரும் விளையாடுவதற்கேற்ற வாய்ப்பை அளிப்பதில் முன்னோடியாக டான் பாஸ்கோ மற்றும் ஒய்எம்சிஏ அமைப்புகள் இருந்து வந்திருக்கின்றன.

நகரின் முன்னோடி விளையாட்டு வீரர்களில் பெரிதும் அறியப்படுபவர்களில் ஒருவர்தான் டென்னிஸ் கிருஷ்ணன் எனப்படும் ராமநாதன் கிருஷ்ணன். சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். வீட்டுக்குள் அமைந்திருந்த விளையாட்டுக் களத்தில் தந்தையால் பயிற்றுவிக்கப்பட்டவர் எனும்போதே வாழ்நிலையை சர்வசாதாரணமாக எவரும் அறிந்திட முடியும். கிருஷ்ணனின் மகன் ரமேஷும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர். தந்தையைப் போலவே விம்பிள்டன் ஜூனியர் போட்டியில் வென்றவருங்கூட.
கிருஷ்ணன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறந்த டென்னிஸ் விளையட்டு வீரராக திகழ்ந்திருக்கிறார். பின்னாளில் லயோலா கல்லூரி நிர்வாகம் ஆண்டுதோறும் துவக்ககால முதல்வராக இருந்த அருட்தந்தை பெர்ட்ராம் அவர்கள் பெயரில் நடத்தக்கூடிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் பிரிவில் பலமுறை வென்றவர். இத்தனைக்கும் இப்போட்டி கல்லூரி மாணவர்களுக்கானது மட்டுமே, இதில் பள்ளியில் பயிலும் காலத்திலேயே 1951ல் விசேட அனுமதி பெற்று இப்போட்டியில் மாகாண கவர்னர் ஸ்டான்லி பெயரிலான (மேட்டூர் நீர்த்தேக்கமும் இவர் பெயரினைத்தான் கொண்டுள்ளது) டென்னிஸ் போட்டிக்கான கோப்பையை வென்றிருக்கிறார்.
இது அன்றைய தினம் பள்ளி மாணவர்களிடையே பரவலாக பேசப்பட்டதாகும். பள்ளியில் படிக்கும் காலங்களில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கிருஷ்ணனின் சாதனையைக் கூறி ஊக்கப்படுத்தியதும் உண்டு. இவ்வரிசையில்தான் பின்னாளில் அமிர்தராஜ் சகோதரர்களும் உருவானதோடு சாதனையாளர்களாகவும் திகழ்ந்தனர். ராமநாதன் கிருஷ்ணன் பற்றிய விக்கிபீடியா தகவலில் பள்ளி மாணவனராயிருக்கையில் விசேட அனுமதி பெற்று ஸ்டான்லி கோப்பையை வென்றது சிறப்பாகவே குறிப்பிடப்பட்டிருப்பதை காணமுடியும். இதுதான் பூர்வ கதை.
பழைய பஞ்சாங்கத்தின் பொருட்டு பத்திரிகைகளை புரட்டிக் கொண்டிந்தேன்.
1951 செப்டம்பர் 3ம் தேதியிட்ட அச்செய்தித்தாளில் விஷ்ணு மோகன் ஸ்டான்லி கோப்பையை வென்றார் நேர் செட்களில் கிருஷ்ணன் தோல்வியடைந்தார் என்ற தலைப்பில் பெர்ட்ராம் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆர்.கே.எம்.பள்ளி மாணவர் ஆர். கிருஷ்ணன் சட்டக்கல்லூரி மாணவர் எஸ்.விஷ்ணு மோகனிடம் 1-6, 0-6, 5-7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியுற்றார் என்ற செய்தி வியப்படையச் செய்தது.
இப்போது கேள்வி எழுகிறது? ஸ்டான்லி கோப்பையை யாரிடம் தருவது விஷ்ணுமோகனிடமா அல்லது விக்கியிடமா?
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


பத்திக்கான செய்தி விடுபட்டிருக்கிறது