புதிய தேசிய கீதம்
பழைய பஞ்சாங்கம் – 24
– ராமச்சந்திர வைத்தியநாத்
1884ல் அடையாறில் நடைபெற்ற பிரம்மஞான சபையின் வருடாந்திர மாநாட்டின் முடிவுக்குப் பின்னர் அதில் பங்கேற்ற பிரதிநிதிகள் சிலர் மயிலையில் திவான் பகதூர் ரகுநாத ராவ் வீட்டில் கூடி அகில இந்திய அமைப்பொன்றை உருவாக்க திட்டமிட்டனர். இப்படித்தான் இந்திய தேசிய காங்கிரஸ் சென்னையில் உருவாகியது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தில் அரசு விடுமுறை இருந்து வருவதால், அதையொட்டி வருடாந்திர காங்கிரஸ் மாநாடுகளை நடத்துவதும் வழக்கமாயிற்று. இப்படித்தான் சென்னையின் டிசம்பரில் இசை விழாக்களை நடத்துவதும் துவங்கியிருக்கிறது.
முதலாவது அகில இந்திய காங்கிரஸ் பம்பாய் மாகாணத்திலுள்ள பூனாவில்தான் 1885ம் ஆண்டு டிசம்பர் 28 மதியம் 12 மணிக்கு கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் துவங்கியது. ஒவ்வொரு மாநாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் கடைசி நாளில் அடுத்த ஆண்டு மாநாடு நடைபெறக்கூடிய இடத்தை தீர்மானிப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த அடிப்படையில் 1887ல் ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டனில் மூன்றாவது மாநாடும், 1894ல் சென்னை பூந்தமல்லி சாலையில் தற்போது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி இருக்குமிடத்தில் பத்தாவது மாநாடும், 1898ல் மவுண்ட் ரோடுக்கு அருகாமையில் உள்ள ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் உள்ள பாட்டர்ஸ் கார்டனில் பதினான்காவது மாநாடும், 1903ல் இன்றைய தினம் காங்கிரஸ் மைதானம் ஜெமினி பார்ஸன் வளாகத்தை உள்ளடக்கிய தேனாம்பேட்டை ஸ்பிரிங் கார்டனில் பத்தொன்பதாவது மாநாடும், 1907ல் சூரத்தில் செருப்பு வீச்சினால் நின்று போன மாநாட்டின் தொடர்ச்சியாக 1908ல் மவுண்ட் ரோடு எலிபிண்ட்ஸ்டோன் மைதானத்தில் 23வது மாநாடும், 1914ல் தற்போது பெண்கள் கிறித்துவக் கல்லூரி இருக்கக்கூடிய டவ்டன் ஹவுசில் 29 வது மாநாடும், 1927ல் சேத்துப்பட்டு காசநோய் மருத்துவ மனைக்கு பின்னால் பூந்தமல்லி சாலையில் 42வது மாநாடும் நடைபெற்றன.

இதற்குப் பின்னர் நாடு விடுதலை பெறும் வரையிலும் எந்த மாநாடும் சென்னையில் நடைபெறவில்லை. 1954ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் 60வது ஆண்டு மாநாட்டினை சென்னை நகரில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்ப இடம் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்தன. பெருமளவில் மக்களைத் திரட்டி காங்கிரசுக்கு வலுவைக் கூட்டிட திட்டமிடப்பட்டதால் சென்னை நகருக்கு வெளியே நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
தாம்பரமா இல்லை ஆவடியா என்ற கேள்வி எழுந்ததைத்தான் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ரிசர்வ் போலீஸ் லைனையொட்டி மேம்படுத்தப்பட்ட இடம் பெரிய அளவில் இருப்பதால் இறுதியில் ஆவடியில் காங்கிரசின் மாநாடு நடைபெற்றது. மாகாணத்தில் காமராஜர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்புஜம்மாள்தான் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார்.
நிலப்பிரபுக்களுக்கும் பெருந்தொழிலதிபர்களுக்கும் மெய்க்காவலனாக காங்கிரஸ் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நிலையில் அவர்களும் பிரதிநிதிகளாக பங்கேற்றதில் வியப்பேதுமில்லை. ஆனாலும் இம்மாநாட்டில்தான் சோசலிச மந்திரத்தை காங்கிரஸ் உச்சாடனம் செய்யத் துவங்கியது. (இருப்பினும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரசின் வீழ்ச்சி என்பது கேரளத்தில்தான் துவங்கியது. உலகிலேயே முதன் முறையாக பொதுஜன வாக்குகள் வாயிலாக கம்யூனிஸ்டுகள் காங்கிரசை தோற்கடித்து ஆட்சிப் பொறுப்பேற்றனர்.) தேச விடுதலைக்குப் பின்னர் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களிலும் காங்கிரசே ஆட்சிப் பொறுப்பில் இருந்தமையால் மாநாட்டு நிகழ்வுகள் முந்திய காலங்களைப் போன்று பரபரப்பாக அமையவில்லை.
அவசர நிலைக்கு முந்திய காங்கிரஸ் மாநாடு 1974ல் கல்கத்தாவில் நடைபெற்றது. இந்திரா காந்திக்கு பேரரசியாக பட்டம் சூட்டப்படவில்லையேயொழிய மற்றவை யாவும் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. அங்குதான் தீர்மானங்கள் விவாதங்கள் போன்றவற்றுக்கு மாற்றாக “ஸ்தோத்திர பாத்திரனே தேவா, ஸ்தோத்திரம் துதியுமக்கே” என்று பாடுவதே சபை நடவடிக்கையாக மாற்றமடைந்தது.
காங்கிரசை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை நடவடிக்கைகளில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றத்தை இன்றைய தினம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சாதிய கட்சிகளும் முழுமையாக பிரதியெடுப்பதோடு அப்பாடலையே புதிய தேசிய கீதமாகவும் ஏற்று வருகின்றன.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

