பழைய பஞ்சாங்கம் – 25: நொளம்பூர் எச்சரிக்கை  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 25: நொளம்பூர் எச்சரிக்கை – ராமச்சந்திர வைத்தியநாத்

நொளம்பூர் எச்சரிக்கை 

பழைய பஞ்சாங்கம் – 25

– ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழகத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, சாலையில் நகைகளை பறிப்பது போன்றவற்றைக் காட்டிலும் பத்திரமான அதே தருணத்தில் கொள்ளை லாபம் அளிக்கக்கூடிய வழிமுறை  ஒன்றிருப்பின் அது ஆற்று மணலை அள்ளுவதே.  இது தங்கு தடையின்றி ஆரிய அல்லது திராவிட ஆட்சியாய் இருப்பினும் தொடர்கிறது.  ஆற்றின் போக்கினை சீரழிப்பதோடு சுற்றுச் சூழலுக்கு பேராபத்தாய் அமையக்கூடிய இச்செயல்பாடுகளை  எதிர்த்து இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மணல் லாபி என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.  அவ்வப்போது அரசு அதிகாரிகள் குறுக்கிடுகையில் அவர்களை தீர்த்துக் கட்டுவதும் இடைவிடாமல் இருந்து வருகிறது.

அரசு நிர்வாகமும் காவல் துறையும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து  செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவர்.  நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் உறுதியான வழிமுறையினை அளிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். சென்ற வாரத்தில்தான் தாமிரபரணி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஒரு புதிய பாதையை துவக்கியிருக்கிறது.

ஆறுகளையும் ஆற்றுப்படுகைகளையும் ஆக்ரமித்து பெரும்பாலான கல்வித் தொழிற்சாலைகள் சென்னை நகரின் முத்திசையிலும் இயங்கி வருகின்றன. அமைந்தகரையில் கூவத்தை வாய்க்காலாக்கிய ஒரு வணிக வளாகம் விண்ணில் பீடுநடை போடுகிறது.   மேலும் மதுரவாயிலிலிருந்து துறைமுகத்திற்கு செல்லக்கூடிய பறக்கும் சாலையை வடிவமைத்த மேதாவிகளும் ஆற்றின் நடுவிலும் படுகைகளிலும் தூண்களை அமைத்து ஆற்றின் போக்கினையே தடைசெய்கிறார்கள்.  மெட்ரோகாரர்கள் மயிலையில்  பக்கிங்காம் கால்வாய் பகுதியில் செய்த இதே போன்ற திருவிளையாடல்தான்  இன்றும் ராயப்பேட்டை லஸ் பகுதிகளில் மழைநீர் வடிவதை தாமதப்படுத்துகிறது.

ஆனால் ஆட்சியாளர்கள் நீதிமான்கள் கண்களை உறுத்துவது என்பது ஆற்றோரம் இருக்கக்கூடிய வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.  சமீபத்தில் அனகாபுத்தூரில் கூவம் நதியின் கரையோரம் இருக்கக்கூடிய இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை தமிழக அரசு (ஒன்றிய அரசல்ல என்பதை நினைவில் கொள்க)    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றி வழக்கம் போல் நாற்பது ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் வழக்கம்போல் குடியேற்றியிருக்கிறது.  மற்ற விவகாரங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் முறையீடு செய்வதோடு ராவோடு ராவாக உச்சநீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய தமிழக அரசு இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் கொண்டு ஏழை பாழைகளை இந்நகரிலிருந்து வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறது.

சென்ற  நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் குடிசைவாசிகளை நகரிலிருந்து வெளியேற்றும் போக்கு துவங்கி பின்னர் வேகத்துடன் இருந்து வருகிறது.  ஆற்றின் நீரோட்டத்தை இவர்கள் மட்டுப்படுத்துவதால் இத்தகைய நடவடிக்கை அவசியம் என்பதை நீதிமான்களும் அவ்வப்போது தங்கள் தீர்ப்புகளில் குறிப்பிட்டு வெளியேற்றுவதற்கு மற்றைய விவகாரங்களில் எப்படியிருப்பினும் இந்த அம்சத்தில் அரசுக்கு அனுசரனையாகவே  இருந்து வருகிறார்கள்.  இந்த பத்து ஆண்டுகளுக்குள் நம்மாழ்வார்பேட்டையில் கொன்னூர் நெடுஞ்சாலையிலும், மதுரவாயில் மொகப்பேர் பகுதிகளிலும், கிரீம்ஸ் சாலையோரத்திலும், அமைந்தகரை சூளைமேடு பகுதிகளில் விருகம்பாக்கம் கால்வாய் ஓரத்திலும், தீவுத்திடல் அருகாமையிலும் இப்படி பல்வேறிடங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது என்பது தங்குதடையின்றி இருந்து வருகிறது.

ஆயின் உண்மையில் ஆறுகளின் சீரழிவுக்கு ஆற்றோரம் வசிக்கக்கூடிய மக்கள் காரணமல்ல வேறொறு செயல்பாடுதான் இதை வேகப்படுத்துகிறது என்பதை எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் 1951ல் பத்திரிகையொன்றில் வெளிவந்த பாதிக்கப்பட்ட வாசகர் கடிதம்  குறிப்பிடுவது ஆச்சரியமளிக்கிறது.  கூவத்தில்  சென்னை நகரிலுள்ள கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தங்கு தடையின்றி மண்ணை அள்ளி வருவதால் அமைந்தகரைக்கு மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள நொளம்பூரில் விவசாயத்திற்கு கூவத்திலிருந்து நீர்ப்பாசனம் செய்வது சாத்தியமற்றதாகி வருவதையும் நிலமட்டம் உயர்வதையும்  கிட்டத்தட்ட நானூறுக்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் தரிசாகும் அபாயத்தில் உள்ளதையும் அக்கடிதம் தெரிவிக்கிறது.

இது பின்னாளில்  உண்மையாயிற்று. நொளம்பூர் மட்டுமல்ல தாழம்பூர், அமைந்தகரை, மதுரவாயல் போன்ற பகுதிகளும் நீராதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டன. கண்கெட்ட பின்னரே சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள்.  நடைமுறையில் அதுதான் இருந்து வருகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *