ஐரோப்பாவை மட்டுமல்ல உலகையே
பழைய பஞ்சாங்கம் – 28
– ராமச்சந்திர வைத்தியநாத்
சென்றவாரம் இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள் அசமத்துவ சமூக அமைப்பிற்கு எதிராக அணி திரளக்கூடிய கம்யூனிஸ சித்தாந்தத்தை இந்தியாவில் அடியோடு ஒழித்துக் கட்டுவது என்பது முடிவுறும் நிலையில் இருந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின்னரே சென்னையில் கன்னிமாரா நூலகத்தின் வாயிலில் மார்க்சின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
அத்தருணத்தில் பாஜகவின் முன்னணி தமிழகத் தலைவர்களில் ஒருவரான திருமதி தமிழிசை அவர்கள் மார்க்சை இந்தியாவிற்கு அப்பாற்பட்டவராக சம்பந்தமற்றவராக சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இத்தனைக்கும் இவர்கள் மட்டுமின்றி, இவர்களின் குருநாதர்களும் ஜெர்மானிய ஹிட்லரை தங்கள் ஞானப் பிதாவாக ஸ்வீகரித்துக் கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர்.
உலகின் முகத்தையே மாற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1872ல் ஜெர்மானிய மொழியில் வெளியிடப்பட்டபோதே அதற்கு எதிர்வினை என்பது கடுமையாகவே அமைந்திருந்தது. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒரு பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும் மெட்டர்னிக்கும் கிஸோவும் பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக்கூட்டணியை அமைத்துள்ளன” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அறியத் தக்கது.
மக்கள் தங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக உரிமைக்காக போராடுகையில் மக்கள் விரோதிகளாக கம்யூனிஸ்டுகளையும், கம்யூனிச சித்தாந்தம் தோற்றுவிட்டதாகவும் சித்தரித்து அடக்குமுறையை தொடுப்பதை முதலாளித்துவ சக்திகள் வாடிக்கையாகவே கொண்டுவந்திருக்கின்றன.

இப்பொழுது தமிழ்நாட்டு நிலவரத்தை சற்று பின்னோக்கி பார்க்கையில் விசித்திரமாகவே இருக்கிறது. 1939ல் தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் மீது விற்பனை வரி எனும் அராஜக வரி இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மதுவிலக்கின் இழப்பினை ஈடு செய்யும் நோக்கத்தை இது கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. உண்மையில் மது விலக்கின் இழப்பைக் காட்டிலும் இந்த வரியின் வாயிலாக மாகாண அரசுக்கு பலமடங்கு வருவாய் கிடைத்தது.
அதே நேரத்தில் மாகாணமெங்கிலும் இவ்வரி விதிப்புக்கு எதிராக பொது மக்கள் மட்டுமின்றி வர்த்தகர்களும் கடும் எதிர்ப்பினை கொண்டிருந்தனர். வர்த்தக நிறுவனங்கள் மாகாணத்திற்கு அப்பால் தங்கள் செயல்பாடுகளை மாற்றிச் செல்லக்கூடிய அபாயமும் இருந்து வந்திருக்கிறது. இது பற்றி மாகாண லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்ற போது மாகாண பிரதமர் இத்தகயை வரியை விதிப்பதன் வாயிலாகத்தான் கம்யூனிச அலையை தடுத்து நிறுத்த முடியும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.
இதன் பொருட்டு அவர் அளித்த வியாக்கியானங்கள் இன்னும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸத்தின் தாக்கம் இப்பிரபஞ்சமெங்கிலும் இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான் மாகாண பிரதமரின் கூற்று வெளிப்படுத்துகிறது. இங்கே தமிழிசையின் கூற்றினை பொருத்திப் பார்க்கையில் அது போகிற போக்கில் கூறியதொன்றாகவே வெளிப்படுகிறது.
காங்கிரஸ் சோஷியலிஸ்டுகள் உச்சநிலையில் இருக்கையில் அபேதவாதத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டு வந்த இந்த மாகாண பிரதமர்தான் பின்னாளில் கம்யூனிஸ்டுகள் தான் தனது முதல் எதிரி என்று பிரகடனமும் செய்தார். இந்த அம்சத்தில் இவர் இந்தியாவின் முன்னோடியென்றே கூறமுடியும். இதனால்தானோ என்னவோ இவரது அபிமானிகளால் மூதறிஞர் என்ற அழைக்கப்படுகிறாரோ என்னவோ?
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
