நெற்றியில் நீரணிந்தால் போதுமா?
பழைய பஞ்சாங்கம் – 11
– ராமச்சந்திர வைத்தியநாத்
கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் வழிபடுவதற்கான உரிமைக் குரல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஒலிக்கத் துவங்கிவிட்டது. சென்ற நூற்றாண்டில் அதன் தீவிரத்துவத்தை உணர்ந்த மாகாண அரசு பின்னர் ஆலய நுழைவுக்கு ஒரு சட்டமியற்றியது. இது கடந்த கால வரலாறு. இதற்கு முன்னர் வைக்கம் வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடமாடுவதற்கு உரிமை கோரி இந்தியாவை இன்னும் சொல்லப் போனால் சனாதனிகளை உலுக்கிய போராட்டத்தின் உத்வேகம் ஆலய பிரவேச இயக்கத்தில் இருந்தது. இதன் பின்னர் குருவாயூர் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவு பற்றிய கருத்துக் கணிப்பொன்றுக்கு அன்றைய தினம் மக்கள் பெருமளவில் ஆதரவளித்தது சனாதனிகளை சீற்றம் கொள்ளச் செய்திருக்கிறது.
ஓரிரு தசாப்தங்களுக்குப் பின்னர் ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவது பற்றிய கோரிக்கைகள் வரத்துவங்கியது. சனாதனிகள் இதற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அரசின் தலையீடு காரணமாக “தமிழிலும் நடத்தலாம்” என்ற அறிப்புகள் மட்டுமே ஆலயங்களில் இடம் பெற்றன. தற்போது ஆலய பூசை விதிகளை கற்றறிந்து சான்று பெற்ற பிராம்மணர் அல்லாதோர் பூசை செய்ய மறுப்பும் எதிர்ப்பும் இருந்து வருவதோடு நியாயாதிபதிகள் ஒரு சிலரின் ஆதரவையும் பெற்று வருகிறது.
மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை இழப்பதற்கு முன்னரே தமிழ் வழிபாடு குறித்த கோரிக்கைகள் வலுத்தன. அத்தருணத்தில் 1957ல் தஞ்சையில் நடைபெற்ற இளங்கோ அடிகள் தமிழ் மாணவர் சங்கம் மாநாட்டு உரையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தாங்கள் சமஸ்கிருதத்தின் சிறப்பை அறிந்திருப்பதோடு அதற்கு எதிராக இருக்கவில்லை என்றும் அதே நேரத்தில் பூசிக்க வந்திருப்போர் பொருளுணர்ந்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுவந்த கம்ப ராமாயண எரிப்பினையும் வன்மையாக எதிர்த்துள்ளார். மனித நேயத்தையும், வழிபாட்டினை ஜனநாயகப்படுத்துவதையும் கொள்கையாகவே கொண்டு வாழ்ந்திட்ட குன்றக்குடி அடிகளார் இறைநம்பிக்கை கொண்ட ஒரு சைவ மடாதிபதி மட்டுமல்ல, தமிழின் அளப்பரிய ஆர்வலருங்கூட.
இன்றைய தினம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுணர்வு கொண்ட இந்துத்துவ அமைப்புகளும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பினைக் கொண்டுள்ள பாஜக அரசும் மட்டுமின்றி, மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது தொண்டரடிப்பொடிகளுங்கூட அவ்வப்போது தமிழ் இலக்கியங்களை சுட்டிக் காட்டி மொழியின் மாண்பை தாங்களே உயர்த்திப் பிடிப்பதாகவும், மாகாணத்திலுள்ளோர் அது குறித்து அக்கறையின்றி இருப்பதாகவும் வாடிக்கையாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நடைமுறையில் ஆலயங்களில் தமிழ் மொழி வழிபாட்டுக்கும் சைவத் திருமறைகளை ஓதுவதற்கும் இடமில்லை என்பதுதான் நிதர்சனம். எனவே தமிழ்ப்பற்றுணர்வினை “ஒண்ணரை பலம்” சற்று கூடுதலாகவே கொண்டுள்ள இந்துத்துவ சக்திகளும் பாஜகவும் மட்டுமின்றி ஆர்.என்.ரவி அவர்களும் அதை உறுதி செய்யும் விதமாக காசியில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்ததைப் போன்றிராது குறைந்த பட்சம் தமிழ்வழிபாட்டு முறைக்கு குறிப்பாக தில்லையில் தில்லியில் அல்ல திருமறைகளை ஓதுவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
