மைலே சுர் மேரா தும்ஹாரா
பழைய பஞ்சாங்கம் – 13
– ராமச்சந்திர வைத்தியநாத்
கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரை சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டுமின்றி அனைத்து மத பண்டிகை தினங்களில் அன்றைய தினம் வெளிவரக்கூடிய பத்திரிகைகளில் வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை போன்றவற்றை அடிக்கீற்றாய் கொண்ட விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டு.
அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் துறை நிறுவனங்களும் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் அவை யாவுமே பசித்தவன் பழங்கணக்கு பார்த்த கதையாகிவிட்டது. ஒட்டுப்பலகை தயாரிக்கும் நிறுவனம் தனது விளம்பரத் தாளில் “தீபாவளிக்குள் அலி இருக்கிறார், மொஹரத்திற்குள் ராம் இருக்கிறார் நமக்கேன் பேதம்” என்ற வாசகத்தை தொண்ணூறுகளில் கண்டதோடு, அதை அப்போதே தீக்கதிர் நாளிதழில் பதிவு செய்ததும் உண்டு.
அத்தருணத்தில்தான் “மைலே சுர் மேரா தும்ஹாரா” எனும் பன்மொழிப் பாடல் தேசமெங்கும் ஒலித்தது. “இசைந்தால் அனைவரின் சுரமும் நமதாகும்” என்று கருவினைக் கொண்ட இப்பாடல் காட்சியில் பீம்சேன் ஜோஷி, பாலமுரளி கிருஷ்ணா, லதா மங்கேஷ்கர் என பலரும் பங்கேற்றதுண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் தேச ஒருமைப்பாட்டை உறுதிப்பட பேசிய இதனை வடிவமைத்த பியூஷ் பாண்டே, பின்னாளில் மோடிக்கு தியான ஸ்லோகம் எழுதப்போனதோடு நிற்கவில்லை. “நல்ல காலம் வருது”, “மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”, “இம்முறையும் மோடிதான் ஆட்சி பீடத்தில்” போன்ற பஞ்ச் டயலாக்குககளின் வசனகர்த்தாவாகவும் அவர் மாறினார்.

இப்பொழுதெல்லாம் அரசு விளம்பரங்கள் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் என்றெல்லாம் பேசுவதில்லை. இருந்தாலும் ஒரு சில தனியார் வர்த்தக நிறுவனங்கள் இவற்றைப் பேசி பின்னர் இந்துத்துவா சக்திகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மத நல்லிணக்கத்தைப் பேசிய டைடன் நிறுவனத்தில் டானிஷ்க் நகை விளம்பரம் இத்தகையகதிக்கு ஆளாகியதோடன்றி, மன்னிப்புக் கோரி விளம்பரத்தையும் பின் வாங்கிக் கொண்டது.
இஸ்லாமியர் என்பதை வெளிப்படையாக அறியக்கூடிய மாமியார், கர்ப்பிணியான தன் இந்து மருமகளை வீட்டின் முன்புறமுள்ள தோட்டப்பகுதிக்கு கை பிடித்து அழைத்துச் செல்கிறார். அங்கே வளைகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்து மருமகள் வியப்படைந்து “இத்தகைய ஆசாரங்கள் இங்கே மேற்கொள்ளப்படுவதில்லையே?” என்று வினவுகிறாள். “இது வேண்டுமானால் இங்கே வழக்கமற்றதாக இருக்கலாம், ஆனால் மகள்களை மகிழ்விப்பது என்பது உலகெங்கிலும் நடைமுறையில் இருப்பதுதானே!” என்று இஸ்லாமிய மாமியார் பதிலளிக்கிறாள்.
இது லவ் ஜிஹாத்துக்கான விளம்பரம் என்று உச்சஸ்தாயியில் இந்துத்துவ சக்திகள் குரலை உயர்த்தின. வர்த்தக நோக்கத்தின் பேரில் டைடன் நிறுவனமும் விளம்பரத்தை காட்சிப்படுத்துவதை நிறுத்தியது. இத்தனைக்கும் தமிழ் நாடு அரசு தொழில் முதலீட்டுக் கழகம், டாடா ஆகிய இரண்டின் கூட்டில் உருவானதுதான் டைடன் நிறுவனம்.
பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் இந்துவும் இஸ்லாமியரும் நட்புறவில் இருப்பதுகூட சங் பரிவாரின் கண்களை உறுத்துகிறது. கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் இது தொடர்பான தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது இந்த தேசத்திற்கு ஆரோக்யமானதல்ல.
இப்பின்னணில் இவ்விரு விளம்பரங்களை காண்பது நெகிழ்வாகவே உள்ளது. பின்னாளில் யூனி லீவருடன் இணைந்த லிப்டன் டீ நிறுவனம் பல்வேறுபட்ட இறைவழிபாட்டு ஸ்தலங்களின் பின்னணியில் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
மற்றொரு விளம்பரம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு துணி துவைக்கும் இயந்திரங்களை தயாரித்து வந்த நிறுவனத்தின் விளம்பரம். வெறுப்பு, அவநம்பிக்கை, வதந்திகள் ஆகியவற்றை அகற்றுவதோடு, மத நல்லிணக்கம் என்பது ஒவ்வொரு குடிமகனின் தற்போதைய கடமை என்பதையும் வலியுறுத்துகிறது.
ஆம் உண்மையிலேயே பன்முகங் கொண்ட நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு இது அத்யாவசியமானதும்கூட.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

