மே தினச் செங்கொடி
பழைய பஞ்சாங்கம் – 12
– ராமச்சந்திர வைத்தியநாத்
1923ம் ஆண்டு மதராஸ் பட்டணத்தில்தான் – ஏன் இந்தியாவிலும் கூட- முதன் முறையாக மே தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. சிங்காரவேலர் இதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டார். அன்றைய தினம் பட்டணத்தில் பல்வேறிடங்களில் காலை முதலே ஊர்வலங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாலை கடற்கரையில் இரு வேறிடங்களில் மே தினக் கொடியேற்றப்பட்டிருக்கிறது.
சுப்பிரமணிய சிவாவும் கிருஷ்ணசாமி சர்மாவும் உரை நிகழ்த்தியிருக்கின்றனர். அத்தருணத்தில்தான் சிங்காரவேலர் பி.எஸ்.வேலாயுதத்துடன் இணைந்து லேபர் கிஸான் கட்சியை துவக்குவதாக அறிவித்ததோடன்றி அதன் வேலைத் திட்டத்தையும் வெளியிட்டார். மேதினக் கொடி ஏற்றப்பட்ட இடத்தில்தான் பின்னாளில் நகருக்கு பெருமை சேர்த்திட்ட ராய் சவுத்திரியின் படைப்பில் உருவான உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் மதராஸ் பட்டணத்தில் மே தினத்தன்று தொழிலாளர்கள் எழுச்சியுடன் கொடி ஏற்றுவது என்பது தொடர்கிறது. கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினரும் மே தினத்தை கொண்டாடி வந்திருப்பதை அன்றைய பத்திரிகைகளில் காணமுடிகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடையும் கடும் அடக்குமுறையும் நிலவிவந்த யுத்தகாலத்தில் கூட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மே தினத்தன்று கொடியேற்றி பரப்புரை நிகழ்த்தி வந்திருக்கின்றன. 1940ம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற மேதின நிகழ்வினைத்தான் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. பீடித்தொழிலாளி ஒருவர் தலைமை வகித்திருக்கிறார். தன்னுரையை உருது மொழியில் நிகழ்த்தியிருக்கின்றார். தொழிலாளர் ஒற்றுமைக்காக அறைகூவல் விடுத்துள்ளார். தங்களுக்கு மதபேதம் கிடையாதென்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
அன்றைய தினம் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்து செயல்பட்டு வந்திருப்பதனால் குறிப்பிடப்படும் மே தினத்தை அக்கட்சியே நடத்தியிருக்கிறது. சென்னை நகரிலுள்ள பல்வேறு ஆலைத் தொழிலாளர்கள் இந்த மே தின எழுச்சிப் பேரணியில் பங்கேற்றிருக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொழிலாளர்களை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சுரண்டலுக்கு எதிராக அணி திரட்டி வலுவாக இருந்த கட்டத்தில் நகரமும் பெரும்பாலும் சாதி மத மோதல்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இஸ்லாமியர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஒன்றிணைந்து வாழ்முறையை வகுத்துக் கொண்டிருப்பதை இன்றும் வடசென்னைப் பகுதிகளில் காணமுடியும்.
மே தினச் செங்கொடிக்கு இதில் மகத்தானதொரு பங்குண்டு.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

