தொண்டு செய்யும் அடிமை
பழைய பஞ்சாங்கம் – 14
– ராமச்சந்திர வைத்தியநாத்
ஆட்சி அதிகாரத்திலிருப்போர் தங்களுக்கு எதிரான கருத்துக்களை என்றுமே ஏற்பதில்லை. இதன் தொடர்ச்சியாக பேச்சு சுதந்திரம் மட்டுமின்றி, எழுத்துச் சுதந்திரமும் தாக்குதலுக்குள்ளாகி தடைசெய்யப்படுவது என்பது பிரபஞ்சமெங்கிலும் உள்ள பொது விதியாகவே இருந்து வருகிறது.
விடுதலைப் போரின் பின்னணியில் 1922ல் பர்மிய அரசாலும் அதைத் தொடர்ந்து மதராஸ் மகாணத்திலும் பாரதியின் பாடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தனைக்கும் இந்தியாவை வைஸ்ராய்கள் ஆட்சி நடத்தி வந்தாலும் மாகாணப் பொறுப்பில் நம்மவர்கள்தான் இருந்து வந்திருக்கின்றனர்.
இதை எதிர்த்து சட்ட மன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவரப்பபட்ட போது முதலமைச்சர் நடுநிலை வகித்தார். “தொண்டு செய்யும் அடிமை” என்ற பாடல் தடைசெய்யப்பட்ட தொகுப்பில் இருந்ததினாலோ என்னவோ உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் மட்டுமின்றி, ராவ் பகதூர் ஒருவரும், ராவ் சாகிப் ஒருவரும் தீர்மானத்தை எதிர்த்துள்ளனர்.

இத்தகைய நிலை எக்காலங்களிலும் தொடர்ந்து வருகிறது. பாரதிக்கு நேரிட்ட கதி 1935ல் கார்க்கிக்கும் நேர்ந்தது. மாகாணத்தில் இருந்த அன்றைய அரசு தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட தாய் நவீனம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமின்றி லெனினின் இம்பீரியலிசம் எனும் ஆங்கில புத்தகத்திற்கும் தடை விதித்திருந்ததை செய்தியின் வாயிலாக அறிகிறோம்.
இதே புத்தகங்கள் மற்ற மொழிகளில் தங்கு தடையின்றி இருந்தாலும் தெலுங்கு மொழிபெயர்ப்பு தேசத் துரோகத்தை தூண்டுவதாக புகார் வந்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று உள் துறை அமைச்சர் சமத்காரமாக சட்டமன்றத்தில் பதிலளித்திருக்கிறார். இந்த விவகாரத்தை எழுப்பிய ருக்மணி லட்சுமிபதி குறித்த பிரசுரமொன்றும் பின்னாளில் மாகாண அரசின் தடைக்குள்ளாகியது.
1940ல் தனிநபர் சத்யாக்ரகத்தில் சிறை சென்றபோது சென்னை வேணுகோபால் நாயுடு எழுதிய “சிறைதனிலே நுழைந்தார் ருக்மணி அம்மாள்” எனும் பாடலைக் கொண்ட பிரசுரமொன்று தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதோடு புத்தகங்களும் பறிமுதலுக்குள்ளாயின.
இதைக்காட்டிலும் 1942ல் ஏ.கே. செட்டியாரின் ஜப்பான் பயண நூல் தடை செய்யப்பட்டிந்தது வினோதமாக உள்ளது. அன்றைய போர்ச்சூழலில் ஜப்பானின் புகழை பரப்புவதாக அது இருந்தது என்ற காரணம் சொல்லப்பட்டது. போர்க்காலம் என்றில்லை எக்காலத்திலும் உள்ளது உள்ளபடியே என்று சொல்வதற்குகூட கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.

இதற்கு முன்னர் நாற்பதுகளில் சவர்காரின் வாழ்க்கை வரலாறும் மதராஸ் மாகாண அரசால் தடை செய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதலுக்குள்ளாயிருக்கின்றன. 1944ல் பாரததேவி பத்திரிகை ஆசிரியர் என்.ராமரத்தினம் எழுதிய பூட்டை உடையுங்கள் என்று பிரசுரத்திற்காக தேசப்பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
வழக்கம்போல் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அன்றைய தினம் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்போக்கும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமின்றி திரைப்படங்களும் இவ்வரிசையில் வரத்தொடங்கியுள்ளது.
இனப்படுகொலையின் பிதாமகனாக இன்றும் கருதப்படும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு அந்நாளிலியே தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் பிரசுரங்களாவும் வந்திருக்கின்றன. இவையன்றி கீர்த்தி வாய்ந்த அவரது சுயசரிதை மெயின் காம்ஃப் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
அச்சுநாடுகளுக்கு எதிராக உலகமே திரண்ட நிலையில் கூட தமிழகத்தில் இப்புத்தகத்தை தாராளமாகவே பதிப்பாளர்கள் அச்சிட்டு விற்பனை செய்து வந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
எனவே ஒரு கருத்தை மாற்றுக் கருத்தினால்தான் எதிர்கொள்ள வேண்டுமேயொழிய தடைகளினால் தடுத்து நிறுத்த முடியாது. தடை செய்யப்பட வேண்டியது தடை செய் என்ற முழக்கமேயொழிய புத்தகங்களையல்ல. கடந்த காலங்களில் தடைசெய்யப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் இன்றும் பொதுவெளியில் இருந்து வருகிறது. ஆயின் தடைசெய்தவர்களோ அவர்களின் தொண்டரடிப்பொடிகளோ வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
