ரண்டால்ஸ் ரோடிலிருந்து மவுண்ட் ரோடுக்கு
பழைய பஞ்சாங்கம் – 15
– ராமச்சந்திர வைத்தியநாத்
மதராஸ் மாகாண அரசின் மின்சார இலாகா இடமாற்றம் பற்றிய ஒரு அறிவிப்பினை 1948 மார்ச் முதல் நாளன்று பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளதைத்தான் இங்கே காண்கிறோம். இது ஒரு சாதாரண வழக்கமான அறிவிப்புதான். அதே நேரத்தில் இதன் பின்னணியில் மதராஸின் வரலாற்றுப் பதிவுகளின் ஒரு பகுதியும் அடங்கியுள்ளது என்பதை அறிவது சுவாரசியமானது. அதே நேரத்தில் பசித்தவன் பழங்கணக்கு பார்த்து பின்னே செல்லும் முயற்சியாகவும் இதை கருதலாகாது. கடந்தவற்றை அறியும் அதே தருணத்தில் எப்படியும் வளர்ச்சிப் போக்கிற்கு எதுவும் உள்ளாக வேண்டும் என்ற நியதியையும் நாம் உணர்ந்திட வேண்டும்.
வேப்பேரிக்குட்பட்ட ரண்டால்ஸ் ரோடு மட்டுமின்றி மவுண்ட் ரோடும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1814ம் ஆண்டு நிலப்படத்தின்படி பூந்தமல்லி சாலையின் வடக்கில் நேவல் மருத்துவ மனைக்கு மேற்கிலிருந்து கிட்டத்தட்ட தாசப்பிரகாஷ் வரையிலான நிலப்பரப்பு திருவாளர்கள் டெண்ட், ஆன்ஸ்டூரதர் மற்றும் டாக்டர் ஹாரீஸ் ஆகியோருக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. ஆன்ஸ்டூரதரின் நிலப்பரப்பிற்கு பின்னால் (வடக்கில்) உள்ளது மேஜர் டி ஹவிலாண்ட் என்பவருக்கு உரியது என்பதையும், சாலையின் தென்புறத்தில் மெய்ல் அசைலம் ஸ்கூல் இருப்பதையும் இதே நிலப்படம் உறுதி செய்கிறது.

அசைலம் ஸ்கூலின் கிழக்குப் பகுதியில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1818ல் துவங்கி 1821ல் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றும் எழில்மிகு தோற்றத்தோடு கிர்க் எனும் இத்தேவாலயம் காட்சியளிக்கிறது. இதனை வடிவமைத்து கட்டுமானத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர்தான் முன் குறிப்பிட்ட மேஜர் டி ஹவிலாண்ட் ஆவார். அசைலம் ஸ்கூலும் எழும்பூர் ரயில் நிலையத்தின் பகுதியாக பின்னாளில் மாற்றமடைந்தது. தேவாலயத்தின் கிழக்கில் பூந்தமல்லிசாலையை முகப்பாக கொண்டு டெண்டின் நிலப்பரப்பிற்கு தெற்கில்தான் 1850களில் ஹண்டர் கவின் கலைப் பள்ளியை உருவாக்கினார்.
தேவாலயமும் கவின்கலைப் பள்ளியும் அடுத்தடுத்த வளாகங்களில் அமைந்திருந்தன. முப்பதுகளில் பூந்தமல்லி சாலையையும் எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளையும் இணைக்கும் சாலை தேவாலயத்திற்கும் கவின் கலைப் பள்ளிக்கும் இடையில் அமைந்தது. இதற்கான பெரும்நிலப்பரப்பு பின்னாளில் கவின் கலைக் கல்லூரியாக மாற்றமடைந்த வளாகத்திலிருந்து எடுக்கப்பட்டு அவ்வளாகம் சுருங்கிப் போயிற்று என்று சிற்பி தனபால் தன் நினைவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கு முன்னர் காந்தியடிகளும் அன்றைய வைஸ்ராய் இர்வினும் டொமினியன் அந்தஸ்தினை அளிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றை உருவாக்கிக் கொண்டனர். அதனை நினைவுகூறும் வகையில் இச்சாலைக்கும் மேம்பாலத்திற்கும் காந்தி – இர்வின் பெயர் சூட்டப்பட்டது
ஆன்ஸ்டூரதரின் நிலப்பரப்பில்தான் 1892ல் உருவான மதராஸ் எலெக்டிரிக் டிராம்வேஸ் கம்பெனியின் நிர்வாக அலுவலகமும், அடுத்த கட்டத்தில் டிராம்களுக்கான பணிமனையும் உருவாயின.
இதுவே எண் 1 மற்றும் 2 ரண்டாஸ் ரோடு என்ற முகவரிகளை கொண்டன. இச்சாலையின் எதிர்புறத்தில் டெண்டின் நிலப்பரப்பில் பின்னாளில் காவல் துறையின் போக்குவரத்து தலைமையகம் செயல்படத் துவங்கியது. வியாசர்பாடி ஏரியில் மின் உற்பத்தி நிலையத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியதோடு மின் வினியோகத்தையும் மேற்கொண்டது. 1895ல் பட்டணத்தில் டிராம் ஓடத் துவங்கி 1953 ஏப்ரலில் அதன் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.

இதன் பின்னர் டிராம் ஷெட் நிலப்பரப்பு முழுமையையும் திராவிடர் கழகம் உரிமையாக்கிக் கொண்டதோடன்றி பூந்தமல்லி சாலையின் முகப்பு பகுதியை தினத்தந்தி குழுமத்திடம் விற்பனை செய்தது.
டிராம்வேஸ் பட்டணத்தில் கடையை கட்டுவதற்கு முன்னரே அதன் மின் உற்பத்தி வினியோகம் ஆகியவற்றை மேற்கொண்ட மாகாண அரசின் மின்துறை அங்கிருந்து மவுண்ட் ரோடில் உருவாகி வரும் தலைமையகத்திற்கு 1948 மார்ச்சில் இடம் பெயர்ந்ததையே விளம்பரம் அறிவிக்கிறது.
மவுண்ட் ரோடின் மேற்கில் கன்னிமாராவுக்கு தெற்கிலிருந்து கிட்டத்தட்ட ஹாரீஸ் சாலை வரையிலான நிலப்பரப்பு 1800களின் துவக்கத்தில் நான்கு பேருக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. தற்போதைய காயிதே மில்லத் பெண்கள் கலைக் கல்லூரி, முகமதன் பள்ளி ஆகியவை அமைந்துள்ள பகுதி சுங்குராம செட்டிக்கு சொந்தமானது. எழும்பூர் ஆற்றின் கிழக்கில் 1734-35களில் நெசவாளர்களுக்கான ஒரு புதிய கிராமத்தை அன்றைய கவர்னர் ஜார்ஜ் மார்டன் பிட் நிர்மாணிக்க கருதியபோது அங்கே இதே சுங்குராம செட்டியின் நிலம்தான் எடுத்துக் கொள்ளப்பட்டு வெண்ணலா நாராயணன் செட்டியும் சின்னத்தம்பி முதலியாரும் பொறுப்பேற்று புதிய கிராமமாக சின்ன தறிப்பேட்டை எனும் சிந்தாதிரிப்பேட்டை உருவாகியது.
மவுண்ட் ரோடில் சுங்குராம செட்டிக்கு அடுத்தடுத்த நிலப்பரப்பு நவாப்புக்கும் போர்ச்சர் என்பாருக்கும் உரியதாக இருந்தது. நவாப்பின் பரப்பில்தான் 1800களின் இறுதியில் ராணுவத்தினருக்கான சீருடைகளை தயாரிக்கக்கூடிய தொழிற்கூடம் உருவாகியது. பின்னாளில் ராணுவம் சம்பந்தப்பட்ட தொழிற்கூடங்கள் யாவுமே ஆவடிக்கு இடம் பெயர்ந்ததும் இந்த இடத்தை மின் வாரியம் தன் தலைமையிடமாகக் கொண்டது. இதன் தெற்கு பகுதியில் ஃபாஸிட் டைப்ரைட்டர்களை உற்பத்தி செய்து வந்த ராயலா குழுமத்தின் வர்த்தக வளாகம் உருவாகியது.
மவுண்ட் ரோடுக்கு இணையாக அதன் மேற்கில் கூவத்தையொட்டி கன்னிமாரா எதிரிலிருந்து துவங்கி காயிதே மில்லத் கலைக்கல்லூரி மின் வாரியம் போன்ற வளாகங்களின் பின்வழியாக மவுண்ட் ரோடு ஹஸ்ரத் மூஸா சையத் காத்ரி தர்காவை கடந்து டேம்ஸ் ரோடை இணைக்கும் ஃபிடர் சாலை அறுபதுகளில்தான் உருவாகியது. ஒரு கட்டம் வரை மவுண்ட் ரோடில் நெரிசலை இச்சாலை தவிர்த்தது என்றும் கூற முடியும்.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

