பழைய பஞ்சாங்கம் – 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி – ராமச்சந்திர வைத்தியநாத்

ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி 

பழைய பஞ்சாங்கம் – 8

– ராமச்சந்திர வைத்தியநாத்

அவர்கள் சொன்னபடி கிடைக்கிறது/ ரூபாய்க்கு மூணு படி / தவிடு சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறுபத்திரிகையொன்றில் வெளியான கவிதை இது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை பகடி செய்யப்பட்டது என்பதை வாசிப்பவர் எவருமே சுலபமாக அறியலாம்.

முதலாளித்துவ சந்தை அமைப்பில் பொதுவினியோக முறையின் கீழ் அத்யாவசிய பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு பண்டப் போக்குவரத்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கையில்தான் விலையேற்றத்தையும் கள்ளச்சந்தையையும் கட்டுப்படுத்த முடியும். ஆயின் லைசெஸ் ஃபேர் இதை அனுமதிப்பதில்லை.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி | பொது வினியோக முறை (Public Distribution System) | www.bookday.in

முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் இத்தகைய கட்டுப்பாடு சுதந்திர வர்த்தகத்தை சீரழிக்கும் என்பதோடு பதுக்கலுக்கும் தட்டுப்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று அறுதியிட்டு கூறி வருவதுண்டு. ஆயின் நடைமுறை இதிலிருந்து மாறுபட்டு இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் மாநில அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அன்றைய தினம் நிலவி வந்த உணவுப் பஞ்சத்திற்கு தீர்வு காணும் வகையில் திமுக ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவதாக வாக்களித்தது. அந்த அளவில் அரிசி வழங்கப்படவில்லையெனினும் பின்னாளில் பொது வினியோகத்தை மாநிலத்தில் விரிவுபடுத்திட அந்த வாக்குறுதி வழி வகுத்தது.

மகாராஷ்டிரம், ஒரிசா, பிகார் போன்ற மாநிலங்களில் பட்டினிச் சாவு என்பது வழக்கமானதொன்றாக இருந்து வருவது நாட்டிற்கு பெருமை தரக்கூடியதல்ல. இது குறித்த புள்ளி விவரங்கள் ஏராளமாகவே கவலை தரக்கூடியதாக இருக்கிறது. பசி பற்றிய உலகளாவிய தரப்பட்டியலில் நாம் இன்னும் பின்னிலையில் இருந்து வருவது என்பது சுதந்திரத்தை அர்த்தமற்றதாக்குகிறது.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி | பொது வினியோக முறை (Public Distribution System) | www.bookday.in

இப்பின்னணியில்தான் உணவு தானியத்தை பொது வினியோக அமைப்பின் மூலம் சலுகை விலையிலும், இலவசமாகவும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் அளித்து பசிக்கொடுமைக்கு ஓரளவு தீர்வு காண முயற்சித்து வருகிறது. மத்திய அரசும் இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டினை மேற்கொண்ட போதிலும் விவசாய உற்பத்தியில் இருந்து வரும் நெருக்கடி பட்டினிச் சாவுகளை நோக்கி மக்களை தள்ளுகிறது.

இந்தியாவில் பண்ட விற்பனையிலும் வினியோகத்திலும் கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட பல்வேறு கட்சிகள் உரக்கப் பேசினாலும், தேர்தல் தருவாயில் பொது வினியோகத்தை பலப்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.

இதே முதலாளித்துவ கட்சிகள் யுத்த காலங்களில் மக்களின் அதிருப்தியை மட்டுப்படுத்தும் பொருட்டும், ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடும் வகையிலும் பொது வினியோகத்தை பரவலாக்குகிறது. 40களில் அன்னியராட்சியின் கீழ் இந்தியா இருந்த போது மாகாணத்தில் பொது வினியோகம் பற்றிய அறிவிப்பினை மட்டுமின்றி அதைப் பெற முயலுகையில் ஏற்பட்ட விபத்தினையும் பத்திரிகை விளம்பரம் எடுத்துரைக்கிறது.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி | பொது வினியோக முறை (Public Distribution System) | www.bookday.in

ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி புழுங்கல் அரிசியும், அதுவே பச்சரிசியாக இருப்பின் இரண்டு பட்டணம் படி மூன்று ஆழாக்கும் (எட்டு ஆழக்கு ஒரு படி) வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னரே அரிசி, கோதுமை, சாத்துக்குடி, துணி, விறகு, அடுப்புக் கரி போன்றவற்றை சலுகை விலையில் வினியோகம் செய்ய சென்னை மாகாண கூட்டுறவு வினியோக சங்கம் பட்டணத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளை திறந்திருக்கிறது என்பதை அன்றைய விளம்பரம் வாயிலாக அறிகிறோம்.

அன்னாளில் அதன் தலைவராக இருந்தவர் ராவ் பகதூர் எம் கிரியப்பா. சன் தியேட்டர் அருகாமையில் கோபதி நாராயணசாமி செட்டி சாலையிலிருந்து துவங்கி மவுண்ட் ரோடிற்கு இணையாக வடக்கிலிருந்து தெற்காய் தியாகராயா சாலையை இணைக்கும் இச்சாலை இதே கிரியப்பாவின் பெயரைத்தான் கொண்டுள்ளது.

இன்றைக்கும் தாராளமயச் சந்தைக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள் பொது வினியோகம் என்பதை உச்சரிக்க மறந்தாலும் அதை அறவே நீக்குவது மக்களின் வலுவான எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்து வைத்துள்ளனர்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *