இ.பா.சிந்தன் எழுதிய பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? - நூல் அறிமுகம் | E. P.Chindan - Palastheenam: Nammal enna seiya Mudium? - https://bookday.in/

பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்

பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல் : பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாரதி புத்தகாலயம்
ஆண்டு : ஆகஸ்டு 2024 முதல் பதிப்பு
விலை : ரூ.180
நூலைப்பெற : https://thamizhbooks.com/product/palastheenam-nammal-enna-seiya-mudiyum/

நம்மால் எதுவும் செய்ய முடியாதா?
================================
“நாம் என்ன செய்துவிட முடியும்?”

பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துவருகிற, இப்படியும் நடக்குமா என்று கேட்கிற அளவுக்கான கொடூரமான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பார்க்கிறவர்கள் கேட்கக்கூடிய கேள்வி இது. பெரும்பாலும் தனக்குத் தானே கேட்டுக்கொள்வதாக இருக்கும். மற்றவர்களிடம் கேட்டாலாவது பதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே…

இப்படிப் கேட்பதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று – இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது என்ற “நடுநிலை” மனநிலையில் கேட்பது. இவனும் அடிக்கிறான், அவனும் அடிக்கிறான் என்ற எண்ணம் கெட்டி தட்டிப் போயிருப்பதால் வருவது இந்த “நடுநிலை”. இந்த மனநிலையைப் பரவலாக ஏற்படுத்தியிருப்பதில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு.

இஸ்ரேல் அரசுக்குப் பின்பலமாக இருக்கிற அமெரிக்கா உள்ளிட்ட வலுவான மேற்கத்திய சக்திகள், சில இஸ்லாமிய நாடுகள் கூட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இல்லை என்கிற நிலைமை ஆகியவையும் இந்த மனநிலைக்கான காரணிகளாக இருக்கின்றன.

ஒன்றிய அரசின் கண்டும் காணாத அணுகுமுறையும் இதற்கொரு முக்கியக் காரணம். பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டியதெல்லாம் பழங்கதை.

இந்த மனநிலையில் இருப்பவர்கள், பாலஸ்தீன மக்களுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் போன்ற எளிய இயக்கங்களைக் கூட அசூயையுடன் கடக்கிறார்கள். “இங்கே ஆர்ப்பாட்டம் செய்வதால் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளப் போகிறதா என்ன” என்ற துணைக் கேள்வியும் சேர்ந்துகொள்ளும். “நமது நாட்டுப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது, இதிலே வேற நாட்டு விவகாரம் நமக்கெதற்கு,” எனும் சூப்பர் நழுவலும் ஒட்டிக்கொள்ளும்.

தனது புதிய ஆயுதங்களை உலகச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுபோவதற்கு முன் சோதனை செய்து பார்ப்பதற்கான களமாக காஸாவையும் பரிசோதனை எலிகளாக பாலஸ்தீன மக்களையும் கருதி குண்டுகளை வீசுகிறது இஸ்ரேல். “இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்ற கோரிக்கை இங்கே எழுப்பப்படுகிறபோது, “அதெப்படிங்க, நம்ம நாட்டுப் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் தேவையில்லையா? அதை வாங்குறதுல என்ன தப்பு,” என்று பூசுவார்கள்.

கொடுமையாக, இத்தகைய இயக்கங்களில் பங்கேற்பவர்களைக் குறித்து, “இவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறவர்கள்,” என்று கூறி ஒதுங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவது வகை – இஸ்ரேலின் அக்கிரமத்தையும் பாலஸ்தீனர்களின் அவலத்தையும் புரிந்துகொண்டு, உண்மையான ஆவேசத்துடனும் துடிப்புடனும், “நாம் என்ன செய்ய முடியும்,” என்று கேட்பது. அப்படிக் கேட்பதில், “நாம் ஏதாவது செய்ய வேண்டுமே,” என்கிற ஆதங்கம் இருக்கும். அதில், தினமும் கொல்லப்படுகிற, குற்றுயிரும் குலையுயிருமாக விடப்படுகிற குழந்தைகள், ஓடவும் வழியின்றிக் கட்டடங்களுக்குள் சிக்கிச் சிதைகிற மக்கள், நூறாண்டு காலத்திற்கு எழுப்ப முடியாதபடி இடிக்கப்படுகிற அவர்களின் பொருளாதாரம் பற்றிய உணர்வுப் பூர்வமான பதைப்பும் அக்கறையும் இருக்கும்.

நாம் என்ன செய்யலாம்? நடைபெறுகிற பாலஸ்தீன ஆதரவுப் பேரணிகளிலும், இஸ்ரேல் கண்டன முழக்க இயக்கங்களிலும் பங்கேற்கலாம். அதிகமானவர்கள் பங்கேற்கிறபோது, அதுவும், இயக்கங்களை நடத்துகிற அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள் பங்கேற்கிறபோது முழக்கத்தின் வலிமை கூடும், அரசுக்குத் தனது நிலைப்பாட்டை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். நேரில் பங்கேற்க இயலாதெனில் அவர்களுக்கு நிதி வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்யலாம். கையெழுத்து இயக்கங்கள் மேற்கொள்ளப்படுகிறபோது தயக்கமின்றி நம் கையெழுத்தையும் பதிவு செய்யலாம். மற்ற பல நாடுகளில் இவ்வாறெல்லாம் நடக்கிறபோது, அதனால் அந்த அரசுகளின் நிலைப்பாடு மாறுவதைப் பார்க்க முடிகிறது. இங்கேயும் அதே போல் நிகழுமானால், “இங்கே இப்படி ஆர்ப்பாட்டம் செய்வதால் “இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திக்கொள்ளப் போகிறதா என்ன” என்ற வினாவுக்கு விடை கிடைக்கும்.

அந்தப் பதைப்பையும் அக்கறையையும் சுற்றியிருப்போருக்குக் கடத்தலாம். அவரவருக்குத் தெரிந்த முறையில் அதைச் செய்யலாம். உன்னால் ஓவியம் வரைய முடியுமா? பாலஸ்தீனர்களின் துயரத்தை ஓவியமாக்கிப் பொதுவெளியில் வைக்கலாம். நீ கவிதை எழுதுவாயா? உணர்ச்சிக் கவிதையொன்றை எழுதி வாசிக்கலாம். கட்டுரை எழுத வருமா? ஆழமான கட்டுரை எழுதி வெளியிடலாம். நன்றாகப் பேசுவாயா, கிடைக்கிற மேடையில் இதைப் பற்றிய கவலையையும் காற்றில் பரவ விடு. சமூக ஊடகங்களில் மட்டும்தான் உன் செயல்பாடா? “முகநூல் போராளி” என்பது போன்ற கேலிகளைப் பொருட்படுத்தாமல், உன் வேதனையையும் சீற்றத்தையும் நீ செயல்படும் தளத்தில் பகிரலாம்.

முக்கியமாக, வீடுகளில் உரையாடுகிறபோது, நண்பர்களுடனான அரட்டையின்போது, வேலை செய்கிற இடத்தில் சக பணியாளர்களுடன் அளவளாவுகிறபோது அன்று பார்த்த செய்தியையும் உங்கள் சிந்தனையையும் பேசுபொருளாக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என்றால், விருந்து முடிந்ததும் உறவினர்களோடு சிறிது நேரம் ஆசுவாசமாக அமர்ந்து குலாவுமல்லவா, அப்போது இதைப் பற்றியும் கொஞ்சம் எடுத்து வைக்கலாம். இதனாலெல்லாம் உடனே அவர்கள் மாறிவிட மாட்டார்கள்தான். ஆனால் மறுநாள் தொலைக்காட்சியில், செய்தியேட்டில் இந்தச் செய்திகளைப் பார்க்கிறபோது அவர்களின் எண்ணத்தில் சிறிதேனும் மாற்றம் ஏற்படக்கூடும் அல்லவா? அந்த மாற்றம் மிக மையமான விளைவாயிற்றே.

எழுதியவர் : 

அ.குமரேசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Varadarajan

    முற்போக்கு இயக்கங்களில்
    மாற்று கருத்துள்ளவரையும்
    மாற்றி சிந்திக்க வைக்க
    உதவிடும் சிந்தனின் சிந்தனை.
    சிறப்பு.நூலை வாசிக்க தூண்டிடும்
    அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *