பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்
நூல் : பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாரதி புத்தகாலயம்
ஆண்டு : ஆகஸ்டு 2024 முதல் பதிப்பு
விலை : ரூ.180
நூலைப்பெற : https://thamizhbooks.com/product/palastheenam-nammal-enna-seiya-mudiyum/
இஸ்ரேலிய சியோனிச வாதிகளே, நீங்கள் யார் மனிதர்களா? இல்லை மிருகமா? இல்லை வேற்றுக்கிரக வாசிகளா? இல்லை எதிலும் சேராத ஒரு ஜந்துவா? நீ யார் என்பதை தயவு செய்து உலகத்துக்கு அறிவித்து விடு. மனிதர்களாக இருந்தால் அவனின் குணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். இல்லை மிருகமென்றால் தேவை உள்ளபோது மட்டுமே பிற உயிர்களை வேட்டையாடும் என்று சொல்லலாம். அல்லது வேற்றுக்கிரக வாசியென்றால் உம்மை விட்டு மனிதர்கள் விலகிச் சென்றுவிடுவர். நீ எதிலும் சேராத ஒரு புது ரக வடுக்களாக இருந்தால் நிச்சயம் மனிதர்கள் மிரண்டுதான் போவார்கள். உலகில் உம்மைபோன்ற ஒரு ஈவு இரக்கமற்ற ஜீவராசியை யாரும் இதுவரை கண்டதில்லை. இவ்வளவு தூரம் உம்மைப்பற்றி பேசுகிறேனே உமக்கு ஏதாவது இருந்தால் பதில் சொல்லு. அதுசரி நீ என்ன பன்னுவ. உம்மை வைத்து உலகை சுரண்ட நினைத்தக் கூட்டத்திற்கு நீ பகடைக்காயாக இருந்து பாலஸ்தீன மக்களை ஒரு நிமிடமும் தூங்க விடாமல் உருட்டிக்கொண்டிருக்கிறாயே. ஓராண்டா ஈராண்டா 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவர்களை மூச்சு விடாமல் செய்கிறாயே இதுதான் நீ ஹிட்லரிடமிருந்து தப்பித்து வந்த லட்சணமா. யூத மக்கள் அனைவரையும் உம்மோடு சேர்க்கக் கூடாது. உம் இனத்தில் பெரும்பகுதி மக்கள் சாமானிய உழைக்கும் மக்களாகவே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். அதில் இருக்கும் ஒரு சதவீத பெருமுதலாளியான நீ ஆடும் ஆட்டம் தான் உலகை மிரள வைக்கிறது. அடேய் சியோனிச வெறியனே, நீ பெரும் லாபம் அடையவேண்டும் என்பதற்காக பாலஸ்தீன மக்களின் உயிரோடு தான் விளையாடுவாயா? ஆமாம் நீ பாலஸ்தீனத்தை பிடித்து கூறுபோட்டு இஸ்ரேல் என்று ஒரு மண்ணை உருவாக்கியிருக்கிறாயே, அதற்கு எல்லை இருக்கா? அல்லது அரசியல் அமைப்புச் சாசனம் தான் இருக்கா? அல்லது வரைபடம் தான் உருவாக்கியிருக்கிறாயா? இது எதுவுமே இப்போது வரை நீ உருவாக்கவில்லையே ஏன்? உலகில் வேறு எந்த நாடாவது இப்படி இந்த மூன்று தன்மையும் இல்லாமல் இருக்கிறதா? இல்லையே. அப்புறம் எப்படி பாலஸ்தீன மக்களை நான்கு கூறாக பிரித்து மேற்கு கரை, காஸா, அகதிகள் முகாம், இஸ்ரேலிய பாலஸ்தீனம் என்று உருவாக்கி வைத்திருக்கிறாய்? உன்னால் உருத்தெரியாமல் ஆக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் மிச்ச சொச்ச வாரிசுகளையும் கொன்றுவிட்டு ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன நிலத்தை முழு இஸ்ரேல் என்றாக்கிய பின் வரைபடம், அரசியல் அமைப்பு, எல்லைகள் உருவாக்குவாயா? ஆமாம் இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நீ ஒரு நீதிமன்றம் வைத்திருக்கிறாயே, அங்கு எதன் அடிப்படையில் விசாரணை நடத்துகிறாய்? அதுசரி உனக்கு என்ன வாயில வருதோ அதுதானே தீர்ப்பு. அந்த தீர்ப்பு உன்னுடைய இனமான இஸ்ரேலியர்களுக்கு ஒரு மாதிரியாகவும், பாலஸ்தீன மக்களை மக்களாக மதிக்காமல் நினைத்த நேரத்தில் நினைத்தபடி தீர்ப்பு வழங்கி முகாமில் அடைப்பாய்; அப்படியே சுட்டுக்கொல்வாய். அகதிகள் முகாமில் இருப்பவர்களின் கணக்கை பராமரிக்காமல் வைத்திருப்பாய். அப்போது தானே யாரை சுட்டுக்கொன்றாலும் கணக்கு காட்டவேண்டியிருக்காது. அடேய் அடேய் நீ எவ்வளவு வன்முறை வெறியனாக இருக்கிறாயே.
அதைவிடு நீ இந்தளவுக்கு ஆடுவதற்கு உனக்கு யார் தைரியம் கொடுத்தது பிரிட்டன் தானே? அவன் தான் உன்னை வைத்து அவனுக்குத் தேவையான வளங்களை பாலஸ்தீன பகுதியிலிருந்தும், அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் கேள்வியில்லாமல் சுரண்ட திட்டமிட்டான். எதற்கெடுத்தாலும் நரிக்கு நாட்டாமை கிடைத்தது போல் ஐ.நா சபையில் தீர்மானம் போட்டு அதாவது எந்த பகுதி மக்களுக்கு பிரச்சினை இருக்கோ அதை காதுகொடுத்து கேட்காமல் அதாவது பாலஸ்தீனத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்களை கேட்காமல் உன்னுடைய சுயநலத்துக்கு அதாவது பிரிட்டன் சுரண்டலுக்கு பிரித்து அம்மக்களை வாட்டியெடுத்தீர்கள். இன்னும் விடாமல் வாட்டுகிறீர்கள். ஒரு கட்டத்தில் எந்த பிரிட்டன் உனக்காக வாதாடினானோ அதே பிரிட்டனை அமெரிக்காவின் துணைகொண்டு அடித்து விரட்டிய வெறியன் தானே நீ. அவனை விரட்டியது பிரச்சினை இல்லை. இப்போதும் பிரிட்டனுக்கு ஜெருசலம் என்கிற பகுதியை விட்டு வைத்திருக்கிறாயே. ஆனாலும் நீ பயங்கர தந்திரசாலிப்பா. ஆமாம் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக உன்னுடைய யூத மக்களில் குறிப்பிட்ட அதாவது இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் ஷாகா போன்று மறைமுகமாக பயிற்சியெடுக்கும் யுக்தியை பயன்படுத்தி பிரிட்டன் ராணுவத்தில் பலே கில்லாடியாக சூழ்ச்சிகார கில்லாடி வீரர்களை உருவாக்கிக் கொண்டாய். இது தெரியாமல் நீ ராணுவ உடை போட்டுக்கொண்டு பாலஸ்தீன வீதியில் சுற்றி வரும்போது பாலஸ்தீன மக்கள் உம்மை கிண்டல் செய்தனர் அவர்களுக்கு வரும் ஆபத்துகளை உணராமல். இந்தியாவிலும் உம்மைபோல் ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சி நடைபெறும் இடங்களை இந்திய சாமானிய மக்களும் பார்வையாளர்களாக கடந்துதானே போகின்றனர். ஆனால் எது எப்படியோப்பா நீயும் அதாவது சியோனிச வெறியும், ஆர்எஸ்எஸ் இந்துத்துவ வெறியும் ஒரே குணத்தில் காட்சியளிக்கிறதுபா.
ஏம்பா யூத சியோனிச முதலாளித்துவ குணவாளனே, நீ எதுக்குப்பா பாலஸ்தீன மக்களை நான்கு பகுதியா பிரித்து அவர்களை ஒன்று சேர விடாமல் தடுத்து வைத்திருக்கிறாய்? அவர்கள் ஒன்று சேர்ந்தால் உமக்கு தலைவலி என்பதால் தானே? அப்படியும் நீ விடாமல் அவர்கள் கழுத்தில் உனது காலால் தொடர்ந்து அழுத்தும் போது அவன் சும்மாவா இருப்பான் உயிர் போவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள உனது காலை கடிப்பான் தானே? கடிப்பானா? மாட்டானா? கடிப்பான் தானே. அப்படி கடிப்பவனை போய் அவன் தீவிரவாதி என்கிறாய். ஹமாஸ் இயக்கம் உமது எந்த மக்களை குறிவைத்து கொன்றது நீதான் சொல்லேன் பார்க்கலாம். தனது எதிர்ப்பை தெரிவிக்க ஆளில்லாத இடங்களில் சிறிய பட்டாசு போன்ற குண்டுகளை வீசி எதிர்ப்பை தெரிவிப்பது உமக்கு வலிக்குதா? அடேய் நீ பித்தலாட்டம் ஆடுவதை உலக முதலாளித்துவமும், அதற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும் வேண்டுமானால் ஹமாஸை தீவிரவாதி எனலாம். ஆனால் உலக சாமானிய மக்கள் ஹமாஸின் அதாவது பாலஸ்தீன மக்களின் கழுத்தில் நீ வைத்திருக்கும் காலை எடுக்கவேண்டும் என்பதற்கான போராட்டமாகவே பார்க்கிறோம்.
ஏய் யப்பா நீ என்ன தொழில் செய்து பிழைக்கிறாய்? ஆயுதங்களை தயாரித்து அதை பாலஸ்தீன மக்களின் மீது பரிசோதனை செய்து ‘இந்த ஆயுதங்கள் பாலஸ்தீன மக்களின் மீது நன்கு பரிசோதிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களை இவ்வாயுதம் நன்கு கொல்கிறது’ என்று அந்த ஆயுதங்கள் மீது முத்திரை குத்தி தானே உலக நாடுகளுக்கு விற்கிறாய்? அப்படி விற்கின்ற ஆயுதங்களில் 42% இந்தியாவிற்கு விற்கிறாய். என்ன நான் சொல்வது சரிதானே? அதாவது வாஜ்பாய் காலம் ஆரம்பித்து 2014ல் மோடி வந்த பிறகு அவர் உன்னை முழுவதும் வாரி அனைத்துக்கொண்ட பிறகு தான் இவ்வளவு ஆயுதங்களை அதாவது பாலஸ்தீன மக்களை கொன்றொழிப்பதற்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் நன்கு கொழுக்கிறாய். இது இந்திய மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நப்பாசையுடன் கொழுத்து வருகிறாய். ஆமாம் நீ இப்போது ‘AI’ தொழில்நுட்பத்தில் தயாரித்த ஆயுதங்களைக் கொண்டு தனி நபரை குறிவைத்து குறிப்பாக கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருந்தால் அவ்வீரர் பந்தை நினைத்துப்பார்க்கக் கூடாது என்கிற விதத்தில் முட்டியிலேயே குறிபார்த்து சுட்டு காலை துண்டாக்கும் வேலையை செய்யும் தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களை தயாரிக்கிறாயாமே.
அதை விடுப்பா அப்படி ஆயுதங்களை நீ அங்கே தயாரிக்கிறாய் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நீ உலக நாடுகளில் ஒப்பந்தம் போட்டு அந்நாடுகளில் குறிப்பாக கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு நவீன ஆயுதங்களை கண்டுபிடிக்கிறாயாமே? அடேய் அங்க போய் இங்க போய் இந்தியாவில் இருக்கும் ஐஐடி அதாவது சென்னை, டெல்லி ஐஐடி களில் ஒப்பந்தம் போட்டு அம்மாணவர்களுக்கு நீ பாடம் எடுக்கிறாயாமே? அடேய் உன்னை விடு. உன்னை இந்திய மண்ணில் காலூன்ற விட்ட ஆட்சியாளர்களை அதாவது உன்னுடைய குணம் கொண்டவங்களை சொல்லனும். நீ இந்திய கல்வி நிறுவனங்களில் காலூன்றி இருக்கிறாய். நிச்சயம் இந்திய மாணவர் சங்க சொந்தங்கள் உம்மையும், உமக்கு ஆதரவுக் கரம் நீட்டும் கும்பலையும் ஒருபோதும் நீடித்திருக்க விடாது. இதெல்லாம் நடக்கும் என்று தானே அதானியுடன் கூட்டு வைத்து ஹைதராபாத்தில் நவீன ஆளில்லா ஏவுகணை இயந்திரம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறாய். அடேய் யப்பா முதலாளித்துவ சுரண்டல் பேர்வழிகளே, உங்களின் கொட்டம் அடங்கிப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் மறவாதே.
இதையெல்லாம் விடு நீ ஆரம்பத்தில் பாலஸ்தீன நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்கினாய். பாலஸ்தீன மக்களுக்கு அளவில்லாத கடனை வழங்குவதற்கான வங்கியை பாலஸ்தீன அனுமதி இல்லாமல் பிரிட்டன் துணையுடன் தொடங்கினாய். அவ்வங்கி மூலமாக உலக பணக்காரனாக இருக்கும் நீ பணத்தை வாரி வாரி இரைத்தாய். எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கி அதை திருப்பி கட்ட முடியாமல் போகும்போது அந்த பாலஸ்தீன நிலங்களை பிடுங்கினாய். இப்படித்தானே பாலஸ்தீனத்தை முதலில் முடக்கினாய். பிறகு வலிமையான கட்டமைப்புகளை உருவாக்கி அங்கே சட்டவிரோதமாக யூதர்களை குடியமர்த்தினாய். பிறகு இரண்டு பாலஸ்தீனர்களுக்கு நடுவே யூதர்களை உட்கார வைத்தாய். பிறகு அனைவரையும் ஓடஓட விரட்டினாய். கடற்கரையை பிடித்தாய். நல்ல நிலங்களை நீ வைத்துக்கொண்டு எவ்வித வசதியும் இல்லாத பகுதியில் அதாவது 5% நிலத்தில் 55% மக்களை திணித்தாய். குடிக்க நீர் கூட நீ அனுமதித்தால் தான். இல்லையென்றால் சாகவேண்டியதுதான். அதெல்லாம் போகட்டும் அண்ணன் தம்பி, கணவன் மனைவி இவர்களை ஒன்று சேரக்கூடாது என்றுதானே இரு வீடுகளுக்கு இடையே சுவர் எழுப்பினாய்; முள் வேலி அமைத்தாய். அப்பப்பா முடியல. உன்னுடைய அயோக்கியத்தனம் அளவுக்கு மீறிப் போனதற்கு மேற்குலக நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா காரணமாக இன்றும் இருக்கின்றன. இப்போதும் உனக்கு ஆதரவாக சண்டை போட அமெரிக்கா படைகளை அனுப்பி வருகிறதே. இன்னும் அங்கு என்ன இருக்கிறது. எல்லாவற்றையும் நீதான் அழித்துவிட்டாயே. ஓ உயிர் ஒன்றிரண்டு ஊசலாடுவதையும் காலி செய்துவிட்டு புள்ளியில்லாமல் ஒட்டுமொத்த நிலபரப்பையும் கைப்பற்றிய பிறகு இஸ்ரேலிய வரைபடம் உருவாக்கப் போகிறாயா? நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட நீயும்; மேற்குலக ரவுடிகளின் அட்டகாசமும் உடன் இந்திய சனாதனக் கூட்டும்.
உலக மக்களே, இந்த உலகம் சாமானிய உழைக்கும் மக்களாலே நிலைபெற்று வருகிறது. இஸ்ரேல் போன்ற கொடூர கொலைகாரர்களால் அல்ல. இன்னும் எத்தனை காலம் தான் பாலஸ்தீன அதாவது மேற்கு கரை, காஸா, அகதிகள் முகாம், இஸ்ரேலிய பாலஸ்தீனம் என பாலஸ்தீன மக்களை சுக்கு நூறாக பிரித்து அம்மக்களை நாளுக்கு நாள் கொன்றொழித்து வருவதற்கு அனுமதிக்கப் போகிறோம். மனிதம் ஒருபோதும் தோற்காது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலிய வெறித்தனத்தை வீழ்த்துவோம். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேருவோம்.
இந்திய தாயின் மக்களே, நம் வரிப்பணத்தைக் கொண்டு பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்க இனியும் நாம் அனுமதியோம்.
“என் வரிப்பணத்தைக் கொண்டு
பாலஸ்தீனர்களைக் கொல்வதை
நான் அனுமதிக்க மாட்டேன்.
NOT ON MY NAME.
NOT ON MY TAX MONEY.”
என்று ஒன்றிய ஆளும் அரசின் செவிப்பறை கிழியும் அளவிற்கு உரக்கக் குரலெழுப்புவோம்.
தோழர்களே,
‘பாலஸ்தீனம்:
நம்மால் என்ன செய்ய முடியும்?’
எனும் பாரதி புத்தகாலய வெளியீட்டில் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மிகச்சிறப்பான எழுத்தில் அதே நேரம் அறிவியல் பூர்வமான முழு தரவுகளை தேடித் தந்து நம்மிடம் வந்துள்ள இந்நூலை வாசிக்க வாசிக்க அறச்சீற்றம் அதாவது அளவில்லாத கோபமும், அழுகையும் ஒருங்கே வந்து என்முன் விழுந்தது. இன்னும் அந்த நூலின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. நிறைய தரவுகளை தேடித் தேடி சேகரித்துக் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட இந்நூலை வாசிப்பதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு விடிவு பிறக்க நம்மாளான சிறுசிறு செயல்களை அதாவது அம்மக்களுக்கு ஆதரவான குரலை எழுப்ப முடியும். நான் இந்நூலின் விமர்சனத்தை எழுதும் இந்நேரத்தில் தெருவில் நின்று என்னுடைய வீட்டின் கதவை தட்டி ”வெளியே போ இது எங்களுடைய வீடு’’ என்று யாராவது சிலர் கத்தி நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு அவர்கள் நம் வீட்டை பிடத்துக்கொண்டால் நமக்கு எப்படி இருக்கும். கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வீடில்லாமலும், எவ்வித உணர்வுக்கும் வழியில்லாமல் தவிக்கும் அம்மக்களுக்கு இப்போதாவது குரல் எழுப்புவோமே.
வாருங்கள் பாலஸ்தீன மக்களின் உயிரை தக்க வைக்கப் போராடுவோம்.
இந்நூலை நமக்கு வழங்கிய ஆகச்சிறந்த எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை. அவரும் எதையும் எதிர்பார்க்க மாட்டார். ஒன்றே ஒன்றை மட்டும் அவர் விரும்புவார். ஆம் உலக மக்கள் அனைவரும் மனிதர்களாய் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதே. இந்நூலை வாங்கி வாசித்துப் பாருங்கள் தோழர்களே. நாம் ஒன்றிணையும் புள்ளி கிடைக்கும்.
வாசிப்போம்! உலகை
நேசிப்போம்!!
நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா. சண்முகசாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

