இ.பா.சிந்தன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? (Palastheenam Nammal Enna Seiyya Mudiyum) புத்தகம்

பாலஸ்தீனம்; நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்

காலச்சுவடு இதழ் 301. (ஜனவரி 2025) அமோஸ் கோல்ட்பர்க் என்பவரின் நேர்காணலைத் தாங்கி வெளியாகியிருக்கிறது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவரும் ஜெருசலத்தில் உள்ள ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வரலாற்றுப் பேராசிரியரும் ஆவார்.

இவரை எலியாஸ் பெரோஸ் என்ற எழுத்தாளர் நேர்கண்டு பதிவிட்டுள்ளார். எலியாஸ் பெரோஸ் இனவெறுப்பு, யூதவெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு, நினைவுகளின் அரசியல் பண்பாடு தொடர்பாக எழுதி வருபவர்.

இந்த நேர்காணல் incobin என்ற ஆங்கில இதழில் 07-11-2024 அன்று வெளீயாகி உள்ளது.

பாலஸ்தீனம் காசா நிலப்பரப்பில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு கடந்த 07-10-2023 அன்று நிகழ்த்திய எழுச்சியை அடுத்து, காசா பகுதியில் இஸ்ரேல் தொடங்கிய யுத்தம் இன அழிப்புக் கெடுபிடி என்கிறார் அமோஸ் கோல்ட்பர்க். ”இன அழிப்பு என்பது அனைத்து மக்களையோ ஒரு பகுதியினரையோ, அல்லது ஒரு பகுதி மக்களை வாழவிடாமல் தடுப்பதையோ உள்ளடக்கமாகக் கொண்டது என்கிற ஐநா மன்றத்தின் ஆவணங்களைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிடுகிறார். அதாவது ஓர் இனம் தான் நிரந்தரமாய் வாழும் நிலப்பகுதியில் இருந்து, இன்னோர் இனத்தால் விரட்டப் படுவதும் இன அழிப்புதான். அல்லது ஒன்றாக வாழும் இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு மேலாதிக்கம் செய்வதும் கூட இன அழிப்புதான். ஒரே நாட்டில் வாழும் சிங்களர்கள் தமிழர்களை அழித்தொழிக்க முயன்றது போல..

ஹமாஸ் எழுச்சி ஓர் இனத்தின் உரிமைப்போர். பாலஸ்தீன மக்களின் நிலத்தையும் வாழ்வுரிமையையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் நிகழ்த்தப் பட்ட சுதந்திரப் போர். காசா மக்களையும் ஜோர்டான் மேற்குக் கரையில் வாழும் பழங்குடியினரையும் சுதந்திரமய் வாழ அனுமதிக்காமல் வேலியிட்டு மறைத்ததோடு, சட்டவிரோத யூதக் குடியேற்றத்தையும் நிகழ்த்தும் இஸ்ரேலின் நடவடிக்கை நிஜத்தில் இன அழிப்புத்தான் என்கிறார் எலியாஸ் பெரோஸ்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொடூரங்களுக்கு என்ன காரணம்? ஏன் பாலஸ்தீன மக்கள் வந்தேறிகளாகிய யூத இன வெறியர்களால் அழித்தொழிக்கப் படுகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறது “பாலஸ்தீனம்; நம்மால் என்ன செய்ய முடியும்?” என்ற இந்த நூல்.

ஜெர்மனியின் நாசிச ஹிட்லரால் யூதர்கள் கூண்டோடு அழித்தொழிக்கப் பட்டபோது, மனிதகுலத்தின் கருணைக்கோடு அந்த மக்களின் மீது தீராத அன்பையும் அபிமானத்தையும் பொழிந்தது என்பதோடு ஆதரவுக்கரம் நீட்டி உதவி செய்தது. ஹிட்லரின் வீழ்ச்சிக்கு “யூத அழித்தொழிப்பு” மூலம் உண்டான எதிர்மறை விளைவும் ஒரு காரணம் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. அந்தவிதமாய்ப் பாதிக்கப் பட்ட அந்த மக்கள் இன்னோர் இனத்தின்மீது இப்படிப்பட்ட கொடூரங்களை நிகழ்த்துவது யதார்த்தமற்ற கொடுங்கோன்மை.

இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு “பாலஸ்தீனம்; நம்மால் என்ன செய்ய முடியும்?” நூல் நேர்மையான முறையில் பதிலுரைக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகால பாலஸ்தீன வரலாற்றை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்.

இ.பா.சிந்தன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? (Palastheenam Nammal Enna Seiyya Mudiyum) புத்தகம்

”கடவுளின் கதை” என்ற ஆய்வு நூலில் தோழர் அருணன் பதிவிட்டிருக்கும் ஆதாரக் குறிப்புகள் முக்கியமானவை. நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ஆப்ரஹாம் என்ற இறைத்தூதர் தலமையிலான குழுவினர் முதலில் எகிப்தியப்பிரதேசத்தில் குடியேறினர். அவர்களுக்குள் இருந்த மோசஸ் என்ற யூதரைத் தனியாகப் பிரித்து இறைவன் வேறு நிலத்தைக் காட்டி அங்கு குடியேறச் சொன்னார். சுமார் 38 ஆண்டுகள் நடந்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் மோஸஸும் அவர் குழுவினரும். அதுதான் யூதர்களின் ஆதிநிலம் என்று வாதிடப் படுகிறது., யூத இறை நூலாகிய டோராவும் அப்படித்தான் குறிப்பிடுகிறது. அங்கு வாழ்ந்த பழங்குடியினருக்கும் மோஸஸ் குழுவினருக்கும் இடையில் நிகழ்ந்த போரின்போது இறைவன் அசரீரியாக வாக்குக் கொடுத்தார். “உனக்கு எதிரி எனக்கும் எதிரி; நீ நிறுவும் சாம்ராஜ்யத்தை நான் காப்பாற்றுவேன்.”

இப்படியான புராணக் கதையின் வழியாகத்தான் யூத இனம் இந்த நிலத்தின்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ”எங்கள் இறையாண்மை இரண்டாயிரம் ஆண்டுப் பழமையானது” என்று வாதிடுகிறது. எங்கெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் அடாவடித்தனத்தை நிறுவ முயல்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குத் தோள் கொடுத்து நிற்கின்றன புராணங்கள்.

பாலஸ்தீன நிலத்துக்குள் யூதக் குடியேற்றம் நிகழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் “இஸ்ரேலின் தந்தை” என்று இன்றைக்கும் போற்றப் படுகிற தியோடர் ஹசல் என்ற பத்திரிகையாளர். யூதர்கள் உலமெங்கும் பரவி, வட்டித் தொழில் செய்து பெரும் செல்வந்தர்களாய் மாறியிருந்த நிலையில் அவர்களின் வணிகம் செழிக்கவும், தமது செல்வத்தை ஒரு நிலத்தில் நின்று சேமிக்கவும் அவர்களுக்குச் சொந்த வீடு (நிலம்) தேவைப்பட்டது. அதைக் கண்டடைவதற்கான பயணத்தைத் தொடங்கியபோது அவர் சிந்தனைக்குள் உதயமானது “சியோனிசம்” என்ற ஆக்கிரமிப்புத் தத்துவம். ஏனென்றால் நேர்பாதையில் சென்று ஒரு நிலத்தை அபகரித்துவிட முடியாது என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். யூதம் என்பது வெறும் மதம்தான். சியோனிசம் ஓர் இனவெறித் தத்துவம். அடுத்தவ்ர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அங்கே யூதர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்கான ராஜதந்திரக் திட்டம்.

சர்வதேச சியோனிச அமைப்பை உருவாக்கி, யூத இனத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்களை உறுப்பினாராக்கி, மாநாடுகள் நடத்தி யூத தேசம் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்தார் தியோடர் ஹசல். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் உலகில் ஏதாவது ஒரு நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைத்த போது அர்ஜண்ட்டினா, உகாண்டா போன்ற நாடுகளைக் குறிவைத்தனர். ஆனால் அவர்களின் புராணக் கதைப்படி பாலஸ்தீனம்தான் ஏற்றதாய் இருந்தது. ஒரு குழுவை அமைத்து பாலஸ்தீனத்தின் எந்தப் பகுதிஅயைத் தன்வசப் படுத்தலாம் eன முதலில் ஆய்வு செய்தனர். அந்தக் குழு பாலஸ்தீனப் பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்து “பெண் அழகாகத்தான் இருக்கிறாள்; ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்றது. (அதாவது அந்த நிலம் எனும் பெண் வேறொருவருக்குச் சொந்தம்.”) இருக்கட்டும்; திருமணம் ஆனவளாய் இருந்தால் என்ன? நமக்குத் தேவை அவள் மேனிதானே?” என்றது சியோனிசக்குழு.

சியோனிச உறுப்பினர்கள் அனைவரும் செல்வச்சீமான்களாய் இருந்தபடியால் பணம் கொடுத்து நிலங்களை விலைக்கு வாங்கினர். மோரிஸ் என்ற யூதப் பெரும் பணக்காரர் தனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதியைப் பாலஸ்தீனத்தில் முதலீடு செய்தார். அவரைப் போலவே எட்மண்ட் ஜேம்ஸ் ரோத்ஸ் சைல்ட் என்பவரும் தன்னிடமிருந்த முழுப் பணத்தையும் பாலஸ்தீனப் பகுதியில் நிலங்கள் வாங்கவும் தொழில் முதலீடு செய்யவும் பயன்படுத்தினார். ஐம்பதாயிரம், ஒருலட்சம் ஏக்கர்கள் என நீண்ட நெடிய நிலப்பரப்பை வாங்கிக் குவித்தது சியோனிச அமைப்பு. “என் நிலம்; என் சுதந்திரம்” என்ற கோட்பாட்டின்படி அந்த நிலத்துக்குள் பாலஸ்தீனியர்கள் யாரும் புகுந்துவிடாதபடி வேலி அமைத்துப் பாதுகாத்தனர் என்பதோடு யூத இனத்தைச் சேர்ந்த பொதுமக்களை அந்த நிலங்களில் குடியமர்த்தினர். பெரும் நிலப்பரப்பு வேளாண்மை செய்வதற்கானதாய் மட்டும் இருந்தால் அதை ஒரு தேசமாக உருவாக்க முடியாது என்ற ஆக்கிரமிப்பு நோக்கச் சிந்தனையோடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அதில் வெற்றியும் கண்டனர். அதாவது பண்ணை நிலங்கள் குடியேற்ற நிலங்களாய் மாற்றப் பட்டன.

இஸ்ரேல் என்ற தேசம் உருவாவதற்குமுன் பாலஸ்தீனம் பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜார் ஆட்சியின்கீழ் இருந்த ரஷ்யா ஆகிய நாடுகளின் காலனிகளாய் இருந்தது. மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்த நிலப் பகுதியில் செல்வாக்கு செலுத்தியபோது சியோனிசவாதிகளுக்கு உள்ளே நுழைய இடம் தந்தனர் என்பது முக்கியக் குறிப்பு.

1915ல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த வேளை, இங்கிலாந்தில் சாமுவேல் என்ற யூதர் அமைச்சர் பொறுப்பில் இருந்தார். எகிப்து நிலத்தை ஆண்டுகொண்டிருந்த ஒட்டாமன் பேரரசை ஆக்கிரமிப்புச் செய்ததோடு பாலஸ்தீனத்தையும் அந்த எல்லைக்குள் கொண்டு வரவேண்டும் என்று திட்டம் போட்டார். 1915ல் “பாலஸ்தீனத்தின் எதிர்காலம்” என்று ஓர் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அளித்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரட்டனும் ஃப்ரான்ஸும் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்தனர். அதற்கு “சைக்ஸ் பிகோத் ஒப்பந்தம்” என்று பெயர். மத்திய கிழக்கு நாடுகளின் வரைபடத்தையே மாற்றியமைத்தது அந்த ஒப்பந்தம் அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பிரிட்ட்ன் அயல்துறைச் செயலாளர் பெல்ஃபேர் என்பவரின் பெயரால் அந்தப் பிரகடனம் அழைக்கப் பட்டது. அதில் “புதிய இஸ்ரேல் தேசம் அமைத்துத் தரப்படும்” என்ற வாக்குறுதி இருந்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட சில நாட்களில் ஜெருசலத்தை ஆக்கிரமித்தது பிரிட்டன். அதுநாள்வரை அந்தப் பகுதியில் வெறும் பத்தாயிரம் யூதர்கள் மட்டுமே வாழ்ந்திருந்தனர். பிரிட்டிஷ் ஆக்கிரமிக்குப் பிறகு ஒரு வருடத்துக்குள் ஐம்பதாயிரம் யூதர்கள் குடியமர்த்தப் பட்டனர். இப்படித்தான் சிறிது சிறிதாக செயற்கையான முறையில் யூத ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியவாதிகளால் நிகழ்த்தப் பட்டது. ஆக்கிரமிப்பு என்பது காலனித்துவத்துவச் சிந்தனையின் முன்முகம் ஆகும் என்பதைக் காண முடிந்தது.

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த யூதரான வின்கேட்ஸ், 1936ல் பாலஸ்தீனப் பகுதிக்கு ராணுவ ஜென்ரலாகப் பொ|றுப்பேற்றார். யூத தேசம் அமைய தான் முழு உதவி செய்வதாக சியோனிசவாதிகளிடம் வாக்குறுதி தந்ததோடு, ராணுவப் பயிற்சியும் அளித்தார். ஆயுதங்கள் வாங்க நிதியுதவி செய்தார். வின்கேட்ஸிடம் பயிற்சி பெற்ற சியோனிசவாதிகள் “ஹகன்னா படைப்பிரிவு” என்று அழைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் பின்னாளில் யூத நாடு அமைக்கப் பட்டபோது, இஸ்ரேல் ராணுவத்தின் உயரதிகாரிகளாய்ப் பதவி வகித்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெரும் வல்லரசாக உருவெடுத்த அமெரிக்காவும் சியோனிசவாதிகளுக்கு ஆதரவளித்தது. பிரிட்டன் பாலஸ்தீனப் பகுதியில் இருந்து வெளியேறினால் முழு ஒத்துழைப்புத் தருவதாக வாக்களித்தது. ஐம்பது வருடங்களாக ஆதரவும் உதவியும் செய்துவந்த பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்காவின் கருத்தை ஆதரித்தனர். டேவிட் பென் குரியன் என்ற சியோனிசத் தலைவர்/ (இஸ்ரேல் தேசம் அமைக்கப்பட்ட போது முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.) ஒரு மாநாட்டை அமெரிக்காவில் நடத்தி அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஆதரவளித்தார்.

பிரிட்டன் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறியபின், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, 1947ல் ஐநா சபை கூடி, பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிப்பது என முடிவெடுத்தது. ஐநா சபையில் பொதுக் குழு உறுப்பினர்களில் இந்தியா உட்பட 13 நாடுகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்க, 33 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. பாலஸ்தீன மக்களைக் கேட்காமல் இந்த முடிவு அமல்படுத்தப் பட்டது. ஆம்! காசாவின் ஒரு பகுதி, ஜோர்டானின் மேற்குப் பகுதி, ஜெருச்லேம் உள்ளிட்ட நிலங்கள் பிரிக்கப் பட்டு, இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது ஐநா சபை. 1948ல் இஸ்ரேல் நாடு உருவானது.

இன அழிப்ப்பு என்பது மக்களைக் கொன்று குவிப்பது மட்டுமல்ல; மக்களை ஒட்டுமொத்தமாக அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அப்புறப் படுத்துவது, அவர்கள் வாழ்ந்த இடத்தின் வரலாற்றை அழிப்பது, நிலம் இழந்த மக்கள் மீண்டும் அங்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்வது. இவைதான் இன அழிப்பின் மூல மந்திரங்கள். அமெரிக்க ஆதரவுடன் சியோனிசவாதிகள் கச்சிதமாக இதை நிறைவேற்றினர்.

பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேல் மலர்ந்தது.

இப்போது பாலஸ்தீனம் என்ற இறையாண்மை மிக்க நாட்டின் நிலப் பகுதி மூன்றாகப் பிரிந்து இஸ்ரேல் நாட்டின் எல்லைப் பகுதியாய் வளையமிடப்பட்டுள்ளது. (1) காசா பாலஸ்தீனர்கள், (2) மேற்குக்கரை பாலஸ்தீனர்கள், (3) இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் என்று மூன்று நில மக்களாய்ப் பிளவுண்டு கிடக்கின்றனர். இஸ்ரேலின் சம்மதமின்றி அவர்கள் தொழில் செய்யவோ படிக்கவோ பண்பாட்டு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவோ இயலாத நிலை உள்ளது. அதாவது வீட்டுக் காவல் கைதிகள் போல நிலக் காவல் கைதிகளாய் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சுருங்கச் சொன்னால் பாலஸ்தீனம் இஸ்ரேலின் நிலப் பகுதியாய் மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஹமாஸ் இயக்கத்தின் கோபத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீறுபூத்த நெருப்பாய்க் கனன்றுகொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களின் போராட்ட உணர்வு நிச்சயம் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கையை “பாலஸ்தீனம்; நம்மால் என்ன முடியும்?” என்ற இந்த நூல் விதைக்கிறது. நிச்சயம் முளைவிட்டு சிறு விருட்சமாய்த் தழைத்துப் பெருமரமாய் வளரும் என நம்பலாம்.

நூலின் விவரங்கள்:

நூல் : பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 144
விலை: ரூ.140
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர்: 

தேனிசீருடையான்

*****************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *