நூல் அறிமுகம் : இ.பா.சிந்தனின் பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – இரா.சண்முகசாமி
நூல் : பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் 
ஆசிரியர் : இ.பா.சிந்தன் 
விலை : ரூ. 160/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

1948லிருந்து பாலஸ்தீனத்தை அமெரிக்காவினுடைய ஆதரவோடு சீரழித்து வரும் இஸ்ரேலின் கொடூர பக்கங்களை வரலாற்றுடன் சினிமாவையும் இணைத்து எழுதப்பட்ட நூல்தான் இந்நூல்.

அப்பப்பா எவ்வளவு நுணுக்கமான பதிவுகள்! ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! நல்வாழ்த்துகள்!!

ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதைய நாம் படித்திருப்போம். ஆனால் எல்லாவற்றையும் முழுங்கி ஏப்பம் விட்ட ஒரு பிடாரி இருக்கிறதென்றால் அது கொடூர வில்லன் இஸ்ரேல் தான். ஆம் பாலஸ்தீன நாட்டை முழுவதும் ஆக்கிரமித்து இன்று இஸ்ரேல் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

பாலஸ்தீன மக்களை அவர்களின் வீடுகளிலேயே தடுப்பு சுவர்களை உருவாக்கி மக்களை நடமாட விடாமல் தடுத்து அட்டூழியங்களை செய்து வரும் இஸ்ரேல் குறித்து நிறைய பாலஸ்தீன படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆசிரியர் கண்டு நமக்கு மிக விரிவானது ஒரு பதிவை வழங்கி இருக்கிறார்.

நம் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு செக்போஸ்ட் இருந்தால் எப்படி இருக்குமோ அதைவிட கொடூரமான தடுப்புகள் தான் பாலஸ்தீன மக்களிடையே இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. இதைப் படிக்க படிக்க நமக்குப் பதற்றம் தான் வருகிறது.

உலக நாடுகள் ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினாலும் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை கொண்டு தடுத்து விடுகிறது. தற்போது வரை இதுதான் நிலைமை.

சோதனைச் சாவடியில், வீடுகளில், தெருவில் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொள்ளலாம் கேட்பதற்கு ஆளில்லை. குழந்தையுடன் தாய் சென்றால் தாய்க்கு மட்டும் அனுமதி குழந்தைக்கு இல்லை. அல்லது குழந்தைக்கு மட்டும் அனுமதி தாய்க்கு இல்லை. ஒருவர் காலையில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும்போது திரும்புவதற்கு அனுமதி இல்லை. “ஐயோ என் வீடு பக்கத்தில்தான் இருக்கு வேறு எங்கும் எனக்கு வீடு இல்லை நான் என்ன செய்வேன்” என்று ஒருவர் புலம்பினாலும் பயனில்லை. அத்துடன் அவருக்கான வீட்டின் உறவு துண்டிக்கப்படும். சோதனைச்சாவடியில் பல நாட்கள் உட்கார்ந்து பட்டினி கிடந்து பிற்பாடு அனுமதி கிடைத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. பள்ளிக் குழந்தைகளை வாகனத்திலிருந்து இறக்கி அவர்களைக் கால்கடுக்க நிற்க வைத்து சோதனை செய்த கொடூரம் நடந்துள்ளது. துயரங்கள் சொல்லில் அடங்காது.

இப்படிப்பட்ட நிலைதான் தற்போது வரை பாலஸ்தீனத்தில் உள்ளது. இதை நமக்கு சர்வதேச ஊடகங்கள் சொல்வதே இல்லை. ஏனெனில் அவை அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளாக பாடுபட்டு வளர்த்த விவசாய நிலங்களை ஒரு நொடியில் பறித்து விடுகிறான் இஸ்ரேல் என்னும் ரவுடி. வீட்டு வாசற் படியில் இருந்து தோட்டத்தில் கால் வைக்க முடியாது குறுக்கே தடுப்பு சுவர். குழந்தைகளுக்கு கல்வி இல்லை கேட்பதற்கு நாதியில்லை. இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 50 இனவெறி சட்டங்களை போட்டுள்ளது என்றால் எவ்வளவு கொடூரம். அதுவும் ஆவணமாக உள்ளது. கொடூரங்களை சொல்லி மாலாது.

இந்நூலை வாசிக்கும்போது நமக்கு இஸ்ரேல் மீது பயங்கர கோபம் வரும். அதை நாம் உணர்வோம்.

இந்நூல் 2016இல் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனத்தில் இன்றுவரையும் நிலைமை அப்படியே தான் உள்ளது. அமெரிக்கா இன்று இஸ்ரேலை தூண்டிவிட்டு கொண்டிருக்கிறது. நாளை அது நமக்கு எதிராக ஏன் வேறு நாட்டை தூண்டிவிடாது. அமெரிக்கா எங்கெல்லாம் கால் வைக்கிறதோ அங்கெல்லாம் அந்த நாடு அழிவில் தான் முடிகிறது. நமது உலகம் பரிணாம வளர்ச்சியில் காட்டுமிராண்டியிலிருந்து நவீன உலகத்துக்கு மாறியது. ஆனால் தற்போது அகதிகளை உருவாக்கும் நவீன காட்டுமிராண்டியாக மாறியுள்ளது. இந்நூலை எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்கள் முழுக்க முழுக்க தரவுகளை திரட்டி நமக்கு வழங்கியுள்ளார். அவர் பார்த்த பாலஸ்தீன படங்கள் 147. அதற்கான பதிவுகளையும் திரைப்படங்களின் பெயர்களையும் வழங்கியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் அழிவு மிக கொடூரமானது. இன்று உலகம் அமைதியாக இருந்தால் நாளை பூமியே அகதியாக மாறிவிடும் அபாயம் ஏற்படும். எனவே கார்ப்பரேட் அமெரிக்க ஒற்றை துருவத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். இது காலத்தின் கட்டாயம். தோழர்கள் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம் விவாதிப்போம் தோழர்களே!

இரா.சண்முகசாமி 
புதுச்சேரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.