நூல் அறிமுகம்
பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும் (கட்டுரை நூல் )
ஆசிரியர்: இ.பா. சிந்தன்
பக்கம் – 144
விலை – 140
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
வடுக்கள் நிறைந்த வரலாற்றை சுமந்தலைந்தவர்கள், அதிலிருந்து பாடமேதும் கற்காமல், ஏதிலிகளின் பூர்வகுடி நாடொன்றை கைப்பற்றி, உலகப் போரில் தான் பெற்ற அத்தனை துயரங்களையும் அடுத்த நாட்டவர் மேல் பிரயோகித்து, நினைவில் காடுள்ள மிருகம் போல் நடந்து கொண்டு, பாலஸ்தீனர்களின் நாட்டை திருடும் யூதர்களின் வரலாறும், பரிதாபகரமான பாலஸ்தீனர்களின் நாடிழந்த துயரமும், சிறிய கட்டுரைகளில் வலிமையான வார்த்தைகளில் எளிமையாக யாவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளார் தோழர் இ.பா. சிந்தன் அவர்கள்.
வீடுகளில் தெருக்களில் நடக்கும் சண்டைகள் கூட மனிதர்களை கலவரப்படுத்தி விடும் சூழலில், இழந்த நாட்டை மீட்கவும், பறித்த நாட்டை தக்க வைக்கவும், நடக்கும் போராட்டம் நூற்றாண்டுகளை கடந்தும் நடந்து கொண்டிருக்கும் துயரம் என்பது மிகக் கொடியது. பொதுவாகவே என்ன காரணங்கள் சொல்லி நடந்தாலும் யுத்தம் என்பதை நாகரீகத்தின் உச்சம் நோக்கி பயணிக்கும் எந்தச் சமூகமும் அனுமதிக்காது. தனக்கு நாடில்லை என்பதற்காக அப்பாவி பாலஸ்தீனத்தை அபகரிப்பதும், தனக்கு பின் புலமாக ஏகாதிபத்திய அரசுகள் இருப்பதால், எளியவர்களின் அரசுகளை பயமுறுத்துவதும், உவப்பான செயலன்று. இன்று இஸ்ரேலின் அமெரிக்க முதுகெலும்பை உருவி எறிந்தால், இஸ்ரேல் ஒன்றுமில்லாமல் உதிர்ந்து விடும். புத்தியை கடன் கொடுத்த பாலஸ்தீனத்தின் நிலையென்பது, கூடாரத்திற்குள் ஒட்டகம் நுழைந்த கதைதான். இன்று தன் இருப்பிடத்தை இழந்து சொந்த நாட்டிற்குள் அகதியைப் போல் அலைந்து கொண்டிருக்கின்றது. சொந்த தேசத்து மக்களை காவு கொடுத்து, ரத்தமும் சதையுமாக தன் வரலாற்றை நெடுங்காலமாக எழுதிக் கொண்டிருக்கின்றது, சர்வதேச சமூகமோ வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று வாய்பொத்தி கை மூடி நிற்கிறது.
ஒரு இனவெறியால் பாதிக்கப்பட்ட யூத சமூகம், ஜியோனிச இனவாத கருத்தை மூளைக்குள் ஏற்றுக் கொண்டு இனவெறி வேட்டையாடுவதை சகிக்க முடியவில்லை. தான் இழந்ததாக நம்பப்படும், தன் ஆதி மூதாதையரின் நிலம் தேடி பல்வேறு சூழ்ச்சித்
திறங்களுடன், தனது புனித பூமி எனக் கருதப்படும், ஜெருசலத்தின் அருகில் உள்ள பாலஸ்தீனத்தை, அந்த நாட்டை ஆண்டவர்களின் நிர்வாக திறமையின்மையால் கொஞ்சம் கொஞ்சமாக களவாடி, தனக்கொரு புதிய நாடாக அறிவித்துக் கொண்டு இன்றுவரை யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருவதை, ஆதியில் இருந்து இன்று வரை அங்கு நடைபெற்று வரும் அநீதியை அனைவரும் எளிதாக அறிந்துகொள்ளும்
வண்ணம் எளிமையாக எழுத்தில் செய்திருக்கிறார் தோழர் சிந்தன் அவர்கள்.
இந்திய மக்களாகிய நாம் யுத்தத்தை எதிர்த்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கோடிட்டு காட்டியுள்ளார். மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது எதிர்ப்பு என்பது உலகை மெல்ல அசைக்க வல்லது என்று நூலாசிரியர் கருதுகிறார். ஆனால் இந்திய ஆளும் வர்க்கமோ மெல்ல மெல்ல பாசிச நிலை நோக்கி நகர்கையில், பெரியளவு வினைபுரிய வேண்டுமெனில் ஒட்டுமொத்த இந்தியச் சமூகமும் கிளர்ந்தெழுந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
ஹமாஸ் இயக்கத்தை பற்றி சொல்லும் சிந்தன், பாலஸ்தீன விடுதலை இயக்க போராளி யாசர் அராபத்தை அவரின் இயக்கச் செயல்பாட்டை போகிற போக்கில் சொல்லிச் சொல்கிறார். கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் ஒரு காலத்தில் போராளிக் குழுக்களின் ஆதர்ச கதாநாயகனாக திகழ்ந்தவர் யாசர் அராபத். ஹமாஸ் இயக்கத்தின் முன் யோசனையற்ற செயல்பாடுகளால் பாலஸ்தீனர்கள் இழந்தது இன்னும் அதிகம். பாலஸ்தீனர்கள் என்று நாட்டின் அடையாளத்தை குறிப்பிடும் கட்டுரையாளர் இஸ்ரேலை யூதர்கள் என்று மத அடையாளத்துடன் சுட்டுகிறார். பாலஸ்தீனத்தை சுற்றி சுற்றி இஸ்லாமிய நாடுகளே இருந்த போதும் அவர்களும் அமைதி காப்பதின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.இஸ்ரேல் அபகரித்த பாலஸ்தீனத்தின் வரைபடத்தை பின்னட்டையில் வண்ணத்தில் தந்திருந்தால் வாசகர்கள்அதன் விபரீதம் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார்கள். 13 கட்டுரைகளில் சர்வதேச பிரச்சனையை யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமை படுத்தி தந்த சிந்தன் அவர்கள் பாராட்டிற்குரியவர்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.