நூல் அறிமுகம்: நெருக்கடியில் பாலஸ்தீனம் (நோம் சாம்ஸ்கி கட்டுரைகள், நேர்காணல்கள்) – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: நெருக்கடியில் பாலஸ்தீனம் (நோம் சாம்ஸ்கி கட்டுரைகள், நேர்காணல்கள்) – இரா.சண்முகசாமிநெருக்கடியில் பாலஸ்தீனம்
(நோம் சாம்ஸ்கி கட்டுரைகள், நேர்காணல்கள்)
ஆசிரியர் : கலைவேலு
வெளியீடு : செஞ்சோலை
ஆண்டு : 2020
விலை : ரூ 180
பக்கம் : 196

*பாலஸ்தீனர்களுக்கு எதிரான அமெரிக்க-இசுரேல் யுத்தம் குறித்த சிந்தனைகள்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக இசுரேல் என்னும் நாடே கிடையாது. ஜெர்மனியில் யூதர்கள் நசுக்கப்பட்டபோது அவர்கள் பல நாடுகளில் சிதறுண்ட காலத்தில் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்கிற நிலையில் 1917 முதல் 1948 வரை பிரிட்டன் கீழிருந்த பாலஸ்தீனம், 1948 மே 14ல் பிரிட்டன் வெளியேறிய மறுநாளே இஸ்ரேல் என்னும் நாடு அறிவிக்கப்பட்டது.

அதுமுதல் இஸ்ரேல் படிப்படியாக பாலஸ்தீனத்தை சுரண்டி அடக்கி ஒடுக்கி இன்று பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே வரைபடத்தில் இல்லை என்கிற நிலை வரை அமெரிக்க ஏகாதிபத்திய வல்லூரின் துணையோடு இஸ்ரேல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருகிறது. வளமிக்க பாலஸ்தீன மக்கள் இன்று வீடிழந்து, நிலமிழந்து அடுத்தவேளை உணவுக்காக பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு தொழிலையும் செய்யவிடாமல் கடற்பரப்பும் பிடுங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா நல்லெண்ண அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் ஏற்பாட்டையும் சிதைத்து அவர்களை நிர்க்கதியாய் ஆக்கியுள்ளன அமெரிக்க இஸ்ரேல்.

இது குறித்து உலக நாடுகளின் போக்குகளையும், அரபு நாடுகள் உள்ளிட்ட அனைத்தின் நிகழ்வு போக்குகள் குறித்து கட்டுரையாகவும், பிரபல பத்திரிகைகளின் நேர்காணல் வழியிலும் மிகத்துல்லியமாக பொருளாதார அறிஞர் நோம் சாம்ஸ்கி அவர்கள் வழங்கிய கருத்துக்களின் தொகுப்பு தான் இந்நூல்.

பாலஸ்தீன மக்களை அப்புறப்படுத்த, அழிக்க அமெரிக்கா சகலவித ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கி கொத்துக்கொத்தாக அவர்களை கொன்று வருகிறது. சண்டை என்றால் அதற்கான வரைமுறை இருக்கும். பாலஸ்தீனத்தில் எதுவுமே இல்லை. குழந்தைகள் பிணமாக தெருக்களில் விழுந்து கிடப்பர். மருத்துவமனைகள் குறிவைத்து தாக்கப்படும். பாஸ்பரஸ் குண்டுகள் போடப்படும். அது உடம்பில் படும் இடங்களில் கற்பூரம் போல் நின்று எரிந்து எலும்புகள் வரை உள் சென்று அப்போதும் அது எரியும். அதற்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேல் மத போதகர்கள் பாலஸ்தீன குன்றுகளில் ஏறி நின்று இஸ்ரேல் ராணுவம் அழிக்கும் வேலையை கண்டு அருகிருந்து ரசிக்கும். சரியான இலக்கை தாக்கினால் கைக்கொட்டி சிரிப்பர், ஆர்ப்பரிப்பர். இலக்கு தவறினால் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை சபிப்பார்கள். இது பார்ப்பதற்கு விளையாட்டு மைதானத்தில் ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை கண்டு ரசிப்பது போன்ற காட்சிகள் நினைவுக்கு வரும்.அமெரிக்க ரவுடிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அதற்கு கைமாறாக அனைத்து வளங்களும் சுரண்ட அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து லெபனான் மற்றும் சுற்றியுள்ள நிலப்பரப்புகளை கபளீகரம் செய்ய ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா என்ன செய்தி சொல்கிறதோ அதுதான் உலக நாடுகளுக்கு செய்தி. இன்று இஸ்ரேல் அதற்கு தேவை. நாளை அது தேவையில்லை என்று ஆனால் உடனே இஸ்ரேலை ஒன்று அழிக்கும் அல்லது பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு அல்லது பாலஸ்தீனத்தோடு அனுசரித்து போ என்று இப்படி எப்படி வேண்டுமானாலும் அமெரிக்கா சொல்லும். ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன் போன்றவை அமெரிக்கா என்னும் எஜமானன் சொல்வதைக் கேட்டு அடங்கிப் போகும். இவ்வாறு உலக நாடுகளை அமெரிக்கா செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இவற்றையெல்லாம் நாடித்தடிப்பை சரியாக பார்ப்பது போல் ஒவ்வொரு நாட்டின் தன்மையையும் அது உலக நாடுகளோடு எப்படி உறவு கொண்டு இயங்குகிறது என்று மிக அழகாக ஆய்வு செய்து வழங்கிய கருத்துக்களே நோம் சாம்ஸ்கி இந்நூல் வழியாக நமக்கு வழங்குகிறார். ஐ.நா தலையாட்டி பொம்மை என்பது மீண்டும் இங்கே நிரூபனம் ஆகிறது.

ஒட்டகம் கூடாரத்துக்குள் முதலில் தலையை நீட்டிய போது தலை தானே என்று அலட்சியமாக இருந்தால் பின்பு கூடாரம் நமக்கில்லை என்பது போல, வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல் இன்று பாலஸ்தீனத்தை வெளியே தள்ளிவிட்டுள்ளது. நாளை அமெரிக்கா யாரை வெளியேற்றுமோ தெரியாது. அமெரிக்கா என்னும் கார்பரேட் ஏகாதிபத்திய ரவுடியை உலக நாடுகள் தாங்கிச் சென்றால் இன்று பாலஸ்தீனம் நாளை இந்திய நிலபரப்பும் காணாமல் போகலாம்.
பொதுவாக அகதிகளை உருவாக்கும் உலகமாக நமது பூமியை மாற்றி வைத்துள்ளது அமெரிக்கா. இவற்றை எப்போது நாம் வீழ்த்தப் போகிறோம்…. தற்போது இந்தியா பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு ஆதரவாக மோடி எடுத்திருக்கும் நிலை மிகவும் கவலையளிக்கிறது. நாம் பாலஸ்தீன மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மோடி இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று மனிதர்களை நேசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆசிரியர் கலைவேலு அவர்கள் மிக அழகாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். சில இடங்களில் இருக்கும் கலைச் சொற்களுக்கு இன்னும் எளிய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாத அளவிற்கு மிகச்சிறப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

பெரிய ரவுடி, சிறிய ரவுடி, அடிமை, தலையாட்டி பொம்மை, பார்வையாளர்கள் என பல நாடுகளின் வகைகளைக் காண அவசியம் இந்நூல் வாசிக்கப்பட, விவாதிக்கப்பட வேண்டும்.

வாசியுங்கள் நண்பர்களே!

வாசிப்போம்! விவாதிப்போம்!!

இரா.சண்முகசாமி
செல் எண் 9443534321Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *