காலைலயே கொஞ்சம் வெளில போக வேண்டியது இருந்தது. பைக் எடுத்தப்ப பெட்ரோல் பிளிங் அடிச்சது.. சரி போற வழில போட்டுக்குவோம்னு பங்க்குக்கு வண்டியவிட்டேன்…. ஒரு நாளு பேர் நின்னுட்டு இருந்தாங்க நானும் பின்னாடி நின்னேன்… எனக்கு முன்ன நின்ன ஒரு அங்கிள் முன்ன போமான்னு சொன்னாரு… இல்ல அங்கிள் நீங்க போடுங்க நான் அடுத்து போடுறேன்னு சொன்னேன்….. அவர்க்கு அதுல உடன்பாடில்லை … பொம்பளபிள்ளை நீ முதல்ல போட்டு கெளம்பு நிக்காதன்னு சொன்னாரு….
எனக்கு அவ்வளவு வெறி…. அவருக்கு அடுத்து பெட்ரோல் போட்டா எனக்கு அப்படி ஒன்னும் நேரம் ஆகிடப்போறதில்ல…. அப்படி அவர் விட்டு கொடுத்து நான் முன்னாடி போய் போட்டு நான் எதையும் சாதிக்கபோறதுமில்லை…. நானும் நீங்க போங்க முதல்ல நான் போட்டுக்குவேன்னு சொல்ல…. அவரும் விடாப்படியா நான் பொம்பள பிள்ளைக்கு விட்டு கொடுத்தே ஆவேன்னு நிக்க…. கடைசில பங்க்காரங்க வந்து நீங்க அந்த பக்கம் போங்க… அவங்களுக்கு இந்தபக்கம் போட்டுகுறோம் இரண்டும் ஒரே நேரம்தான் ஆகும்னு சொன்னப்பறம் மனசேயில்லாம முன்ன போனார்….. இதை ஏன் இப்ப சொல்றேன்னு நினைக்காதிங்க மக்கா….. இங்க பாலின சமத்துவம் எந்த அளவு பேசப்படுதோ அதே அளவு பேசப்படவேண்டியது பாலின சலுகைகள்….
நீ பொண்ணு அதனால முன்னாடி பெட்ரோல் போட்டு போ…. நீ பொண்ணு பஸ்ல நிக்கவேண்டாம் உட்கார்ந்துக்கோ….. நீ பெண்எழுத்தாளர் உனக்கு இந்த தளம்…. நீ பெண்வேலையாள் அதுனால ஆறுமணிக்கு மேல வேலைபார்க்க வேணாம்…. நீ பெண் போலிஸ் அதனால உனக்கு இந்த பணிலயிருந்து விலக்கு தாரேன்….. இதெல்லாம் சில நாள்களாய் என்னை சுத்தி வண்டா அரிக்குது…. கத்தனும்னு இருக்கு.. நாங்க கேட்குறது பாலின சமத்துவம் பாலின சலுகையில்லன்னு….
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு…. சலுகைங்குறது நீங்க பார்த்து எங்களுக்கு கொடுக்குறது… சமத்துவம்ங்குறது எங்களுக்கான உரிமை…. எதை ஒரு பெண் செஞ்சாலும் முன்னாடி ஒரு அடைமொழி கொடுக்கபடுது…. பெண் எழுத்தாளர், பெண் இயக்குனர், பெண் காவலர், பெண் வாகன ஓட்டுனர்….. இப்படி எல்லாத்துக்கும் முன்ன பெண் அப்படிங்குறது சொருகலா வந்து தொக்கி நிக்குது…… சமத்துவம்னு பேசுற பலரே இதை முன்மொழியுறது நடக்குது…..
பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை முற்போக்குதனமா நிறைய பேசப்படுது ஆனால் உண்மையில் இதுதான் பொதிந்திருக்கும் பிற்போக்கு தனம்…… சமீபத்துல அரசு பெண் போலிஸ் அதிகாரிகளுக்கு பந்தோபஸ்து பணியில் சலுகை அறிவிச்சாங்க… அப்ப பலரும் முக்கியமா பெண்ணியவாதிகள் பலரும் ஆதரிச்சோம்… சந்தோசப்பட்டோம்.. அப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவங்களோட அதிருப்தியை வெளியிட்டுருந்தாங்க… அதாவது பாலின அடிப்படையில் இப்படி பணியை பங்கிட்டு கொடுக்குறது பழமைவாதத்தை புகுத்துவது…. பெண்கள் பாதுகாப்பு பணில ஈடுபடும்போது ஏற்படும் குறைகளை கலையதான் முயற்சி எடுக்கணுமே தவிர அதுலயிருந்து விலக்கு கொடுக்குறது சிறந்ததல்லன்னு….
அதுவரை அந்த பணிச்சலுகை சரிதான்னு தோனுன எனக்கு அதற்கு பின் கொஞ்சம் எப்படி இந்த சலுகை சரியானதா இருக்கும்னு தோன தொடங்குச்சு…. இங்க பாலின சமத்துவத்துக்கும் பாலின சலுகைக்கும் வேறுபாடு தெரியாம பல பெண்களே பாலின சலுகைக்குதான் போராடுறோம்… பாலின சலுகைக்கும் பாலின பேதத்துக்கும் அதிக வேறுபாடு கிடையாது.. இரண்டுமே பிற்போக்கு தனம்தான்…. இப்பதான் கொஞ்ச காலமா வெளில வந்துருக்கோம்..
இப்ப மறுபடி பாலின சலுகைகளை கொடுத்து கொடுத்து முடக்கறத எப்படி ஏத்துக்கப்போறோம்… ஏன் பொண்ணுனா கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து பார்க்குற வேலைக்கு மட்டும்தானா…. இப்ப சம உரிமை சம ஊதியம்னு குரல் கொடுக்குற நாம் இந்த சலுகைகளை ஏத்துக்கிட்டா உரிமையை பெற முடியுமா…. இந்த வேலைக்கு இந்த சம்பளம்தான்னு பேசுனா என்ன செய்ய முடியும் நாம….
சலுகைக்காக யார்ட்ட போய் நின்னாலும் மரியாதை கிடைக்காது…. எல்லாம் எங்களால் முடியும்னுதானே நாங்க வெளில வாரோம்… அப்பறம் பெண் அப்படிங்குறதால கொடுக்கப்படும் சலுகைகள் எங்களோட திறைமையை குறைச்சு மதிப்பிடுறதில்லையா…. போட்டியே போட விடாம பரிசு கொடுக்குறதுதான் இந்த சலுகை…. ஆணும் பெண்ணும் சமம்ன்னுதான் நாங்க வாரோம்…. நீங்க பொண்ணுன்னு சொல்லி பாவம் பார்த்து கொடுக்குற சலுகைகள் எல்லாம் பழையபடி எங்களை முடக்கத்தான் செய்யும்….
பெண்களுக்கு பணியிடங்கள்ல கொடுக்கப்படுற சலுகைகள் அவங்களோட தகுதியை குறைக்கும்… கழிப்பறை பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பகால பிரச்சனை போன்றவை, இதுதான பெண்கள் பணியிடங்கள்ல சந்திக்கும் பிரச்சனைகள்….. அதை தீர்க்கதான் வழிபார்க்கணுமே தவிர… இதை காரணம் காட்டி அவங்களுக்கு சலுகைகள்ங்குற பெயர்ல ஒதுக்கக்கூடாது.
சுழற்சிமுறை வேலை கொடுக்கலாம்…. பணியிடங்கள்ல தேவையான வசதிகள் செஞ்சு கொடுக்கலாம்… சலுகைகள் வழங்குறதுக்கும்…. தீண்டாமைன்னு சொல்லி ஒதுக்குனதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல…. இதை பெண்களுக்கு பழக்கப்படுத்தி பெண்ணுரிமைக்கும் சலுகைக்கும் வித்தியாசம் இல்லாம போய்டுது…. இந்த சலுகைகள் எல்லாம் மறைமுக பிற்போக்கு தனம்தான்… இப்ப சலுகையா இருக்கும் பின்னாள்ல இதை காரணம் காட்டி மறுபடி முடக்க செய்ற சூழல் வரும்….
சலுகைகள் வேற…. உரிமைகள் வேற…. பாலினத்துல பேதமில்லை…. பாலின சமத்துவம் வேணும்னு குரல் கொடுத்து… என்னாலயும் எல்லாம் செய்யமுடியும்னுதான் போராடி போராடி வெளிலவந்துருக்கோம்…. அதையெல்லாம் சலுகைகள்ங்குற பெயர்ல குலைக்காதிங்க… குலைக்கவிடாதிங்க…. எங்களோட திறமை தகுதியை காட்டி நாங்க பெறும் வெற்றிதான் எங்கள் போராட்டத்தோட வெற்றி…. அதுயில்லாம சலுகைகளால எங்கள முன்னிறுத்துறது எங்களுக்கான தோல்விதான்….. எங்களுக்கு சலுகைகள் வேணாம் சமத்துவம் போதும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.