ஜானி ரோடாரி எழுதிய பளிங்கினால் ஆன சிறுவன் தமிழில் : ஆயிஷா இரா. நடராசன் : நூல் அறிமுகம்,புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (Books For Children) - https://bookday.in/

பளிங்கினால் ஆன சிறுவன் : நூல் அறிமுகம்

பளிங்கினால் ஆன சிறுவன் : நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : பளிங்கினால் ஆன சிறுவன்
(இத்தாலிய சிறார் கதைகள்)

ஆசிரியர் : ஜானி ரோடாரி

தமிழில் : ஆயிஷா இரா. நடராசன்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

விலை : ரூ. 50

பக்கங்கள் : 48

தான்யா என்ற சிறுமியின் தந்தை பியான்ச்சி. தன் வேலையின் காரணமாக உலகம் முழுக்க பயணித்தவருக்கு மகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. ஆகையால், தினமும் இரவு ஒன்பது மணிக்கு எங்கிருந்தாலும் மகளைத் தொலைப்பேசியில் அழைத்து ஒரு கதை சொல்வார். காசு போட்டு பேசக்கூடிய தொலைப்பேசி என்பதால், கதைகள் எல்லாம் ஒரு காயின் போட்டு பேசும் அளவிற்கு இருக்கும். இந்த கதைகளெல்லாம் பின்னாளில் “தொலைப்பேசி கதைகள்” என இத்தாலிய சிறார் எழுத்தாளர் ஜானி ரோடாரி என்பவரால் எழுதப்பட்டு 1962 இல் நூலாக வெளிவந்தது.

மொத்தம் ஏழு கதைகள். ஏழு கதைகளும் மிக அருமையான கதைகள். கற்பனைகளும், உண்மைகளும் இப்படி கலந்து கதைகள் ஆனால் தானே படிக்கும் நமக்கும் ஒரு நல்ல நூலை படித்தோம் என்ற திருப்தியும், சிறார்களுக்கு நிச்சயமாக பரிசாகக் கொடுக்கலாம் என்ற எண்ணமும் தோன்றும்.

ஒரு நல்ல நூலை சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள்.

‘சின்ன வெங்காயம்’ என்ற கதையில், காய்கறிகள் எல்லாம் இப்பொழுது சுதந்திரமாக இருக்கின்றன. ஆனால், முன்பு அப்படி இல்லையென காய்கறிகளுக்குள்ளும் சண்டை நடந்ததாம். ராஜா மந்திரி என ஆட்சி இருந்ததாம். நிறைய கடத்தல், கடுங்காவல் சிறை தண்டனை, காய்கறிகளை அழுக வைத்து கொன்றுவிடுவது என பல கொடுமைகள் நடந்ததாம். ஒரு நாள், அப்பா வெங்காயத்தை சிறைபிடித்து சென்றுவிடுவார்கள். அவரை பார்க்க சின்ன வெங்காயம் செல்லும் போது, அப்பா வெங்காயம் சொல்லும்,

ஜானி ரோடாரி எழுதிய பளிங்கினால் ஆன சிறுவன் தமிழில் : ஆயிஷா இரா. நடராசன் : நூல் அறிமுகம்,புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (Books For Children) - https://bookday.in/
ஆசிரியர் : ஜானி ரோடாரி

“சிறைச்சாலை என்பது கொலையாளிகளும், மக்களை கொள்ளை அடிப்பவர்களும் இருக்க வேண்டிய இடம். ஆனால் அவர்கள் எல்லோரும் வெளியே இருந்தார்கள். அப்பாவிகளும், அக்கிரமத்தை தட்டி கேட்டவர்களும் சிறையில் இருந்தார்கள்” என கூறும்.

அதன் பிறகு, சின்ன வெங்காயம் தன்னைப் போன்ற பாதிக்கப்படுபவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ராஜாவான எலுமிச்சையையும், தளபதியான தக்காளியையும் எதிர்த்து நிற்பார்கள். இறுதியாக வெங்காயமும், நண்பர்களும் கோட்டையைப் பிடித்து ‘அனைவரும் சமம்’ என்று எழுதப்பட்ட கொடியைப் பறக்க விடுவார்கள். அதன் பிறகு அங்கு கோட்டையும் இல்லை. அதிகாரமும் இல்லை. எல்லா காய்கறிகளும் சுதந்திரமாக இருந்தார்கள் என்ற கதையை முழுமையாக வாசித்தாலே அதன் கரு புரியும். ஒரு கதைக்குள் அரசியல், இனப்பாகுபாடு, அடக்குமுறை, போராட்டம், உரிமைக்கு குரல் கொடுத்தல் போன்றவற்றை சொல்லியவிதம் மிக மிக அருமை.

‘எங்குமே போகாத பாதை’ என்ற கதை ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய கதை. இதில் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை யார் முதலில் பயன்படுத்திக் கொள்கிறார்களோ! அவர்கள் ஜெயித்து விடுவார்கள். ஆனால், அப்படி வரும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஜெயித்தவனை பார்த்து அதே பாதையில் பின்தொடர்ந்து சென்றால் தோல்விதான் மிஞ்சும் என்றும்,

“உலகில் மாபெரும் ஆச்சரியங்கள் எல்லாம் முதன் முதலில் முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்” என்பதை உணர்த்தும் கதை.

‘கூர்முனைகள் இல்லாத நகரம்’ என்ற கதையில் கூர்முனைகளே இல்லாத ஒரு கற்பனையான நகரத்திற்குள் யார் ஒரு சிறிய தவறை செய்தாலும் காவலர், தவறு செய்தவரை தண்டிக்க மாட்டார். தவறு செய்தவர்தான் காவலரைத் தண்டிக்க வேண்டும். அதன் காரணமாகவே யாரும் அங்கு தவறு செய்வதில்லை. காரணம், எந்த குற்றமும் செய்யாதவரை அடிக்க வேண்டுமே என மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வதாய் ஒரு கதை.

மேலும், ‘பிரீஃ ப், பிராஃப், புரூஃ ப்’ என்ற கதை சிறார்கள் உருவாக்கும் புதுவிதமான விளையாட்டாகத் தொடங்கினாலும், தனித்து வாழும் தாத்தா, பாட்டி பேசிப் உரையாடி கொள்வதற்கான நம்பிக்கை வார்த்தையாக அமையும் கதை.

ஜானி ரோடாரி எழுதிய பளிங்கினால் ஆன சிறுவன் தமிழில் : ஆயிஷா இரா. நடராசன் : நூல் அறிமுகம்,புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (Books For Children) - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

‘கைத்தடி ரேஸ்’ என்ற கதையில் கிளாடியோ என்ற சிறுவனுக்கு அவ்வழியாக சென்ற ஒரு முதியவரால் ஒரு மேஜிக் கைத்தடி கிடைக்கும். பிறகு அந்த கைத்தடி குதிரை, மிதிவண்டி, ரேஸ் கார், ராக்கெட் என்று ஒவ்வொன்றாக மாறிய பின்பு, அந்த கைத்தடியை வாங்க தாத்தா வருவார். கைத்தடியை தர மனமில்லாத அந்த சிறுவனுக்கே அதை பரிசாகக் கொடுத்துவிடுவார் தாத்தா. சிறுவனுக்கோ பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி! முதியவருக்கோ பரிசு கிடைத்ததும் அச்சிறுவனின் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்ததில் மகிழ்ச்சி!

‘டிங் டாங் யுத்தம்’ மிகப்பெரிய பீரங்கிகளுக்கு இடையே நடக்கும் போரில் சிரிப்பை வரவழைக்கும் கதை.

ஒரு பெயரே இல்லாத நாட்டில் இருந்த, கொடூர ராஜாவிற்கு யார் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிடிக்காது. அப்படி யாராவது மகிச்சியாக இருந்தாலோ, அந்த ராஜாவை எதிர்த்தாலோ அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வார்கள். ஓரிரு நாட்களிலேயே அடைப்பட்டவர்கள் மூளை குழம்பி பைத்தியமாக சுற்றி திரிவார்கள். ஏனென்றால், இருளில் என்ன நடக்கிறது? சிறையில் என்ன செய்வார்கள்? என்பதை யாராலும் தெரிந்துக் கொள்ள முடியாது. மேலும், மக்களை ஏமாற்றுவது, எந்த விசாரணையும் இன்றி மரண தண்டனை வழங்குவது, பட்டினி போட்டே கொள்வது என்ற பல கொடுமைகளை செய்து வந்தான் ராஜா. அந்த ராஜாவை எதிர்த்து ‘கியா கோமா’ என்ற பளிங்கினால் ஆன சிறுவன், ராஜாவை பைத்தியமாக்கி ஓடவிட்ட கதை தான் இந்த ‘பளிங்கினால் ஆன சிறுவன்’.

வாசிக்கலாம்! பரிசாகவும் தரலாம்!

நூல் அறிமுகம் எழுதியவர் : 
தீபா ராஜ்மோகன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *