கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்கள்.அதுப் போல் தான் இந்த நூலும்.குறைவான பக்கங்களை கொண்ட நூல் தான் எனினும் இந்நூல் பேசுகின்ற கருப்பொருள்கள் முக்கியமானவை.

ஒரு ஐந்து கட்டுரையில் மாணவர்களிடையே காணப்படுகின்ற ஆசிரியர்களின் பிம்பத்தை பற்றி அற்புதமாக எடுத்துரைக்கின்ற நூல் தான்,”பள்ளிக்கூட தேர்தல்”.

ஒரு ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்? ஒரு ஆசிரியரது குணநலன்களாக மாணவர்கள் நினைப்பது என்ன? ஒரு ஆசிரியரிடத்தில் வரவேண்டிய விரும்பத் தகுந்த மாற்றங்கள் என்ன? என பல கேள்விகளுக்கு அலசி ஆராய்ந்து அப்பட்டமான உண்மையை தன் எழுத்து கோர்வையில் தெளிவுப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் பேரா.நா.மணி.

இந்நூல் ஒரு கள ஆய்வு நூல்.ஆசிரியர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அதற்கு மாணவர்கள் அளித்த பதில்களை உரிய சான்றுகளுடன் விளக்கியுள்ளார்‌.

புத்தகத்தில் இருந்து சில செய்திகளை மட்டும் இங்கு பகிர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஒரு அறிவியல் இயக்க நிகழ்ச்சியில் ஆசிரியர் கலந்து கொண்ட போது இராமானுஜம் என்பவரின் கட்டுரை படிக்க நேர்ந்ததாம்.அதில் இவ்வாறு இராமானுஜம் அவர்கள் எழுதியுள்ளார்.

” ஒரு மாணவனுக்கு பதில் தெரியாது என்று தெரிந்து கொண்டே கேள்வி கேட்பது எவ்வளவு அராஜகம்” என்பதை படித்தவுடன் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தது போல் இருந்தது என்கிறார் ஆசிரியர்.

அவருக்கும் மட்டுமல்ல எனக்கும் கூட சிறிது நேரத்தில் நானும் அப்படி தான் நினைத்தேன்‌.இதை படித்த போது என் ஆசிரியர் பணியில் இக்குணத்தை கட்டாயமாக மாற்ற வேண்டும் என உறுதி கொண்டேன்.

என்ன தான் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி பல ஆசிரியர்கள் நடந்த கொண்ட போதிலும் ஒரு கட்டுரையில் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த நூல்களை வாசிப்பது என்பது இங்கு நம் நாட்டில் குறைவு தான் என்று வேதனையாக பதிவு செய்கிறார்‌.பெரும்பான்மையான ஆசிரியர்கள் கல்வி சார்ந்த நூல்களை வாசிக்கும் போது இன்னும் அவர்கள் தங்கள் பணியில் செம்மையாக செயல்படுவார்கள் என்று நம்புகிறார்.

Amazon.in: Buy பள்ளிக்கூட தேர்தல் (Pallikooda ...

ஒரு ஆசிரியர் கூட்டம் நடந்த இடத்தில் கல்வி சார்ந்த நூல்களை விற்பனைக்கு வைத்திட ஆசிரியர்களோ மிக குறைந்த அளவில் புத்தகத்தை வாங்கி சென்றதும் உடனே அடுத்த ஒரு கூட்டத்தில் புத்தகத்தை விற்பனை செய்திட பெரும்பான்மையான புத்தகங்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.இந்த முறை புத்தகம் விற்பனை செய்ய அவர்கள் எடுத்து கொண்ட இடம் வாரச் சந்தை.அங்கு வாங்கிய பெரும்பான்மையான மக்கள் கல்வியற்றவர்கள் என்று பதிவு செய்கிறார்‌ ஆசிரியர்.அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் போட்டி போட்டு கொண்டு அவர்களுக்கு உரிய வகையில் விற்பனையாளர்களிடமே புத்தகத்தை தெரிவு செய்து வாங்கி கொண்டு போனார்கள் என்பதை படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஒரு சிறு வாசிப்பு கூட்டம் ஆசிரியர்களிடையே 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஈரோட்டில் உள்ள கெத்தேசால் முகாமில் நடைப்பெற்றது.இங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட இரண்டு நூல்களும் மிகவும் அற்புதமான நூல்கள்.

ஒன்று ‘முதல் ஆசிரியர்’ மற்றொன்று பாவ்லோ ஃப்ரையிரேயின் ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலைக்கான கல்வி முறை’.

இந்நூலுக்கு அணிந்துரை அளித்த இரா.நடராசன் இப்படி கூறுகிறார்.

” இந்த நூலை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தான் ஒரு ஆசிரியராக ஆகவேண்டும் என்று விரும்புவார்கள்.

இதை வாசிக்கும் ஆசிரியர்களோ தான் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள்.”

கல்வி சூழலில் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் அனைத்து வகை கல்வியாளர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்! ❣️

நூல் : பள்ளிக் கூடத் தேர்தல்.
ஆசிரியர் : பேரா.நா.மணி.
பக்கங்கள் : 48.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்.
விலை: ரூ.40/-

– ரேகா ஜெயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *