palthurai arignar paramasivan book reviewed by vincent நூல் அறிமுகம்: பல்துறை அறிஞர் பரமசிவன் - ச. வின்சென்ட்
palthurai arignar paramasivan book reviewed by vincent நூல் அறிமுகம்: பல்துறை அறிஞர் பரமசிவன் - ச. வின்சென்ட்

நூல் அறிமுகம்: பல்துறை அறிஞர் பரமசிவன் – ச. வின்சென்ட்

தொ.ப. என்று அழைக்கப்படுகிற பேராசிரியர் பரமசிவன் 2021 ஆம் ஆண்டில் அவரது மறைவிற்குப் பிறகு சிறப்புக் கவனம் பெறுகிறார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் சாகித்திய அகாதமி அவர்  பற்றிய தனிவரைவு நூல் ஒன்றை வெளியிட்டிருகிறது. பேராசிரியர் அ. மோகனா இதனை எழுதியிருக்கிறார்.

தொ.ப அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. பண்பாட்டியலில் அவர் ஒரு முன்னோடி என்று சொல்கிறார்கள். பண்பாட்டு ஆய்வியலும், (Culture Studies) பண்பாட்டு மானுடவியலும் (Cultural Anthropology) மேலைநாடுகளில் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தனி இயல்களாகக் கற்கப்படுகின்றன. நமக்கு அவற்றை அறுமுகம் செய்தவர் தொ.ப. என்று சொல்லப்படுகிறது. அவருடைய நீராட்டும் ஆறாட்டும் நூலில் தொ.ப. நாம் அன்றாடம் பார்க்கின்ற, ஆனால் கவனிக்காமல் விட்டுச் செல்கின்ற, கோலம் போடுவது முதல் தாலி அணிவது வரையிலான நமது பண்பாட்டின் சிறப்பு நிகழ்வுகளை எடுத்துக் காட்டி விளக்கங்கள் தருவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அ. மோகனாவின் இந்தச் சிறுநூல், தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் பண்பாட்டியலுக்கும் தொ. பரமசிவன் அவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்கிறது. நூல் முன்னுரை தவிர்த்து ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயலில் ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டு இயங்குதளங்களை விவரிக்கிறார். தொ.ப. எவ்வாறு தொன்மையின் தொடர்நிகழ்வாக இன்றைய பழக்கவழக்கங்களும் சடங்குகளும் இருக்கின்றன என்று காட்டுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இரண்டாம் இயல் தெய்வங்களும் சமூகமரபுகளும் எவ்வாறு மக்கள் வாழ்வியலில் ஊடாடுகிறது என்று தொ.ப. விளக்குவதை ஆய்வு செய்கிறது. தொ.ப. நாட்டாரின் சிறு தெய்வங்கள், அவற்றை வழிபடும் முறைகள் இயற்கை சார்ந்ததாகவும், மக்களின் வாழ்வியல் சார்ந்ததாகவும் இருந்து வந்திருக்கின்றன என்பதை கள ஆய்வின்மூலம் காண்பிக்கிறார். பெண் தெய்வங்களின் இடம் பற்றி ஆய்வு செய்கிறார். பல தெய்வங்கள் சங்க காலத்தில் இருந்தே தொடர்வது அவர் கண்ட முடிவுகளில் ஒன்று.

அடுத்த இயல் தொ.பவின் முனைவர் பட்ட ஆய்வுக்களமான அழகர் கோவில் பற்றியது. அழகர் கோவிலின் கட்டமைப்பு, கோவில் நிர்வாகம் , அதில் பலசாதியினரின் பங்களிப்பு, கோவில் திருவிழாக்கள் மரபுக்கதைகள், கோவிலில் நாட்டார் கலைவடிவங்கள் பற்றிய ஆய்வுகள் ஆகியவை இந்த இயலில் இடம் பெருகின்றன. சமூக, அரசியல், வரலாற்று அடிப்படையிலான விவரங்கள் தரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. சைவ, வைணவ, பார்ப்பனிய சமயப் பிணக்குகளைப் பற்றிய தொ. ப வின் கருத்துகளை மோகனா தெளிவாகப் பதிவிடுகிறார்.

இலக்கிய ஆய்வுகள் என்ற இயல் தொ.ப. ஓர் ஆய்வு நெறியாளராக, வாசகராக சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரையில் அவருடைய ஆய்வுக்களத்திற்கு எப்படி உட்படுத்திக்கொண்டார் என்பதை முன்வைக்கிறது.

தொ.ப.வின் அரசியல் நிலைப்பாடும் சமூகமாற்ற உரையாடலில் அவரது பங்களிப்பும் அனைவரும் அறிந்தது. அவருக்குப் பெரியார் மேலிருந்த பற்றும், சாதியத்திற்கு எதிரான அவருடைய மாறாத கருத்தியலும் அவருடைய கட்டுரைகளில் வெளிப்படுகின்றன என்பதை அரசியல் கருத்துநிலை என்ற இயலில் மோகனா விளக்குகிறார்.

தொ. ப பற்றிய இந்தத் தனிவரைவு மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பண்பாட்டியலுக்கும் தமிழ் ஆய்வுக்கும் அவருடைய பங்களிப்பை நமக்குத் தருகிறது. நூலாசிரியர் மோகனா தொ.பவின் படைப்புகளை ஆழமாகக் கற்றிருப்பதே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலைக் கொடுத்திருப்பதோடு, தொ.ப. வின் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகத் தந்திருக்கிறார். மேற்கோள்கள் தகுந்த இடங்களில் கொடுத்திருக்கிறார். ஒவ்வோர் இயலிலும் என்ன சொல்லப்போகிறார் என்பதை முதலிலேயே வரையறை செய்திருப்பதும், கட்டுரையைத் தருக்கபூர்வமாக வளர்த்துச் செல்வதும் பாராட்டிற்குரியவை. மேற்கோள்கள் இவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டாம்.

தொ.ப. பற்றிய இந்தச் சிறு அறிமுகநூலை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமி கொண்டு வந்திருப்பது பாராட்டிற்குரியது.

தொ. பரமசிவன்
சாகித்திய அகாதமி வெளியீடு, 2023
பக்கம் 128, விலை ரூபாய் 50/-

Show 1 Comment

1 Comment

  1. அ.மோகனா

    இந்திய இலக்கியச் சிற்பிகள் தொ.பரமசிவன் நூல் குறித்து ஆழமான விமர்சனத்தை பேராசிரியர் வின்சென்ட் எழுதியுள்ளார்கள். அவர் எழுதியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது… பேராசிரியருக்கு நன்றியும் வணக்கங்களும்
    அ.மோகனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *