பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல் (Palupperiya Natkurippai Thirupputhal)

 

தோழர் இர அறிவழகன் அவர்களின் ’ பழுப்பேறிய நாட்குறிப்பை திருப்புதல்
என்ற கவிதை தொகுப்பை “ நாம் புரட்ட ஆரம்பித்தவுடன் அது நமது மனதை
புரட்டிப் போடுகிறது , நமது உணர்வுகளை புரட்டிப் போடுகிறது , காலத்தை
புரட்டிப் போடுகிறது , நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு ஒரு பறவை
போல கண்முன்னே சிறகடித்து பறந்து போகிறது . இதன் தொடர்ச்சியாக இதில்
உள்ள கவிதைகள் ஒவ்வொன்றிலும் நாம் காலத்தில் சிறகடித்து பயணித்து
மீண்டும் கசப்பான நிகழ்காலத்திற்கு வந்து சேர்கிறோம்.

இந்தக் கவிதைகளின் சிறப்பான அம்சம் என்னவென்றால் இவைகள் நமது
சங்க காலக் கவிதைகளையும் மரபுத் தொடர்ச்சியாகவும் , நிலம் பொழுது ,
தெய்வங்கள் , மரங்கள் , என்று கருப் பொருள்களையும் ,
உரிப்பொருள்களையும் பாடு பொருளாக கொண்டவையாகவும் கண் முன்னே
உரு பெற்று வந்துள்ளன என்பதாகும். இந்தக் கவிதைகளை வாசிக்கும் போது ,
முதுமை வாசலை அடைந்து விட்ட ஒரு மனிதன் தன் இளமை காலத்திற்கு
மறுபடியும் நம்மை ஒரு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வது போல
அமைந்துள்ளதாகும்.

ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு இட வேண்டிய சில வரிகள் உண்டு . ஒரு
சில பக்கங்கள் ஒவ்வொன்றையும் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய கவித்துவம்
கொண்ட கவிதைகளும் இதில் பல உண்டு . குறிப்பாக ‘’முறிந்த சிறகுகள் ‘
என்ற ஒரு கவிதை தொகுப்பு . அதில் கலில் ஜிப்ரான் தன் கடந்த கால காதலைப்
பற்றியும் , தன் காதலி செல்மாவைப் பற்றியும் உணர்ச்சி பொங்க பாடியிருந்த
அழகும் துயரமும் , தோழர் அறிவழகன் அவர்களின் இந்த பழுப்பேறிய
நாட்குறிப்பை திருப்புதல் ‘’ என்ற கவிதை தொகுப்பில் நாம் காணலாம்.

அடுத்ததாக இருண்மைக் கவிதைகளோ , வாசகரை அச்சுறுத்தும் சொற்
பிரயோகங்களோ இதில் இல்லை என்பது இதன் தனிச் சிறப்பு. தேர்ந்த
ஒரு கதை சொல்லி போல அல்லது நமது அன்பான ஒரு உறவினர்
போல , தனது கடந்த காலத்தை கவிதையாகச் சொல்லியிருக்கிறார்.
, நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் அத்தனை எளிமையாக இருக்கின்றன
இதில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் .

இந்த தொகுப்பை ஆசிரியர் யாருக்கு சமர்ப்பணம் செய்கிறார் என்று அறிந்து
கொண்டாலே , இந்தக் கவிதைகளை நீங்கள் அறிந்து கொண்டது போலத்தான்.

இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் , கவியரசு கண்ணதாசன்
மழலைப் பட்டாளம் என்ற ஒரு திரைப்படத்தில் எழுதிய ஒரு அற்புதமான
திரைப்பட பாடல் தான் நம் ஞாபகத்திற்குள் வருகிறது . ‘’ கௌரி
மனோகரியை கண்டேன் ‘’ என்ற அந்தப் பாடலில் வருகின்ற வரிகள் இந்தக்
கவிதைகளுக்கு அத்தனை அற்புதமாகப் பொருந்தி போகின்றன.

‘’ மலை மீது அடித்தாலும் காற்று
அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று
வயதோடு வந்தாலும் காதல்
அது வயதாகி வந்தாலும் காதல்
உலகத்தில் சில நூறு எழுத்து
ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து ‘’

இந்த ஆழமான வரிகளைப் போலத் தான் , இந்தப் புத்தகத்தில் வயதோடு
வந்த காதல் , வயதான பின்னாலும் , இதயத்தில் இடம் பிடித்து க் கொண்டு ,
அங்கேயே வசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம் .
இந்த தொகுப்பில் பல கவிதைகள் எனக்குப் பிடித்தவை .ஆனால்
உங்களோடு நான் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமான பல
கவிதைகளை கண்டடைந்திருக்கிறேன்.

‘’ வெட்டுண்டு விழுந்த மரத்தில்
தன் கூடு தேடி அலையும் பறவையாய்
தொடங்கினேன் உன்னுள் எனக்கான துஞ்சுமிடத்தை ‘’ என்று அற்புதமாக
முதல் பக்கத்தில் ஆரம்பித்திருக்கிறார். எனக்கு என்னவோ கலில் ஜிப்ரான்
எழுதிய கவித்துவமான ‘’ முறிந்த சிறகுகள் ‘’ மனக்கண் முன் நிழலாடுகிறது .
ஒரு வாழ்க்கையை , வாழ்வில் வந்த செல்மா என்னும் வசந்தத்தை ,
வசந்தம் தந்த துயரத்தை ,ஈரம் சொட்ட சொட்ட , உயிரில் பிழிந்து
உணர்ச்சிகரமாக ஜிப்ரான் பதிவு செய்து வைத்திருப்பார் . அது போலவே
இதில் வருகின்ற பல வரிகள் நமக்குப் உணர்வுகளை வாரி வழங்குகின்றன.
கவிஞர் அறிவழகன் அவர்கள் எழுத்துக்களின் இன்னொரு சிறப்பு
என்னவென்றால் , வாசகருக்கு சுமையை கூட்டாமல் எளிதான
படிமங்களையும் இலகுவான சொற்களையும் தேர்ந்தெடுத்து , அவைகளின்
வழியே தன்னுடைய கவிதையை அவர் எழுதிச் செல்வதுதான் .

‘’ பேசிப் பேசி அயராச் சொற்களுடன்
அள்ளித் தீரா பெருங்கடலாய்
அன்றைய நாட்கள்
இருள் போர்த்திய இந்நாட்களை எள்ளியபடி
உயிரை மூழ்கி கொல்கிறது ஞாபகங்களின் அழுவம் ‘’

என்ற கவிதை வரிகளில் , காதலித்து அதை இழந்த பின்பும் நினைவுகளை
இழக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வலிகளை எளிதாக கடத்தி
விடுகிறார்.

வயதான காலத்திலும் காதலி இவரது இதயத்தில் எப்படி பதிந்திருக்கிறார்
பாருங்கள் .

‘’ நீயே இதயத்தில் நீரோடிய பாறை ‘ என்று அசையாத படிமமாக
பதிந்திருக்கிறார்.
‘’ பூவுக்குள் விதையாய் ,

விதைக்குள் மரமாய்
ஆழமாய் முளைத்து கிளைத்த
எவரும் அறியா நடுநிசியில்
துளிர்ப்பதாய் நிகழ்த்துகிறாய்
காலாதி கால வாஞ்சைகளை ‘’

என இந்த தொகுப்பு முழுவதும் இப்படியான கவிதைகள் தான் விரவிக்
கிடக்கின்றன.

நமது வாழ்க்கையே தாவரங்களைப் போன்றது தான் . ஒரு மரம்
விதையிலிருந்து துளிர் விட்டு , செடியாகி , கிளை விட்டு , மரமாகி பின்பு
சருகுகளை உதிர்த்து , பின்பு பட்டுப்போய் தன் வாழ்க்கையை முடித்துக்
கொள்வது போலத் தான் மனிதர்கள் இந்தப் புவியில் வாழ்ந்து மறைவதும்.
இதற்குள் நாம் காண்பது எத்தனை வசந்த காலங்கள் ? எத்தனை கோடை
காலங்கள் ? எத்தனை கூதிர் காலங்கள் ? எத்தனை எத்தனை இன்ப
துன்பங்கள் ?

‘’ சுண்டு விரல் ஸ்பரிசமற்று நிகழ்ந்த நேசங்களில்
நமக்கான பிரபஞ்ச அன்பின் அதீதத்தை
இன்றும் எவரும் நிரப்பவில்லை ‘’

உண்மைதான் எவரால் நிரப்ப இயலும் ?

ஒருவேளை இந்தக் கவிதை வரிகளில் வேண்டுமானால் அதை நிரப்பி
இருக்கலாம் .

கடந்த காலங்களில் இந்தக் காதலர்கள் சந்தித்துக் கொண்ட இடங்கள் தற்போது
ஒரு பூங்காவாக மாறி இருக்கிறது அதை கவிஞர் இவ்வாறு பாடுகிறார்

‘’ நம் உரையாடல்களை சுமந்த பரப்பும்
பச்சை நிற ப் பறவைகளின் வாழ்விடமாக
மாறியுள்ளது
நிர்மாணிக்கப்பட்ட பூங்காவில்
வந்தமர்ந்து போகிறார்கள் யாவரும்
நம் இருத்தலை தூவாத அவ்விடம்
வெறுமை பூத்து கிடக்கிறது ‘’
இன்னொரு கவிதையில் பாருங்கள் மறக்க முடியாத காதலை இவ்வாறு
பேசுகிறார்

‘’ அகன்ற பெருவானத்தின் அம்புலி யென
யாமத்திலும் பகலிலும் காய்த்து இருக்கிறது உன் வசீகரம் ‘’
அடடா முழுமையாய் காதலித்த ஒரு மனிதன் , முதுமையை தொட்டுவிட்ட
போதும் , காதல் மட்டும் இன்னும் இளமையாகவே நிலை கொண்டு
விட்டதே இந்த அதிசயத்தை என் சொல்வது !

அவனது பிரபஞ்சமாக இருப்பது நினைவுகள் தவிர வேறேது ?
மனதில் ஒரு காதலியை வைத்துக் கொண்டு , அவளோடு வாழ முடியாமல் ,
நாட்களை எண்ணிக்கொண்டு ,இருப்பது எவ்வாறு ? கவிஞர் இப்படி
பாடுகிறார்
சஞ்சலம் நிறைந்த இச்சாலைகளில்
அப்பாடலை வழித்துணைக்கு
இன்றும் பாடிய படியே பயணிக்கிறேன் ‘’

சில நேரங்களில் ,இந்தக் கவிதைகளுக்குள் பயணிக்கும் போது , கவிஞர்
மீரா அவர்களின் ‘’ கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் ‘’ என்ற கவிதை
தொகுப்பு கண்முன் நிழலாடி விட்டுப் போகிறது .

‘’ இதோ ஊர் தொடங்கும் பாதை எங்கும்
வழிகாட்டி பலகைகள்
அன்புடன் வரவேற்கிறது
ஏனோ நீ இருக்கும் ஊர் மட்டுமே
செந்நிறம் வழியும் துணியசைவில்
மாற்றுப் பாதைக்கு தான் அழைத்துச் செல்கிறது ‘’

இப்படி நிறைய கவிதைகளை இந்த தொகுப்பில் காணலாம் .

‘’ நெடுநல்வாடையென நேசிப்புகளை சேகரித்து
தோப்பறையாய் சேந்தி
இதயத்தில் நிரப்புகிறேன் உத்தரவாதத்துடன்
தற்போது தகவமைப்புகளாகி
எனக்கான சுவாசம் ஆகிறது
எவருக்கும் வாய்ப்பதில்லை இரவல் சுவாசம் ‘’

‘’ பிரிவாற்றாமையில் கசிந்து
பிரித்து விழும் கண்ணீர் துளிகளில்
வெகு காலமாக நிறைந்திருப்பது
நம் பிம்பங்களைத் தவிர வேறு இல்லை ‘’

இப்படி எண்ணற்ற கவிதைகள் இதயத்தை பிழியும் துயரத்தை வடிக்கின்றன .
இப்போது காதலிக்கும் இளைஞர்களும் , யுவதிகளும் இதை வாசித்தால் ,
காதலின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டு , அதை பரிசுத்தமாகலாம் . குறைந்த

பட்சம் காதலில் நேர்மையாக வாழலாம் . முதுமை கொண்டவர்கள் இந்தக்
கவிதைகளை வாசித்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்னோக்கி ஒரு
பயணம் சென்று விட்டு வரலாம் .

இதோ வாழ்க்கையே ஒரு பயணமாக இன்னொரு கவிதை

‘’ பாலைவன யாத்திரிகர்களை கூடாரமாய்
வார்த்தைகளில் வெம்மை பரவி இம்சிக்கிறது பிரியங்கள்
மீதி இருக்கும் நாட்களை கடந்த நாட்களில் சுமத்தி
யாத்திரை போகிறது என் கண்ணீர் ஒட்டகங்கள் ‘’

கண்ணீர் ஒட்டகம் எவ்வளவு அற்புதமான படிமம் ! இந்த கண்ணீர் ஒட்டகம்
தான் இப்படிப்பட்ட கவிதைகளை தருகிறது பாருங்களள். இந்த கண்ணீர்
ஒட்டகம் எத்தனை பேர் வாழ்க்கையை இன்னும் சுமந்து கொண்டு தீராத
பயணத்தை மேற்கொண்டு இருக்கிறதோ யாருக்குத் தெரியும் ?
இன்னொரு கவிதை நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய காட்சிகளிலிருந்து
உருவாகிறது

‘’ மடியும் நாட்கள் எல்லாம் வறு கறிக்கடைக் காரனின்
உறிக்கப்பட்ட கறிக்கோழிகளென
சொற்களற்று தொங்கியபடி இருக்கும்
என் பிரயத்தனங்கள் யாவும் ‘’

இப்படி வழிநெடுக்க கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் . ஆனால்
அனைத்துக் கவிதைகளையும் சொல்லியாக வேண்டும். ஆகவே இரண்டு
கவிதைகளை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்.

‘’ ஒரு சூரியனையும் ஒரு நிலவையும்
நிலையற்ற யாக்கைக்குள்
நிலையான காதல் வைத்தவாறு
தக்கை அசைவை கவனிக்கும்
தூண்டில்காரனாய் இருக்கிறது
கருணையற்ற காலம் ‘’
ஆஹா என்ன அற்புதமான வரிகள் பாருங்கள் . நிலையற்ற யாக்கை இது
காதலால் நிலைத்திருக்கிறது. இப்புவியில் நாம் நிலைத்திருக்க காதல்
வேண்டும்.
கவிஞர் இவ்வாறு தன் கவிதைகளை குறிப்பிடுகிறார்

‘’ தூசி படிந்ததாயினும்
புரட்டும் போதெல்லாம்
வாசம் வழியும்
புதுப் புத்தகம் என
பழுப்பேரிய பக்கங்களில்
விரவிக் கிடக்கிறது
பிராயங்களின் பிரியங்கள் ‘’ ,,

இந்த கவிதை தொகுதியை வாசித்து முடிக்கும் போது அது உண்மைதான்
என்று தோன்றுகிறது.
கவிஞருக்கு என் அன்பான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கவிதை தொகுப்பாகும். இந்தக்
கவிதை நூலை பன்முக மேடை தேனி என்ற பதிப்பகம் அருமையாக
அச்சிட்டிருக்கிறது. இந்த தொகுப்பிற்கு கவிஞர் அம்சப்ரியா அவர்கள்
அற்புதமான ஒரு அணிந்துரை கொடுத்திருக்கிறார் .

ஏதேதோ தத்துப் பித்து உளறல்களையெல்லாம் கவிதை என்று கொட்டி
வைக்கின்ற வைக்கின்ற நாட்களில் , இது போன்ற நேர்மையான
நிதர்சனமான கவித்துவமான கவிதைகளை நாம் முன்னிலைப்படுத்த
வேண்டும் .

வாழ்த்துக்கள் தோழர்

 

நூலின் தகவல்கள் 

நூல் : “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்”
ஆசிரியர் : கவிஞர் இரா. அறிவழகன்
நூல் வெளியீடு: பன்முக மேடை,  தேனி
விலை: ரூ.100.

 

நூலறிமுகம் எழுதியவர் 

தங்கேஸ்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *