கிரிக்கெட்டை நேசிக்காதவர்களும் விளையாடாதவர்களும் ஒரு சிலரே மற்ற அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் விளையாடி இருக்கிறோம். ரசித்துக் கொண்டுதான் இருந்து வருகிறோம். அப்பேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் இது நாள் வரை இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஆன ‘பல்பங்கர் பலூ’ என்ற வரை அறியாமல் இருந்திருப்பது எனது அறியாமை என்று நினைக்கிறேன்.

பதின்ம வயது வரை கிரிக்கெட்டை விளையாடியும் ரசித்தும் இருந்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் சச்சின் தான் கிரிக்கெட் என்றும் சச்சின் அவுட் ஆனவுடன் அனைவரையும் போல டிவியை ஆப் செய்து விட்டு நாங்கள் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம்.

பிறகு தோனி வந்த பிறகு அவரது விளையாட்டை விட ஆட்டிட்யூட் மிகவும் நேசித்திருக்கிறேன். தோனி, சச்சின், கபில்தேவ் என்று தெரிந்த எனக்கு பல்வங்கர் பலூ என்றவரை தெரியாமல் இருந்தது எனது அறியாமையுடன் சேர்ந்து சமூக அறியாமையும் கூட கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அறிந்த பெயராக தெரியவில்லை இதனால் வரை…

ஆக புத்தகத்தில் சொன்னதைப் போல மறைக்கப்பட்ட உண்மைகளை தேடி கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதுதான் ஆகச் சிறந்த பணி அதை வாசிப்பதும் நம்மை போன்றவர்களின் மாபெரும் பணி என்று இந்த புத்தகத்தை நேற்று முன்தினம் ஆர்டர் செய்து நேற்று இரவு வாசித்து முடித்தேன் இது நாள் வரை இந்த மாதிரி அற்புதமான கிரிக்கெட் (விளையாட்டு சம்பந்தமாக) வாழ்க்கை வரலாற்றை வாசித்தது கிடையாது என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.

எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்க்கை வரலாற்றை இது நாள் வரை வாசிக்காமல் விட்டுவிட்டதை மனதை ஏதோ தொந்தரவு செய்த வண்ணமே வாசித்து முடித்தேன். மேலும் புத்தகத்தில் சொல்வதைப் போல “ஒன்று, கிரிக்கெட்டில் நீங்கள் இதுவரை கேள்வியே பட்டிராத ஒரு வீரரைப் பற்றிய அற்புதமான வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இரண்டு, ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்த போது எப்படி இருந்தது நிலைமை, நம்மை எப்படி நடத்தினார்கள், நாம் விளையாடக்கூட அவர்களிடம் அனுமதி பெறும் சூழல் இருந்தது உள்ளிட்ட அதிர்ச்சியான உண்மைகளை தெரிந்துகொள்வீர்கள்”.

ஆம் உண்மைதான் புத்தகத்தை வாசிக்கும் போது கிரிக்கெட் விளையாடக் கூட நாம் ஆங்கிலேயரிடம் எவ்வளவு கெஞ்ச வேண்டியிருந்தது, அடிமைகளாக இருந்த இந்தியர்களுக்குள் ஓர் அடிமை முறை இருந்து சாதி என்ற ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட அந்த மனிதர்களை கீழாக நடத்திய இந்துக்களுக்கு சமமாக கூட விளையாட கூட முடியவில்லை என்பது துரதிஷ்டத்திலும் கூட துரதிஷ்டம்.

கிரிக்கெட் சம்பந்தமாக ‘லகான்’ திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். அதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விளையாடும் நம் இந்தியர்களின் உணர்வுகளை எதார்த்தமாக படம் பிடித்திருப்பார்கள் அதைப் போல ஒரு உணர்வை இந்த புத்தகம் நமக்கு அளிக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

டச்சு என்கிற மொழியில் ‘க்ரிக்’ என்றால் ‘குச்சி’ என்று பொருள் என்றும் ஃப்ளான்டர்ஸில் இருந்து பார்த்து வந்த விளையாட்டையும் பெண்கள் விளையாடிய ஸ்டூல்பால் விளையாட்டையும் இணைத்து கிரிக்கெட் உருவாகி இருக்கலாம் என்று பலரும் நம்புகிறார்கள் என்ற தகவலே புதிதாக இருந்தது.

இந்த புத்தகத்தின் சூப்பர் ஸ்டார்…
“தார்வாட் என்று ஒரு ஊர் இருந்தது.
அந்த ஊர் தற்போது கர்நாடகாவில் இருக்கிறது. அந்த ஊரில் 1876 ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பல்வங்கர் பலூ என்று பெயர் வைத்தார்கள். அந்தக் குழந்தை சமர் என்கிற சாதியில் பிறந்தது” என்ற வரலாற்றுக்குறிப்புடன் ஆரம்பிக்கும் அவரது வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரசியமானது எதிர்பார்ப்புகள் மிகுந்தது சாதி ஒடுக்குமுறையால் ஒரு சாதாரணமானவன் ஒரு வீரனாக எப்படி விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை சொல்லும் அற்புதமான புத்தகம்.

தனது வயிற்று பிழைப்பிற்காக வேலை தேடிச் செல்லும் ஒரு சிறுவன் கூடுதலாக ரூபாய்க் கிடைக்கும் என்று தன் வீட்டின் நிலைமை சமாளிக்க கிரிக்கெட் என்ற விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் வாழ்க்கை மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது.

கபில்தேவ் வாழ்க்கையில் குறிப்பிடுவது போல பந்து பொறுக்கிக் கொண்டிருந்த கபில்தேவை பந்து வீச சொல்லும் போது தன் திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகுக்குள் நுழைந்து உலககோப்பையை வென்றுத் தந்த கபில்தேவை கிரிக்கெட் உலகம் இது நாள் வரை கொண்டாடிக் கொண்டு வருகிறது அதைப் போல பல்பங்கர் பலுவை கொண்டாட மறுப்பது எது? முதன் முதலில் கிரிக்கெட்டை உலக தர வரிசையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வந்த அந்த சுழற்பந்து வீச்சாளரை இந்தியா ஏன் கொண்டாட மறுக்கிறது அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்? நாம் ஏன் இது நாள் வரை பலுவை அறியாமல் இருக்கிறோம் என்ற வரலாற்று பின்னணியுடன் எழுதியிருக்கும் இந்த நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய வரலாற்று நூல்.

நூல் விமர்சனம் என்ற முறையில் இந்த புத்தகத்தை அப்படியே எழுதுவது என் நோக்கம் அல்ல! அனைவரும் வாசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தான் ஒரு சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு அடிக்கோடிட விரும்புகிறேன்.

“22 போட்டிகளில், 132 விக்கெட்டுகளை அவர் எடுத்திருந்தார். அதாவது ஒரு போட்டியில் சராசரியாக ஆறுக்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்களை அவர் அவுட் ஆக்கியிருக்கிறார். அன்றைக்கு மட்டுமல்லாமல் இன்றைக்கும் அது மிகப்பெரிய சாதனை”

இந்திய அணி இங்கிலாந்துக்கு ஆட செல்லும்போது நடந்த ஒரு சம்பவம் குறிப்பிட விரும்புகிறேன். “அவர்கள் எல்லோருக்கும் பூச்செண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் இருவருக்கு மட்டும் பூச்செண்டு கொடுக்கப்படவில்லை. அந்த இருவர் வேறு யாருமில்லை பாலுவும் அவரின் தம்பி சிவராமும்தான்.” எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகளை இவை இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள் அந்த வீரர்கள்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பிறகு அமோகமான வரவேற்பு கிடைத்தது பலுவிற்கு….

இங்கிலாந்து போகும்போது அவருக்கு பூச்செண்டு கூட கொடுக்கவில்லை ஆனால் இங்கிலாந்தில் அவர் செய்த சாதனைகளால் திரும்ப வந்ததும் அவருக்கு பாராட்டு விழாவே நடத்தப்பட்டது. அந்த பாராட்டு விழாவில் பலுவை புகழ்ந்து ஒரு இளைஞர் பேசினார் அந்த இளைஞர் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் பிற்காலத்தில் இந்தியாவின் முக்கியமான மனிதராக மாறிய அந்த இளைஞர் யார் தெரியுமா?

டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்ற செய்தி வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதை வாசிக்க போது மெய் சிலிர்க்க செய்கிறது. இதை எழுதிய பதிவு செய்த அந்த அன்பு தோழனுக்கு ஆயிரம் முத்தங்கள்.

பல கொடுமைகளைத் தாண்டி உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்த பல்வங்கர் பலூ மீது அம்பேத்கருக்கு பெரிய மரியாதை இருந்தது பலுவை தன்னுடைய நாயகனாவே அப்போது அம்பேத்கர் வைத்திருந்தார். சட்டத்திற்காகவும், சகமனிதர்களுக்காகவும் போராடிய அந்த மாமனிதர் விளையாட்டிலும் போராடி வந்த மனிதனை நேசித்து இருப்பது மிக முக்கிய செய்தியே.

வாழ்க்கையில் எவ்வளவு போராடி இருக்கிறார். அவருடைய திறமைக்கு சரியான மரியாதையே கொடுக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் எதிர்த்து போராடினார். திறமையால் முன்னேறினார். இறுதியாக ஒரே ஒரு போட்டியில் கொஞ்ச நேரம் மட்டும்தான் அவரால் அணி தலைவராக இருக்க முடிந்தது. அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 44.

இன்று நாம் வியந்து பாராட்டும் தோனியை விட இரண்டு வயது மூத்தவர் அப்போதைக்கு. இப்போது இருந்திருந்தால் அந்த மாவீரனை உலகமே தன் தோள்களில் தூக்கி கொண்டாடி இருக்கும்.

ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்காக வாழ்க்கை முழுவதும் உழைத்த பல்வங்கர் பலூவை இந்தியா மறந்து விட்டது. சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை கிரிக்கெட் மைதானத்திற்கு வைப்பார்கள். மைதானத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வைக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான பலுவின் பெயர் இந்தியாவின் எந்த மைதானத்திலும் வைக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியில் மட்டுமே விளையாடிய ரஞ்சியின் பெயரில்தான் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக்கோப்பை நடக்கிறது ஆனால் பல்வங்கர் பலூவின் பெயரில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை இதற்கெல்லாம் எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?

என்ற கேள்வியுடன் முடிக்கும் இந்த புத்தகத்தை அவசியம் கிரிக்கெட்டை நேசிக்கிறவர்களும் விளையாடுபவர்களும் விளையாட்டு வீரர்களும் விளையாட்டு தலைவர்களும் ஒவ்வொரு அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

இறுதியாக ‘சுழற் பந்துவீச்சாளர்’ என்று கிரேக் ஒருமுறைதான் சொன்னார். ஆனால் பலூவுக்கோ அது பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தது.

‘டேய் பலூ…’
டேய் குப்பை அள்றவனே…’
‘டேய் மாடு திங்கிறவனே… ‘
‘டேய் மாட்டுத்தோல் உரிக்கிறவனே… ‘
‘டேய் என்னை தொடக்கூடாதவனே…’
‘கெட்ட சாதிக்காரனே..’
போன்ற வார்த்தைகளை மட்டுமே அதுவரை கேட்டு வளர்ந்த பலூவுக்கு, முதன்முறையாக “சூழற்பந்துவீச்சாளர்” என்கிற அடையாளம் பிடித்துப் போனது.
இனி எந்தக் காரணத்திற்காக அதை விட்டுவிடவேக் கூடாது”

ஆம்,நாம் இனி விட்டுவிடவே கூடாது….
இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் பல்பங்கர் பலூவை.

புத்தகம் எழுதிய ஆசிரியர் இ. பா. சிந்தன் (Chinthan Ep) அவர்களுக்கும் வெளியிட்ட ஓங்கில் கூட்டம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பதற்கும் வாழ்த்துக்களும் பாராட்டும்

 

நூலின் தகவல்கள்: 


நூலின் பெயர்
: பல்வங்கர் பலூ

தமிழில் : இ. பா. சிந்தன்

விலை ரூ. 100/-

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

 

அறிமுகம் எழுதியவர்: 

அமுதன் தேவேந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்”
 1. மிக அருமையான புத்தக அறிமுகம்.இதை படிக்கும் போதே புத்தகத்தின் கரு புரிகிறது.
  மேலும் பலூ வின் வரலாறு மறைக்கபட்டதின் பின்னணி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
  மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கபடுகிறார்களோ அங்கெல்லாம் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் குரல் ஓங்கி ஒளிக்கத்தான் செய்கிறது என்பதற்கு எதுவும் ஒரு சான்று.
  புத்தகம் அறிமுகம் செய்த நண்பருக்கு வாழ்த்துகள்💐💐💐.

  நளினி மூர்த்தி
  (ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *