நூல் அறிமுகம்; ரோமுலஸ் விட்டேகரும் பாம்புகளும், நானும்… – உதய சங்கர்வாழ்க்கை கொஞ்சம் விசித்திரமானது என்பதில் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது. சில நேரங்களில் வியப்பானதாகவும் இருக்கிறது.
1985 – ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நான் ரயில்வே உதவி நிலைய அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சிப்பள்ளியில் சேர்ந்திருந்தேன். அதுவரை கோவில்பட்டியில் என்னுடைய வீட்டில் ஏராளமான மூட்டைப்பூச்சிகளையும், ஓட்டுச்சாய்ப்பிலிருந்து எப்போதாவது விழும் செந்தேள்களையும் மட்டுமே பார்த்திருந்தேன் என்பதை முன்குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். பயிற்சி முடிந்ததும் அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள வேளானந்தல் என்ற காட்டு ஸ்டேஷனில் பணிக்கு அனுப்பப்பட்டேன். அனுப்பும்போதே மிகுந்த அனுதாபத்துடன் உச்சு கொட்டிக்கொண்டே என்னிடம் பணி ஆணையைக் கொடுத்தார் அதிகாரி. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
வேளானந்தல் தமிழ்நாடு வனத்துறையின் எல்லைக்குள் இருந்தது. நான் போன அன்று எனக்கு ஒதுக்கப்பட்ட, அதுவரை மனிதவாடை பட்டிராத குவாட்டார்ஸுக்குக் கூட்டிக்கொண்டுபோன பாயிண்ஸ்மேன் வீட்டின் தாழ்வாரத்திலும் புழக்கடை முற்றத்திலும் படுத்திருந்த இரண்டு ஓலைப்பாம்புகளை ஏதோ ஆடுகளை பத்துவது போல விரட்டினார். நான் முதல் முதலாக அப்போதுதான் முழுதாக ஒரு பாம்பை நேரில் பார்க்கிறேன். எனக்கு பணியாணை கொடுத்த அதிகாரியின் உச்சுக்கொட்டல் நினைவுக்கு வந்தது. பாயிண்ஸ்மேன் சிரித்துக்கொண்டே,
சார் இங்கே பாம்புக நடமாட்டம் இருக்கும். அதுக ஒண்ணும் செய்யாது.. நாம கொஞ்சம் பத்து நடமாடணும் என்றார். அன்று இரவு தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை விரதம் மாதிரியான சினிமாக்களில் மட்டுமே பாம்பின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். மறுநாளே பாம்புகளைப் பற்றி புத்தகங்கள் வந்திருக்கிறதா என்று நண்பர்களுக்கு கடிதம் எழுதிக்கேட்டேன்.
யாரோ சில்ட்ரன் புக் டிரஸ்டில் ஒரு புத்தகம் snakes around us என்ற புத்தகத்தைச் சொன்னார்கள். அந்தப்புத்தகத்துக்கு மணியார்டர் அனுப்பி அந்தப்புத்தகம் எனக்கு வந்து சேர்ந்தபோது இரண்டு மாதங்களும் இருபது பாம்புகளையும் பார்த்துக் கடந்துவிட்டேன்.
மிகச்சிறிய அந்தப்புத்தகத்தைப் படித்ததுமே பாம்புகளைப் பற்றி எல்லாம் தெரியிம் என்ற பாவனையில் எல்லோருக்கும் ஆலோசனைகளும், எது விஷ்ப்பாம்பு, எது விஷமில்லாத பாம்பு என்று ஆருடங்களும் சொல்வேன். இன்றுவரை எனக்கு பாம்புகளைப் பற்றிய அனாவசியமான பயத்தை அந்தப்புத்தகம் போக்கியது உண்மை. அதன்பிறகு பாம்புகளைப்பற்றிய என்னுடைய அரைகுறை அறிவியல் அறிவை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களிடம் பரப்பிக்கொண்டிருந்தேன். ரயில்வே ஸ்டேஷன்களில் பாம்புகள் வருகைபுரிவது சாதாரணம்.
தொலைக்காட்சி அறிவியல் சேனல்களில் பாம்புகள் வந்தால் வழங்கப்படும் வாய்ப்பைப் பொறுத்து ( வாய்ப்பை வழங்குவது என் துணைவியார் ) கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படி தமிழ்நாட்டில் இருளர்களுடன் சேர்ந்து தமிழகக்காடுகளில் பாம்புகளைப்பிடிக்கவும் அவற்றிலிருந்து விஷத்தை எடுத்து விஷமுறிவு மருந்தைத் தயாரிப்பதைப் பற்றியும் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் வரும் நீண்ட தலைமுடி கொண்ட வெள்ளைக்காரர் என் மனதில் பதிந்திருக்கிறார்.
இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை கிண்டியிலுள்ள பாம்புப்பண்ணைக்கும், மகாபலிபுரம் போகும்பாதையிலிருந்த முதலைப்பண்ணைக்கும் போயிருக்கிறேனென்பதை இந்தக் கதையில் இடைச்செருகலாகச் சொல்லிக்கொள்கிறேன்.
திடீரென்று ஒருநாள் என் அன்புக்குரிய தோழர் கமலாலயன் தான் ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்திருப்பதாகவும் அதை அனுப்பிவைப்பதாகவும் சொன்னார். அது எப்போதும் அவர் செய்வது தான். நான் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன்.

நான் வியந்து பார்த்த நீண்ட தலைமுடிக்காரர் ரோமுலஸ் விட்டேகர். புத்தகத்தை உடனே வாசித்து முடித்தேன். உண்மையில் கமலாலயன் தமிழ் மொழிபெயர்ப்பிலக்கியத்துக்கு மிகப்பெரும் கொடையைக் கொடுத்திருக்கிறார். அப்படியொரி ஆற்றோழுக்கான தமிழில் ஒரு இயற்கையியலாளரைப் பற்றிய வரலாற்று நூலை அதன் நுட்பமும் தகவல்களும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் தோழர்! Kamalalayan Guna

பாம்புமனிதன் ரோமுலஸ் விட்டேகர் நூல் பாம்புகள் முதலைகள் ஆமைகள் தொடங்கி காட்டுயிர்களைப்பற்றி இவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்ட நூல் இருக்கிறதா என்று தெரியவில்லை. துல்லியமும் தெளிவும் நகைச்சுவையும் அர்ப்பணிப்பும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பி வழிகிறது. நம் காலத்திலேயே தங்கள் வாழ்க்கையை காட்டுயிர் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தவர்களைப் பற்றிக் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஆதங்கமும் வருகிறது.


இருளர் மக்களின் நலனுக்காக அவர்கள் செய்திருக்கிற காரியங்களைப் பார்க்கும்போது ஆச்சரியம் தோன்றுகிறது. இந்த நூல் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு பாடப்புத்தகம்.
ஜாய் விட்டேகர் எழுத்து கீழே வைத்துவிடமுடியாத வசீகரம் கொண்டிருக்கிறது என்பது அவருடைய எழுத்துவன்மைக்கு சான்று. வாழ்த்துகள்!
முடிவில் நான் 1986 ல் வாங்கிய புத்தகத்தின் ஆசிரியர் ரோமுலஸ் விட்டேகர், தன்னுடைய ஆவணப்படங்களின் வழியாகவும், கிண்டி பாம்புப்பண்ணை வழியாகவும், வடநெம்மேலி முதலைப்பண்ணை வழியாகவும் தொடர்ந்து வந்திருக்கிறார். இப்போது தோழர் கமலாலயன் வழியே மீண்டும் என் கைகளில் புத்தகமாகத் திகழ்கிறார். ஆகா! இந்த வாழ்க்கை ஆச்சரியங்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறதே!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
புத்தகத்தலைப்பு: பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர்
ஆசிரியர்: கமலாலயன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ.500