Pambudan Oru Uraiyadal Children Story By Kumaraguru பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை - குமரகுரு

துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.

பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது.

“முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது” என்று மறுத்தேன்…

“நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக நாளாகும்! பரவாயில்லை பிறவா உயிரைவிட உயிருள்ளவரின் பசி போக்குதல் முக்கியம் அல்லவா?” என்று சொன்னது.

இந்த பாம்பினால் எப்படி இவ்வாறு சொல்ல முடிந்தது? எனக்கு புரியவேயில்லை? நான் குழம்பி கிடக்கிறேன். தாய்க்கு பிள்ளைதானே முக்கியம்? இது ஒரு விந்தையான பாம்பாக இருக்கிறதே?

“இல்லை பாம்பே!! ஆயிரம்தான் இருந்தாலும் உனது கருணைக்கு முன் என் பசி ஒன்றுமில்லை? நான் வேறு எதையாவது சாப்பிட்டு கொள்கிறேன்!” என்றேன்.

“நண்பரே!! நேற்று இந்த வழியாக ஒரு ஜே சி பி சென்றது, இந்த மரங்களும், என் புற்றும் எல்லாம் இன்னும் இரு நாட்களில் சுக்கு நூறாகி விடும்!! எப்படியும் உடையப் போகும் முட்டைகள்தானே, இரண்டை எடுத்து உண்ணுங்கள். ஒரு தவறும் இல்லை!” என்றது

சற்று கலங்கிதான் போனேன், “உள்ளே எத்தனை முட்டைகள் இருக்கின்றன பாம்பே?” என்று கேட்டேன்.

“இருபது இருபத்தைந்து முட்டைகள் இருக்கும் நண்பரே! எதற்காக கேட்கின்றீர்கள்?”

“முதலில் நான் இதுவரை பாம்பு முட்டைகளைச் சாப்பிட்டதில்லை. அடுத்து, இவ்வளவு கருணையுள்ள பாம்பை நான் சந்தித்ததில்லை. மேலும், உனக்கு என்னால் ஏதும் உதவ இயலுமா என்று யோசிக்கிறேன்?” என்றேன்

“எனக்கு உதவுவதால் எந்த பயனுமில்லை. எனது முட்டையின் தோல்கள் மிகவும் மெலிதானவை. அவற்றை ஓரிடம் விட்டு மற்றோர் இடத்துக்கு மாற்றவும் முடியாது?” என்று நான் கேட்கும் முன் பதில் தந்தது.

“சரி! ஆனால், என்னால் உன் முட்டைகளைக் காப்பாற்றித் தர முடியும் என்று இப்போது சொன்னால் நீ நம்புவாயா?” எனக் கேட்டேன்

“எப்படி என்று எனக்குத் தெரியும்?”

“அப்படியா? எப்படி என்று சொல்?”

“மஞ்சள் குங்குமம் கொண்டு வந்து இங்கே பூசி பால் ஊற்றி வைப்பாய். இந்த மூடர்கள் என் புற்றைக் கோயில் என்று சொல்லி இடிக்காமல் போவார்கள்! இதுதானேத் திட்டம்?” என்றது.

என் மூளையில் உதித்தத் திட்டத்தை எப்படி இது அப்படியே கூறியதென்று எனக்கு வியப்பாக இருந்தாலும், அதனிடம் அதை ஒப்பு கொண்டு, அதை போல் செய்யலாமா என்று கேட்கத் தோன்றியது…”ஆம்! அதேத் திட்டம்தான்… அதைத்தான் செய்ய போகிறேன்!” என்றேன்…

“வேண்டாம் நண்பா!! இயற்கை ஒரு முடிவையும் மனிதன் ஒரு முடிவையும் எடுத்து, முரண்பட்ட வாழ்வில் என் போன்று பல உயிரினங்கள் உலகெங்கிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் படைப்பு நியதியில் எதுவொன்றும் மேலில்லை, எலுவொன்றும் கீழில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட விசத்தைக் கூட எப்போது எங்கே யார் மீது பயன்படுத்த வேண்டுமென்று சொல்லி கொடுத்த இயற்கைக்கு எங்களை காக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும். ஆனால், இந்த மனிதர்கள் ஏனோ அவர்களுக்காகப் பிற உயிர்களைக் கொல்லும பல்வேறு விஷ யுக்திகளைக் கையாள்கிறான். காடுகளையெல்லாம் அழிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், பேராசையில் எங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்து கொண்டேயிருக்கிறான்.

கெடு சூழல் உருவாக்கித் தான் மட்டும் வாழ வேண்டுமென்ற முனைப்பில், காற்றிலெல்லாம் மாசைக் கலக்கிறான்! என் போன்ற உயிரினங்களெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறான். இன்னொரு முட்டைப் பொறிக்கும் நேரம். என் குட்டி எங்கே யாரால் கொல்ல படுமோ எந்த காரின் வீலில் சிக்கி சாகுமோ என்ற பயத்தில், அஞ்சியஞ்சி வாழ்கிறோம்! எங்களால் எலிகளைக் கூட இப்போதெல்லாம் பிடிக்க முடிவதில்லை… இன்னும் சற்று காலம் சென்றால் நாங்கள் பாம்புகள் என்பதையே நாங்கள் மறந்துவிட வாய்ப்புமிருக்கிறது! உன்னால் எனக்கு செய்ய முடிந்த ஓருதவி இருக்குமேயானால், ஊரருக்கு வெளியே இருக்கும் ஏதாவதொரு வனத்தில் என்னை அழைத்து சென்று விடு! அது போதும்!” என்ற நெடிய உரையைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது!

“நீ கண்ணீர் மல்க மன்றாடினாலும் இந்த மனுசப்பயல் மாற மாட்டான். ஆனால், எப்படி எல்லா பாம்புகளும் விசப்பாம்புகள் இல்லையோ அப்படிதான் எல்லா மனிதனும் பேராசைக்காரன் இல்லை. ஆனால், அந்த ஒரு சில பேராசைப் பிடித்த சுயநலவாதிகளால்தான் மனித இனமே நசுக்கப்படுகிறது. நீ எப்படி உன் பிள்ளைகளை எண்ணி வருந்தேகிறாயோ, மனிதர்களும் அதே போல் அவர்களின் பிள்ளைகளுக்கான வாழ்வை எண்ணி அஞ்சியஞ்சித் வாழ்ந்து வருகிறார்கள். உனக்கும் பெரும்பான்மை மனிதர்களுக்கும் ஒரே மாதிரி வாழ்வுதான். வா நாம் காட்டுக்கு போய்விடுவோம்… அங்கே ஜே.சி.பி வரும்வரை வாழ்ந்துதான் பார்ப்போம்!!” என்று நானும் பாம்போடு கிளம்பி விட்டேன்….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *