தமிழ் வளர்த்த பனையே – என்றும்
யாம் மறவோம் உனையே….!
தரணி போற்றும் வள்ளுவத்தை
தாங்கி பிடித்த உறவே…!
மருத நிலத்து மரமே-நல்
ஓலைச் சுவடி உனதே….!
மறத்தமிழன் நிலம் அளித்த
மகத்தான கொடையே…!
தொன்மை தொல்காப்பியம்
தொலையாமல் நீ காத்தாய்…!
ஓலையில் வலி தாங்கி
ஒப்பற்ற மொழி காத்தாய்…!
பதப்பட்டு பதப்பட்டு
பழம்பெருமை நூல் காத்தாய்…!
அழிவுகட்கு ஆட்படாமல்
அரும்பெரும் தொண்டு செய்தாய்…!
ஐம்பெருங் காப்பியங்கள்
தமிழுலகின் பெருங்கொடைகள்…!
அவற்றை தந்தமையால்
நீங்களும் எம் இறைவர்கள்…!
கற்கண்டு, பனைவெல்லம்
கவின்மிகு பனையோலை
இவையெல்லாம் எமக்காக-நீ
ஈன்றெடுத்த படைப்புகளாம்…!
திகட்டாத பனங்கிழங்கும்,
தித்திக்கும் பதநீரும்
மனமுவந்து நீயாக
மண்ணுலகிற்கு தந்தவையாம்…!
ஈராயிரம் ஆண்டுகளாய்
என்தமிழை சுமந்த உன்னை
எவ்வாறு புகழ்வதிங்கே
எளியோன் நான் அறியவில்லை…!
அன்னை மொழி காத்த
அன்பு மரமே, உம்மை
அழியாமல் காத்தெடுப்பது
அருந்தமிழர் கடமையன்றோ….!
உனைப்பற்றி கவியெழுதி
உளமார தருகின்றேன்…!
உன்பெருமை பறைசாற்றி
உன்பாதம் பணிகின்றேன்…!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நன்று