பனை மரச்சாலை – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல்: பனைமரச் சாலை.
ஆசிரியர் : காட்சன் சாமுவெல்
பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம்
பனையை வழிமொழிதல்
வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை நாகர்கோவிலில் பனைச் செயல்பாட்டாளர் பாஸ்டர் சாமுவேல் காட்சனின் உரையை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைவு. ‘பனைமரச் சாலை’ வாசிப்புக்குப் பிறகு சில காலமாக இருவரும் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தோம் எனினும், அன்றுதான் அவரை நேரில் சந்திக்கிறேன். பனையின் காதலரும் கடலின் காதலரும் சந்தித்துக் கொண்ட களிப்புறு தருணம். அவரது உரையும், அதற்குப் பின்னான விவாதமும் பனைக்கும் நெய்தலுக்குமான உறவை மீள்வாசிப்புச் செய்யும்படி என்னைத் தூண்டின. சில மாதங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் ஒருங்கிணைத்திருந்த பனைப் பயணத்தின்போது சொத்தவிளை கடற்கரையில் ‘நெய்தலில் பனை’ குறித்து ஓர் உரையை நிகழ்த்தவும் அழைக்கப்பட்டேன்.
இனவரைவியல், மானுடவியல், பண்பாட்டுத் தடங்களினூடே நம்மை வழிநடத்தும் காட்சன் சாமுவேலின் ‘பனைமரச் சாலை’ என்னைப் பல புலங்களினூடே அழைத்துச் செல்கிறது. அதில் ஒன்று பனை-இறையியல். சடங்குகளைக் கடந்த ஆன்மீகத்தின் கொண்டாட்டமாய் அமைந்த வாசிப்பு இது.
1. பெண்ணையாம் பனை
நூலைக் குறித்து அவதானிப்பதற்கு முன், சங்கப் புலவர்களின் கண்களினூடாக கடற்கரை மணல்வெளியை தரிசிக்கலாம்:
மணற்குன்றுகளின் மீதும் வெண்மணற் பரப்புகளின் மீதும் பசுமை தவழும் அடும்புக் கொடிகள் அடர்ந்து, பரந்து படர்ந்து கிடக்கும். அடும்பின் இலை மான் அடிக்கு (குளம்பு) ஒப்பிடப்படுகிறது; அடும்பு மலர் குதிரையின் கழுத்திலிடும் சங்கிலி மணிக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் மலர்கள் கத்தரி நிறத்திலிருக்கும். அடும்பின் அயலது நெடும்பூந்தாழை. தாழை தழைத்து, வெண்மலர் விரித்து, நறுமணம் பரப்பும். தாழையினடியில் மலரும் மற்றொரு தாவரம் வெண்கூதாளம். அதோடு முண்டகம் என்னும் கழிமுள்ளிகளும் (கள்ளிச்செடி) காணப்படும்.
கோடை மேல்காற்று கொண்டுவந்து குவித்த மணற் குவியலால் நெடும்பனை குறியதாகும்’ (குறுந்தொகை 248:3-6):
கானல் ஆடுஅரை புதையக் கோடையிட்ட
அடும்பு இவர் மணற்கோடூர
நெடும்பனை குறிய ஆகும்
கருக்கை உடைய நெடியமடல் குருந்தோடு பனை மறையுமளவிற்குக் காற்று மணலைக் குவிக்கும் (அகநானூறு 372:2-
2): பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருந்தொடு
மாயக் கடுவெளி தொகுத்த நெடுவெண் குப்பை
சங்க இலக்கியம் பனையை பெண்ணை எனக் குறிக்கிறது (விண்ணுற ஓங்கிய பெண்ணையாம் பனை). இக்காலத்தில் தாலம் என்றொரு பெயராலும் பனை குறிக்கப்படுவதாக காட்சன் எழுதுகிறார். ‘தாலம் என்பதற்குப் பாத்திரம் என்று பொருள்; தாலி, தலிஸ்மான் போன்ற சொற்கள் ‘தால’த்திலிருந்து பிறந்திருக்கலாம்’ என்கிறார் இவர்.
பனை குறித்த சங்க இலக்கிய விவரணைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்:
பனைகளின் அடிமரம் மிகவும் பருத்திருக்கும் (பசியரைப் பெண்ணை- நற்.218:11); அது முழவினைப் போலப் பருத்திருக்கும் (முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணை – குறுந்.301:1; முழாஅரைப் போந்தை – புறம் 85:7, 375:4); நீண்ட மடலோடு கூடிய ஓலைகள் உச்சியில் கொத்தாக நிறைந்திருக்கும் (தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை- நற்.135:1); அடிமுதல் முடிவரையில் கருக்கு மடல்களோடு கூடிய ஓலைகள் அடர்ந்து வளரும்; அவற்றை வெட்டிக் கழித்துவிடுவார்கள் –
கானல் ஆடுஅரை ஒழித்த நீடிரும்பெண்ணை
வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த
கானல் நண்ணிய வார்மணல் முன்றில்
நற்.354:1-4.
… ஒலிகா வோலை முன்மிடை வேலிப்
பெண்ணை இவரும்…
நற்.38:3-4.
2. பனை, மணற்குன்று, நன்னீர்வளம்
பனை விதைகள் நடவு செய்வதால் கடற்கோள், புயல், கடலரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களைத் தவிர்க்கலாம்/ தணிக்கலாம் என்பதில் உண்மை உண்டு. 10 பனை மரங்கள் இருக்கும் இடத்தில் கிணற்று நீர் வற்றாது என்கிற நம்மாழ்வாரின் கருத்து அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க வேண்டிய ஒன்று. காமராசர் முதல்வராயிருந்தபோது கடல் அரிப்பை தடுப்பதற்கு பல இடங்களில் பனை மரங்களை நட்டுள்ளார் என்றொரு செய்தி உண்டு. கள் இறக்க அனுமதி மறுக்கப் பட்டிருப்பதாலும் பனை பொருட்களுக்குச் சந்தை இல்லாமல் போனதாலும் பனைப் பொருளாதாரம் அழிவைச் சந்தித்திருக்கிறது, பனைமரங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு நமக்குப் பரிச்சயமாகியிருக்கும் உயிரினங்களில் சில, நம்மூர் இனங்களல்ல. திலேப்பியா மீன் மொசாம்பிக் தீவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது; மரவள்ளிக் கிழங்கு ப்ரசீலிலிருந்து வந்தது என்கிறார்கள். போலவே, பனைமரம் இந்தியாவின் பூர்வீக மரம் அல்ல, கிழக்கு ஆப்பிரிக்காதான் அதன் அசல் வாழிடம் என்கிறார்கள். இலங்கையில் பனை விதைகள் அதிக அளவு விதைக்கப்பட்டு பனை மரங்கள் வளர்க்கப் பட்டது. நாளடைவில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வளர்த்ததாய்ச் சொல்கின்றனர்.
இரண்டாயிரம் வருடங்களாக பனை தமிழின் பாடுபொருளாக இருந்திருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பனை இந்தியாவுக்கு வந்தது என்பது உண்மை எனின், அவ்வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆய்வு வெளிச்சம் தேவைப்படும் கருத்து இது.
கடலோரங்களில் நிலத்தடி நன்னீரைத் தக்க வைப்பதில் பனையின் பங்கு குறித்த அறிவியல் புரிதல் தேவை. மணற்குன்றுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் நிலத்தடி நன்னீர்வளம் மேம்பட்டிருப்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் (நாகை மாவட்டம்) பனை மரங்களை அரணாகக் கொண்ட மணற்குன்றுகள் அந்த கிராமத்தை 2004 சுனாமியிலிருந்து பாதுகாத்தது. பனைமரங்களோடு அமைந்திருக்கும் மணற்குன்றின் மறுபுறம் நெல்வயல்கள் உள்ளன. நன்னீர் மிகுதியாய்த் தேவைப்படும் நெல் சாகுபடிக்கு இம்மணல் குன்றுகளே ஆதாரம்! ஏரி, கண்மாய்க் கரைகளை பனைமரங்கள் அரண்செய்து நிற்பது கண்கூடு. கெடுவாய்ப்பாக, வயல் வெளிகளில் பனை மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக ஒரு தவறான புரிதல் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பரவியிருப்பதாகவும் அதன் விளைவாக அப்பகுதிகளில் பனை மரங்களை அமிலத்தை ஊற்றி பனைகளை அழித்து வருவதாகவும் ஊடகர் பிரபு ஆனந்தன் (பி.பி.சி. தமிழ், 24.10.2023) எழுதியிருந்தார்.
மணற்குன்றுகள் காற்றினால் உருவாகுபவை; காற்றின் தாக்கத்தினால் இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் குன்றுகளை ஓரிடத்தில் நிலைகொள்ள வைப்பதற்கு அரணாக நின்று உதவுபவை பனைமரக் கூட்டம். அவ்வாறான பனைமரக் கூட்டங்கள் அமைந்திருக்கும் மணல்வெளிக் கடற்கரைகளில் நெடிதுயர்ந்த குன்றுகளைக் காணலாம். நமது கடற்கரைகளில் உயிர்வேலியாக சவுக்குக் காடுகளை அமைக்கும் முறை ஒரு நூற்றாண்டு கால அணுகுமுறைதான். சவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.
இராவணன் மீசை (முள்ளி) உள்ளிட்ட புற்கள், தாழை, அடும்புக்கொடி உள்ளிட்ட படரும் கொடி வகைகள், கற்றாழை, கள்ளி போன்ற தாவரங்கள் மணற்குன்றுகளைப் போர்வை போல மூடிப் பாதுகாக்கின்றன. அவற்றின் வேர்கள் ஆழ்ந்து பரவி குன்றுகளை நிலைப்படுத்துகின்றன. தாழையின் மூட்டு வேர்கள் தகவாகவும் குன்றின் தாங்கிகளாகவும் நின்று உதவுகின்றன. படரும் தாவரங்கள் காற்றின் ஈரத்தையும் மழைநீரையும் மணலுக்குக் கடத்துகின்றன. பனை, மணற்குன்று, நிலத்தடி நன்னீர்- இம்மூன்றுக்குமான தொடர்பை நாம் இந்தக் கோணத்தில் அணுகுவது சரியாக இருக்கும்.
நிலத்தடி நீரைச் சேமிக்கவும், கடல் அரிப்பை தடுக்கவும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரியம் குறிப்பிடுகிறது. 2023இல் வாரியம் சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து கடலோர மாவட்டங்களில் பனை விதை நடவு மேற்கொண்டதாகத் தெரிகிறது.
3. பனையோலை
பனையோலை காட்சனின் கொண்டாட்டப் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. பனையோலைப் பயன்பாடுகள், கலைப்பொருட்கள் குறித்த ஏராளமான குறிப்புகளை நூலில் விதைத்துச் செல்கிறார் காட்சன். பள்ளிக்கு ஓலைகளைக் கொண்டு சென்ற கடைசித் தலைமுறையாகத் தனது பாட்டியை நினைவுகூர்கிறார். ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட வீட்டுப் பத்திரத்தை அவரது பூவார் (கேரளா) நண்பர் காண்பித்திருக்கிறார். தமிழ் எழுத்தில் எழுதப்பட்ட மலையாளப் பத்திரம்.
நெய்தலில் புழங்கிவந்த பனைபடு பொருட்களில் முக்கியமான ஒன்று பனையோலை. அறுவடையாகும் மீனைப் பத்திரப்படுத்த பாரம்பரிய மீனவர்கள் பனை ஈர்க்கில், குருத்தோலையால் முடைந்த நெகிழ்வான ஒமல் என்னும் கடகங்களைப் பயன்படுத்திவந்தனர். நீள்வட்ட வடிவில், மூன்றாய் மடித்துப் பாய்போல் வைத்துக் கொள்ளலாம். தரியமால் என்பது ஒமலில் திரிபு. மடிவலைகள் பயன்படுத்தும் ஒமல், ஒருவர் குளிருக்குச் சூடிக்கொள்ளும் அளவு பெரிதாய் இருக்கும். கன்னியாகுமரியில் இதற்கு ஒமல் என்று பெயர்; வட தமிழகத்தில் பரி என்பர். பரியின் வடிவம் ஜாடியைப் போன்றும், பரிமாணம் சிறிதாகவும் இருக்கும். கடற்குடிகள் மடப்பெட்டி என்கிற மடித்த ஓலைப் பெட்டியைக் கடலுக்கு எடுத்துச் செல்வார்கள். வெற்றிலை, தூண்டில் போன்றவற்றை அதில் வைத்திருப்பர்கள். கடல் தங்கல் மீன்பிடி பயணத்துக்கான உணவுக் கலன்களை பனையோலைக் கடகத்தில் கொண்டு போவார்கள்.
கோழியாமுரல் வலைகளின் உருவாக்கத்தில் மஞ்சள் தோய்த்த குருத்தோலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோழியாமுரல் எப்போதும் தெளிந்த நீரில் மேல்மட்டத்தில் இரைதேடும் உயிரினம். பளிச்சென்று தெரியும் மஞ்சள் பூசிய பனங்குருத்தோலையின் நிறம் மீன்களை வெருட்டி வலைக்குள் சிக்க வைக்கிறது.
கடலில் பனையோலைக்கு இத்தனைப் பயன்கள் என்றால், கரையில் அதற்கு வேறு பல பயன்பாடுகள் உண்டு. கடகம், குட்டிக் கடகம், ஐந்தறைப் பெட்டி, ஈர்க்கில் பெட்டி, பிளாப்பெட்டி, சோற்றுப் பெட்டி, ஓலைப்பாய், தடுக்கு, விசிறி, பட்டை இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். கொழுக்கட்டைப் பண்டம் செய்யப் பனையோலை வேண்டும்; கஞ்சி அருந்த பனையோலை நெட்டி; சிறுவர்களுக்குக் காற்றாடி உள்ளிட்ட பலவகை விளையாட்டுப் பொம்மைகள்…
வழக்கொழிந்துபோன பனைபொருட்களையும் கலைப்பண்டங்களையும் பற்றியதான காட்சனின் ஆதங்கம் பனைசார் சமூகத்தின் அழிவின் குறியீடாக நிற்கிறது.
4. நெய்தலில் புழங்கும் பனை
கடற்கரைப் பகுதிகளில் வீடுகளுக்கு பனை மட்டையால் வேலி அமைப்பார்கள் (காவோலை முன்மிடை வேலி). தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் மிகுதியாகப் பனைமரங்களைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி கடற்கரைகளில் தென்னந்தோப்புகளிலும் வீட்டு மனைகளிலும் பனை மட்டை வேலிகளைப் பார்க்கலாம். மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கத் துடுப்பாகவும், மட்டைப்பந்து ஆட்டத்துக்கு மட்டையாகவும் பனை மட்டை பயன்படும். பனை மட்டையிலிருந்து உரித்தெடுக்கும் நார் கடகம், முறம், கட்டில், சலிப்பான் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுத்துவார்கள்.
பனை உணவுப் பதார்த்தங்கள் என்று எடுத்துக் கொண்டால்- பதனீர், கள், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தவண் எல்லாமே சத்தான, ஆரோக்கியமான உணவுகள். கடற்கரை ஊர்களில் பதனீரில் பாற்சோறு சமைப்பார்கள். அரிசி, பெரும்பயிறு, தேங்காய்த் துருவல் சேர்த்த சத்தான உணவு.
வாழும் காலத்துக்குப் பிறகு பனைமரம் பனந்தடியாகப் பயன்படுகிறது- தூண், உத்திரம், கால், முகடு, கழிக்கோல், நிலை, கதவு, தட்டு வீட்டின் தளம் – இப்படி நிறையப் பயன்பாடுகள். என் வீட்டின் தலைவாயில் கதவு கூட பனைதான்.
கடல் புகும் மீனவர்களுக்கு பனைமரங்கள் வேறொரு வகையில் உதவியிருக்கின்றன. நவீன இடங்கணிப்பான் இல்லாத காலத்தில் கடலில் குறிப்பிட்ட இடங்களில் சென்று தூண்டில் வீசுவதற்கும், முன்தினம் விரித்து வைத்த வலையை மறுநாள் போய் எடுத்து வருவதற்கும் கரை அடையாளங்களின் அடிப்படையில் கணியம் குறிப்பார்கள்.
கன்னியாகுமரி மீனவர்களுக்கு மருந்துவாழ் மலை, மகேந்திரகிரி மலை, சுங்கான்கடை மலை போன்றவை முக்கியமான கரைநில அடையாளங்கள். போலவே, கோவில்களின் உயர்ந்த கோபுரங்கள், பனைமரக் கூட்டங்களையும் கணியக் குறிப்பாகப் பயன்படுத்துவார்கள். பள்ளம்துறை (கன்னியாகுமரி) மீனவர்கள் மீன்பிடித்து வந்த மடைகளில் ஒன்று, நாகர்கோவில் பகுதியிலுள்ள ஏழு பனைகளைக் கணியமாய்க் கொண்டிருந்தது. பனைகள் வெட்டி வீழ்த்தப்பட்டபோது மீனவர்கள் அம்மடையின் கணியக் குறிப்பை இழந்து போயினர்.
தாப்பி (சூரத், குஜராத்) ஆற்றுக் கழிமுகப் பகுதியில் கடல் புகும் மீனவர்கள் பனந்தடிகளை நங்கூரமாய்ப் பயன்படுத்துகிறார்கள். தாப்பி ஆற்றுக் கழிமுகத்திலிருந்து ஏறத்தாழ 20 மீட்டர் ஆழக்கடலில் கன்னியாகுமரி விசைப்படகுகள் வழக்கமாக நெடுந்தூண்டில் நீட்டுகின்றன. குஜராத்திகளின் விசைப்படகுகள் கில்நெட் விரித்திருப்பார்கள். தாப்பி ஆற்றுக் கழிமுகம் மிகப் பெரியது. ஆறு, நிறையச் சேறு, மணலைக் கடலுக்குள் தள்ளிக் கடலின் ஆழத்தை நிரம்பவே குறைத்திருக்கும். கரையிலிருந்து பத்து மணிநேரம் கடலுக்குள்ளே ஓடினால்தான் 20மீட்டர் ஆழம் கிடைக்கும்; இந்த ஆழம் கூட, கடல் ஏற்றம் போட்டுக் கிடக்கும் காலத்தில்தான். வற்றம் வரும்போது, ‘இதோ பார்!’ என்று கடல் பின்னோக்கிப் போய்விடுகிறது. குஜராத்தி மீனவர்கள் ‘கரண்ட் ஜாத்தா ஹை’ என்று முன்னமே சொல்லிவிடுவார்கள்.
கன்னியாகுமரி விசைப்படகுகள் வழக்கம் போல அங்கு தூண்டில் நீட்டியிருக்கின்றன. தீடீரென்று வருகிறது கடல் வற்றம். ஒரு பிரளயம் வந்தது போல, இவர்களின் படகுகளைக் கடலுக்குள்ளே சரசரவென்று இழுத்துக் கொண்டு போகிறது! ஆயிரம் கிலோ நங்கூரத்தை இறக்கினாலும் படகு அந்த நீரோட்டத்துக்குத் தாக்குப் பிடிக்கமாட்டேன் என்கிறது. ஆனால் பக்கத்திலேயே கிடக்கும் குஜராத்திப் படகுகள், ஆணி அடித்தது போல அசையாமல் அங்கேயே கிடக்கின்றன.
அங்குள்ள ஒவ்வொரு படகுக்காரரும் பெரிய பெரிய பனைமரத் தண்டுகளைக் கழிமுகத்தின் சேற்றுப் பரப்பில் ஆங்காங்கே இறக்கி, அதில் வடத்தைப் பிணைத்து, அதனுடன் ஒரு மிதவையைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பனைமரங்கள் நாளடைவில் சேறு சகதியில் ஆழமாகப் புதைந்து போய்விடும். கடல் வற்ற நேரங்கள் பருவகாலம் தோறும் மாறிக் கொண்டிருப்பது என்றாலும், அங்குள்ளவர்களுக்கு அவை அத்துப்படி. ஏற்றம் வருகிற நேரத்தில் படகுகள் தொழில் பார்க்கும்; வற்றம் வருகிற நேரம் அவரவர் பாட்டையிலுள்ள வடத்தில் படகைக் கட்டிவிடுவார்கள். அவர்களுக்கு இது தொழில் மூதலீட்டின் ஒரு பகுதி.
5. கள் – கற்பிதமும் எதார்த்தமும்
இலங்கையில் ஒரு காலத்தில் பருத்திச் சாகுபடிக்கு அரசு தடை விதித்திருந்தது. ஈழத்துத் தோழர் தமயந்தி சைமனுடன் உரையாடியபோது இதை சுவாரஸ்யத்தோடு குறிப்பிட்டார். மணிலா இழை வணிகத்தை உக்குவிப்பதற்காக அரசு அந்த முடிவை எடுத்ததாம். ஆனால் பருத்தி இழை வலைகளிலுள்ள இலாவகம் மணிலா இழை வலைகளில் கிடைக்கவில்லை என்பதால் மீனவர்கள் பருத்தி நூலையே நாடினர். இன்றைக்கு கஞ்சா பயிரிடுவது போல அன்றைக்கு ‘கள்ளத்தனமாக’ பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். என் சிறு பருவத்தில் மதுவிலக்கு கொள்கை நடைமுறையில் இருந்தது. கள் அருந்தியவர்களை காவல்துறையினர் ‘ஊத’ச் சொல்லிக் கைது செய்வார்கள். கள் விற்பனையாளர்கள் கடுமையாய்த் தண்டிக்கப்பட்டனர். இன்றைக்கு அரசே மதுவை விற்பனை செய்கிறது!
ஜூன் 2024இல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் 70ஐக் கடந்திருந்தது. அந்தப் பின்னணியில் பூரண மதுவிலக்கு பற்றிய பேச்சுகள் பராலாக எழுந்தன. 2023இல் மரக்காணத்திலும் பல உயிர்கள் கள்ளச்சாராயத்துக்கு இரையாயின. கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற நேரங்களில் மதுவிலக்கு பற்றிய விவாதங்கள் எழுந்து அடங்கிவிடுகின்றன. இன்றைக்கு மதுவைத் தாண்டி, போதைப்பொருட்கள் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கின்றன.
பதின்வயதினர் வரை அதன் வீச்சு பரவியிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமேயில்லை என்பதை எல்லாத் தரப்பினரும் புரிந்து கொள்கின்றனர். இதுதான் இன்றைக்கு எதார்த்தம். கள்ளுண்ணாமை என்கிற அறவியல் பார்வையைத் தாண்டி, குடி பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது.
கள்ளருந்துதலும் கள் காய்ச்சுதலும் நெய்தல்நில வழமையாக இருந்துள்ளன. சங்க காலத்திலிருந்தே கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது:
‘பருவமழை தப்பாமல் பெய்யும்; வலை வளம் குன்றாமல் மலியும்; கரிய பனையினது இனிய கள்ளையுண்டு களிப்பர்’ (நற்றிணை 38:1-3); ‘மேலை மலையின்கண் ஞாயிறு மறையும் மாலை வேளையில் பகலில் எளிதில் பெற்ற பெருமீன்களை விற்று மயக்கும் கள்ளைக் குடிப்பர்’ (நற்றிணை 239:1-3); ‘சில சுறாமீன்கள் கட்டுக்கடங்காமல் திரிந்தன; கனன்று எரியும் தீப்பந்த ஒளியால் அவற்றின் போக்கினைக் கூர்ந்து நோக்கித் தப்பாமல் குறிவைத்து, உறுதியாய்த் திரித்த கயிற்றில் பிணைக்கப்பட்ட எறியுளி கொண்டு தாக்கிப் பிடித்தனர். பின்னர்ப் பெருமீன்களை நிரம்பப் பிடித்த மகிழ்ச்சியோடு கரை திரும்பினர். உடல்வலி தீர இன்பந்தரும் கள்ளினை இனிதுண்டு களித்தனர்’ (நற்றிணை 388:2-9).
பனைமரங்களிலிருந்து இறக்கப்படும் கள்ளையன்றி, வெறிமயக்கம் தரும் ஒருவகைக் கள்ளினையும் நெய்தலர் வடிப்பர். பெரும்பாணாற்றுப்படை (275:28) கள் வடிக்கும் முறையை இவ்வாறு பதிவிட்டுள்ளது:
‘குற்றாத கொழியலரிசியைக் கழியாகத் துழாவிச் சமைத்து, அக்கூழினைப் பரந்த வாயையுடைய தட்டைக் கலத்திலே ஊற்றியாற்றுவர்; பின், …நல்ல நெல்லின் முளையை இடித்து அதில் சேரக் கலப்பர்; களிப்புச் சுவை மிகும் பொருட்டு ஈரிரவும் இருபகலும் உறுதியான அகழ்வாய்ச் சாடியில் பெய்து வைப்பர். அதன் வெறியூட்டும் நிலை முதிர்ந்துவரும். வெந்நீரில் வேகவைத்து நெய்யரியால் வடிகட்டி விரலாற் பதமாய் அலைத்துப் பிழிந்தெடுப்பர். அதுவே வெறியூட்டும் கள்ளாம். துணைக் கறியாய்ச் சுட்ட மீனுடன் அக்கள்ளை அருந்திக் களிப்பர்.’
சிறுபாணாற்றுப்படையில் (153-159, 163) பரதவ மகளிர் கள் காய்ச்சிய செய்தி பதியப் பெற்றுள்ளது: …திங்களும் ஏங்கும் எழில் முகத்தையும் கூரிய வேல் போன்ற கண்களையும் உடைய நுளைமகள் வடித்தெடுத்த- புளிப்பேறிய கள்ளினை (நுளைமகள் அரித்த பழம்படு தேறல்) சுட்ட குழல்மீனோடு, விருந்தோம்பலில் சிறந்தோங்கிய பரதவர் ஊட்டுவர்.
தமிழ் நாடு அரசு கள்ளுக் கடைகளைத் திறந்த காலத்துக்கு முன்னால் கள் உற்சாக பானமாகவும் உள்சுழற்சிப் பொருளாதாரக் கூறாகவும் இருந்து வந்தது. கள்ளுக் கடைகளின் வரவு கலப்படத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது. பிறகு சாராயக் கடைகள் வந்தன, இன்றைக்கு டாஸ்மாக் மாநிலத்தின் மூலை முடுக்கெங்கும் கடைபரப்பியிருக்கிறது. மீனவர்கள், விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடலுழைப்புச் சமூகத்துக்கு எட்டாத விலையில் மது விற்கிறது. அம்மக்களின் வருவாய் உறிஞ்சப்பட்டு அரசுக் கருவூலத்துக்கு மட்டுமல்ல, அரசியல் பிரமுகர்களின் பண்டக சாலைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. பனைசார் சமூகங்களுக்கு பதனீரோடு கள்ளையும் இறக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பது காட்சன் தரப்பு கோரிக்கையாக உள்ளது. ‘கள்ளில் போதை இருக்கிறது, அதனால் அதை அனுமதிக்க முடியாது’ என்று ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் சொல்கிறார்.
சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்- கள், சாராயம், உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மது- இந்த மூன்றில் போதை ரீதியாக, உடல்நல ரீதியாக, பொருளாதார ரீதியாக எது ஆகக் கேடானது? குடியை வசதியானவர்களின் தனியுரிமை ஆக்குவது மக்களாட்சிக்கு உகந்ததா? அடித்தள மக்கள் ஏன் கள்ளச் சாராயத்தை நாடிச்செல்ல நேர்கிறது? கள்ளச் சாராயத்தின் அடிவேர் ஏன் இன்னும் அறுக்கப்படவில்லை?
இப்பின்னணியில், பனைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக பனைமரச் சாலை முன்வைக்கும் கருத்துருக்களில் ஒன்று கள் இறக்குதல். தமிழக அரசின் பனைத் தொழிலாளர் வளர்ச்சி வாரியத்தில் உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ள இந்நூலாசிரியர், அடித்தள மக்கள் செயல்பாட்டாளராக இக்கருத்துருவை முன்மொழிகிறார்.
பனைப் பொருளாதாரம் அடித்தள மக்களுக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கிறது என்பதை, அதன் வீழ்ச்சி சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகியிருப்பதை தனது களப் பயணங்களின் புரிந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை 15 கோடியிலிருந்து ஐந்து கோடியாய்க் குறுகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் கள் இறக்க வாய்ப்புள்ள இரண்டு கோடி மரங்களை முழுமையாய்ப் பயன்படுத்தினால் கூட ஏராளமான முதல்நிலை, இரண்டாம் நிலை தொழில்கள் உருவாகும் என்கிறார் காட்சன். உண்மைதான். கள் இறக்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான பனை மரங்கள் பராமரிக்கப்படாமல் அழிந்து போய்விட்டன என்கிறார் எர்ணாவூர் நாராயணன் (பனை வளர்ச்சி வாரியம்).
அண்மையில் ஆர்வலர் வின்ஃப்ரெட் தாமஸ் பனையையும் கடலையும் இணைக்கும் பொருளியல், சமூகவியல் பார்வையை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் (நன்றி: ஷேன்). தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் உப்பு உற்பத்தியாளர் உள்ளிட்ட கடற்குடிகளுக்கும் பனைசார் மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு நீடித்து வந்துள்ளது. இரு தரப்பினரின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் எழும் பொதுவான சிக்கலையும், அதில் அரசின் பாராமுகத்தையும் கவனப்படுத்தும் வின்ஃப்ரெட், இதனை இரு தரப்பும் இணைந்து அணுக வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறார். மீனைப் போன்றே பனைபடு உணவுகளும் (பதனீர், நுங்கு) எளிதில் கெட்டுப்போகும் பண்டம்; இவற்றின் மதிப்புச் சங்கிலியையும் சமூகங்களின் சந்தை உறவையும் மேம்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். பூவுக்கும் பாலுக்கும் சாத்தியமாகியிருக்கும் சமூக ஆதரவும் உள்கட்டமைப்பு வசதிகளும் ஊனுக்கும் கள்ளுக்கும் சாத்தியமாக வேண்டும்; அதுவே சமூக நீதி.
உற்பத்திக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையை இம்மக்களுக்கு உத்தரவாதப்படுத்த உறைபாடம், சரக்குப் போக்குவரத்து தொடர்பான அடிப்படைக் கட்டுமான வசதிகள் இன்றியமையாதவை. அவர்களுக்கான சந்தையை நிறுவுவதற்கு அரசும், சார்ந்த முகமைகளும் துணைநிற்க வேண்டும். வின்ஃப்ரெட் பரிந்துரைப்பது போல, கடலோரங்களில் பனை, கடல்சார் சமூகங்கள் இணைந்து வேலை செய்யும் வாய்ப்புகளை ஆராய்ந்து செயல்படுத்துவது காலத்தின் தேவை.
6. பனை அடையாளம்
‘பனைமரச் சாலை’யின் மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று பனைத்தொழில் கூலி (அத்தியாயம் 39). பனைத்தொழிலின் பெறுமதியை நிலவுடமையாளரும் உடலுழைப்பாளரும் சமமாய்ப் பகிர்ந்து கொள்ளும் வழமையின் வரலாற்றுப் புள்ளியில் கவனம் குவிக்கும் பதிவர், அதைப் பழங்குடிப் பண்பாட்டின் பிரதியாய்ப் பார்க்கிறார். ஏதொரு தரப்புக்கும் இழப்பின்றி, பதனீர் நுட்பமாய்ப் பங்கிடப்படுகிறது. நிலத்தின் ஈவினைச் சமமாய்ப் பங்கிடுதல் என்பது பழங்குடிப் பொருளாதாரத்தின் கூறு. கூட்டுறவுப் பொருளாதாரத்தின் நீட்சி. பனையேற்றுத் தொழிலில் அடிமை ஊழிய வழமை நீடித்திருந்த ஒரு காலத்தை அகிலத் திரட்டிலிருந்து மேற்கோள் காட்டும் பதிவர், பெறுமதியின் உரிமைப் பங்கு மீட்டெடுக்கப்பட்டதை ஓர் உழைப்பாளியின் சிந்தனையில் விளைந்த புரட்சியாகவும், அத் தொழிற்சமூகத்தின் ஒன்றிணைந்த முன்னெடுப்பின் விளைவாகவும் அடையாளம் காட்டுகிறார். நிலவுடமைச் சமூகம் விழுங்கிவிட்ட பழங்குடி விழுமியத்தை உடலுழைப்புச் சமூகம் மீட்டெடுத்த பெரும் வரலாறு ஈது.
திணைநிலப் பொருளாதாரத்தில் சில பொதுத் தன்மைகள் உள்ளன. அவை மண்ணின் பண்பாட்டு விழுமியம் சார்ந்தவை. கரைவலைப் பொருளாதாரத்தைக் கடல் பழங்குடிகளின் கூட்டுறவுப் பொருளாதார வகைமாதிரி என என் பதிவுகளில் குறித்துள்ளேன் (வேளம், கடல்வெளி, 2017). அன்றாடப் பெறுமதியை அவரவர் பங்களிப்புக்கு ஏற்றவாறு யாரும் முகம் கோணாத விதத்தில் உரிமையாளர் பகிர்ந்தளிப்பார். கடல் வளத்தை அறுவடை செய்வதில் அண்டைப்பகுதி மக்களுக்கிடையே எழும் மோதல்களைத் தவிர்க்கும் பொருட்டு, அச்சமூகங்கள் அறுவடைக் களங்களையும் காலங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. கடல்சார் மக்களின் மோதல் மேலாண்மைக்கும் இவை சான்றாகும். பனைசார் மக்களின் அற விழுமியங்களை, வாழ்க்கைத் தடங்களை அவ்வாறே பனைமரச் சாலையில் பார்க்கிறேன்.
‘அனைத்துச் சமுதாயத்தினரையும் இணைக்கும் உப்பைப் போல பனையும் அனைவரையும் ஒன்றிணைப்பது’ என்கிறார் காட்சன். நேற்றைய உடலுழைப்புச் சமூகமான நாடார்கள் பேசக் கூசுகிற ஒரு பொருளைப் பெருமையின் அடையாளமாய் முன்வைப்பது காலம் உகந்த பார்வையே (நெஞ்சிலே காய்ப்பு சொல்லவில்லையோ!). ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயில்கையில், ‘நான் ஒரு பனையேறி’ என்று தன்னைப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்வதன் வழியாக, அடித்தள மக்களுக்கான சரியான அடையாள அரசியலை முன்னெடுக்கிறார். சாதிப் பித்துக்குச் சாட்டையடி கொடுக்கும் அதே வேளையில், இனக்குழு விழுமியத்தைத் உயர்த்திப் பிடிக்கும் செயல்பாடு இது. ஓர் இறைப்பணியாளர் இப்படிச் செய்வதா என்கிற ஆதங்கம் மற்ற இறைப்பணியாளர்களுக்கும் எழ வாய்ப்புண்டு. தென்னமெரிக்காவில் விடுதலை இறையியலை முன்மொழிந்த ‘அங்கியணிந்த கலகக்காரர்களை’ (Rebels clad in Cassock) நினைவூட்டும் காட்சன், சாதிவெறியரல்லர், தாழ்வு மனப்பாங்கில் தவிப்பவருமல்லர். ‘கிறித்தவம் திரு அவைக்கு வெளியிலும் வாழ்கிறது’ என்று அறைகூவல் விடுத்த ஆயர் ஆஸ்கர் ரொமேரோ போல, காலம் உகந்த இறையியலை முன்னெடுக்கிறார் காட்சன். மற்றோரிடத்தில், ‘இந்தியக் கிறிஸ்தவர்கள் தனித்துச் செல்கிறவர்களல்லர்; இங்குள்ள தொல்பாரம்பரியத்தின் தூய்மையின் சின்னங்கள்’ என்கிறார் அவர். இந்தியாவின் பல்சமூகச் சூழல் மிகுந்த நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கும் இத்தருணத்தில் இருகரம் நீட்டி வரவேற்கவேண்டிய கருத்தாக்கம் இது.
7. பனைத் திருப்பணி
சமயத்தின் மீதான சுயவிசாரணையும் நூலில் ஆங்காங்கே மேலெழுகிறது. 13ஆம் நூற்றாண்டில் போப்புவிற்கும் இறையியலாளர் தாமஸ் அக்வினாசுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை நினைவுறுத்துகிறார் காட்சன்:
போப்பு: “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று பேதுருவைப்போல் இனி திருச்சபை சொல்லவேண்டி வராது.”
தாமஸ் அக்வினாஸ்: “ஆனால், பேதுருவைப் போல, ‘எழுந்து நட’ என்று இனிமேல் திருச்சபையால் சொல்ல முடியாது.
சொத்துக் குவிப்பிலும் தன்னை அதிகாரப்படுத்திக் கொள்வதிலுமே முனைப்புக் காட்டும் நிறுவன சமயம் வரலாற்றில் தவறவிட்ட பணி அடித்தள மக்களின் குரலாக ஒலிப்பது. பாஸ்டர் காட்சன் தோள்மேல் சுமத்திக் கொண்டிருக்கும் பனைத் திருப்பணி அவ்வாறு தவறவிட்ட பணிகளில் ஒன்று.
தென் கேரள சீர்திருத்த சபை பேராயர் சாமுவேல் அமிர்தம் கன்னியாகுமரி பனை வளர்ச்சி சங்கத்தை நிறுவி (1977), பனைத் தொழிலாளர்களின் ஈடேற்றத்துக்கான முத்திரைப் பணிகளுக்கு வித்திட்டிருக்கிறார். இதற்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு கோட்டார் கத்தோலிக்க சமய நிறுவனத்தின் சார்பில் பெல்ஜியம் பாதிரியார் ஜேம்ஸ் தொம்பர் வேணாட்டுப் பனைத் தொழிலாளர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். பாஸ்டர் காட்சனின் பனைத் திருப்பணியை இவ்வரலாறுகளின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.
பனைமரச் சாலை அடித்தள மக்களின் இறையியலைக் கொண்டாடுகிறது; திணைநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுகிறது. வேதநூலையும் இறையியலையும் நிகழ்காலத்துக்கு, உள்ளூர்ச் சூழலுக்குப் பிரதியாக்கம் செய்வதே நடைமுறை இறையியல். ‘திருச்சபை செயல்படும் போதகருக்கு எளிதான ஒன்றல்ல என்பதைச் சிறு வயதிலேயே நான் கண்டு கொண்டேன்’ என்கிறார் ஆசிரியர். ஒரு வகையில் இது புதிய கல்வாரிப் பயணம். வாழ்வைச் சிலுவையாய்ச் சுமக்கும் மண்ணின் மனிதர்களைக் கவனப்படுத்தும் நவீன சிலுவைப்பாதை என்றும் சொல்லலாம்.
மிகுந்த சிரமங்களுக்கிடையில் அவர் மேற்கொண்டுவரும் பனைத் திருப்பணி, சமய நிறுவனத்திற்கு உவப்பானதாய் இராது. புதைந்து மடியத் துணியும் கோதுமை மணியாவதே இறையழைப்பின் இலக்கு என்று கருதுகிறேன். மக்களை மையமிட்டு இயங்கும் சமயத்தின் பணி இதுவேயன்றி, தெருவெங்கும் ஒலிபெருக்கி கட்டி பிரார்த்தனைகளை ஏறெடுத்து, காணிக்கைப் பெட்டியை நிரப்பிக் கொள்வதல்ல.
பனைப் பயணத்தில் காட்சனின் சந்திப்புகள் பலவும் தற்செயலாகவே நிகழ்கின்றன. சில தற்செயலான சந்திப்புகள் வாழ்வில் திருப்புமுனைகளாய் அமைவதுண்டு. வாழ்வின் அருங்கணங்கள் முன்முடிவற்ற தேடலால் நேர்பவை; நீங்கா நினைவுகளாய் நம்மோடு ஒட்டிக் கொள்பவை. ‘வேட்கையுடன் செல்வதால் அனேக காரியங்களை அவதானிக்க முடிகிறது’ என்கிறார் காட்சன். உண்மைதான். வாழ்வின் ‘அன்றாடத் தன்மைக்கு’த் தன்னை ஒப்புவித்துவிடும் எளிமை ஒருவருக்குக் கைகூடிவிட்டால், பயணத்துக்கு ஒரு காவியத் தன்மை அமைந்துவிடுகிறது. ‘பனைமரச் சாலை’யில் அது நிகழ்ந்திருக்கிறது.
சமத்துவம், சம வாய்ப்பு, மானிட அக்கறை, அடித்தள மக்கள் சார்பு நிலைப்பாடு என்பதாக முன்னுதாரணமற்ற வழித்தடத்தில் நான் கைப்பிடித்து அழைத்துச் செல்லப்படுகிறேன். கற்பகத்தருவைத் தேடித் தேடி இந்தியாவின் சாலையற்ற சாலைகளில் ஓடும் ஆசிரியரின் புல்லட்டின் பின்னிருக்கையிலமர்ந்து அப்பயணத்தின் ஒவ்வொரு அதிர்வையும் இரசித்து அனுபவிக்கத் தொடங்குகிறேன்.
‘என் பயணங்கள்… ஆய்வு செய்யும் திறன் உள்ளவர்களை நோக்கி கவன ஈர்ப்பு செய்யும் ஒரு பயணம்’ என எளிமையோடு சொல்கிறார் காட்சன். உண்மையில், நெடுஞ்சாலைக்கான தடம் குறிக்கும் ஒற்றையடிப் பாதை போல, பொருளியல், பண்பாட்டுத் தளங்களில் பனையின் இடம் குறித்த புலம்சார் ஆய்வுகளுக்கான முன்னோடியாகவும் அமைகிறது ‘பனைமரச் சாலை’.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வறீதையா கான்ஸ்தந்தின்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.