2017-ஆம் ஆண்டின் இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் இந்த நூல் நற்றிணைப் பதிப்பகம் வாயிலாக வெளியாவது குறித்த ஓர் அறிவிப்பும், அதனோடு நூலாசிரியரான போதகர் காட்சன் சாமுவேல் ஜெயமோகனுக்கு அதற்கு முன்னர் தனது பயணம் குறித்து எழுதியிருந்த கடிதங்களின் இணைப்புகளும் கிடைத்தது. அதனை வாசித்தபோது நூலின் அடிப்படை மிகுந்த ஆச்சர்யமளித்தது. வாசிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியது. பின்னர் சிறிதுகாலம் கழித்து பனுவலில் வாங்கிய புத்தகம் இத்தனை நாள் வாசிக்கப்படாமல் இந்த ஓய்வுக்காக காத்திருந்துள்ளது போலும்!
அடிப்படையில் போதகராக உள்ள காட்சன் சாமுவேல் கடந்த 2016-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை, தனது பணியிடமான மகாராஷ்டிரா மாநிலம் ரசாயனியில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா, புதுவை மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டில் தனது மாவட்டமான குமரியில் உள்ள நாகர்கோவில் வரை, 3000 கிலோ மீட்டர்கள் தனது புல்லட் வண்டியில் மேற்கொண்ட பயணமே “பனைமரச் சாலை” என்னும் பெயரில் இந்த நூலாக மலர்ந்துள்ளது.
ஆனால் இது வழக்கமான உல்லாசப் பயண அல்லது சாகசப் பயணச் சுற்றுலா அல்ல! தனது சிறுவயது முதலே பனை சார்ந்த வாழ்வியல் மீது பெருங்காதல் உடையவராக, அந்த தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உழைப்பதில் பெரு விருப்பம் கொண்டவராக, அழிந்து வரும் பனைத்தொழிலை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தீராவேட்கை கொண்டவராக உள்ள ஒருவர், அதனைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகளுக்கு ஓர் அச்சாரமாக, இந்த நிலத்தில் பனை சார்ந்த வாழ்வின் கூறுகளை, அதிலுள்ள கலாச்சாரத்தை நோக்கிச் செய்த ஒரு ‘வேட்கைப் பயணம்’!
குமரி மாவட்டத்தில் பிறத்தவரான காட்சன் இறைப்பணிக்காக, பெங்களூருவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவக் கல்லூரியில் பயிலும்போது கூட, தன்னை பனைத்தொழிலாளர் பிரதிநிதியாகவே மனதில் வரித்துக் கொண்டு செயல்படுகிறார். அதற்காக திருமறையாம் விவிலியத்தின் துணையை, அதன் வரிகளை, அதன் செழுமையான பொருளையே அவர் நாடுகிறார். குறிப்பாக கல்லூரியில் அவர் நடத்திய தனது ‘மாதிரி ஆராதனை’ குறித்து எழுதியுள்ள பகுதிகள் அதற்கான சான்று. பின்னர் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செயல்படும் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான்காண்டுகள் பணியாற்றியது அவரது லட்சியத்தை இன்னும் கூர்மை செய்திருக்கும் எனலாம்.
இந்த நூலில் அவரது பயணம் குறித்த எத்தனையோ தருணங்களை, சந்தித்த மனிதர்களை, கண்டடையும் செய்திகளை எல்லாம் நண்பர்கள் நீங்களே வாசித்தறிவதே சிறப்பாக இருக்கும். அதுகுறித்து விளக்கி எழுதுவதை விட சில மனப்பதிவுகளை மட்டும் பகிரலாம் எனத் தோன்றுகிறது. ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று இது ஒரு ஆன்மிகப் பயணம் என்றும் கூறலாம். காட்சன் போதகர் என்றாலும் தனது பயணம் முழுவதும் பனை எவ்வாறு மற்ற மதங்களுடன், வழிபாட்டு முறைமைகளுடன், பழக்க வழக்கங்களில் அழகாக ஒத்திருக்கிறது என்பது குறித்த அவரது சித்தரிப்பும் அவதானிப்பும் உண்மையிலேயே மெச்சத்தக்கது. குறிப்பாக இந்தியத் தொன்மத்தில் பனை மரம் பத்ரகாளியுடன் ஒப்பிடப்படுவது குறித்த நோக்கு, பனையைத் தலவிருட்சமாக கொண்ட கோயிலுக்கு அவரது பயணம் மற்றும் நாகூர் தர்காவில் வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பிரியாணி அளிக்கப் பயன்படுத்தப்படும் பனைப்பெட்டி எனச் சில விஷயங்களைச் சொல்லலாம்!
அதுபோல பயணம் முழுக்க பனைசார்ந்த ஏதோவொரு பொருளின் பயன்பாட்டைக் கண்டடைய நேரும்போது அவர்கொள்ளும் உவகை நம்மையும் தொற்றுகிறது. குறிப்பாக இருவிஷயங்கள் மட்டும். தனது பயணத்தின் ஆரம்பத்தில் கர்நாடகாவிலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் நெடுஞ்சாலையைத் தூய்மை செய்வதற்கு பனந்தும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரஷ்ஷைக் கண்டு நின்று, அதுகுறித்து விசாரித்து அறிவதாகட்டும், இறுதிப்பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் என்னுமிடத்தில் சிறிய கடை ஒன்றில் இரு நீண்ட பனை மரத்தடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இருக்கையைக் கூடத் தவற விடாது கண்டு வியப்பதாகட்டும், காட்சனின் மனதில் எல்லாமே பனை பனை பனைதான்!!
முக்கியமாக இந்த நூலில் தனித்த ஒரு அம்சம், ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு, நல்ல இலக்கிய வாசகரான காட்சனின் மொழி. உங்களைச் சிறிதும் சலிப்பூட்டாத நிறைவானதோர் ஓர் எழுத்து. அதன் ஒரு விளைவாக இத்தனை வருடத்தில் பெரிய அளவு தனிப்பயணங்களே செய்திராத ஒருவனான எனக்கு, இந்நூல் ஒரே சமயத்தில் அமுகுறித்த வெட்கத்தையும், இனியாவது சில பயணங்கள் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தையும் ஒருசேர அளிக்கிறது.
நற்றிணை வழக்கம்போலச் சிறப்பாக வெளியிட்டுள்ள இந்த நூலில் ஒரேயொரு குறை என்றால், அது காட்சன் உள்ளே குறிப்பிட்டுள்ள பல்வேறு தருணங்களின் புகைப்படங்கள் இல்லாத்தே! ஆனால் இந்தப் பயணநூல் முழுவதும் அவரது வலைப்பூவில் புகைப்படங்களுடன் சேர்த்து எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பே என்பதால் முழுமையான அனுபவத்தை அங்கே காணலாம். குறிப்பாக பயணத்தின் பின்பாதியில் இணைந்த அவரது நண்பரும் சிறந்த புகைப்படக்காரருமான அமிர்தராஜின் படங்கள். வலைப்பூவின் சுட்டி கடைசியில் தந்துள்ளேன். ஆர்வமுள்ளோர் வாசிக்க!
இறுதியாக..நான் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையோர கிராமமான கோட்டைப்பட்டிணம் என்னும் ஊரில் பிறந்தவன். காட்சன் தனது பயணக்குறிப்பில் எங்கள் ஊருக்கு மிக அருகிலுள்ள கட்டுமாவடி என்னும் ஊர் பற்றிய அனுபவம் வரை எழுதியுள்ளார் என்பது தனிப்பட்ட சந்தோஷம்! . அநேகமாக அவர் ராமநாதபுரத்திற்கு எங்கள் ஊர் வழியாகத்தான் சென்றிருக்கலாம். அப்போது பனைமரங்கள் நிறைந்த ஊரான எங்களூர் பற்றியும் அவந்து பயணத்தில் ஒரு குறிப்பு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற சுயநல எண்ணம் ஒருநிமிடம் மனதில் தோன்றி மறைந்தது என்னவோ நிஜம்தான்!
அவரது வலைப்பூ சுட்டி:
pastorgodson.wordpress.com கார்த்திகேயன் வெங்கட்ராமன்