பணத்தின் பயணம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : “பணத்தின் பயணம் ”
பண்டமாற்று முதல் பிட்காயின் வரை
ஆசிரியர் : இரா மன்னர் மன்னன்
வெளியீடு : பயிற்று பதிப்பகம்
பக்கங்கள் : 488
விலை : ரூபாய் 500
இரண்டாம் பதிப்பு -ஜூலை 2022
நூல் அர்ப்பணிப்பு : பேரறிஞர் அண்ணாவிற்கு..
தனது முன்னுரையில் உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் கீழே உள்ள பணக்காரர்களின் அனுபவங்களையும் தந்திரங்களையும் பற்றியே ஏராளமான நூல்கள் கூறுகின்றன ;ஆனால் எனது இந்த நூல் மீதமுள்ள 99 சதவீத மக்களைப் பற்றியது ..அவர்கள் எப்படி சுரண்டப்பட்டு இந்த ஒரு சதவீத பணக்காரர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது பற்றி… என்று கூறி ..ஆரம்பிக்கிறார்.
2009இல் விகடனால் மிகச்சிறந்த மாணவப் பத்திரிகையாளர் எனது தேர்வு செய்யப்பட்ட இவர் 2010ல் விஜய் தொலைக்காட்சியின்” தமிழ் பேச்சு எங்கள் மூச்சு “நிகழ்ச்சியில் பங்கேற்று அறிமுகமானவர் .லயோலா கல்லூரியில் ஊடகக் கலைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். 2012 ஆம் ஆண்டு முதல் ஊடகம் ..விளம்பரம்.. திரைப்படம் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார்.. பல்வேறு நூல்களும் எழுதி இருக்கிறார்..
சரி.. இனி இந்த நூலின் இடம்பெற்றுள்ள சில சுவாரசியமான விவரங்களை பார்ப்போம்.
1.பண்டமாற்று முதல் பிட்காயின் வரை பற்றிய பொருளாதார வளர்ச்சியின் வரலாற்றை ..மிக சுவாரசியமாக …திரில்லிங்கான மர்ம நாவல் போல் கொண்டு செல்வதும் ,மிக ஈர்ப்பான எடுத்துக்காட்டுகள்.. உவமைகளுடன் விளக்குவதும் வாசகர்களுக்குள்.. பொருளாதாரம் பற்றிய அறிவை…தகவல்களை..மிக எளிமையாக கடத்துவதற்கு பேருதவி புரிந்திருக்கிறது.
ஆரம்ப கால நாடோடி மனித குலம்.. விவசாயத்துக்குப் பின் ஓர் இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்த பிறகு ..எப்படி பண்டமாற்று தொடங்கி.. பின்னர் காசு ..பணம்.. துட்டு.. டப்பு ..பணம்.. பிட்காயின் வரை முன்னேறி வந்துள்ளது என்பதை வாசகருக்கு தெளிவாக.. கொஞ்சம்.. கொஞ்சமாக, இலகுவாக ..புரிய வைக்கிறார் மன்னர் மன்னன்.
சில சமயங்களில் வரலாறு நாம் நினைத்தபடி இருப்பதில்லை.. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே ,லைட்டர்கள் புழக்கத்திலிருந்த உலகம் இது. கார்டுகள் மூலம் பணத்தை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் 1887 ஆம் ஆண்டிலேயே மனிதர்களால் பதிவு செய்யப்பட்ட ஒன்று. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம். மனிதன் கண்டுபிடித்த இரண்டு கண்டுபிடிப்புகள் இன்று அவனையே ஆண்டு கொண்டிருக்கின்றன என்றால் அது பணமும் கடவுளும்தான். பணத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் எந்த கருத்தும் இல்லாமல் பல்லாயிரம் கோடி உயிரினங்கள் வாழும் இந்த உலகில் ,பணமும் ..கடவுள் நம்பிக்கையும் தான் மனித இனத்தை உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகின்றன.
ஒரு காலத்தில் நமது மனித சமுதாயம் முழுவதுமே இயங்கியது ;பின்னர் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பணம் தானே மனிதர்களை இயக்கத் தொடங்கிவிட்டது.. இப்படி ஏராளமான தத்துவ விவாதங்களுடன் நிரம்பி வழிகிறது இந்த பணத்தின் பயணம் பற்றிய நூல்!
2. பண்டமாற்று முறையில் இருந்து பணம் எப்படி தோன்றியது என்று விளக்க வந்த ஆசிரியர் ஒட்டுமொத்த மனித குல வரலாற்றையும் தொடர்ந்து இணையாக நூல் முழுவதும் விளக்கிக் கொண்டே வருவதும் சுவாரசியமான ஒன்றுதான். நெருப்பு.. சக்கரம் ..கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு.. தான் உற்பத்தி செய்த பொருளை மற்றொருவருக்கு கொடுத்து தனக்கு வேண்டிய பொருளை வாங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பண்டமாற்று வணிகத்தின் தேவையை விளக்குகிறது. ஆங்காங்கே பொருத்தமான படங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. மாட்டினை அடிப்படையாகக் கொண்டேபண்டமாற்று முறை கிமு ஒன்பதாயிரம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்தது. சங்ககாலத் தமிழர்கள் பிறரின் மீது படையெடுக்கும் போது கால்நடைகளையே கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்
3. பண்டமாற்று முறையின் தோல்விதான் பணத்தின் தோற்றத்திற்கு காரணமானது. உதாரணமாக தான் விற்க வேண்டிய கோதுமையை எல்லா இடத்துக்கும் தன்னுடனே கொண்டு செல்ல வேண்டும்… எவ்வளவு கோதுமைக்கு எவ்வளவு நெல் என்று யாருக்கும் தெரியாது. அதிகமாக உற்பத்தி செய்யும் ஒருவரால் தனது உற்பத்தி பொருளினை இருப்பில் வைக்க முடியாது.. எதையும் ஒரு அளவுக்கு மேல் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியாது .உண்மையில் பண்டமாற்று முறையில் இருந்து நாணயங்கள் உடனடியாக தோன்றிவிடவில்லை .இரண்டுக்கும் நடுவில் 8000 முதல் 10 ஆயிரம் ஆண்டு கால இடைவெளி இருந்தது .சோழிகள்.. பறவை இறகுகள் ..மணிகள்.. நத்தைகள்.. எலிகள்.. கற்கள்.. பாறைகள்.. சிகரட்டுகள் ..மான் தோல்கள் ..கிளிஞ்சல்கள்.. இவையெல்லாம் கூட வெவ்வேறு நாடுகளில் ஆரம்பகால பணத்தின் வடிவமாக இருந்தன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அதன் பெரிய ஸ்விட்சை ஸ்டார்ட் செய்ய ஓடி வந்து காலால் ஓங்கி உதைக்க வேண்டும்..
இதனால் பூட் டப்(boot up) என்ற பதம் அப்போது கம்ப்யூட்டரை ஆன் செய்வதை குறிக்க பயன்பட்டது .இன்று நாம் ஒரு ஸ்விட்சை சுண்டு விரலால் இயக்கி விடலாம்.. ஆனாலும் பூட்டப்பை பயன்படுத்துகிறோம்.. அதே போல ஆரம்ப கால கணினிகளில் வாக்கியூம் ட்யூபுகள் எனும் வெற்றிடக் குழாய்களில் பூச்சிகள் புகுந்து கொண்டு சிக்கல் செய்தன.இந்த சிக்கல்களை பக் ..bug..பூச்சி என்று அழைத்தனர். இன்று அந்த குழாய்கள் விடை பெற்று சென்றாலும் கூட இன்றும் அந்த வார்த்தை..bug.. பயன்பாடு இருக்கிறது ..இப்படித்தான் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட பணம்.. காசு போன்ற வார்த்தைகள் தற்போது அதற்கான அர்த்தம் இல்லாவிட்டாலும் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழில் காசு என்று பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் உலக அளவில் கேஷ் என்றானது என்பதன் பின்னணியை சுவாரசியமாக விளக்குகிறது நூல்.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் உப்பு(Salt) ராணுவ வீரர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. அது சாலரியம் என்று அழைக்கப்பட்டது ..(Salary)நெல்லின் மறு பெயர் சம்பு..உப்பின் மறு பெயர் அளம்.. இது இரண்டையும் கூட்டி சம்பளம் என்ற சொல்லை இளங்கோவடிகள் முதல் முதல் உருவாக்கினார்.. இப்படி ஏராளமான சொற்களுக்கான வேர் கதைகள் நிறைய இருக்கின்றன..நூல் முழுவதும்..
4. உலகின் வரலாற்றில் மக்கள் மண்ணிலிருந்து இதுவரை 118 உலோகங்களை கண்டுபிடித்து விட்டனர் .அவற்றில் தங்கம் அடைந்த சிறப்பை இதுவரை வேறு எந்த உலோகமும் அடையவில்லை. தங்கத்தை விட அரிய உலோகமான பிளாட்டினம் கூட தங்கத்திடம் தோற்றுள்ளது .பல்லாயிரம் ஆண்டுகளாக வணிகத்தில் மாற்றுப் பொருளுக்கு இருந்த தேவையை.. சரியான முறையில் பூர்த்தி செய்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு தங்கம் என்பதை தங்கமே தங்கம் கட்டுரை சிறப்பாக வர்ணிக்கிறது. 1886ம் ஆண்டு வரையில் அமெரிக்காவில் 93 கிலோ அலுமினியத்திற்கு மேல் எடுக்க முடியாது. 1853 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க 93,300 கிலோ தங்கத்தை சுரங்கத்திலிருந்து பெற்றது. எனவே அந்த காலம் வரை தங்கத்தை விட அருமை மவுஸ் ஜாஸ்தி அலுமினியத்திற்குத்தான்..1886 இல் பாக்சைட்டில் இருந்து அலுமினியத்தை எளிதாக பிரித்தெடுக்கும் முறை கண்டறியப்பட்டவுடன் அதன் மதிப்பு அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. அப்போதெல்லாம் அலுமினியத்தில் கிரீடம் செய்தார்களாம். ஆனால் அதற்குப் பின் அலுமினியம் இன்றைய நிலைக்கு வந்துவிட்டது .
30 கிராம் தங்கத்தை அடித்து தகடாக நீட்டினால் அது 200 சதுர அடிகளுக்கு வரும் .கம்பியாக இருந்தால் 50 மைல்கள் நீளம் போகும். இவ்வளவு மிகுதியான பயன்பாடு பிற உலோகங்களில் கிடையாது. கேரட் என்றால் என்ன என விளக்குகிறது நூல்.. மத்திய கிழக்கு நாடுகளில் வெயிலில் சுருங்காத ..மழையில் விரியாத நிலையான எடையில் எப்போதும் இருக்கும் பண்டைய கேரப் விதைகளை எடையாகக் கொண்டு தங்கம் வைரம் போன்றவற்றை எடை போட்டனர் .அந்த கேரப்பே.. கேரட்டாக மாறிப் போனது. மாசற்ற தங்கத்துடன் செம்பு..வெள்ளி போன்றவற்றை கலந்துதான் நகைகளை செய்ய முடியும். 22 கேரட் தங்கத்தின் தூய்மை தன்மை 91.6% ..தங்கத்திற்கு எத்தனை நிறங்கள் என்னென்ன உலோகங்களை கலந்தால் என்னென்ன வண்ண நகைகள்கிடைக்கும் என்பதை தங்கப் பிரியர்கள் நூலில் வாசித்து மகிழலாம்.
5. இயற்கைக்கு அடுத்தபடியாக உலகின் அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாக இருப்பது மனித உழைப்பு என்கிறார் பிரடரிக் ஏங்கல்ஸ். எல்லா செல்வங்களின் பின்னாலும் இருப்பது குற்றமே என்று தனது புகழ் பெற்ற காட்பாதர் நாவலை தொடங்குகிறார்மரியூ பூஸோ.. இவை இரண்டுமே எப்படி உண்மை என ஒரு கட்டுரையில் விவரிக்கிறார் .
தங்கத்தை மண்ணில் இருந்து பிரித்தெடுக்கும் பணி எவ்வளவு ஆபத்தானது.. கொடூரமானது.. சுரண்டல் நிறைந்த தொழில் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. கிரேக்கர்களின் பின் வந்த ரோமானியர்கள் காலத்திலேயே தங்க கொள்ளை அரசாங்க நடவடிக்கை ஆகிவிட்டது. பைபிளில் தங்கத்தை பெரும் அளவில் கொண்ட ஆஃபிர் என்ற நாட்டைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆனால் அந்த நாடு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கேட்டு எழுதியவை எல்லாம் வரலாறாகிவிட்டன …பார்த்து எழுதியவை வெறும் பயண குறிப்புகளாகவே நின்று விட்டன என்ற வாசகத்திற்கு பல்வேறு உதாரணங்களை கூறுகிறது நூல். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தங்க கொள்ளைகளுக்காக அங்கெல்லாம் வாழ்ந்த பூர்வ குடிகள் எப்படி எல்லாம் கொல்லப்பட்டனர் என்ற கட்டுரை நம் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைக்கின்றன. தங்கத்துக்காக நடந்த போர்களும்.. கொள்ளைகளும்.. எழுதி மாளாது. ஹைட்டி தீவை ஒரு தங்க கிடங்காக போர்ச்சுக்கல் அரசு கருதியது.
அங்கே 10 லட்சம் முதல் 30 லட்சம் பேர் குடியிருந்தார்கள் .அங்கிருந்த மக்கள் மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டு லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இதை அன்றைய மதமும் அங்கீகரித்தது. பழங்குடி மக்களை அடிமைப்படுத்தினால் எளிதாக தங்கம் திரட்டலாம் என்பதும் கொலம்பஸின்
கண்டுபிடிப்புதான்.. ஆனால் இந்தியா கப்பல் கப்பலாக மிளகை ஏற்றுமதி செய்துவிட்டு.. கப்பல் கப்பலாக தங்கத்தை இறக்குமதி செய்தது என்பது விந்தையான .. ஆனால் உண்மையானசெய்தி என பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வெறும் 600 கிலோ தங்கத்திற்காக மெக்சிகோவில் புகுந்த ஸ்பானியர்களின் படை அங்கு வசித்த மூன்று லட்சம்ஆஸ்டெக் மக்களில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேரைக் கொன்றது. அதாவது ஒவ்வொரு கிராம் தங்கத்துக்கும் துல்லியமாக நான்கு கொலைகள் செய்யப்பட்டன. 40 ஆண்டுகால ஸ்பானிய தங்க வேட்டையில் மட்டும் ஒன்றரை கோடி பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். பாவமும் தங்கமும் ஒன்றாக பெருகும் போது பாவ மன்னிப்பின் பெயரால் அந்த தங்கத்தில் பெரும்பகுதி தேவாலயங்களுக்கு தான் வரும் என்று அன்றைய போப்பாண்டவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்களாம். மனிதர்களை, மனிதர்களை கொல்ல மதவெறியே போதுமானது என்பதை அன்றைய படுகொலைகள் உணர்த்துகின்றன. உழைத்து செல்வம் சேர்த்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து, காட்டுமிராண்டிகள் நடத்திய இது போன்ற தங்க கொள்ளைகளால் உலகெங்கும் பல கோடி மக்கள் கொல்லப்பட்டனர்.
6. ஆண் குழந்தைக்காக ஹென்றி அடுத்தடுத்து செய்த திருமணங்களுக்கு வாடிகன் அனுமதி வழங்காததால் அவர் 1532 முதல் 1534 வரை அடுத்தடுத்து பல சட்டங்கள் போட்டு இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கை படிப்படியாக ஒடுக்கி அதனை ஒரு புராட்டஸ்டண்ட் தேசமாக மாற்றினார் .தன்னையே புராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவராகவும் அறிவித்துக் கொண்டார். பசிபிக் கடலில் பெரும் யுத்தத்தை நடத்திய பிரான்சிஸ் பிரேக் அந்த ஒரே கொள்ளையில் இங்கிலாந்தின் பொருளாதாரத்தையே நிமிர்த்த தேவையான தங்கத்தையும் வெள்ளியையும் பெற்றார் .மக்களைக் கொன்று அவர்களிடம் இருந்து தங்கத்தை அபகரிப்பதை விடவும் தங்கள் பொருட்களை அவர்கள் தலையில் கட்டி அவர்களின் செல்வத்தை கொள்ளை அடிப்பதே சிறந்த முறை என ஆங்கிலேயர்கள் செயல்பட ஆரம்பித்தனர். இந்தியாவில் தங்க சுரங்கங்கள் இல்லாத நிலையில் மக்களைக் கொண்டு போதை தாவரமான அபினைப்பயிரிட்டு ..அதை அண்டை நாடான சீனாவில் விற்று.. ஆங்கில அரசு வெள்ளி திரட்டியது. இதனால் சீனாவில் பொருளாதாரம் பெரிதும் ஆட்டம் கண்டது. அபின் வணிகத்தை சீனா எதிர்க்க அபினிப்போர்கள் நடந்தது என்று நமக்கு பழைய வரலாறுகளை நினைவூட்டுகிறது நூல்..
7. உலகத்தின் தங்கம் எல்லாம் இந்தியா என்ற பள்ளத்தாக்கில் வடிகிறது என்று பிளினி குறிப்பு எழுதினார். கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் கூட உலகவர்த்தகத்தில் 33 சதம் வர்த்தகத்தை கட்டுப்படுத்திய நாடு இந்தியா .அவுரி செடி ,மிளகு, சங்கு வளையல்கள், மணிகள், முத்துக்கள், குரங்குகள் ,மயில் தோகை என அள்ள அள்ள குறையாத இயற்கை பொருட்களை விற்று அவற்றின் மூலம் அள்ளினால் குறையும் வளமான தங்கத்தை இந்தியா பெற்றது. ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்குப் பிறகு உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 27 சதமாக குறைந்தது. இன்று உலக உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டுமே இந்தியாவின் பங்காக உள்ளது .இன்றும் உலக நாடுகளிலேயே தங்கத்தை அதிகம் வாங்கி குவிக்கும் நாடு இந்தியாதான் .இன்றைய உலகின் ஒட்டுமொத்த தங்க உற்பத்தியில் 64% இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளை மட்டுமே நம்பி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 400 முதல் 800 டன் அளவிலான தங்கத்தை இந்திய மக்கள் வாங்கி குவிக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள தங்கத்தின் இருப்பு சுமார் 14 ஆயிரம் டன். இதில் 70 சதவீதம் அமெரிக்க அரசின் பெட்டகத்தில் உள்ளது .இப்படி இந்தியாவில் துல்லியமாக கணக்கிட முடியாது. ஏனெனில் மக்களிடம்தான் அதிக தங்கம் உள்ளது .அதாவது அரசிடம் உள்ள கையிருப்பை போல தோராயமாக 50 மடங்கு அதிக தங்க கையிருப்பு இந்தியாவில் மக்களிடம் உள்ளது.
இன்னும் ஒப்பிட்டால் அமெரிக்காவை விட இந்தியாவில்தான் இரண்டு மடங்கு அதிகம் தங்கம் இருக்கும் .2019 இந்திய அரசின் தங்க கையிருப்பு 550 டன் ஆனால் அப்போது மக்களின் தங்க கையிருப்பு குறைந்தது 18,000 டன்களில் இருந்து 30 ஆயிரம் டன்கள் வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். கேரள பத்மநாபசுவாமி கோயில் ஒரு அறையில் இருந்த பண்டைய அணிகலன்கள் மற்றும் நாணயங்களின் மெய் மதிப்பு குறைந்தது ஆறு லட்சம் கோடிகள். இப்படி எத்தனையோ இடங்களில் புதையல்களால் இந்தியா நிரம்பி உள்ளது .உலகின் மிக அதிக ஆழமுடைய தங்கச்சுரங்கங்களில் கோலாரும் ஒன்று. இங்கு 12 ஆயிரம் அடி ஆழம் வரைக்கும் தங்கத்சுரங்கங்கள் இருந்தன. இன்று மூடப்பட்டு விட்டது. தங்கத்தின் பயன்பாட்டை.. சேமிப்பை வரைமுறைப்படுத்த அந்தக் காலத்தில் பிளாட்டோவும்.. நமது காலத்தில் மொரார்ஜி தேசாயும் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோற்றுப்போயின. மும்தாஜ் மீதான காதலைவிட மதிப்பானது ஷாஜகானின் தங்கக் காதல் சின்னமான மயில் அரியணை !தாஜ் மகாலில் செலவிட்டது போல இரண்டு மடங்கு இதற்கு செலவானது .ஆனால் அந்த கோஹினூர் வைரம் இங்கிலாந்து அரசகிரீடத்தின் ஒரு அங்கமாக உள்ளது வேறு கதை..
இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.. இந்தியா தங்க வர்த்தகத்தில் மட்டும் முன்னிலையில் இல்லை.. தங்க ஏமாற்று வேலைகளிலும் நாம்தான் முன்னிலை! நமது நாட்டில்தான் சேதாரமான தங்கத்தை நகை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும் என்ற விதி காலம் காலமாக பட்டவர்த்தனமாக மீறப்படுகிறது.. மக்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மன்னர் மன்னன் அங்கலாய்ப்போடு பதிவு செய்திருக்கிறார்.. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தங்க நகைகளை வாங்கும் போது.. நகை செய்யும் போது.. ஏற்பட்ட சேதாரத்தை அவர்கள் நகையின் மதிப்பில் கழித்து விடுகிறார்கள் அல்லது அந்த சேதாரம் ஆன தங்கத்தையும் ஒரு கவரில் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.. இந்தியாவில் சேதாரத்திற்கான தொகையையும் அதன் வரியையும் நகை வாங்குபவர்தான் கட்ட வேண்டும் ..ஆனால் சேதாரம் ஆன தங்கம் அவருக்கு கொடுக்கப்பட மாட்டாது!!??
தங்க நகைகளில் புதிய டிசைன்களை தேடும் பழக்கம் 75% இந்திய பெண்களிடம் இருக்கிறது என 2016 ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது ..தங்கத்தின் மீதான மக்களின் முதலீட்டில் லாபம் நகைக்கடைகளுக்கு முழுதும் போவது இப்படித்தான் !
இப்போதைய தங்க நகைகள் பலவற்றில் பற்ற வைக்கும் சால்டரிங் ஏஜென்ட் ஆக உடலுக்கு கேடு விளைவிக்கும் கேட்மியம் பயன்படுத்தப்படுகிறது. நிமோனியா ..எலும்பு பாதிப்புகள்.. தசைப் பலவீனம்.. கோமா ..வாசனையை உணர முடியாத தன்மை ..கேன்சர் போன்ற பல நோய்கள் இதனால் ஏற்படுகின்றன.
உலகின் முதல் உலோகப் பணம் தங்கம் தான்.. உலகின் நிலையான பணமும் தங்கம்தான்.. ஆனால் ஏன் தங்கக் கட்டிகளே தொடர்ந்து பணமாக புலங்காமல் நாணயங்கள் ..பணத்தாள்கள் உருவாகின என்பதை ஓர் அத்தியாயம் தெளிவாக வாசகருக்கு விளக்குகிறது .ஆரம்ப காலத்தில் அச்சடிக்கப்படும் பணத்திற்கு ஈடாக தங்கம் அரசின் பெட்டகத்தில் இருக்க வேண்டும் என்ற விதி காலப்போக்கில் மாற்றப்பட்டு விட்டதே இதற்கான காரணம் என சுருக்கமாக புரிந்து கொள்ளலாம்.
8. அப்போதைய நாணயம் என்பது அடிப்படையில் ஒரு சிறிய தங்க துண்டு. அதில் அந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசனின் சின்னம்.. மக்கள் விரும்பும் தெய்வத்தின் உருவம் போன்றவை பொறிக்கப்பட்டன. பண்டைய லைடியா நாட்டில்.. (இன்றைய துருக்கியின் ஒரு பகுதி) கிமு ஏழாம் நூற்றாண்டில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயம்தான் உலகின் முதல் நாணயம்.. தங்கள் மொத்த விலை கடைகளை ஒரே இடத்தில் நிறுவியவர்கள் என்ற பெருமையும் லைடியர்களைசாரும். அதுவே சந்தைகள் ..கடைத்தெருக்கள் மற்றும் ஷாப்பிங் மால்களின் தொடக்கம் .அன்று அனைத்திலும் பனிரெண்டு என்ற எண் முக்கிய இடத்தை பெற்றது. அலெக்ஸாண்டர் தனது படை வீரர்களுக்கு வெள்ளி நாணயங்களை நாள் ஊதியமாக கொடுத்தார். இன்றைக்கு உலக நாடுகளின் பொதுவான இடைப்பட்ட பணமாகவும் மாற்று பணமாக உள்ளது அமெரிக்க டாலர் .இதை வெளியிடுவதால் மட்டும் அமெரிக்க அரசு ஆண்டுக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக பெறுகிறது. புதிய சர்வதேச நாணயமான யூரோவை வெளியிட்ட போது ஐரோப்பிய மத்திய வங்கியும் இவ்வாறு தான் லாபம் அடைந்தது. தவிர இன்றைக்கும் மணி எக்சேஞ்ச் எனப்படும் பணப்பரிமாற்று தொழில் ஒரு லாபமான தொழிலாகவே உலகின் அனைத்து நாடுகளிலும் இயங்கி வருகிறது. கிரேக்கத்திடம் வணிகம் செய்த காரணத்தால் நாணய முறையை இந்தியாவும் விரைவில் கற்றுக் கொண்டது. சங்க காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் நாணயங்கள் புழங்கவில்லை..
இடையே சிலவரலாற்றுச் செய்திகளையும் மன்னர்மன்னன் பதிவு செய்கிறார் .ஆரியர்கள் இன்றைய ஸ்டெப்பி புல்வெளி பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் என்பதும்.. வரும் வழியில் ஈரான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் தேங்கி இருந்து, சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவு காலமான கிமு 1600 ஆம் ஆண்டு வாக்கில் கைபர் போலன் கணவாய்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்பதும், அவர்கள் ஈரானிய மக்களின் இனப் பெயரை தங்கள் இனப் பெயராக கூறிக் கொண்டனர் என்பதும் வெளிப்படை. இதை டிஎன்ஏ ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளபோது கல்வெட்டில் சமஸ்கிருதம் காணப்படாதது இந்த மண்ணின் மொழி சமஸ்கிருதம் அல்ல என்பதை காட்டுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார். ஆனால் இப்போதும் வேதங்கள் இயற்றப்பட்டது இந்திய மண்ணில்தான்.. வேதங்களில் கூறப்பட்ட சரஸ்வதி நதி இந்தியாவின் பூமிக்கு உள்ளே ஓடுகிறது… மொகஞ்சதார மக்கள் சமஸ்கிருதம் பேசினர்.. என்றெல்லாம் பலர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வுகளுக்கு நிதி ஒரு பக்கம் குவிய இன்னொரு பக்கம் ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற தமிழர் வரலாற்றின் தொன்மையான எச்சங்கள் அரசாலேயே மண்மூடி மறைக்கப்படும் அவலமும் நடக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் .தமிழர் வரலாற்றை திரிக்காமல், வேதகாலத்தை இந்தியாவின் தொன்மை காலம் என்று நிறுவ முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். வேத காலத்தில் ‘கோபிச்சா” என்ற வர்த்தக முறை இருந்ததாக அதாவது பசுவின் வாலைகொடுப்பது.. வேதகால ஆரியர்கள் வணிகம் முடிந்த பிறகு பசுவின் வாலை பிடித்து அவற்றை கைமாற்றி விட்டனர். வைதீக சடங்குகளில் புரோகிதர்களிடம் பசுவை கொடுக்கும் போது அதன் வாலை பிடித்து கொடுப்பது இதன் தொடர்ச்சிதான் என்கிறார் .பிற்கால வேத காலத்தில் அரசர்கள் நிஷ்கங்களை நாணயங்களாக ஏற்றுக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார் .முத்திரை காசுகள் என்ற வெள்ளி நாணயங்களே இதுவரை இந்தியாவின் மிகத் தொன்மையான நாணயங்கள் என்கிறார்
மன்னர் மன்னன்..
9. இந்திய வெள்ளி நாணயங்கள் அனைத்திலும் குறியீடுகள் மட்டுமே உள்ளன எழுத்துக்கள் இல்லை என்கிறார் அசோகரின் பிராமின் கல்வெட்டை கண்டுபிடித்த ஜேம்ஸ் பிரின்ஸப் என்ற ஆங்கிலேயர் ..வட இந்திய முத்திரைக் காசுகளில் விலங்குகள்.. பறவைகள்.. சூரியன்.. பிறை.. மலைமுகடு ..மீன் ..மனிதன் என பல குறியீடுகள் காணப்படுகின்றன .மகதப் பேரரசின் முத்திரைக்காசுகள் வெளியாக தொடங்கிய காலம் கி.மு ஐந்து அல்லது நான்காம் நூற்றாண்டு என்று துணியலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றின் படி உலகத்தில் முதன் முதலில் நாணயங்களை உருவாக்கியவர்கள் லைடியா என்ற நாட்டினர் என்பதை நினைவுப்படுத்திக் கொள்வோம். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பார்த்தால் வெள்ளியை உருக்கி ஊற்றி அது நீர்மையாக இருக்கும் போது முத்திரைகளை குத்தி உருவாக்குவது சிறப்பானது .உருவம் என்று பொருள்படும் ரூபம் என்ற வார்த்தையில் இருந்து “ரூபாய் “என்ற வார்த்தை தோன்றியதாக கருதப்படுகிறது .ஷெர்ஷா என்ற மன்னர் தான் நாணயங்களுக்கு இந்த ரூபாய் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு தனது நாணயத்திற்கு ரூபாய் என்று பெயரிட்டார் .அக்பர் எழுத படிக்கத் தெரியாத ஒரு அரசர்.. ஆனால் இந்திய நாணயவியல் வரலாற்றில் நாணயத்தில் அது உருவாக்கப்பட்ட ஆண்டு மாதத்தையும் பொறித்த முதல் அரசர் அக்பர்தான் .எழுத்தின் அருமை அவருக்குத் தெரிந்திருந்தது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் நிலைபெற்றுவிட்ட பின்னர் அவர்கள் ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு வகையான நாணயத்தை புழக்கத்தில் விட்டனர் .கிபி 1840 களில் நான்காம் வில்லியம்ஸ் ஆங்கிலப் பேரரசராக ஆன பின்னர் தான் இந்தியா முழுமைக்கும் பொதுவான நாணயம் வெளியிடப்பட்டது .இது 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்தது. ஆங்கிலேயர் கால ரூபாய் சிக்கலான மதிப்பை உடையது. அப்போது ஒரு ரூபாய் 16 அணா மதிப்புடையது. மரக்காலில் பணம் அளந்து வர்த்தகம் செய்யும் வழக்கம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அப்போது வழக்கில் இருந்ததாம். காதலுக்காக தனது அரச உரிமையை துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு இங்கிலாந்து நாணயம் வெளியிடாத நிலையில் ..இந்திய சமஸ்தானங்களில் ஒன்றான கட்ச் அவருக்கு நாணயங்கள் வெளியிட்டது என்பது லண்டனின் நண்பர்களாக இங்கே இருந்தவர்களை காட்டுகிறது. ஆரம்பத்தில் புதுக்கோட்டை காசுகள் உள்ளூர் கைவினைஞர்களால் உலைக் கூடங்களில் கைஅச்சு முறையில் அச்சடிக்கப்பட்டன. பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த காசுகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் அச்சடிக்கப்பட்டு புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டன .ஒரு காலத்தில் இவை கல்கத்தாவில் அச்சிடப்பட்டதாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன. ஆங்கில அரசு முதல் முதலாக 1943 ல்ஓட்டை காசை வெளியிட்டது .அது தூய செம்பு என்பதால் அப்போது இருந்த சீலிங் ஃபேன்களுக்கு காயில் சுற்றும் போது இந்த ஓட்டை காசுகளை உள்ளே வைத்து சொருகி காயில் சுற்றினராம். இன்றும் செட்டிநாட்டு அரண்மனை வீட்டு மின்விசிறிகளில் இந்த ஓட்டை காசுகள் உள்ளன.
1957 ஆம் ஆண்டில் தான் 100 பைசாக்களை கொண்டது ஒரு ரூபாய் என்ற முறை அமலுக்கு வந்தது .அதற்கு முன்னர் வரை கால்.. அரைஎன்ற பின்னமதிப்பே பின்பற்றப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் நாணயங்களில் தலைவர்களை குறிக்கும் வழக்கம் தொடங்கியது ..ஜவஹர்லால் நேரு படம் 50 பைசா மதிப்பில் வெளியிடப்பட்டது அதில் இந்தியும் ஆங்கிலமும் இடம்பெற்றன .அதில் நேருவின் தொப்பி அணியாத உருவமே இருந்தது. இப்போது இந்தியா தவிர பாகிஸ்தான்.. இலங்கை.. மொரிசியஸ் ஆகிய நாடுகளிலும் ரூபாய் என்ற பெயரில் உள்ளது.
10. இந்திய அரசர்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் நாணயங்களை வெளியிட்ட அரசர் ராஜ ராஜ சோழன் ஆவார். இன்றைக்கு தென்னிந்தியாவில் கிடைக்கும் பண்டைய நாணயங்களில் சுமார் 70% இவரது நாணயங்கள். தற்போது நம் கையில் பார்த்தது மட்டும் எண்ணிக்கை இரண்டு லட்சம் .ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவ்வளவு நாணயங்கள் என்றால் அவரது காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அனைத்தும் செம்பு நாணயங்கள் .இவர் தனது காசுகளில் தேவ நாகரி எழுத்துக்களையே பயன்படுத்தினார். ஏனெனில் எல்லைகளைக் கடந்து அது பயன்பாட்டில் இருந்ததாம். ரோமானியர்களின் தங்க.. வெள்ளி நாணயங்களே பல்லவர்கள் ஆட்சி காலம் வரையில் தமிழகத்தில் புழங்கிக் கொண்டிருந்தன .முலாம் பூசப்பட்ட காசுகளை உருவாக்கும் தொழில்நுட்பமும் அதற்கு மூலிகைகளை பயன்படுத்துவதும் இராஜராஜன் சோழன் காலத்தில் இருந்தது. தமிழகத்தை ஆண்ட வேறு எந்த அரசாலும் ஆங்கிலேய ஆட்சி காலம் வரை சோழர்களின் நாணய வெளியீட்டோடும் தரத்தோடும் தொழில்நுட்பத்தோடும் போட்டியிட முடியவில்லை. கேஷ் என்ற வார்த்தை எப்படி காசில் இருந்து வந்தது என்பதை பற்றி கட்டுரைகள் உள்ளன. நாணயத்திலேயே ஊரின் பெயர்களும் இடமும் பெற்று இருக்கின்றன .புதுச்சேரி.. நாகப்பட்டினம் காசு ..பணம் என்ற வார்த்தைகள் எல்லாம் நாணயத்தில் இடம் பெற்றுள்ளன.
சீனாவும் பணத்தாள்களும் என்ற கட்டுரை காகிதப் பணத்தை அறிமுகப்படுத்திய சீனர்களின் பெருமையை விளக்குகிறது. அதை ஏற்க மறுத்த பிற நாட்டவர்கள் காலப்போக்கில் அதை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதையும் பார்க்கலாம்..
பணம் வைக்க பாதுகாப்பான இடம் தேடி அலைந்தவர்கள் கோவில்களுக்கும் பின்னர் வங்கிகளை உருவாக்கியதையும் வரலாற்றுப் போக்கில் விவரிக்கிறது கட்டுரைகள்.. வங்கி வந்தபின் வட்டியும்.. வட்டிக்காக கடன் கொடுப்பதும் வந்தது.. ஆரம்ப காலத்தில் வட்டிக்கு கடன் கொடுப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்ததும் பின்னர் அதுவே வரவேற்கத்தக்க அம்சமாக மாறி போனதையும் பார்க்கிறோம். மார்ட்டின் லூதர் கிங் வட்டிக்கு விடப்படுவதை ஆதரித்திருக்கிறார். பணத்தை பெருக்குவதும் கடவுளுக்கு செய்யும் சேவைதான் என்று நியாயங்கள் மாறின. பணம் கண்டுபிடிக்கப்பட்டு வட்டியும் வந்த பிறகு கடன் கொடுப்போரின் நலமே பிரதானமானது ..வாங்குவோரின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன ..அரசுகள் பெரும்பாலும் வணிகர்கள் நிலப்பிரக்கள் ஆகியோரால் ஏற்படுத்தப்படும் அமைப்புகளாக இருந்தன. விவசாயம் தெரியாதவர்கள் பெரும் நில முதலாளிகளாகவும்.. விவசாயம் தெரிந்தவர்கள் விவசாயக் கூலிகளாகவும் அடிமைகளாகவும் மாறும் நிலை ஏற்பட்டது. ஏதென்சின் புகழ்பெற்ற கவிஞரும் அரசியல்வாதியும் சட்ட அமைப்பாளர் ஆன “சோலன் “என்பவர் பெரும்பாலான குடியானவர்கள் பெரும் கடன்காரர்களாகவும் அடிமைகளாகவும் மாறியதை ஆராய்ச்சி செய்து
“சிசக்தியா” என்ற சீர்திருத்தங்களை வடிவமைத்தார். அதற்கு கிரேக்க மொழியில் “சுமைகளை அப்புறப்படுத்துதல் “என்று பெயர். இப்போது அரசுகள் மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களை வகுக்க சோலனின் சீர்திருத்தங்களேஆரம்ப கால வழிகாட்டல்களாக இருந்தன. 50 ஆண்டுகளை ஜூப்ளி(Jubilee) என்று கொண்டாடுவது பழைய ஏற்பாடு கடன்பட்ட அடிமைப்பட்ட மக்களுக்காக உருவான நிகழ்வாகவே குறிப்பிடப்படுகிறது.
அந்த கொண்டாட்டத்தின் போது கடன்பட்டவர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டு நிலங்களை இழந்தவர்களுக்கு நிலங்கள் திருப்பி அளிக்கப்படுமாம். பேரரசர் அசோகரையும் பேரரசர் ராஜராஜ சோழனையும் மக்கள் இன்றும் அவர்களது மக்கள் நலத் திட்டங்களுக்காகவே நினைவு கூறுகின்றனர். நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாழி(படி) அளவுக்குத்தான் உண்ண முடியும்.. இரண்டு முழ உடை உனக்குப் போதும்.. ஆகவே பணத்தின் பயன் அடுத்தவர்களுக்கு கொடுப்பதுதான் .. என்கிறார் சங்க புலவர் நக்கீரர். தமிழர் வீடுகளின் திண்ணைகளும் ஊர் குளங்களும் சமூக நலத் திட்டங்களின் எளிய வடிவங்கள்தான் என சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
மதுக்கடைகளைத் திறந்தால் அத்தனை ஆட்சிகளிலும் அது அப்படியே இருக்கும்.. நூலகத்தைத் திறந்தால் ஆட்சி மாறியதும் அது மூடப்படும் என்பதும் தமிழகம் கடந்த காலங்களில் கண்ட ஒன்று என்றும் சுட்டுகிறார்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் செல்வத்தை ஆட்சியாளர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் கொடுத்ததே வரியின் தொடக்கமாகும் என்று வரியின் வரலாற்றை அடுத்து வரும் கட்டுரைகள் விளக்குகின்றன .அரசு இயங்க ஆதாரமே மக்கள் கொடுக்கும் வரிப்பணம் தான் இது அரசு எனும் பணியாள்.. மக்கள் எனும் முதலாளியிடம் வாங்கும் கூலியைப் போன்றது. ஜூலியஸ் சீசர் தனது மகளை பாம்பே என்ற செல்வந்தருக்கு திருமணம் செய்து கொடுத்ததும் பின்னர் அவரையே போரிட்டு அழித்ததும் ஏன் என்பதை கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
விமானங்களுக்கு போடும் வெள்ளைப்பெட்ரோலுக்கு விலை குறைப்பு செய்து.. பொதுவாகனங்களுக்கு போடும் சாதாரண பெட்ரோலுக்கு மடங்குகளில் வரி விதிக்கும் இன்றைய அரசின் செயல்முறையை சாடும் நூலாசிரியர் ..அந்தக் காலத்திலும் மக்களிடம் வரியை கசந்து பிழிந்து எடுத்ததையும் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.. நாய் விற்ற காசு குறைக்காது என்ற பழமொழி எப்படி வந்தது என்பதற்கும் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. “தண்ணி கருத்திருச்சு.. தவளைச் சத்தம் கேட்டுருச்சி.. ஊரும் உறங்கிடுச்சு.. புண்ணியரே ஆளை விடும் “என்ற பாடலின் உண்மை பொருளை ஒரு கட்டுரை விளக்குகிறது .நாடாளுமன்றமே சட்டம் இயற்றப்படும் இடம் என்று இந்திய அரசியலமைப்பு கூறுவது இங்கிலாந்தின் தொடர்ச்சி தான் என்பதைஒரு கட்டுரை கூறுகிறது. பாஸ்டன் துறைமுகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்து அமெரிக்காவுக்கு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க மறுத்ததை முடித்து நடைபெற்ற போரை குறிப்பிடுகிறது. உலகின் முதன்மையான நூறு பணக்காரர்களில் நான்கு பேர் வசிக்கும் மும்பையில் உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியும் இருப்பது தற்செயலானது என்பது அல்ல இது பண்டைய ரோமானிய ஆட்சிகளின் தொடர்ச்சி என்கிறார் ஆசிரியர்.
தங்கத்தை எப்படி தாள்கள் வீழ்த்தின.. இங்கிலாந்தின் பிரபலமான மைனர் ஜான் லா..யூத இனத்தின் ரோத்சைல்களின் எழுச்சியும் .. இன்று உலகத்தில் 75% உயர்ப பணக்காரர்களின் பினாமியாக இருக்கும் அவர்களின் விரிவான வரலாற்றை விளக்கும் ஆழமான கட்டுரைகள்.. இவர்கள் எப்படி உலகத்தின் தங்கப் புழக்கத்தையும் டாலர் மதிப்பையும் உலக நிதி நிறுவனங்களையும் ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகளையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது திகில் நிறைந்த மர்ம தொடர்களாக கட்டுரைகளில் விவரிக்கப்படுகிறது.. இதையெல்லாம் நம்ப முடியாதது போல் தோன்றினாலும் மறுக்க முடியாத உண்மைகள் என்பதை இந்த நூல் தெட்ட தெளிவாக விளக்குகிறது. இவர்கள் பட்டியலில் இல்லாத பணக்காரர்களாக தலைமறைவாக இன்றும் தொடரவதையும்..
தொழிலாளி என்ற புது வர்க்கம் உருவானது ..ஆடம் ஸ்மித்தின் தத்துவங்கள்.. வரலாற்றில் பவுண்டும் டாலரும் …ஒவ்வொரு அமெரிக்க அதிபர்களின் பங்களிப்பு ..தங்கமும் பணமும் வேறான கதை.. லிங்கன்.. கென்னடி இந்திரா காந்தி ..ராஜீவ் காந்தி.. என்று பல்வேறு தலைவர்களின் படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம முடிச்சுகள்.. ஜிடிபி தொடர்ந்து ஜி எஸ் டி வரையான மக்களை குழப்பி பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆகும் அரசியல் மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.. ஆனால் இது எல்லாமே தெளிவாக புரியும் வகையில்.. புள்ளி விவரத்தோடு ..நேர்மையாக இந்த நூல் பதிவிடுகிறது. பங்குச்சந்தை ஊகவணிபம் ..பன்னாட்டு வணிகம் ..நேரடி அந்நிய முதலீடு …உலக பொருளாதார நெருக்கடியை இந்திய பொது துறைகள் எதிர்கொண்டது.. அமெரிக்க தனியார் வங்கிகள் தள்ளாடியது.. இந்திய சுதந்திரத்திற்கு பின் நேரு மேற்கொண்ட பொருளாதார அறிவியல் நடவடிக்கைகள்.. கருப்பு பணம்… பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைகள் உலக அளவிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள்.. ஏடிஎம்கள் ..கிரெடிட் கார்டுகள்..
இறுதியாக பிட்காயின் என்றால் என்ன என்று நம்மை எச்சரிப்பதோடு அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தும் கட்டுரைகள்கள் என ஏராளமான தகவல்கள்.. மிக எளிய முறையில் ..தெளிவாக புரிந்துகொள்ளத்தக்கதக்க முறையில் இது பொருளாதார நூலா.. மர்ம நாவலா என்று சந்தேகிக்கும் வகையில்.. மிக மெனக்கெட்டு.. நேர்மையான முறையில் தகவல்களை பதிவு செய்திருக்கும் இளம் நூல் ஆசிரியர் மன்னர் மன்னன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை வாழ்த்துக்களை தெரிவிப்போம் ..
எளிய முறையில் இந்திய அரசியலை ..வரலாறை.. பொருளாதாரத்தை புரிந்து கொள்ள ..ஏன் உலக அளவில் இவை அத்தனையையும் புரிந்து கொள்ள இந்த நூல் அற்புதமாக உதவுகிறது..
நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா.இயேசுதாஸ்
மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.