பஞ்சுமிட்டாய் பிரபு (Panchumittai Prabhu) எழுதிய சாவித்திரியின் பள்ளி (Saavithiriyin palli) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சாவித்திரியின் பள்ளி (Saavithiriyin palli) – நூல் அறிமுகம்

சாவித்திரியின் பள்ளி (Saavithiriyin palli) – நூல் அறிமுகம்

வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் நம் அறிவுக் கதவை திறந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் இந்த புத்தகத்தை பற்றி கூறும் முன் இதற்கு முன்னுரை வழங்கியவர் ஆசிரியர் உதயலட்சுமி என்று தெரிந்தவுடன் மற்றும் ஒரு மகிழ்ச்சி. இந்தியாவின் முதல் ஆசிரியர் பற்றிய ஒரு புத்தகத்திற்கு ஒரு ஆர்வமுள்ள ஆசிரியர் தான் முன்னுரை எழுத வேண்டும் என்று நினைத்தவகையில் பஞ்சுமிட்டாய் பிரபு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இனி நூல் பற்றி..

மகாராஷ்டிராவில் பூனே நகரில் ஒரு குறிப்பிட்ட இன மக்களை நகரின் உள்ளே ஒன்பது மணிக்கு முன்னரும் , மாலை 3 மணிக்கு பின்னரும் நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது . அவர்கள் அணியும் ஆடையோ கழுத்தில் ஒரு கொட்டாங்குச்சி , இடுப்பில் தென்னை மட்டை. இவர்களது நிழல் கூட நிலத்தில் விழக்கூடாது எனில் , எச்சில் விழுவதற்கு வழி இருந்திருக்குமா..? . இப்பேற்பட்ட சூழ்நிலையில் 1800 -களில் அவர்களுக்கு கல்வி தரவேண்டும் என்று ஒரு குடும்பம் நினைத்திருக்கிறது. கல்வி ஒன்றால்தான் மாற்றம் நிகழும் என்பதை அறிந்த இவர்கள் வேறு யாரும் இல்லை “ஜோதிபா -சாவித்திரி பூலே “ தம்பதியினர் தான்.

மதம் சார்ந்த பாடங்களை கல்வி நிறுவனங்களில் அதுவும் குறிப்பாக உயர்ஜாதியினருக்கு கிடைத்த நிலையில் , அனைத்து வகுப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி பெறவேண்டும் என்று நினைத்த தம்பதிகள் எப்பேற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் கடந்து வந்திருப்பர். இவர்களுக்கே கல்வி கற்க தடை விதித்த காலத்தில், தனது அத்தை விதவையான சகுணா பாய் உதவியுடன் மிகப்பெரிய கல்வி புரட்சியை செய்திருக்கிறார்கள். சமூகத்தில் கிடைத்த அவலங்களை துடைக்கும் பொக்கிஷமாக அவருக்கு வாசிப்பு உதவி செய்திருக்கிறது. சிவாஜி, வாஷிங்டன் போன்றோரின் புத்தகங்கள் ஜோதிபாவின்‌ மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு உதவிட சென்ற அன்னை தெரசா பெற்ற அவலங்களை போல , பெண்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று இவர்கள் பெற்ற துன்பங்களும் சொல்லி மாளாது. அந்த துன்பங்களை எல்லாம் சகிக்கும் மனம் கொண்டிருந்ததால் தான் “இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி பூலே” உருவெடுத்து இருக்கிறார். ஆனால் ஏன் அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி தீர்க்கவில்லை என்பது தான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பூலே எனும் பட்டம் அவர்கள் பூ தொழில் செய்ததால் கிடைத்த பெயர். அமெரிக்க மிஷனரி நடத்திய ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் படிப்பை முடித்து 18 வயதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகிறார். ஆனால் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் கெடுக்கும் பெண்ணாக சாவித்திரியை பாவித்து , அவர்கள் மீது கல்லையும் சேற்றையும் ஏன் மலத்தைக் கூட அள்ளி வீசியிருக்கிறார்கள். அதற்காகவே அவர் தம் பையில் மாற்று உடை வைத்திருப்பாராம்.

 பஞ்சுமிட்டாய் பிரபு (Panchumittai Prabhu) எழுதிய சாவித்திரியின் பள்ளி (Saavithiriyin palli) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஒரு கட்டத்தில் தம் வீட்டிலேயே இவர்கள் துரத்தப்பட , இஸ்லாமிய குடும்பம் ஒன்றால் ஆதரிக்கப்பட்டு அந்த வீட்டையே பள்ளியாக மாற்றுகின்றனர். 1881 ஆம் ஆண்டு இந்தியாவில் கல்வியின் நிலையை ஆய்வு செய்ய ஹண்டர் தலைமையில் கல்வி ஆணையம் ஒன்றை ஆங்கில அரசு அமைக்கிறது. அதனை “ஹண்டர் கமிஷன்” என்று கூறுகிறார்கள். இதில் ஜோதிபா பரிந்துரைத்த கல்வி முறையில் உள்ள குறைபாடுகளும் அதற்கான தீர்வுகளும் இன்றைய காலகட்டத்திலும் தேவைப்படுகிறது என்றால் அவர்கள் எத்தனை முற்போக்காக சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க தவறக் கூடாது. இவர்களுடைய சமூக நீதிக் கொள்கைதான் பின்னாளில் அம்பேத்கராலும் , பெரியாராலும் பெரு முயற்சியோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பூலே தம்பதியினர் கல்விப் பணிக்காக மட்டும் தம் வாழ்வை அர்ப்பணிக்காமல் கலை , இலக்கியம் , கவிதை , சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளிலும் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர். அதனால்தான் சமூக சீர்திருத்தத்தின் தந்தை தாய் என்று இவர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் அன்று சாவித்திரிபாய் பூலேவை “மகாத்மா” என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மகாத்மா பட்டம் யாருக்கானது என்பது நமக்கு தெரியும். அதற்கு முன்னரே இந்தியாவில் மகாத்மா என்று கொண்டாடப்பட்டிருக்கிறார் அவர். பெண்ணுரிமை சார்ந்த கருத்துக்களை எப்போதும் சமூகத்தில் முன்வைக்கும் இவர் பெண்களுக்கு மொட்டை அடிக்கும் வழக்கத்தை கைவிட சலூனில் புரட்சி செய்திருக்கிறார். கணவனை இழந்த பெண்களுக்கு WIDOW என்ற பெயர் இருப்பது போல , மனைவியை இழந்த கணவனுக்கு ஏன் WIDOWER என்று பெயர் இல்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தாராபாய் எனும் சீரிய தொண்டர் எழுதிய “ஆண் பெண் ஒப்பீடு” எனும் கட்டுரை இந்தியாவின் முதல் பெண்ணிய படைப்பு எனும் சிறப்புக்குறியது. அதில் பெண்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடு மகிழ்வான வாழ்வை எல்லாம் ஆண்களுக்கு கொடுத்துவிட்டு பெண்களுக்கு வெறும் துன்பங்களை மட்டும் கொடுக்கும் கடவுள் எப்படி பாரபட்சமற்றவர் என்ற கேள்வி எழுப்புகிறார்.

“ஏன் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் கல்வியை அளிக்க முன்வந்தீர்கள் ..? “, என்று ஜோதிபா பூலேவைப் பார்த்து கேட்ட கேள்விக்கு அவர் கூறும் பதில் பின்வருமாறு…

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயின் பங்கு முக்கியமானது. இந்நாட்டின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளவர்கள் பெண்ணின் நிலை குறித்து அவசியம் கவனிக்க வேண்டும். நம் தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பெண்கள் முக்கியமாக கல்வி பெறவேண்டும். அந்த நோக்கத்தில் தான் பெண்களுக்கு என்று நான் தனியாக பள்ளிகளை ஆரம்பித்தேன் என்கிறார். இன்றும் சில இடங்களில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலை இருக்க , எத்தனை முற்போக்கான சிந்தனை அன்றே‌ அவருக்கு தோன்றியிருக்கிறது.

மறைக்கப்பட்ட வரலாற்றை மறுக்க முடியாமல் மனதில் கடத்திச் செல்கிறது இவர்கள் இருவரின் வாழ்வும்.

நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : சாவித்திரியின் பள்ளி (Saavithiriyin palli)
ஆசிரியர் : பஞ்சு மிட்டாய் பிரபு
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : ரூ . 60
நூலைப்  பெற : https://thamizhbooks.com/product/savithriyin-palli/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பா விமலா தேவி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *