பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பேரா.சேவியர் தனிநாயகம் அடிகளார் | மதிப்புரை : இராமமூர்த்தி நாகராஜன்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பேரா.சேவியர் தனிநாயகம் அடிகளார் | மதிப்புரை : இராமமூர்த்தி நாகராஜன்

இந்த நூலானது 1956- 1957ஆம் ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளாரால் ஆங்கிலத்தில் “Tamil Culture” இதழில் எழுதப்பட்டது. இந்நூல் நான்கு முக்கியக் கட்டுரைகளைக் கொண்டது. இக்கட்டுரைகள் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இருந்த கல்வி முறைகள் பற்றி பேசுகிறது.

இதில் முதலாவது கட்டுரை பழந்தமிழ் இலக்கியமும் பண்டைய இந்திய கல்வியும் என்பதாகும்.

கல்வி எனும் கருத்தியலின் வளர்ச்சி, கல்வி அமைப்புகளின் இலக்குகள், மதிப்பீடுகள் மற்றும் சிந்தனைகள் பற்றிய கிரேக்க ரோமானியப் பண்பாட்டின் கருத்துக்களானது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கவனிக்கத்தக்க அளவில் நீட்சி அடைந்தன. இக்காலகட்டத்தில் கல்வி ஒப்பாய்வின் நோக்கமும் தேவையும் கால வெளியைக் கடந்து விரிவு அடைகின்றன. இனிவரும் காலத்தில் கல்வி ஒப்பாய்வில் ஈடுபடுவோர் இந்திய, ஆப்பிரிக்க, சீன ஜப்பான் மற்றும் இந்தோனேஷிய நாடுகளையும் தமது ஆய்வுப் பரப்பினுள் உள்ளடக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்துகிறார்.

மேலும் இந்தியக் கல்வி முறைகளைப் பற்றி பேசும்போது வட இந்தியா மற்றும் பண்டைய சமஸ்கிருதம் , பாலி இலக்கியங்களை மட்டுமே ஆய்வாளர்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் திராவிட மொழி பேசும் மக்களின் இலக்கியங்களையும், வரலாற்றையும் தவிர்த்துக் கொண்டு நாம் இந்தியாவின் முழுமையான கல்வி வரலாற்றை எழுதிவிட முடியாது. பண்டைய இந்தியக் கல்வி ஆய்வுக்கான ஆதாரங்களை பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்கள் நிறைய தன்னகத்தே கொண்டுள்ளன.

தமிழுக்குத் தொண்டாற்றிய தனிநாயகம் ...

இந்த தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் புறக்கணிப்பதால் பண்டைய இந்தியா குறித்த பல்வேறு முடிவுகள் முழுமையற்றதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவும் அமைந்துவிடுகிறது என்கிறார் அடிகளார். இவ்வாறாக உலக கல்வி முறைகளோடு தமிழ்க் கல்வி முறைகளின் வரலாற்றை ஒப்பாய்வு செய்வதன் அவசியத்தை தனது முதலாவது கட்டுரையில் விளக்குகிறார்.

இரண்டாவது கட்டுரையின் தலைப்பு பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள் என்பதாகும்.

இக்கட்டுரையில் பண்டைய தமிழகத்தில் கல்வியாளர்களின் நான்கு வெவ்வேறு காலகட்டங்களை அடிகளார் தொகுத்துத் தருகிறார்.

முதலாவதாக நிமித்தங்களைத் தீர்க்க தரிசனத்துடன் பொருளுணர்ந்து உரைப்பவராகவும், குறி சொல்பவராகவும், சமயம் மற்றும் மாந்த்ரீகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்த பூசாரிகள் மற்றும் பூசாரிணிகள் ஆகியோரே முதல் கல்வியாளர்கள் ஆனார்கள். தமிழ்ச் சூழலிலும் மந்திரச் சொல்லாடல் நிலையிலிருந்து தமிழ் கவிதையின் ஆரம்பங்கள் உருப்பெற்றிருப்பதை இக்கருத்துக்கு வலு சேர்ப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது நிலையில் பண் அமைத்துப் பாடல் பாடுவதில் வல்லவர்களான பாணர்களும், ஆட்டத்தில் வல்லவர்களான கூத்தர்களும், கல்வியாளர்களாக இருந்தனர்.

மூன்றாவது கட்டத்தில் பாணர், கூத்தர் இவர்களோடு புலவர்களும் கல்வியாளர்களாக முன்னேற்றம் அடைந்தனர்.

விரைவிலேயே புலவர்கள் தத்துவ ஞானியராகவும், முதன்மைச் சமயக்கல்வியாளருமாக நாகரிகமடைந்த காலத்தில் செயல்பட்டது பழங்காலக் கல்வி வரலாற்றில் நான்காம் கட்டம் ஆகும்.

இவ்வாறு பண்டைய தமிழ்ச் சூழலில் கல்வியாளர்களின் நான்கு நிலைகளைப் பற்றி விரிவாக இரண்டாவது கட்டுரையில் அடிகளார் பேசியுள்ளார்.

இந்நூலின் மூன்றாவது கட்டுரை “பழந்தமிழ்ப் புலவர் – கல்வியாளர்கள்”.

Muthukamalam.com / Essay Literature - கட்டுரை ...

“மன்னராட்சி நடைபெற்று வந்த சமூகத்திலும், குலத் தலைவர்களும் குடித் தலைவர்களும் நிலத் தனியாட்சி பெற்றுவந்த சமூகத்திலும் புலவர்கள் மாணவர் குழுக்களுக்கு ஆசிரியர்களாகவும், பொது சமூகத்திற்குத் தகவலாளிகளாகவும் தொழிற்பட்டனர். குலத்தலைவர்கள் ஒன்றிணைந்து தனிப்பெரும் அரசுகளாகப் பரிணமித்தபோது வாழ்த்துப் பாடியோரின் தகுதியும் அதிகரித்தது”..

பாணர்களை விட புலவர்கள் விரிந்த பார்வை கொண்டிருந்தனர். மேலும் பாணர்களைவிட அதிக பரிசில்களையும் சமூகத் தகுதியையும் பெற்றனர். மேலும் மன்னர்களின் நண்பர்களும் ஆலோசகர்களுமாகத் தகுதி உயர்வு பெற்று புலவர்கள் பாணர்களைவிட உயர்சமூக நிலை அடைந்தனர். செல்வத்தின் அதிகரிப்பும் அரசவைப் புகழும் புலவர்களுக்கு ஏற்பட்டன. தமிழில் தொகை நூல்களின் காலம் என்பது பண்பாட்டிலும் கல்விச் செயல்பாடுகளிலும் புலவர்கள் முக்கியத்துவம் பெற்றுவந்த காலகட்டமாகும்.

புலவர் காலத்தில் கல்வியின் இலக்கு ஒருவரை சிறந்த குடிமகனாக வாழத் தயார் செய்வதாக மாறுகிறது. அக, புறப்பாடல்களில் புலவர்களின் உளவியல் ரீதியான நுண்ணறிவு வெளிப்படுகிறது. இவ்வாறு புலவர்களின் காலகட்டம் பண் வழி அறிவு பெறும் பாணர் காலகட்டத்தைத் தாண்டி செய்யுள் வடிவான புலவர்களின் காலகட்டத்தை நோக்கிப் பயணிப்பதை அடிகளாரின் மூன்றாவது கட்டுரை எடுத்துரைக்கிறது.

இந்நூலிலுள்ள நான்காவது கட்டுரை ‘பழந்தமிழகத்தில் சமண பௌத்தக் கல்வி’…

திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பரவியிருந்த வைதீக, சமண, பௌத்த மற்றும் ஆசீவக கல்வி வரலாறு பற்றி நூலில் இறுதிக் கட்டுரை விவரிக்கிறது.

இவ்வாறு நான்கு கட்டுரையின் வாயிலாக பண்டைத் தமிழகத்தில் கல்வி முறைகள் படிப்படியாக வளர்ச்சி பெற்றதை இந்நூல் விளக்குகிறது. நூறு பக்கங்களுக்குள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி வரலாறை அருமையாக விளக்குகிறது இந்நூல்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பேரா.சேவியர் தனிநாயகம் அடிகளார்
தமிழாக்கம்: ந.மனோகரன்
பதிப்பு: பரிசல் வெளியீடு(2019)
விலை :75
பக்கங்கள்:96

மதிப்புரை : இராமமூர்த்தி நாகராஜன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *