ஷராதிந்து பண்ட்யோபாத்யாய் எழுதிய வங்காள மொழிச் சிறுகதை ‘ஷாதா பிரிதிபி’ (1946) அல்லது ‘வெள்ளை உலகம்’ ஒரு கெட்ட காலம் வரப்போவதை முன்கூட்டியே அறிவிக்கிற நாடகக் காட்சி போலத் தொடங்குகிறது.
காட்சி நடைபெறும் இடம் லண்டன். மையக் கதாபாத்திரம் சர் ஜான் ஒயிட். அன்றைய முன்னணி அறிவியலாளர், தத்துவஞானி.
1946 ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை 3 மணியளவில், தனது எண்பதாண்டு ஆயுளில் பெரும்பங்குக் காலத்தை ஆக்கிரமித்திருந்த சிக்கலான புதிருக்குத் திடீரென விடை கண்டுபிடிக்கிறார் சர் ஜான். “ஓராயிரம் அணுகுண்டுகளின் தாங்கவியலாத பேரொளி போல” ஒரு அற்புதமான யோசனை அவருடைய தலையில் பளிச்சிடுகிறது. கிட்டத்தட்ட அந்த நொடியிலேயே அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பழமைவாதக் கட்சி உறுப்பினர் ஒருவரைத் தொடர்பு கொள்கிறார். அவரிடம் அதிரும் குரலில் இறுதியாக “வெள்ளை இனங்களுக்கான மீட்சியை” தான் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்.
1947 ஜனவரி 5 அன்று, “நடுத்தரமான டோரி செய்தித்தாள்” ஒன்றில் அதன் தலையங்கப் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் அந்தக் கண்டுபிடிப்பை விளக்குகிற கட்டுரை ஒன்று வெளியிடப்படுகிறது. வெள்ளை இனங்களின் நலனுக்காக ஒரு கொடூரமான திட்டத்தையும் அந்தக் கட்டுரை முன்வைக்கிறது. (சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்திய பழமைவாதக் கோட்பாடு டோரியிசம். அதற்கு ஆதரவான பத்திரிகை அது. –மொ.ர்.)
உலகில் அதிகரித்துவரும் மக்கள்தொகை பெருக்கம்தான் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டுகிற அந்தக் கட்டுரையாளர், மால்தூசியனியக் கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறார். சமூகத் தூய்மைவாதங்களை எடுத்துவைக்கிறார். வெள்ளை இனங்களின் நல்வாழ்வு தொடர வேண்டுமானால், “தகுதியுள்ளதே தாக்குப்பிடித்து வாழும்” என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால், “கறுப்பு, மஞ்சள், பழுப்பு, கலப்பு” ஆகிய இதர எல்லா இனங்களையும் அழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அவர் வாதிடுகிறார்.
பத்திரிகையின் வாசகர்கள் பலரும் முதலில் இது ஒரு பகல் கனவு என்றே கருதினார்கள். ஆனால், அப்படியல்ல. ஏற்கெனவே அப்படியொரு திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. முதல் சம்பவம் அமெரிக்காவில் 1948 ஜூன் 25 அன்று நடைபெறுகிறது. அமெரிக்காவின் கறுப்பின மக்கள் நெடியதொரு போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்கான ஒரு அரசை உருவாக்கிக்கொள்ள முடிந்திருந்தது. அரிஜோனா, மெக்சிகோ மாநிலங்களுக்கிடையே அமைந்த அந்த மாநிலம் மெக்ஸாரிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
அந்தக் கெடுவாய்ப்பு நாளில், புதிய முன்மாதிரி அணுகுண்டு ஒன்றைச் சுமந்து வந்த ஆளில்லா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி மெக்ஸாரிஸ் தலைநகரில் தற்செயலாக விழுகிறது. அந்தக் குண்டு வெடிக்கிறது. அதன் விளைவாகத் தலைநகரில் வசித்த அனைவரும் இறந்துபோயிருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார் ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்.
இதே போன்று அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக, அத்துடன் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பை வலுப்படுத்தும் ஒரு அரசியல் ஏற்பாடாக, அந்த நாட்டில் குடியேறியிருந்த வெள்ளையின மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்படுகிறார்கள்.
வெள்ளையர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய பின், பூர்வீகக் குடிகளான கறுப்பின மக்கள் இனங்காணப்படாத ஒரு கொள்ளைநோயின் பிடியில் சிக்குகிறார்கள், மரணமடைகிறார்கள். கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் தென் அமெரிக்காவில் இதுவரையில் அறியப்படாத ஒரு கிருமியின் தாக்குதல் தொடங்கியிருப்பதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தொற்றுக்கு உள்ளான உடல்களில் எவ்வித அறிகுறிகளும் தென்படுவதில்லை, ஆனால் அவர்களை அநேகமாக உடனே கொன்றுவிடுகிறது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

படிப்படியாக, கொடூரமான துல்லியத்தோடு, வெள்ளையர் அல்லாதார் உலகத்தில் அந்தக் கொள்ளைநோய் பரவுகிறது. பல லட்சம் பேரைக் கொல்கிறது. சீனா, பர்மா, பிலிப்பைன்ஸ் தீவுகள், மற்ற பல எண்ணற்ற நாடுகள் கறாரான தனிமைப்படுத்தல் மூலமாகவும், மக்கள் நடமாட்டத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் கொள்ளைநோய் பரவலைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.
இந்தியாவிலும் மாறுபட்ட நிலைமை ஏதுமில்லை.
இங்கிருந்த அனைத்து வெள்ளை ஆண்களும் பெண்களும், தங்களுடைய நாடுகளின் அரசாங்கங்கள் பிறப்பித்த ஆணைகளைப் பின்பற்றி துணைக்கண்டத்திலிருந்து வெளியேறுகிறார்கள். கிட்டத்தட்ட உடனடியாக முதல் சாவு கல்கத்தாவில், 1949 ஜூன் 7 அன்று ஏற்படுகிறது. சில நாட்களில் பீதியும் கிருமியும் காட்டுத் தீ போலப் பரவுகின்றன. சுதந்திர இந்தியாவின் (பண்ட்யோபாத்யாய் கற்பனைப்படி பிளவுபடாத இந்தியாவில்) குடிமக்கள் ஈக்களைப் போல செத்து மடிகிறார்கள்.
1950 ஆகஸ்ட் 6ல், “மீட்சி” என்ற கருத்தாக்கத்தை சர் ஜான் முன்வைத்ததிலிருந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பெயர் தெரியாத கொள்ளைநோயின் காரணமாகப் பூமியின் முகத்திலிருந்து வெள்ளையரல்லாத அனைத்து இனங்களும் துடைத்தெறியப்பட்டுவிட்டன. இதற்கிடையே, 1949ல். சர் ஜானுக்கு அவரது 83வது வயதில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பண்ட்யோபாத்யாய் கதை கொள்ளைநோய்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு பற்றிய மறுசிந்தனைக்கு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.
ஆம், இதுவொரு நீண்ட வரலாறுதான். பல ஆய்வுகள் இதைக் காட்டியுள்ளன. (பிரெஞ்சு தத்துவ ஆய்வாளர்) மைக்கேல் ஃபோகால்ட் தனது ‘அசாதாரணம்’ என்ற உரைத்தொடரில் (1974-75) மத்திய காலத்திற்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் பிளேக் கொள்ளைநோய் கையாளப்பட்ட முறையால் எப்படி நவீன அரசுக்கான சில மையமான மாதிரியமைப்புகள், குறிப்பாகக் குடிமக்கள் தனி மனிதர்களாக்கப்படுதல், கண்காணிப்புக்கான விரிந்த அமைப்புகள் ஆகியவை உருவாகின என்று காட்டுகிறார்.
நம் நாட்டு வரலாறு ஒன்றைச் சொல்ல வரும் ஆய்வாளர் டேவிட் அர்னால்ட், தனது ‘உடலின் மீது காலனியாதிக்கம்’ (1993) என்ற கட்டுரையில் 1800 முதல் 1914 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் காலனியாதிக்க அரசின் நுட்பமான ஏற்பாடுகள் வடிவம் பெற்றன என்று வாதிடுகிறார். பெரியம்மை, காலரா, பிளேக் போன்ற பெரிய அளவிலான தொற்றுநோய்களைக் கையாள வேண்டிய சூழலாலும், பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளிலிருந்து மாறுபட்ட பொது மருந்து என்ற கருத்தாக்கத்தைச் செயல்படுத்தியதாலும் அந்த ஏற்பாடுகள் வடிவம் பெற்றன என்கிறார்.
மிக அண்மைக்கால கொள்ளைநோய் அனுபவங்களைப் பொறுத்தவரையில், இரண்டு அரசியல் கேள்விகளை உலக சமுதாயம் எதிர்கொண்டது. முதல் கேள்வி பாதுகாப்புமயமாக்கலும் கண்காணிப்பும் தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தியது. இரண்டாவது கேள்வி சந்தைப் பொருளாதாரத்தைச் சுற்றிவந்தது.

2004ன் சார்ஸ் அச்சுறுத்தல், குறிப்பிட்ட வட்டாரங்கள் சார்ந்து நோய்வாய்ப்பட்ட “மற்றவர்கள்” என்ற கண்ணோட்டத்தை உருவாக்கியதில் இருந்த இனப் பாகுபாட்டை மட்டுமல்லாமல், அந்த நுண்ணுயிரி பரவுகிற அபாயத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அரசுகள் மேற்கொண்ட, மூர்க்கத்தனமான, மருத்துவம் சாராத சமூக விலக்கல் நடவடிக்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
அமெரிக்காவில் சார்ஸ் அச்சுறுத்தலின்போது என்ன நடந்தது என்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிளேக் சூழலை நகலெடுப்பது போல், சீன-அமெரிக்கர்கள் என்று இனவாத அடிப்படையில் அடையாளப்படுத்துகிற பழைய உத்தி மறுபடி கொண்டுவரப்பட்டது. அமெரிக்க நகரங்களுக்கு உள்ளேயே இருக்கும் சீனர் குடியிருப்புப் பகுதிகளை இடம் சார்நத அபாயநிலை இருப்பதாகக் கிளப்பிவிடப்படுவது ஒரு வன்மத்தோடு மறுபடியும் காட்சிக்கு வந்தது.
வலுவான கண்காணிப்பு ஏற்பாடுகளின் மூலம், அச்சுறுத்தலுக்கான வாய்ப்பை ஒழிப்பது என்ற வழிமுறையைச் சார்ந்ததாகிய பாதுகாப்புமயமாக்கல் நடைமுறையால், எல்லைப் பகுதிகளில் கறாரான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. (குறிப்பாக, எளிதில் பாதிப்படையக்கூடிய நாடுகளிலிருந்து, அதாவது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து, வளர்ந்த உலகத்துக்கு, அதாவது மேற்கத்திய நாடுகளுக்கு, வருகிற மக்களுக்கும் சரக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புவியியல் அடிப்படையில் அந்த வளர்ந்த உலகம் எங்கே அமைந்திருந்தாலும் எல்லைகளில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.) அந்த மக்கள் வலுக்கட்டாயமாகத் தனியிடத்திற்கு ஒதுக்கப்பட்டார்கள், முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
ஆயினும், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளிலேயே இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஒரேமாதிரியான வழிமுறைகள் காரணமாக, கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் போதாமல் போகக்கூடும்.
பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிற புலம்பெயர் மக்களின் மனித உரிமைகளை ஒழித்துக்கட்டினால் அரசின் அதிகாரம் வலுப்பெறும். ஆனால், உரிய மருந்துகள் சார்ந்த நடவடிக்கைகள் இல்லாமல், முறையான பொதுசுகாதாரக் கொள்கைகள் இல்லாமல், அரசின் அதிகாரம் இவ்வாறு அதிகரிப்பது, மேற்குலகின் “சொந்த” தேசிய மக்களை “தற்செயலாக” பரவக்கூடிய எந்தவொரு நோயின் பிடியிலும் சிக்கவைத்துவிடும்.
ஆட்சி நிர்வாகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிற வலுவான ராணுவ-தொழில் அமைப்பிற்கு உட்பட்ட குடிமக்களாக வாழ்கிற நமது நீண்ட அனுபவங்களிலிருந்து ஒன்று நமக்கு நன்றாகவே தெரியும் – பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இப்படிப்பட்ட தற்செயல் சறுக்கல்கள் ஒன்றும் பொதுவாக நடக்காதது அல்ல என்பதே அது.
சந்தைப் பொருளாதாரம் பற்றிய இரண்டாவது கேள்வி உழைக்கும் மக்களைக் கறாராகக் கட்டுப்படுத்துவதோடு நேரடியாகத் தொடர்புடையதாகும்.
நமது சமகால உலகம் நாடுகளுக்கிடையே மலிவான உழைப்பு பயணப்படுவதையே சார்ந்திருக்கிறது. இதை “கார்பன் ஜனநாயகம்” என்கிறார் வரலாற்றாய்வாளர் டிம் மிட்சேல். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு உழைப்பு பயணப்பட வேண்டுமானால் அதற்குப் பெட்ரோலிய எண்ணைதான் அடிப்படையான எரிபொருளாக இருக்கிறது. அந்த எண்ணைக்காக அடித்துப்பிடித்துக்கொள்வதில் நிகழும் வன்முறை, நிதி மூலதனத்திற்காக எந்த அளவுக்கு அடித்துப்பிடித்துக்கொள்ளப்படுகிறதோ அதே அளவுக்குச் சமவிகிதத்தில் இருக்கிறது.
சந்தைப் பொருளாதாரத் தேரோட்டம் கொள்ளைநோய் பற்றிய கடக்கவியலாத பீதி உளவியலோடு மோதுகிறது. அதனால் உலகப் பொருளாதாரம் நொறுங்குகிறது.
பொது சுகாதாரம், அறிவியல் ஆராய்ச்சி, மக்களின் வாழ்க்கைத்தரத்தில் அரசின் பொறுப்புகள் ஆகியவற்றில் அரசு முதலீடுகளை விலக்கிக்கொள்கிற சிக்கன நடவடிக்கைகள் சில பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த ஏழைகள் பயணப்படுவதும், தங்களது உழைப்பை விற்பதும், இன்னும் மோசமாக இறந்தே போவதும் இத்தகைய சிக்கன நடவடிக்ககைகளை ஒன்றுமில்லாததாக்குகின்றன.
“ஊரடங்கு” காலத்திய உற்பத்தித்திறன் என்பதான மாயை சந்தைப் பொருளாதாரத்தின் சுதந்திரத்தைச் சிறிது காலம் தக்கவைக்கிறது. பெருநிறுவனங்களுடைய தலைவர்கள் கருணை ஏற்பாடுகளை வழங்குகிறார்கள். பொருளாதாரச் சரிவிலிருந்து தப்பவைக்கப்படுகிற அவர்களுடைய இத்தகைய ஏற்பாடுகள் மனிதநேயச் செயல்பாடுகளாகப் போற்றப்படுகின்றன.
ஆனாலும், “(ஏதோவொரு) நாட்டை மறுபடியும் மகத்தானதாக்குவோம்” என்ற முழக்கத்தோடு அதிகாரத்திற்கு வந்த தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கொள்ளைநோய் நிலைமைக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை. மாறாக, ஏற்கெனவே தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் “சுதந்திர” சந்தையின் மீது மோதுகிறது.
“மந்தை நோயெதிர்ப்பு” (சமூகமாகவே நோயெதிர்ப்பு சக்தி வளர்வது) என்ற கருத்தை முன்வைத்தவர்களே தனிமையில் ஒதுங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தாக்குப்பிடித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில், மிகவும் தாழ்த்தப்பட்டுவிட்ட பொது சுகாதார அமைப்பு மிகவும் கிறீச்சிடுகிற, சரியாகப் பராமரிக்கப்படாத கருவிகளைக் கொண்டுதான் சுவாச எந்திரத்தை இயங்கவைக்க வேண்டியிருக்கிறது.
ஆயினும், பண்ட்யோபாத்யாய் கதை இன்னொரு சாத்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
கோவிட்-19க்குப் பிந்தைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆட்சி நிர்வாகத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகள் கொண்டுவரப்படும் என்பதற்குள் நம்மைக் கொண்டுசெல்வதற்கு மாறாக, கொள்ளைநோயால் அரசியலுக்கே முடிவு ஏற்படக்கூடும் என்ற கருத்தை சாதாரணமாக முன்வைக்கிறது இந்தச் சிறுகதை.
சர் ஜான் வகுத்த மானிசீயவாதத் திட்டத்தின்படி, உலகம் இரண்டே பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது – வெள்ளையர், வெள்ளையரல்லாதோர் என்று. அதில் இரண்டாம் பிரிவினரை ஒழிப்பதன் மூலமாக முதல் பிரிவினர் வாழ்ந்திருக்க வழி செய்யப்படுகிறது.
கதையில் வருகிற பத்திரிகையின் கட்டுரையாளர் சொல்வது போல, கொள்ளைநோயால் வெள்ளையினம் அல்லாத மற்ற இனங்கள் அனைத்தும் இறுதியாக ஒழிக்கப்பட்ட பிறகு மோதலே இருக்காது, ஆகவே அரசியலும் இருக்காது. (மானீசியவாதம் என்பது உலகில் எதையும் நல்லது, கெட்டது என இரண்டே பிரிவுகளாக மட்டும் சித்தரிக்கிற ஒரு பழமையான மதச் சித்தாந்தமாகும். –மொ.ர்.)
“நிலத்திற்காக மனிதன் சண்டைபோட வேண்டிய தேவை இருக்காது. இனப் பிரச்சினை இருக்காது. மனிதகுலத்தின் எதிர்காலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்,” என்று அந்தக் கட்டுரை சொல்கிறது.
இப்படியொரு எதிர்காலம் உண்மையிலேயே அச்சமூட்டுவதுதான். ஆயினும், கொள்ளைநோய்களோ தங்களுக்கே உரிய வழிகளில் உயிர்களை உறுதிப்படுத்துகின்றன, பழமைவாத மாயையின் பரிசுத்தத்தனத்தைக் குலைக்கின்றன.
கதையின் இறுதிக் கட்டத்தில், லண்டனில் ஒரு பெரும் கூட்டத்தின் முன் தோன்றுகிறார் சர் ஜான். தனது நாசகரத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசுகிறார். இயற்கை அன்னை பரிவு, கருணை போன்ற மனித உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவள். அவள் தகுதியுள்ள உயிர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறாள் என்று வாதிடுகிறார்.
“வெள்ளை இனங்கள் மட்டுமே வாழ்ந்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இயற்கை அன்னையின் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுவிட்டதாகப் பெருமகிழ்ச்சியோடு அந்தப் பெருங்கூட்டத்தில் அறிவிக்கிறார். அந்தக் கணத்தில் சர் ஜான் திடீரெனர் பேச்சை நிறுத்துகிறார். அவருக்கு முன்பாகக் கோடிக்கணக்கான வெள்ளையரல்லாதோருக்கு நடந்தது போலவே அவருக்கும் நிகழ்கிறது. மேடையில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார், செத்துப்போகிறார்.
(மல்லாரிகா சின்ஹா ராய், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவில் பெண்கள் ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர். பெய்திக் பட்டாச்சார்யா வளரும் சமூகங்கள் ஆய்வு மைய துணைப் பேராசிரியர்.)
நன்றி: தி ஒயர்
—
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com