க. பாண்டிச்செல்வி கவிதைகள்

Pandi Selvi Poems. This post is contains four poems. Our book day website is branch of Bharathi puthakalayam.கோலம்
~~~~~~~~
வாசலில் கோலமிட்ட ,
அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்,
எப்போதும் சிக்குக் கோலம்தானா?
அம்மா சொன்னாள் _ அது
அப்பாவிடம் வாழ்ந்த வாழ்க்கை !

முத்தம்
~~~~~~~
அழுத்தி இதழ் பதித்து
ஈரம் நனைய முத்தம் கொடு
அப்படியேனும் இருக்கட்டும்,
ஈரம் உன்அப்பனுக்கு.
தூக்குவாளியற்ற மூடி~~~~~~~~~~~~~~~~~~~~~~

நினைவு தெரிந்த நாள் முதலே,
தூக்குவாளியின் பித்தளை மூடி ஒன்று
வசித்து வருகிறது என் வீட்டில்.

அம்மா
அவளின் அம்மா ஞாபகமாக
பேணி வருகிறாள் !

அவ்வப்போது
அப்பாவிற்கு வெஞ்சனம் வைக்க,
சருவம் மூட ,
கை பொசுக்கும்,
குழி பணியாரம் ஆற வைக்க,
பருப்பு சாதம் பிசைந்து
தம்பிக்கு ஊட்ட ,
அன்றாட பயன்பாட்டில்
அம்மாவின் கண்முன்னே.

நேர்த்தியான வடிவமைப்புடையது,
அம்மாவின் கைவண்ணத்தில் — மேலும்
பளிச்சென மின்னும்.

அன்பையும், ஆசையையும்
சேர்மானித்த கஞ்சியை,
தாத்தாவிற்கு கொண்டு போவாளாம் அம்மாச்சி
அந்த தூக்குவாளியில் .
வாசனை பிடித்து யாரும்
விசுக்கென்று இழுத்து விடக்கூடாதென
தலையில் பிருமனை வைத்து

அப்படியே,
வாளியோடு உறிஞ்சிக் குடிக்கும் — தாத்தா
ப்ரியத்தின் மிச்சத்தை
பகிர்ந்தளிப்பாராம்.

அம்மாச்சியை எதற்கும்
கை நீட்டாத ,
அவரின் உச்சபட்ச கோபத்தின்
வடிகால் வாளிதானாம்.!
ஓர் உதை அவ்வளவு தான்.

ஒரு நாள் மாலைப்பொழுதில்
பேரப் பிள்ளைகள்
நீர் மாலை எடுத்ததில்
தொலைந்து போனது தாத்தாவோடு
வாளி மட்டும்.நிலம்

********

நிலமற்றவளென
எகடாசி செய்கிறாய்.!
எச்சங்களில்
வளர்ந்த பெரும் காடுகளின் ,
கூடாராம் நான் அறிவாயா.?

உன் வேர் பற்றிப் பரவ
பழுத்த விதையின் ரகசியம்
நானறிவேன்.

உன் விலா எலும்பில்
நான் உயிரூட்டபட்ட உருக்க கதையில்
எழவிடாத நின் தந்திரம் __ என்
குறுகிய இடையறியும்.

ஆதித் தாயிடம்
காட்டை உருவி
வீட்டைக் கொடுத்தவனே,
உன் வம்சாவளி வித்தின்
வன்மம் நானறிவேன்.

நின் சந்ததிகள் ,
ஓங்கி தழைக்க ,
யாசகம் கேட்பவனே,
யார் நிலமற்றவள் ???

க. பாண்டிச்செல்வி
திருமங்கலம்
மதுரை