கவிஞர் பாண்டிச்செல்வி நெருப்புச் சொற்கள் Pandi Selvi's Neruppu Sorkkal Book Review

சுருக்கென பதியும் எளிய (நெருப்பு) சொற்கள்

கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது “நெருப்புச் சொற்கள்”. இந்த நூலுக்கு ஓர் அறிமுகக் குறிப்பு எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுத… எழுத… நீள்கிறது. எல்லாக் கவிதைகளையும் திரும்ப எழுதி விட்டால் எப்படி அறிமுகமாகும். ஆனால் அப்படித்தான் எழுதத் தோன்றுகிறது. மணித்துளிகளாய்….. மணிகளாய்…. நாட்களாய் கடந்து சில மாதங்களும் ஓடிவிட்டன. சுருக்கி, சுருக்கி, சுருக்கென பதியும் எளிய சொற்களால் எப்படியாவது எழுதி விட வேண்டும் என்ற உந்துதல்தான் இறுதி வடிவத்தைத் தந்தது.

இவ்வளவு செறிவான கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு இரண்டு மூன்று பக்கங்களில் அணிந்துரை எழுதியிருக்கும் கவிஞர்கள் நா. வே. அருள், ஏகாதசியின் திறன் மெச்சத்தகுந்தது. அந்த வழியில் நானும் முயற்சி செய்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை. இதனைப் படிப்பவர்களும், நூலை வாங்கிப் படிப்பவர்களும் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

சுருக்கெனப் பதியும் எளிய சொற்களாலான இப்படி ஒரு கவிதை தொகுப்பைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கும் சொற்கூடு பதிப்பகம் மகாலட்சுமிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

தொகுப்பின் முதல் கவிதையே “தூக்குவாளியற்ற மூடி”. தொடக்க வரிகள் இப்படி இருக்கின்றன:

“நினைவு தெரிந்த நாள் முதலே தூக்குவாளியின் பித்தளை மூடி ஒன்று வசித்து வருகிறது என் வீட்டில்”

உயர்திணையின் இடத்தில் அஃறிணை வந்து அமர்ந்திருக்கும் கவியழகில் மனம் லயிக்கிறது. அந்த மூடியின் பயன்பாடுகள் அடுக்கப்படும் போது மூதாதையரின் வீடு ஒன்றுக்கு நாம் விருந்தாளியாகச் சென்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வளவு அழகான, பயனுள்ள மூடிக்கான தூக்குவாளி எங்கே என்று தேடிப் பார்த்தால், ஓர் அன்பு நிறை தம்பதியரின் வாழ்க்கை அதற்குள் ஒளிந்திருக்கிறது.

ஆணாதிக்கத்திற்கு இரையாகி அம்மாச்சிக்கு விழவேண்டிய அடியைத் தாங்கி அது உருள்கிறது. உருண்டது நிமிர்ந்து மூடியோடு அந்த வீட்டில் அது வசிக்கவில்லை.

“ஒரு நாள் மாலை/ பேரப்பிள்ளைகள்/ நீர் மாலை எடுத்ததில்/ தொலைந்து போனது/ தாத்தாவோடு வாளியும்”

இந்தக் கவிதை எத்தனையோ சித்திரங்களை எண்ணத்திரையில் வரைந்து காட்டுகிறது. அடுத்த கவிதை படிக்கத் தாளைப் புரட்டுவதற்குள் பெரும்பாடாகிப் போகிறது.

அந்தப் பாட்டுடன் எப்படியோ புரட்டிப் பார்த்தால் எதிர் நிற்கும் கவிதை “அவஸ்தை”. ஒரு நடுநிசியில் நெடுந்தூரப் பேருந்துப் பயணமொன்றில் சிறுநீர் கழிக்கும் உபாதையில் அவள் இருப்பதைச் சொல்கிறது அது. தாகமும் தவிப்புமாய் அவஸ்தையைக் கடக்க முயலுகிறாள்.

எப்படி முடியும்/ ஆத்திரத்தை அடக்கலாம்… அடுத்ததைப் பதியாமல் இடக்கரடக்கல் என்னும் இலக்கணத்தைக் கையாள்கிறார் கவிஞர்.

சாலையோரமாய் இருட்டில் ஒதுங்க நினைக்கும் அவளுக்கு என்ன நேர்கிறது. ஒவ்வொரு சொற்களையும் காட்சியாக்க மனம் கூசுகிறது. கடைசி வரிகள் அற்பமான ஆண் சமூகப் ‘பார்வை’களின் மேல் காரி உமிழ்கின்றன.

“அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள் ஈரங்கெட்டவர்களின் பார்வையைவிட மூத்திர வாடையே மேலானது”

சமூகத்தின் இன்னொரு பார்வையைச் சாடும் கவிதை “விதவை”. ‘கேட்பாரற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலா” மீதான பார்வை 21 ஆம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்பதை என்னமாய்ப் பேசுகிறது இந்தக் கவிதை! கணவனை இழந்த பெண் மீதான ஊனப் பார்வைகளை வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்கிறார்.

பாண்டிச்செல்வி கவிதைகளின் சிறப்பு ஒவ்வொரு கவிதையின் முடிப்பும் ஒரு முறிப்பை ஏற்படுத்துவதுதான். அந்த வகையில் இந்தக் கவிதையின் முடிப்பு இப்படி இருக்கிறது.

“அவள் நினைக்கிறாள்
கஞ்சா குடித்து
தண்ணியடித்து
கஞ்சிக்குத் துட்டு தராமல்
தெருவுல விழுந்து கிடந்த அந்தத்
தருதலப் பயலே தேவலாமென்று”
பெண் மனம் நடுவதும் தேடுவதும் நேர்மை குணாம்சத்தை வேறெதுவும் வேண்டற்பாற்றன்று என்பதாகப் பொருள்படுகிறது.

இல்வாழ்க்கை எவ்வளவு பேருக்குப் பொருள் ‘இல்லா’ வாழ்க்கையாக மாறிப்போகிறது! அப்படியொரு வாழ்க்கையை “வட்டம்” கவிதையில் காட்டி, கோடிக்கணக்கான பெண்களின் மனக்குமுறலை வார்த்தைகளாய் வடித்திருக்கிறார் கவிஞர்.

“உணவைப் பரிமாறச் சொன்னவன்/ அவளின்/ உணர்வைப் பகிர்ந்து கொண்டானா?”

கசப்புகள், வெறுப்புகள், விம்மல்கள், ஏக்கங்கள் …. எல்லாமும் சுற்றிச்சுழல்கின்றன “வட்டம்” கவிதையில். சற்று நிதானித்துப் பார்த்தால் இந்த வட்டத்திற்கு வெளியே எவ்வளவு பெண்கள் இருப்பார்கள் என்று வினவத் தோன்றுகிறது.

ஓலைச்சுவடியில் தொடங்கி ஓடிடி தளம் வரை மனித சமூகம் வளர்ந்திருக்கிறது; மாறியிருக்கிறது. ஆனால் மாறாமல் இருப்பது பெண்கள் பற்றிய பார்வை. எங்கே சுற்றி எங்கே வந்தாலும் பெண்களிடம் தேடப்படுவது எது? சாட்டையடி தருகிறார் “கோணம்” கவிதையில்.

இதைத்தான் எழுதத் தொடங்கும்போதே சொன்னேன். நூலின் எந்தக் கவிதையை நன்று என்பது எதை சுமார், பரவாயில்லை என்று கடப்பது? இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டு வெளியே வருவது எளிதாய் இல்லை. இருப்பினும் ஒன்று சொல்லி நிறைவு செய்துதானே ஆக வேண்டும்.

நூலில் நிறைவாக இருக்கும் கவிதை “காதலென்பது”. பெண்களின் பருவங்களை இலக்கணம் பேசும். பருவந்தோறுமான மனவோட்டங்களை இக்கவிதை பேசுகிறது. வெள்ளையப்பன், கன்னியப்பன், வள்ளியப்பன், காத்தவராயன் என எத்தனை பேரைக் கடந்து வந்தாலும் அவர்களிடம் பிரியம், ஈர்ப்பு, மோகம் ஏற்பட்டாலும் அது எல்லாம் காதலாவதில்லை. காதல் என்பதுதான் எது?

“நெருக்கடிகள்/ குரல்வளை இறுக்கினாலும்/ ஒருவருக்கொருவர் உள்ளான/இருப்பு வெதுவெதுப்பாய்/ சம்மணமிடனும் உள்ளத்தில்/ இறுதிவரை”

அந்த அளப்பரிய காதலை அசையிட்டவாறே உயிரின் ஓசை நின்றிட வேண்டும்……

‘நீ இருக்கிறாய் என்பதாலே இருக்கின்றேன்’ என்ற புரட்சிக்கவியின் குடும்ப விளக்கு வரிகளை இந்த வரிகள் நினைவூட்டின. காதலின் உச்சத்தைப் பாண்டிச்செல்வி கனவு காண்கிறார்; கவிதை ஆக்குகிறார்.

இந்தத் தொகுப்பு முழுவதுமான கவிதைகளை வாசிக்கும் போது பாண்டிச்செல்வியிடம் இன்னும் அதிகமான எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது கவிதை உலகு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நூலின் தகவல்கள்: 
நூல்: நெருப்புச் சொற்கள்
எழுதியவர்: க. பாண்டிச்செல்வி
வெளியீடு: சொற்கூடு பதிப்பகம், 57, வடிவேல் நகர், நாகமலை புதுக்கோட்டை, மதுரை – 625 001
தொடர்புக்கு: 95782 50173, 87786 47873

பக்கங்கள்:  108

விலை: ரூ. 100/

               
எழுதியவர்: 

            மயிலைபாலு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள்” கவிதை நூல்”
  1. மிகச் சிறப்பான நூலறிமுகம் எழுதியவருக்கும் கவிஞருக்கும் வாழ்த்துகள்

  2. “மூத்திர வாடையே மேலானது”
    நெருப்புச் சொற்களோடு குழைத்து காறி உமிழும் சொற்களல்லவா..
    கவிதையும் விமர்சனமும் அருமை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *