ஆட்சி மாற்றத்தால் தலைநகராக இருந்த பல ஊர்கள், இன்று பல ஊர்களின் முதலெழுத்தாக (இனிசியலாக) அமைந்திருக்கும். சில ஊர்களுக்கு அந்த தகுதியும் கிடைக்காமல் போய் விடும். இப்படி சுவடு இல்லாமல் போன பல நூறு ஊர்களுக்கு தனியான வரலாற்று நூல்கள் இருக்கும்.

தமிழக மன்னர்களின் இராசராசன், வீரபாண்டியன் போன்ற மன்னர்கள் பெயர்களின் வரலாற்றை சுமந்து இருக்கும் ஊர்கள் பல உண்டு. அதில் ஒன்று மையமான இடம் ஆனையூர். பிரிட்டீஷாரை எதித்து களமிறங்கிய மருது சகோதர்கள், கன்னிவாடி சின்ன கதிரியப்ப நாயக்கன், விருப்பாட்சி கோபால் நாயக்கன், ஆனையூர் கல்யாணித்தேவன் போன்றோர் ஆனையூரில் கூடி பிரிட்டீஷாரை எதிக்க திட்டமிட்டனர் என்ற பிரிட்டீஷாரின் குறிப்புடன் ஆனையூர் கள்ளர்கள் என்ற சொல் பிரிட்டீஷார் வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனையூர் மீது பிரிட்டீஷ் கேப்டன் ரூம்லியின் தலைமையில் பெரும் படை தாக்குதல் நடத்தியது. அந்தளவிற்கு பாளையப்பட்டுகளின் படை கேந்திரமாக இருந்ததே ஆனையூர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது இவ்வூர். ”சோழன் தலைகொண்ட பாண்டியன்” என்ற பட்டம் பெற்ற பாண்டிய மன்னன் (பொது.ஆ. பின்பு 956) வீரபாண்டியன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முதலில் பதிக்கப்பெற்ற ஊர் ஆனையூரில் உள்ள திருவக்னீசுவரமுடையார் பரமசுவாமிகள் கோயில் என்ற ஐராவதேசுவரர் கோயில். இந்த கோயிலை மையமாக வைத்து சமூக வரலாற்று சான்றுகளோடு பதிவிட்டுள்ளது இந்த நூல்.
எழு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூல் மொத்தம் 125 பக்களும் அதற்கான விளக்க தரவுகள் 50 பக்கங்களையும் கொண்ட நூல். ஆனால் ஒவ்வொரு வரியும் வரலாற்றை சுமந்து கனமாக கவனமாக எழுதப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் மதுரை நாடு என்று அறியப்படும் மதுரை மண்டத்தில் இது வரை வந்துள்ள நூல்களில் பட்டியலை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நூல்களில் இடம் பெறாத, ஆய்விற்கு உட்படுத்தப்படாத இடமானதாகவும், சோழ பாண்டிய அரசர்களில் பெரிதும் வரலாற்றில் பேசப்படும் மன்னர்களின் முக்கியத்துவத்தை ஆனையூரில் உள்ளது என்ற முக்கியத்துவத்தை விளக்குகிறது. பொது ஆண்டிற்கு பின்பு 956 பாண்டியர்கள்  முதல் முதலாம் இராசராச சோழன், இராசேந்திர சோழன் சடைய வர்மன் சுந்தர சோழன், நாயக்க மன்னர்களில் முக்கியமானவரான மன்னர் திருமலை நாயக்கன் வரை இக்கோயிலில் கல்வெட்டுகளை பதித்துள்ளனர்.
மூன்று கண்மாய்கள் சூழ நஞ்சை புஞ்சை காடுகள் சூழ்ந்த செழிப்பான இடத்தை பெற்ற இடத்தில் அமைந்துள்ளது ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில். இக்கோயில் உள்ள கல்வெட்டுகள் சடைவர்மன் சுந்தரசோழன் பாண்டியன் ஆட்சிகாலத்தில் திருகுறுமுள்ளூர் என்று பெயரில் இருந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 23 கல்வெட்டுகளில் ஒன்றில் மட்டும் திருகோவிலூர் என்று பொறித்துள்ளது.  சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்ற கல்வெட்டில் எந்த சோழனை வென்றான் இந்த பாண்டிய மன்னன் என்ற குறிப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டும் நூலாசிரியர், இதே சொல்லாடலை கொண்ட அருப்புக்கோட்டை சிவாலய கல்வெட்டிலும் இவ்வாறு உள்ளது என்று மேற்கோள்காட்டுகிறார். இதனை விட மதுராந்தக வளநாட்டு தென் கல்ல நாடு என்ற சொற்றொடரையும் அடிகோட்டி காட்டியுள்ளது நூல். பாண்டியனால் வெற்றி கொள்ளப்பட்ட சோழன் பராந்தகன் மகன் இரண்டாம் ஆதித்தியன் என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுவதை எடுத்து வைக்கிறது நூல். இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள தென் கல்ல நாடு என்ற ஒற்றைச்சொல்லை வைத்து தென் கல்லக நாடு என்ற ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.
கள்ளர் குல வரலாறு: சோழ பாண்டிய ...
இந்த தமிழக அரசின் சிறந்த ஆய்வு நூலிற்கான விருந்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனையூர் கோயிலின் அமைப்பிற்கு திருவிளையாடல் புராணத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பில் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் பரஞ்சோதி முனிவர் அவர்களால் வடமொழியிலிருந்து 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது என மொழியியல் அறிஞர்கள் பலர் அறுதியிட்டுள்ளனர். வைணவ இலக்கியமான இராமாயணம் போல் திருவிளையாடல் புராணம் சிவநெறியைப்பரப்ப இந்தியாவில் உள்ள பல மொழிகளில் அந்தந்த நில அமைப்பிற்கு தகுந்தாற்போல் எழுதப்பட்டது. இந்த நூல் வந்த காலத்தில் பாண்டியர்களோ சோழர்களோ ஆட்சியில் இல்லை. தில்லி சுல்தால்களின் ஆட்சி முடிவுற்று யார் அப்போது இந்த மண்ணில் ஆட்சியாளர்களாக இருந்தார்கள் என்பது இன்று வரை வரலாற்றில் இருண்டபக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்   திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ள நிலவரைபட அமைப்பினை இக்கோயில் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது. இக்கோயிலை சுற்றியுள்ள மூன்று கண்மாய்கள் அதன் ஆயக்கட்டு பகுதியில் பழங்கால சிறிய செங்கலால் கட்டப்பட்ட பெருத்த சுவர்கள் இருப்பதை நான் கள ஆய்விற்கு சென்ற போது உசிலம்பட்டி திராவிடர் கழக தோழர் மன்னர் மன்னன் உதவியுடன் தோண்டி பார்த்துள்ளோம். இத்தகவலை நூலாசியர் கிணறுகள் தோண்டும் போது பார்த்ததாக பதிவிட்டுள்ளார். இதை வைத்துப்பார்க்கும் போது சோழர்கள் படையெடுப்பிற்கு முன்பு பெருத்த படைத்தளமும், வாழ்விடமும் இங்கு இருந்துள்ளது என்பதை அகழாய்வு செய்தால் இறுதியிட இயலும் என நம்பலாம் நூலும் குறிப்பிடுகிறது.
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்ற சொற்றோடரில் மற்ற பகுதியில் உள்ள கல்வெட்டுகள் வட்டெழுத்தாக உள்ள போது இங்குமட்டும் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் தன்மையை பார்க்கும் போது அக்காலத்திற்குறிதாகவே உள்ளது ஆய்வுகுறியது என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்த பெரிய ஆலய மணியையும், சிவனின் நடத்துடனுடைய அழகிய வெங்கல திருமேனியும் கல்வெட்டில் உள்ளது. ஆலய மணி திருடு போய்விட்டதாகவும் திருமேனி இன்றுள்ள சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாக நூல் தெளிவுபடுத்துகிறது. சோழவந்தான் சோழந்தக சதுர்வேதி மங்கலம் என்றும், அதே போல் ஆனையூர் அருகிலுள்ள வாலாந்தூரின் பழைய பெயர் வாரந்தூர் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பாண்டி நாட்டின் ஆனையூர்
மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்களான சடைய வர்மன் சுந்தரபாண்டியனுக்கும் சடையவர்மன் வீரபாண்டியனுக்கும் ஏற்பட்ட வாரிசு உரிமை உள்நாட்டு போராக இருந்தது என்பதை  வாசெப் என்ற இசுலமியப்பயணியின் குறிப்பிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இசுலாமியர்களின் ஆனையூர் நிலைபடையுடன் போரிட்டு மாண்டுள்ளனர். இவ்வூரை சுற்றி பல இசுலாமியர்களின் கல்லறைகள் உள்ளன. ‘போலி, பொட்லு’ என்ற இசுலாமியர் பெயரில் ஊரமைந்துள்ளதாகவும், இங்குள்ள கல்லரைகளை வழிபட மதுரையிலிருந்து இன்னும் இசுலாம் மக்கள் வருகிறார்கள் என்பதை தனது களாய்வில் உறுதிபடுத்தியுள்ளார் நூலாசிரியர். நானும் உசிலம்பட்டி தினமலர் நிருபர் மதிவாணன், தோழர் மன்னர் மன்னன் ஆகியோர் கள ஆய்வில், மாசிகளறி அன்று போயிருந்தோம். அங்கு இசுலாமிய குழுவினர் விபூதிக்குப்பதிலாக இலை தளைகளை பொடியாக்கி ஆனையூர் கண்மாயிலில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் முன்பாக வழங்குகிறார்கள். இதை காணிக்கை கொடுத்து வாங்கும் மக்கள் கருப்பசாமிக்கு நேர்திக்கடனாக செழுத்துகிறார்கள். இதுவும் பெருத்த ஆய்வாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருகுறுமுள்ளூர் என்ற பெயரில் இருந்த இவ்வூர் நாயக்க மன்னர்களில் முக்கியமானவரான மன்னர் திருமலைநாயக்கன் காலத்தில் ஆனையூர் என்று பெயர் மாறியுள்ளது. இவரது கல்வெட்டு ஆனையூருக்கு விசயம் செய்த திருமலை நாயக்கன் என்று குறிப்பிடுகிறது.
இவ்மன்னன் காலத்தில் இக்கோயிலுக்கு முகப்பு மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலுக்குளிருந்த சேசுடா தேவி சிலைக்கு பதிலாக மீனாஷியம்மன் சிலைகளும் அதற்கான கோயிகளும் எழுப்பப்பட்டுள்ளது. மீனாஷி கையில் சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதை  முக்கியமானதாக குறிப்பிடுகிறார். நாயக்கர் ஆட்சியில் ப்பிராமணர்கள் நிர்வாக தலைமை பெற்றள்ளர் அதற்கு முன்பு பஞ்சாசாரியர்கள் நிர்வாகப்பொறுப்பிலிருந்துள்ளனர். இந்த பஞ்சாசாரியர்கள் குறித்த தனி ஆய்வு தேவை. இக்கோயில் பாண்டியர் சோழ ஆட்சியில் தேவதனமாக இருந்துள்ளதை நாயக்கர்  ஆட்சியில் மதுரை சொக்கநாதர் கோயில் வைணவ கோயில் பூசர்களான பட்டர்கள் கைக்கு மாறியுள்ளது. வெங்கிடு என்ற பட்டர் அவரது தந்தை பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஸ்ரீபண்டாரம் என்ற பதவி வழங்கப்பட்டு கோடாங்கி பட்டி என்ற ஊரினை தானமாக வழங்கியுள்ளார்கள்.
அக்கி என்பது மனிதர்களுக்கு சூட்டால் ஏற்படும் தோல் நோய். இந்த சொல் சங்க இலக்கிய நூல்களில் நெருப்பு என்றுள்ளதை எடுத்துரைத்து அக்கி என்பதே அக்னியாக சமற்கிருத மொழியாக்கம் பெற்றிருக்க வேண்டும். இதனால் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு திருவக்கினீசுவரேசுவர பரமசுவாமிகள் என்று அடித்து சொல்லுகிறது நூல். அதே போல் தமிழர்கள், தமிழன், தமிழ்வேள், தென்னவன் என்று பெயர் வைத்துக்கொள்வது வழக்கம். இப்பழக்கம் பாண்டியர் காலம் தொட்டு வந்துள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுவதை நூல் தெளிவு படுத்துகிறது. அவை, சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் காலத்தில் தென்னவன் தமிழ்வேள், தென்னவன் சாத்தன், சேந்தன் என்ற உயர் அலுவலர் பெயரும் உள்ளது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆனையூருக்கு கிழக்கே 30 மைல் தூரத்தில் சேந்தமங்கலம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு கொடையளித்த இன்னொரு படைத்தளபதி அளநாட்டைச் சேர்ந்த அரையன் பல்லவன் 15 காசுகள் கொடையாக கொடுத்துள்ளான். இக்காசுகளை பொலியூட்டு என்ற வட்டிக்கு விட்டு அக்காசில் கோயில் திருப்பூசை நடத்த ஆணையிடும் கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் வட்டிக்கு விடுவது ஆண்டாண்டு கால்மாக உள்ளது என்பது தெளிவாகிறது. இதனுடன் ‘அள’ என்பது மிளகினை குறிப்பது என்பதால் தற்போதுள்ள தேனி மாவட்டப்பகுதி மலையில் மிளகு விளைகிறது என்பதும் மூன்று மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆசாரிபட்டி அருகில்  கிடைத்த நடுகல்லில் அரையன் பல்லவன் என்ற பெயர் பொறித்த பெயர் இருப்பதும், சின்னமனூர் அருகில் பல்லவராயன்பட்டி என்ற ஊர் இருப்பதும் இந்த நூல் ஆய்வாளர்களுக்கு உந்துலாக உதவிடும் என்பது ஐயமில்லை.
கள்ளர் குல வரலாறு: சோழ பாண்டிய ...
கோயிலை சுற்றி ஆடு மேய்கும் இடையர்கள், மாடும் மேய்திடும் ஆயர்கள், நெசவு தொழில் கைக்கோளர்கள், ஆசாரிகளான கருமான், குயவன், செட்டி, கோயில் ஆடல் மகளிர்களான தேவரடியார்கள் வாழ்ந்துள்ளனர். தற்போது பிறமலைகள்ளர்களும் குறைந்த எண்ணிக்கையில் பறையர், குயவர், பள்ளர் குலத்தினர் மட்டுமே வாழ்கிறார்கள். இடையர்கள் போர் படைத்தளபதியாக இருந்தது குறித்த கல்வெட்டில் முழுமையாக பெயர் படிக்க இயலாத நிலையில் உள்ளதாம். தேவதாசிர்களின் பெயர்கள் பறைசிவந்தி, பூண்டான் சோலை என்ற பெண்கள் பெயர்கள் குறிப்புகள் உள்ளது. இவர்கள் கோயிலில் திருமேனியை வடித்து கொடுத்துள்ளதும், வாரிசு இல்லாத தேவரடியார்கள் மானிய நிலங்களை ஊர் சபை வாங்கி பிறருக்கு வழங்கிடவும் அதிகாரம் வழங்கும் கல்வெட்டு மிக முக்கியமானது. இதில் தற்போது வழங்கப்படும் நஞ்சை, புஞ்சை, பொட்டல் என்ற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொட்டல் நிலத்தை பொற்றல் என்றும் பொற்ற என்றும் கல்வெட்டினை குறிப்பிட்டளார் நூலாசிரியர். இந்த பொற்ற என்ற சொல் திருநங்கைகள் தங்களுக்குள் செல்லமாக ஒருவரை ஒருவர் பொற்ற என்றே அழைக்கிறார்கள். விளைச்சல் இல்லாத நிலத்தை பொற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
குளத்திலுள்ள தலை மடை கல்வெட்டில் தூம்பினை மகாபலி வாணதிராயரின் கீழ் அகம்படி முதலி என்ற படைத்தலைவன் அமைத்தான் என்று குறிப்பு உள்ளது. இன்றும் அகம்படி, முதலிகள் சாதியின் குறியீடுகளாக உள்ளது உற்று நோக்க வேண்டியுள்ளது.
இறுதி அத்தியாத்தில் இப்பகுதியில் அதிகமாக வாழும் பிறமலை கள்ளர்கள் குறித்து சமூக தன்மையை பதிவிட்டுள்ளது இந்நூல். மன்னர்களின் ஆணையாக வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் ”மாதா பிதாவை கொன்ற தோஷத்திற்கும் சிவ ப்பிராமனணை கொன்ற தோசத்திற்கும்” போன்ற சொற்களை பார்க்கலாம். ஆனால் இங்குள்ள கல்வெட்டின் முடிவில் ”தன் தாய்மாமனை கொன்ற தோஷத்திற்கு போகக் கடவதாக” உள்ளது.
‘கல்லநாடு’ என்றும் நாட்டு எல்லை குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டுயுள்ளது. ”இந்த கல்ல நாடு தான் பின்னாலில் கள்ளநாடாக மாறியிருக்கும். இதே பெயரே அப்பகுதியில் வாழும் பிறமலை கள்ளர்களை குறிக்கும் சொல்லாக இருக்கும்” என்ற ஐயப்பாட்டை வினாவாக வைக்கிறார் நூலாசிரியர். தாய்மாமன் குறியீடு காது வளர்ப்பது தமிழை தாய் மொழியாக கொண்ட அனைத்துக்குழுக்களிடமும் உள்ள பழக்கம். இதை குறிப்பிட்ட குழுவிற்கு சொந்தமானதாக எப்படி நூலாசிரியர் சுருக்கிக்கொண்டார் எனத்தெரியவில்லை. இந்திய ஒன்றியத்தில் வட நாட்டில் உள்ள கோண்டு, ஆந்திராவில் கோயா, கோங்கு, மத்திய பிரதேசத்தில் கோண்டு, சட்டீஸ்கார் ஒரிசா எல்லையில் பத்ரா மக்களிடமும் காது வளர்க்கும் பழக்கும் இருந்தது. தமிழர் மற்றுமல்லாது திராவிட குழுக்களிடமும் தாய்மாமன் உறவு மிக முக்கிய பாத்திரமாக இருப்பது பலரும் அறிந்ததே.
நூல்; பாண்டி நாட்டின் ஆனையூர்
ஆசிரியர்; பேராசிரியர் முனைவர். பா. ஜெயக்குமார்
கல்வெட்டு & தொல்லியல் துறைத்தலைவர்,
தமிழ் பல்கலைக்கழகம். தஞ்சை,
பதிப்பகம்; அன்பு வெளியீட்டகம் ,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
மனை எண் 59 ,கருப்ஸ் நகர், தஞ்சாவூர், 613005.
விலை; 200.
– முத்து நாகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *