பாங்கைத் தமிழனின் கவிதைகள்

Pangai Thamizhan's Poems 3 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 3
‘ச்சே… ச்சே… ‘
****************
வேட்டி கட்டத் தெரியாதவனுங்க….
சேலை கட்டத் தெரியாதவளுங்க….
தாடி, மீசையோடத் திரியும்
காட்டு வாசிங்க…

பாடத் தெரியாதவனுங்க
தப்பாட்டம் ஆடறவனுங்க…
மண் சட்டிப்பானையில்
பொங்கித் திங்றவனுங்க.

மண் குடிசை…
சேறு.. சகதியில்
உழல்றவனுங்க….
தலை சீவத் தெரியாதவனுங்க….
கைநாட்டுக் குப்பனுங்க…

கூழும்…. கஞ்சியும்…
பசியும் பட்டினியுமா….
கூலி வேலை பிழைக்கறவனுங்க….
நாகரிகம் தெரியாத
Countrybroots!

ஹலோ….
சார் சொல்லிட்டீங்களா?

ட்ரெஸ் சென்ஸ்
மேக்கப் மேக்கிங்
பூசு மினுக்கல்
ஆட்டம் போட
பாட்டுப்பாட
பல்லைக்காட்ட
காட்டானுக்கும் தெரியும்!

சோத்துக்கு
நிலம் உழைக்கணும்,
மூட்டைத் தூக்கணும்,
ரோடு போடணும்
எரி குளம் வெட்டணும்
ரோடு பெருக்கணும்….

பாவி…. பாவி…
உன்னோடப் பொணத்தை
தூக்கணும்…. எரிக்கணும்….
பொதைக்கணும்…..
ஏதுடா நேரம்?

‘எழுதுவோரே…எழுதுவோரே.’..!
*************************************
எழுதுவோரே எழுதுவோரே
எதையெதையோ எழுதுவோரே……
கதைகள் பல எழுதுவோரே
காதலினை எழுதுவோரே….

இயற்கைதனை எழுதுவோரே
இளமைதனை எழுதுவோரே!
ஊர்க்கதைகள் எழுதுவோரே
உலகம் பற்றி எழுதுவோரே!

கனவுகளை எழுதுவோரே
கன்னியரை எழுதுவோரே!
அழகுதனை எழுதுவோரே
அன்பபைப் பற்றி எழுதுவோரே!

அம்புலியை எழுதுவோரே
அதனழகில் மயங்குவோரே!
வாலிபரை எழுதுவோரே
வம்பு தும்பு எழுதுவோரே!

மேகமதை எழுதுவோரே
மேதினியை எழுதுவோரே!
மேட்டுக்குடி எழுதுவோரே
நாட்டு வளம் எழுதுவோரே!

பாட்டு பல எழுதுவோரே
பரிதியினை எழுதுவோரே!
பாரறிந்து எழுதுவோரே
பாதம் தொட்டு வேண்டுகிறேன்!

பசியில் வாடும் மக்கள் துயர்
பாட்டினிலே எழுதுமய்யா…
பாழும் மதம் சாகச்சொல்லி
பழித்து நீயும் எழுதுமய்யா;

சாதிகளை வெறுத்து நீயும்
சமத்துவத்தை எழுதுமய்யா;
நொந்து நொந்து வாழ்க்கையின்றி
வேகுவோரை எழுதுமய்யா!

உழைப்போரை எழுதுமய்யா
உழுவோரை எழுதுமய்யா!
தொழுவாரே உம்மையிவர்
தூய்மை உள்ளத்தாலே என்றும்!

‘மதமதை மண்ணில் புதை’
******************************
சமயங்களாலே சஞ்சலந்தானே…
சரித்திரம் இதைத்தான்
சொல்லுது தானே!

சமயங்கள் எல்லாம்
சந்தனமில்லை;
சாக்கடை என்றால்
வந்திடும் தொல்லை!

மனிதரை வகுத்தது
மதங்கள் தானே?
மதிப்பது அதனை
மதியில்லை தானே!

மதமது என்ன
மானமா மதிக்க?
மனிதத்தை மிதிக்கும்
மிருகம் தானே!

சதிபல செய்வது
மனிதனைக் கெடுப்பது
விதியெனும் விஷவிதை
விதைப்பது மதமது!

அமைதியைக் கெடுப்பது
அருவருப்பானது
அவணியை அழிப்பது
அர்த்தம் இல்லாதது!

சூழ்ச்சிகள் நிறைந்தது
சூழலை அழிப்பது
சூதும் வாதும்
வேதனை கொடுப்பது!

மதிதனை மயக்கிடும்
மாயப் பிசாசது;
விடியலைத் தடுத்திடும்
விடியா இரவது!

புரிந்திட வேண்டுமே
புவியினில் யாவரும்
புதுயுகம் வேண்டிடின்
புதைக்கணும் மதமதை!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.