பாங்கை தமிழனின் கவிதைகள்

Panagai thamizhan's Poems 4 பாங்கை தமிழனின் கவிதைகள் 4

பெயரற்ற காதலர்
*********************
எனக்கு
மிகவும் பிடித்தமானவர்
அந்த நாயகனும்
நாயகியும்!

இன்றும்
என்றும்
இளமை…. இனிமை
நிரந்தரமானவர்!

சாயமாக
இனமும் சாதியும்
பூசி அறியா
புனித காதலர்கள்!

அந்ந
நாயகனும் நாயகியும்!

அவர்களுக்குப்
பெயர்கூட இல்லை….

பெயர் பார்த்து
சாதியப் பெருமை பேசி
பீற்றிக் கொள்வர்
என்பதால்;
பெயரும் அற்றவர்கள்!

அவனுக்குத்
தலைவன் என்றும்
அவளுக்குத் தலைவி என்றும்
பெயர்!

சங்ககால இலக்கியம் காட்டும்
நாயகன்..
நாயகி!
பெயரற்ற காதல்
ஆனால்
பெருமை மிகு காதல்!

‘தமிழை விட தரணியில் ஏதுமில்லை’
******************************************       
புகட்டுங்கள்
இது
தாய்ப்பால் நிகர்!
ஊட்டுங்கள்
இது
அமிழ்து!

நாவினிக்கத்
தடவுங்கள்
இது
தேன்!

சுவைக்கக்கொடுங்கள்
இது
முக்கனிக் கலவை!

குடிக்கக் கொடுங்கள்
இது
நனி பசு நல்கியப் பால்!

உண்ணக் கொடுங்கள்
இது
அதியன் ஔவைக்குக் கொடுத்த நெல்லி!

சொல்லிக் கொடுங்கள்
இது
சுந்தரம்!

தொட விடுங்கள்
இது
பனி மலர்!
சுவாசிக்க  விடுங்கள்
இது
பொதிகை தென்றல்!

பூசி விடுங்கள்
இது
பொதிகை சந்தனம்!

குளிப்பாட்டுங்கள்
இது
குற்றால அருவி!
நனைய விடுங்கள்
இது
அந்தி மழை!

அணிவித்து மகிழுங்கள்
இது
பூவாடை!
நீந்த விடுங்கள்
இது
காவேரி!

ஏற்றி விடுங்கள்
இது
திருவாரூர் தேர்!

வணங்கச் சொல்லுங்கள்
இது
தஞ்சை பெரிய கோயில்!
தாகம் பருகச் சொல்லுங்கள்
இது
தாமிரபரணி/சிறுவாணி!

‘இது’தான் ‘தமிழ்’!

இதைவிட ஏதுமில்லை
ஒரு குழந்தைக்கு
‘மொழி’!

இதைவிட ஏதுமில்லை
நம் குழந்தைகட்குத் தாலாட்டு!
இதுவே உயர்வுதரும்!

புரட்சித் தலைவன்
*********************
மண்ணிலே மனிதராக
மலர்ந்திட்ட மானுடர்க்கு
மானிட சமூகம்தானே
துணையென நிற்க வேண்டும்!

வேண்டுவோர் வேண்டாதோரே
வேண்டாமே எண்ணந்தன்னில்;
எல்லோரும் மனிதரென்ற
எண்ணமே வேண்டும் வேண்டும்!

மனிதரை மதிப்போர் யாரும்
மாநில பெருமை கொள்வர்;
மக்களின் மனம் உயர்ந்தே
மாமணி பெறுவார் பேரே!

ரஷ்யாவின் நாடு தன்னில்
ரட்சகன் தோன்றினானே
லெனின் எனும் புரட்சியாளன்
பூகோளம் புரட்டினானே!

விளைகின்ற பயிர்கள்தானே
முளையிலே தெரியும் என்பார்
இளமையில் தெரிந்தார் நல்ல
இளகிய மனத்தினாலே!

அம்மாவை அணுகிக் கேட்பார்
அன்புடன் காசு வேண்டி;
அம்மாதான் கொடுக்கும் காசால்
அடைபட்டக் கிளியை வாங்கி
ஆகாயம் பறக்கச் செய்து
ஆனந்தம் பொங்கி வாழ்வார்!

கிளிகளை கூண்டுக்குள்ளே
கீழமை எண்ணம் கொண்டு
அடைத்திடும் பாவந்தன்னை
அவரென்றும் விரும்ப மாட்டார்!

பறவைகள் பறந்து சென்று
பரவசம் அடைவதைப்போல்
மனிதரும் அடிமையின்றி
மண்ணிலே வாழ வேண்டி;

தன்வாழ்வை அவருக்கீந்தார்
தன்மானத் தலைவரானார்!
அவன்தானே புரட்சியாளன்
அதையெப்போ புரிவோம் நாமே!? 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.