பாங்கைத் தமிழனின் கவிதைகள்

Pangai Thamizhan's Poems 5 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 5

வா மீட்டெடுப்போம்!
************************
தேர்தல் நல்ல தேர்தல்-தலைவனை தேர்வு செய்யும் தேர்தல்!
வெற்றித் தோல்வி யென்று-நமக்கு
விளங்க வைக்கும் தேர்தல்!

நோக்கம் நல்ல நோக்கம்-மக்கள்
உயர்வுக்கான நோக்கம்;
நல்ல மனிதன் கண்டு-அவனை
தலைவனாக்கும் தேர்தல்!

இல்லை இந்தத் தன்மை – இப்போ
இழிவு நிறைந்தத் தேர்தல்!
உண்மை மறைந்த நிலைமை- மக்கள்
உள்ளம் கள்ளம் தேர்தல்!

சாதி சமயப் போக்கு-இப்போ
சதிகள் நிறைந்தத் தேர்தல்!
பொய்யும் புரட்டும் நிறைந்த-தீய
தன்மை கொண்டத் தேர்தல்!

காசு என்ற பேச்சே-எங்கும்
கலங்கமானத் தேர்தல்!
உறவை முறித்தத் தேர்தல்-மக்கள்
மாக்களானத் தேர்தல்!

ஆசை கொண்டப் பேய்கள்-அலையும்
அறிவு கெட்டப் பேய்கள்;
மக்கள் வாழ்க்கை முறையை-மயக்கி
மண்ணில் புதைத்தத் தேர்தல்!

மீட்டெடுக்க வேண்டும்-மக்கள்
மீண்டும் இணைய வேண்டும்!
சாதி சமயப் பேயை-மக்கள்
சாகடிக்க வேண்டும்!
தூய்மை உள்ளத்தோடு-நாட்டை
தூக்கி நிறுத்த வேண்டும்!

புறா
******
நண்பன்தான்!
இடுக்கண் களைந்தவன்தான்;
இன்றுவரை….
இன்னும்!

என்னிடம்
நட்பை பாராட்டும் நீ
என்னிடம்
நல்லவனாக இருக்கும் நீ
எனக்கு உதவி செய்யும் நீ
நண்பன்தான்!

ஆயிரம் வருத்தங்கள்
ஆயிரம் அவமானங்கள்
ஆயிரமாயிரம் இழப்புகள்
ஏற்பட்டிருக்கலாம்!

இந்த
பூ வோடு சேர்ந்த நாராக
நீ
மணக்க வேண்டும்தானே!

இந்த
சமாதானப் புறாவோடு
சேர்ந்த
நீ
எப்படி
வள்ளூரின் உள்ளம்
கொண்டாய்?

அமைதிக்காகவே
அற்பணிக்கப்பட்ட
தேசத்தின் தோழனே….

கத்தியை
கக்கத்தில் வைத்திருந்தாயோ?
எத்தனை முகங்கள்
நண்பனே உனக்கு?

ஹிட்லர் எனும்
பேயை விரட்டிய
காளி தேவியா
இப்போது
கருணை மீறுவது?

பேரழிவைத் தடுத்த
பெருந்தகையா
இன்று
பேராபத்திற்கு
வழி வகுப்பது?

ரஷ்யா என்றால்
ரட்சகன் என்று
இருக்கின்றோம்!

ரஷ்யா என்றால்
உலகத்திற்கு ரக்க்ஷாபந்தம்
கட்டுவாய் என
இருக்கின்றோம்!

கோபம் இருந்தால்
வா
கூடி பேசலாம்!
குறைகளிருந்தால்
நிறைவு காணலாம்
வா…..

எங்கள்
சமாதான மாமா நேருவின்
கோட்டில் இருந்த
ரோஜா மலரை
இன்னும்
பத்திரப் படுத்தி வைத்துள்ளோம்!
வாங்கிக்கொள் நண்பனே!

நேரு பறக்க விட்ட
சமாதானப் புறாக்களிட்ட
முட்டைகளை
அடைகாத்து வைத்து
முட்டைகளிலிருந்து
வெளிவந்த புறா குஞ்சுகளை
பாதுகாத்து வைத்துள்ளோம்;
தேவைப்படும் என்பதற்காக!

வா….
எங்கள் பால்ய சிநேகிதனே
இருவரும்
சேர்ந்தே பறக்க விடுவோம்
அந்த
சமாதானப் புறாக்களை!

உலகம் நோக்கி….
இப்போது
உக்ரைன் நோக்கி!

ஒண்ட வந்தப்பேயே…!
**************************
ஓட ஓட அடித்தீரோ
ஒதுங்கினாலும் அடித்தீரோ
பாடைத் தூக்க மட்டும் வந்து
பல்லிளித்து நின்றீரோ?
கடைகள் கன்னி எல்லாம் உங்கள்
கைவசமாய்ப் போச்சே போச்சே;
கழனிக்காடு எல்லாம் உங்கள்
கட்டுப்பாட்டில் நின்னுப் போச்சே!

கல்விக்கூடமெல்லாம் உங்கள்
கடையை போலே ஆச்சே ஆச்சே;
கவுர்மென்ட்டு கடைநிலை மட்டும்
கருணைக் கொடை ஆச்சே ஆச்சே!

நாங்கள் தின்னும் சோற்றை ஒருநாள்
நாங்கள் உறங்கும் இடத்தில் ஒருநாள்
நாங்கள் வசிக்கும் குடிசையில் ஒருநாள்
நாங்களுழைக்கும் உழைப்பை ஒருநாள்;

நாங்கள் உடுத்தும் உடுப்பை ஒருநாள்
நாங்கள் வாழும் வாழ்வை ஒருநாள்
வாழ்ந்து பாரும் வாழ்க்கை தெரியும்
வாழ்வில் எங்கள் வலியும் புரியும்!

அண்டை நாட்டில் இருந்தா வந்தோம்
ஆகாயத்தில் இருந்தா வந்தோம்
பாரதத்தின் மண்ணில் தானே
பாவி நாங்கள் பிறந்தே வந்தோம்!

ஒண்ட வந்தப்பேயும் பிசாசும்
உடையவரை ஒதுக்கி வைத்தே
உண்ண சோற்றில் மண்ணைப்போட்டு
உதைத்து எம்மை துறத்தலாச்சே!

வீரஞ்சூரன் என்றே சொல்லி
வீணர்களை சேர்த்தே வைத்து
உழைக்கும் வர்க்க வயிற்றில் அடித்தே
உலவுதய்யோ! உயர்ந்தோரென்றே!

விடியும் விடியும் ஒருநாள் எங்கள்
கைகள் உயரும் வருமே நன்னாள்
வாழ்க்கை தன்னை வாழ்வோம் யாமும்
வணங்கிடுவாய் நீயும் வந்தே!

**************************
இந்த
அழகு உலகம் காண
அவ்வளவு நம்பிக்கைக்
கொண்டப் பிறப்பு!

அம்மாவின் மடி தவழ்ந்து
அப்பாவின் தோள் அமர்ந்து
ஆடி பாடி மகிழ்ந்து கற்று
உண்டு உறங்கி
கதைத்து காதலித்து….

அணு அணுவாய்
ருசிக்க வேண்டிய வாழ்க்கை!
முன்னே பிறந்தவரோ
பேயாக நின்று
இரத்தம் குடித்தால்…

இனி
எந்தப் பிறவியும் வேண்டாம்
சாமி!
ஓ….
சாமி இல்லையென்றோர்தான்
சரியானவரோ?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.